இன்றைய தெருமுனைகள் யாவும் உலகெல்லாம் மனிதர்களது அவா நிறைந்த பொருள்களால் நிரப்பப்பட்டுள்ளது.மனிதர்கள் அவற்றைப் பெறுவதில்-நுகர்வதில் காரியமான சித்தத்தில் தம்மை ஈடுபடுத்துவதில் முயன்று வருகின்றனர்.உற்பத்தியின் வீச்சு என்றுமில்லாதவாறு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.கல்வி-கலை எல்லாம் மனித பிரமிப்புகளாக உயர்ந்து மலைக்க வைக்கின்றன!இருந்தும் உலகங்களில் உழைப்பு-பகிர்வு முதல் உலகக் கனி வளங்கள் பங்கீடுவரை முரண்பாடுகள் உயர்கின்றன.

யுத்தங்கள் ஏதோவொரு வகையில் தமக்கான நியாயங்களைச் சொல்லி, மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.ஏதோவொரு நாட்டில் இரண்டு வகைப்பட்ட-அல்லது பலவகைப்பட்ட மனித அடையாளங்கள் தமக்கான பங்குக்கு,உரிமையெனப் பெயரிட்டுச் சண்டை போடுகின்றன.அவற்றில் தமக்கு ஏதாவது இலாமுள்ளதாவென உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தேசங்கள் தேடுதலைக்கொண்டு பக்கஞ்சார்கின்றன.இதற்கான தெரிவில் தத்தமக்கு படை,கூட்டுப்படையெனக் கட்டியும் எழுப்புகின்றன.
 
முரண்பாடுகள் ஒவ்வொரு கோணத்திலும் புதிய பொருளாதாரக் கண்ணோட்டம்-தேசக் கூட்டுருவாக்கம்,கண்டங்களது இணைவென உலகமயப் பொருளாதாரம் நகர்கிறது.
 
ஒரு தேசத்தின் அல்லது கண்டவலயத்தின் பொருளாதார வளர்ச்சி, இன்னொரு தேசத்தில் வேலையிழப்பைச் செய்கிறது.சீனாவினதும்-இந்தியாவினதும் உலகவுற்பத்தியில் பங்கெடுக்கும் வீதம் உயரும்போது,ஏலவே வளர்;ச்சியடைந்த தேசங்களில் ஆலைகள் மூடப்படுகின்றன.பொருளாதார நலன்களும் அவைகொண்டுள்ள தெரிவுகளும் மனிதர்களது அனைத்துப் போக்கையும் மாற்றியமைக்கின்றன.பல தேசங்களது அரசியல்-சமூக உறுவுகளையே அவை தலைகீழாக்கிவிடுகின்றன.
 
இலங்கையின் அரசியல்-அதிகாரத்தையே அவை தலைகீழாக்கி விட்டிருப்பதைச் சமீபத்தில் உணர முடியும்.தமிழர்களுக்கு "ஓரங்குல நிலமும் இல்லை" என்றவர்கள,; "இலங்கையில் சிறுபான்மை இனங்களே இல்லை" என்றும்,"நாமெல்லோரும் இலங்கையின் குடிகளே-இலங்கையரே" என்கிறார்கள்.இத்தகைய குரல்கள்-கோரிக்கைகளின் பின்னே மாறிவரும் பொருளாதாரச் சூழலொன்று இருக்கிறது.அந்தச் சூழலை மதிப்பீடு செய்த பல சிந்தனையாளர்கள் ஆசியாவினது கூட்டுழைப்பில் மாறிவரும் ஆசியப் பொருளாதார ஸ்த்திரத்தைக் காண்கின்றனர்.அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்துக்குத் தலைமை நிலையடையவும்-மேற்குச் சமுதாயத்துக் இணையாவும் சீனாவும்,இந்தியாவும்,இருஷ்சியாவும்,ஈரானும் தம்மைத் தகவமைக்க இலங்கையில் நிறையவே தலையிடுகின்றன.இதைத் தடுப்பதற்கு அமெரிக்காவும்-ஐரோப்பாவும் தமக்கான பங்குக்கு இலங்கை ஆதிக்க சக்திகளோடு பேரங்கள் பேசிக்கொண்டு அத்தகைய பேரத்தில் புதிய தலைவர்களை-கட்சி ஆதிக்கத்தை மக்கள் முன்கொணர்கிறார்கள்.
 
