வலதுசாரி தமிழ் அரசியல் என்பது, யார் அதிகாரத்தில் உள்ளனரோ, அவர்களின் பாதம் தொழுது மக்களின் முதுகில் குத்துவதுதான். அன்று புலிப் பாசிசத்தினை தவழ்ந்து நக்கியவர்கள், இன்று மகிந்தாவுக்கு ஆரத்தி எடுத்து நக்கத் தொடங்கியுள்ளனர். 

 

இந்த வலதுசாரிய பிழைப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் காங்கிரஸ்சில் இருந்த சிலர், தமிழரசுக் கட்சியாகினர். மீண்டும் தமிழ் காங்கிரஸ்; உள்ளடங்க, கூட்டணியாகினர். புலியின் பின் தொழுது எழுவதற்காய் கூட்டமைப்பாக்கினர். இவர்கள் தங்கள் இந்த வரலாறு நெடுகிலும், மக்களுடன் மக்களுக்காக நின்றது கிடையாது. சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாக, வலதுசாரிய வக்கிரத்துடன் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள்.  இதற்கமையவே தமிழ் மக்களை குறுகிய இனவாதத்துடன் இன ரீதியாக பிளந்தனர். அதையே தமிழ் மக்களின் விடிவிற்கான அரசியலாகவும் காட்டினர்.

 

இப்படி பேரினவாதத்தின் துணையுடன், தமிழ் குறுந் தேசியத்தை விதைத்தனர். குறுகிய இனவாதத்தை தமிழ் தேசியம் என்றனர். இப்படி தங்கள் குறுகிய அரசியல் பிழைப்பு வாதத்தைத் தாண்டி, தமிழ் மக்களை இவர்கள் வழிகாட்டவில்லை. இதனால் இந்த மிதவாத பிழைப்புவாதம் நெருக்கடிக்குள்ளானது. இதன் பின் இருந்த இளைஞர்கள், தங்கள்  தலைமைகளின் பிழைப்புவாதத்தையே கேள்விக்குள்ளாக்கினர். 

 

இவர்களின் மிதவாதத்தை அரசியல் ரீதியாக முடக்கிய புலிகள், குறுகிய இனவாதத்தை பாசிசமயமாக்கி ஆயுதமயமாக்கினர். இதை தேசியமாக காட்டி, இனத்தையும் சேர்த்து அழிக்கத் தொடங்கினர். இது முன்னாள் பிழைப்புவாத அரசியல் வழிகாட்டிகளையும், அதன் தலைவர்களையும் கூட தனக்கு இரையாக்கியது. இப்படி படுகொலை அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்த புதிய வலதுசாரிய பிழைப்புவாதம், பழைய மிதவாத பிழைப்புவாத அரசியலை துரோகமாக காட்டி அழித்தது.

 

ஆனால் அந்த வர்க்கத்தின் நலன் சந்தர்ப்பவாதம் கொண்டது. இதனால் தமிழ்மக்களின் பெயரிலான தங்கள் பிழைப்புத்தனத்தை, புலிகளுடன் சேர்ந்து தொடர தங்களை கூட்டமைப்பாக்கினர். இதன் மூலம் புலிகளைத் தொழத் தொடங்கிய இந்த வலதுசாரிய மிதவாதக் கும்பல், தங்கள் தலைவர்கள் கொல்லப்பட்டதை கூட தங்கள் வர்க்க நலன்களுடன் புறந்தள்ளினர். இதைப் போன்றுதான் இன்று புலத்துப் புலிகளும், தங்கள் தலைவரை சரணடைய வைத்து காட்டிக்கொடுத்து பலியிட்டனர். புலிகள், அவர்களின் தலைவர்களின் பெயர்களை வியாபார சின்னமாக்கி, அதை வைத்து வியாபாரம் செய்த புலம்பெயர் வியாபாரிகள் தான், புலித் தலைமையை பேரினவாதத்தின் துணையுடன் மறைமுகமாகக் கொன்றனர். அதையே அந்த சுரண்டும் வர்க்கம், இன்று மூடிமறைத்து தொழில் செய்கின்றது.

 

இதையே கூட்டமைப்பு தங்கள் கடந்தகாலத் தலைவர்களைக் கொன்றவர்களுடன் சேர்ந்து  கடைவிரித்தனர். கூட்டமைப்பு இப்படி புலிகளைத் தொழுது பிழைத்தபோது, மக்களை எட்டி உதைத்தனர். இந்த மக்கள் விரோதக் கும்பல் இன்று மகிந்த கும்பலின் கால்களை மிக விசுவாசமாக நக்கத் தொடங்கியுள்ளது. அனைத்தையும் தமிழ் மக்களின் பெயரில்தான் செய்கின்றது.

 

அன்று புலிகளுடனும், இன்று மகிந்தவுடனும் நிற்கும், அவர்கள் கூறும் காரணம் தமிழ் மக்கள் நலன்தான் என்கின்றது.

 

புலிகள் தமிழ் மக்களை ஒடுக்கி வந்;தது முதல் அவர்களை பணயக் கைதியாக்கி பலியிட்டது வரை, வாய் திறவாத தமிழ் மக்களின் மேல் தான் இந்த கூட்டமைப்பின் அன்றைய அரசியல். இன்று மகிந்த குடும்பத்தின் பாசிசம் ஏவிய, ஏவும் பேரினவாத படுகொலை அரசியல் முதல் அதன் இனவாத சட்டவிரோத நடைமுறைகளை எல்லாம் தொழுவதையே, தமிழ் மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்கின்றனர்.

 

தமிழ் மக்கள் வாழ்வும், வாழ்க்கையும், இந்த பிழைப்புவாத கும்பலால் எப்போதும் சுயநலத்துடன் விலை பேசப்பட்டே வந்தது.  தமிழ் மக்களை செயலற்ற அடிமைகளாக மாற்ற துணை நின்றவர்கள், இன்று அவர்கள் மேல் ஏறி சவாரி செய்கின்றனர்.

 

தமிழ் மக்களின் பெயரால் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் மறுக்க, தொடர்ந்தும்  துணையாக தூணாக நிற்கின்றனர். இந்த வலதுசாரிய அரசியல் தான், கடந்த 60 வருடமாக தமிழ் மக்கள் ஒரு இனமாயிருக்கும் இன அடையாளத்தைக் கூட அழித்துள்ளது. தங்கள் பிழைப்புவாதத்துக்கு ஏற்ப தமிழ் மக்களையும், அவர்களின் உரிமைகளையும் கூட வலதுசாரிய குறுந்தேசிய தமிழர் அரசியல் மூலம் விலைபேசி விற்றது.

 

இன்று வலதுசாரிய கூட்டமைப்பு பேரினவாத மகிந்த பாசிசக் கும்பலுடன் சேர்ந்து, தமிழ் மக்களை விற்கும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்த வலதுசாரிய குறுந்தேசிய அரசியலை இனம் காணாமல், சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து உரிமைகளைக் கோராத அரசியல் அனைத்தும், தமிழ் மக்களை விலை பேசி விற்கும் வலதுசாரிய கும்பல்களின் சுயநல அரசியலாகின்றது. இதை இனம் கண்டு வேரறுப்பதன் மூலம்தான், குறைந்தபட்சம் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி போராட முடியும்.

.  
      
பி.இரயாகரன்
19.11.2009