யுத்தத்தில் புலிகளையும் அவர்களது கேடயமான மக்களையும் அழித்த இராணுவத்தளபதி, மக்களுக்கு ஜனநாயகம் போதிக்கத் தனது சீருடையைக் கழற்றுகிறார்.அதன்வழி அவரையும் இலங்கையின் ஒரு பகுதி ஆளும் வர்க்கம் ஏற்கத் தயாராக இருக்கிறது.இதன் பின்னால் அணி வகுக்கும் பொருளாதார நலன் நோக்கும் தேசங்கள், ஏதோவொரு வகையில் இலங்கையின் அரசியல்-சமூக விளைவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 
இருந்தும்,நாம் புலம்பெயர் மக்களுக்குள் ஒடுக்குமுறை குறித்து இலங்கைத்தேசத்துக்குள் மட்டும் பாடம் எடுக்கின்றோம்.இதுவரையான நமது கடந்தகாலத் தவறுகள்-தவறுகளல்ல,அது நடந்து முடிந்தவை-பேசப்பட முடியாதவை என்று, மீளமுடியாத தவறுகளுக்கு வாய்க்கால் வெட்டுகிறோம்.பாடங்கள் எல்லாம் தவறுகளைப் போற்றுவதிலும்,பொய்த் திரைகளில் பெருமை பேசுவதிலும் விடிகிறது.
 
இலங்கைiயின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.
 
நிலவுகின்று அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாருளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது.

மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.தடாபுடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.
 
 
இதிலிருந்து விடபட முடியாது, ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒரு மக்கள் பிரிவு தவிப்பது எதனால்?
 
அரசியல் விஞ்ஞானி கிசோர் மாபுபானி(Kishore Mububani) இருஷ்சியாவையும்,சீனாவையும் ஒப்பீடு செய்து சமூக வளர்ச்சியைக் குறித்துப்பேசும்போது,சீனாவானது தனது அரசியல் அமைப்பை மாற்றுவதற்குமுன் பொருளாதார உறவுகளை-விடையங்களை மாற்ற முனைந்ததெனவும்,இருஷ்சியா அதைத் தவறவிட்டாதால் அனைத்திலும் பின்னடைந்து பொருளாதாரத்தில் மண்ணைக் கவ்வியது என்கிறார்.மக்களது பொருளாதார சுபீட்சத்துக்கு முதலிடம் கொடுக்கும் பொருளாதாரப் பங்கீடு மற்றும் உற்பத்தித் திறனில் மாற்றங்கொள்ளும்போது சமுதாயம் மாற்றமடைகிறது என்கிறார்.இதற்காக ஒரு நாடு அதிகமாக ஜனநாயகத்தன்மையிலான குடிசார் உரிமைகளை மக்களுக்கு வழங்க வேண்டுமென்று சீனாவை உதாரணமாக்குகிறார்.The New Asian Hemisphere: The Irresistible Shift of Global Power to the East என்ற தனது நூலில் இதை அவர் பரவலாகச் சொல்கிறார்.
 
ஒரு சமுதாயத்தை-இனக் குழுவை முற்று முழுதாகச் சுரண்டிக்கொள்ள முனையும் எந்தத் தேசமும் பொருளாதாரச் சுபீட்சம் அடைய முடியாதென்றும் அதனால் இத்தகைய தேசங்கள் சுதந்திரமாக இருக்காதென்றும் பொருள்கொள்ள முடியும்.
 
சமீப கால இலங்கையின் அரசியல் நகர்வுகள் யாவும் புலிகளை அழித்துவிட்டுப் பொருளாதார மாற்றங்களுக்கூடாகக் காய் நகர்த்துகிறது.
 
அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்வதைத் தவிர்த்தபடி பொருளாதார நடவடிக்கைளில் அது கவனஞ் செய்கிறது.
 
பல்லின மக்கள் சமுதாயத்துள் இனப் பிரச்சனைகள் யாவும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மேலெழுகிறதென்று இன்றைய ஆய்வாளர்கள் அதிகமாக உரைக்கின்றனர்.இனங்களுக்கிடையிலான அபிவிருத்திகளில் சமநிலை பேணப்படும்போது பற்பல இன அடையாளங்கள்-முரண்பாடுகள் சிதைந்து ஒரு தேசத்தினது தேசிய அடையாளம் பொருளாதார அபிவிருத்தியோடு மேலெழும்போது, அடையாள அரசியலில் மாற்றங்காணுமென்றும்,அத்தகைய நிலையில் சமுதாயத்துள் புதிய கண்ணோட்டம் எங்கும் பரவலாகி அச் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கில் வெடிப்பு உருவாகிறதென்றும் இனங்காணப்படுகிறது.இத்தகைய வெடிப்புப் புதிய தேசிய அடையாளத்தை பல்லினக் குழுவுக்குள் கொணரும்போது, பழையபாணிய இனச் சிக்கல் இல்லாது போகும் என்பது இன்றைய ஆசியச் சிந்தனையாளர்களது கருத்தாக இருக்கிறது.
 



இதற்காகச் சீனாவையும்-சிங்கப்பூரையும் உதாரணப்படுத்தும் சிந்தனையாளர்கள் ஆசியாவானது பழைய காட்சிகளையும்,முரண்பாடுகளையும் தீர்ப்பதற்குப் பொருளாதாரத்துள் இனங்களுக்கிடையிலான சமநிலைப் பேணலோடு இனங்களுக்குச் சமமான அபிவிருத்தியை முடுக்கிவிடும்படி ஆலோசனை செய்கின்றனர்.
 
இருப்பினும்,தமிழ்பேசும் மக்களதும்,இலங்கையின் சிறுபான்மை மக்களதும் உரிமைகள் என்று பேசும் நாம்,மாறிவரும் உலக அரசியல்-பொருளாதார முன்னெடுப்புகளைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.வடக்கின் வசந்தம்,கிழக்கின் வசந்தம் என்பதை மறுதலையாகப் புரியும் நாம்,ஆசியாவின் சிந்தனைப் போக்கில் பெரும் தாக்கஞ் செய்யும் அதன் பொருளாதாரப் போக்கில் மாறிவரும் அரசியலை இன்னும் பாராமுகமாக உள்வாங்க மறுக்கிறோம்.
 
இலங்கையில் மகிந்தா முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் ஆசியாவினது திட்டத்துக்கமைய நிலைபெறும்போது,அவரது அரசியலில் விரக்தியடையும் மேற்குலகம் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவைத் துருப்புக் காயாக்க முனைகிறது.எனினும்,இருஷ்சிய-சீன ஒத்துழைப்போடு புலிகளை வெற்றிகொண்ட தளபதிக்கு இலங்கைக்கான இருஷ்சியத் தூதுவர் கேடயம் வழங்கிப் பாராட்டிய நிலையில், இன்றைய அந்நியச் சக்திகள் இலங்கையில் தமது அரசியல்-பூகோள இலாபங்களை எத்தகைய எதிர்கால நலன்களோடு பிணைக்கின்றன என்பதிலிருந்தே இலங்கையில் அரசியல்-இராணுவ மாற்றங்கள் நிலவு முடியும்.
 
ஆசியப் பிராந்தியத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கையாளுவதற்குமுன்,அத்தகைய இனங்களது அடிப்படைப் பிரச்சனைகளாகப் பொருளாதாரப் பிரச்சனைகளையே ஆசியச் சிந்தனையாளர்கள் இனம் காணுகின்றனர்.இதன் அடிப்படையில் பொருளாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி,அதன் தேவைகளை நிறைவேற்றும்போது மக்கள் தமது கண்ணோட்டத்தில் இயல்பாக மாற்றங்களை உள்வாங்குவார்கள் என்பது இன்றைய ஆசிய அரசியல் விஞ்ஞானிகளது திடமான கருத்து.இதற்கு இலங்கை விதிவிலக்காக இல்லை.
 
இலங்கையில் படிப்படியாக ஜனநாயகத்தை நிலை நாட்டாதவரை இவைகளை அது எட்டிவிடமுடியாது.இதையே வலியுறுத்தும் ஆசியச் சிந்தனையாளர்கள் மேற்குலகத்தின் இன்றைய ஐரோப்பிய ஒன்றிய நகர்வையும், அதுசார்ந்த முரண்பாடுகளை எதிர்கொள்ளும் போக்கையும் உதாரணமாகக்கொள்கின்றனர்.எனினும்,போலந்தும்,லிற்றுவானும்,உக்கிரையனும் இணைந்து இருஷ்சியாவுக்கு எதிராகஇராணுவப்படை கட்டும் ஒப்பந்தம் போடுகின்றன.இதன்வழி நேட்டோ மூன்றாம்படை ஒன்றை நிலை நிறுத்தித் தமக்கு எதிரான இருஷ்சிய-சீனக் கூட்டை எதிர்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் கிழிந்து போகிறது.
 
இலங்கையில் நிலவும் இன்றைய இராணுவவாதப் போக்கும்,குடிசார் உரிமைகளின் தகர்வும்,திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக இருக்கும் தமிழ்பேசும் மக்களது வலயங்களும் புலம் பெயர் புலிகளது அரசியல் மற்றும் நடவடிக்கைகள்சார்ந்தே தொடர்ந்து நிலைபெற முடியும்.ஆசியாவினது பொருளாதாரப் போக்குகள்,தாம் எதிர்கொள்ளும் மேற்குலக எதிர் அழுத்தங்களது முனைப்பில் புலம்பெயர் புலிகளது அரசியலை இங்ஙனம் எதிர்கொள்ள முனைகின்றன.இவை,வன்னியில் பெரும் பகுதி மக்களை பாரிய தடுப்பு முகாங்களில் வைத்திருப்பதுகூடப் புலிகளது இனவாத-ஈழவிடுதலைப் பொய் அரசியலின் நகர்வுகளோடும் சம்பந்தப்பட்டதென்பதை நாம் இனம் காணத் தவறக்கூடாது.
 
இலங்கையில் புரட்சியென்பது ஆசிய முற்போக்குச் சக்திகளது பங்களிப்பு-ஒத்துழைப்பு கூட்டு நடவடிக்கையின்றிச் சாத்தியமில்லை.இத்தகைய நோக்கில் ஆசியப் பொருளாதாரத்தின்வழி கோரப்படும் ஜனநாயக்கப் பண்பில் மாறமுனையும் சமுதாய அசைவாக்கத்தைப்பற்றிய கவனிப்பு அவசியமாகிறது.இதன் தெரிவு,ஈழ விடுதலை-தமிழர்கள் விடுதலையென்று குறுவதற்குப்பதில், இலங்கை மக்களது விடுதலை,ஆசிய மக்களது பொருளாதார-சமூக விடுதலையென உயரவேண்டியுள்ளது.இத்தகைய பார்வைகள் மாறிவரும் இலங்கையின் பொருளாதார முன்னெடுப்பையும்,அதன் தெரிவில் கையாளப்படும் அரசியலைப் பழைய பாணியில் புரிவது இனி உதவப் போவதில்லை!
 
புலம்பெயர் புலிகள் வேணுமென்றால்,இத்தகைய பழைய பார்வைகளைத் தமது மேற்குலக எஜமானர்களுக்காப் பார்க்கலாம்.ஆனால், புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பவர்கள் முதலில் இலங்கையின் பொருளாதாரக் கூட்டுக்களையும்,அதன் உறவுச் சக்திகளையும் மாறிவரும் ஆசியப் பொருளாதார ஆதிகத்தையும் பெரும் படிப்புக்குள் கொணர்ந்தாகவேண்டும்.
 
ஆசியக் கண்டத்தின் இன-பொருளாதார முரண்பாடுகளை ஆசிய அரசியல் விஞ்ஞானிகள் எங்ஙனம் அணுகுகிறார்கள் என்பதற்கு, புரட்சிகரச் சக்திகள் பாடங் கற்க வேண்டிய சக்திகள் நேபாள மாவோயிஷ்ட்டுகள்தான் என்பது எமக்கு முன்னுள்ள உதாரணம்.நாம் நேபாளப் புரட்சிகரச் சக்திகளது நகர்வையும்,அவர்களது அரசியல்-போராட்ட அணுகுமுறைகளையும் மேலும் விருத்தியாக அணுகிக் கற்க வேண்டியுள்ளது.இதைக் கடந்த பழைய பார்வைகள்-மதிப்பீடுகள் யாவும் நம்மை முட்டுச் சந்திக்குள் தள்ளிவிடும் அபாயத்தை நாம் உணர்ந்தாகவேண்டும்.
 
 
"சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கிறது!
வார்த்தைகளைத் தேடியபோது
காலந் தொலைந்தது.
 
காலத்தில் வார்த்தைகளில்லை.
 
உணர்வுகளோடு ஓடிப்பிடித்தலில்
உயிர் ஊசலாடுகிறது!"
 
இருந்தும்...
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,
ஜேர்மனி
22.11.2009

 

http://jananayagam.blogspot.com/2009/11/blog-post_22.html