09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

குண்டுகளால் பொட்டு வைத்ததால் பொட்டம்மானான கொலைகாரனின் பெயரில் மாவீரர் உரையாம்!?

தமிழ் மக்களை "தேசியத்தின்" பெயரில் மொட்டை அடித்த கும்பல், மக்களின் காதுக்கு பூ வைத்து தமிழ் மக்களின் கோமணத்தையும் உருவ முனைகின்றது. பேரினவாதம் தன்னிடம் சரணடைந்த பிரபாகரனைக் கொன்று, அவனுக்கு கோமணத்தைக் கட்டி அவமானப்படுத்திக் காட்டியது. புலத்துப் புலிகள் தமிழ் மக்களிடம் எஞ்சிய கோமணத்தையும், அவன் அறியாமலே எப்படியும் உருவலாம் என்று எண்ணுகின்றது. 

   

புலத்து புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க, பிரபாகரனை உயிருடன் இருப்பதாக காட்ட முனைந்தது. ஆனால் பிணத்துக்கு உயிரூட்ட முடியாத நிலையில், தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பவைக்க முடியவில்லை. கொஞ்சப் புலிகள் மட்டும், அப்படி நம்பி பிதற்றித் திரிகின்றனர். தலைவரை முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றி புலி வியாபாரத்தை இனியும் செய்;ய முடியாதநிலை. இதனால் காணாமல் போனவராக உள்ள பொட்டரைக் காட்டி, தமிழ் மக்களின் கோமணத்தை உருவ முடியும் என்று புலத்து புலிகள் கணக்கு போடுகின்றனர்.

 

கைது செய்தவர்களின் நெற்றி பொட்டில் சுட்டுக் கொல்வதால், "பொட்டர்" என்ற பெயர் பெற்று தலைவனானவன் தான் பொட்டன். இந்தக் கொலைகாரனும் மானிட விரோதியுமான பொட்டரை, புலத்துப் புலிகள் தங்கள் தொடர்ச்சியான பண அறுவடைக்குரிய சோளக்காட்டு பொம்மையாக மக்கள் முன் நிறுத்த முனைகின்றனர். வேடிக்கை என்னவென்றால் புலத்து புலிகள் தங்களுக்குள் நடக்கும் குத்துவெட்டுகளையும், அதைத் தொடர்ந்து பல குழுக்களாக சிதையும் சிதைவையும் பொட்டுப் பொம்மை மூலம் தடுத்து நிறுத்த முடியவில்லை.

 

இங்கு பொட்டரைக் காட்டியும், பொட்டரைக் கொண்டு மிரட்டியும், தங்களுக்கான ஒற்றுமையை நிலைநிறுத்த முடியவில்லை. மறுபக்கத்தில் தமிழ் மக்களிடம் கோமணத்தை உருவ, பொட்டரை முன்னிறுத்த முனைகின்றனர்.

 

பொட்டரின் பெயரால் ஒரு மாவீரர் உரை!? தலைவருடன் சேர்ந்து சரணடைந்த பொட்டர், பேரினவாத கொடுஞ்சிறையில் சிக்கி எல்லாவற்றையும் கக்கிவிட்டார். அவர் இன்னமும் உயிருடன் இருக்கின்றாரா அல்லது பேரினவாதம் தலைவரைப் கொன்றது போல் கொன்று தள்ளிவிட்டதா என்று தெரியாத நிலை. அது பற்றி புலத்து புலிக்கு அக்கறையும் கிடையாது. தமிழ் மக்களை ஏமாற்ற பொம்மை தேவை.

 

இதற்கு பேரினவாதம் பக்கத் துணையாக நிற்கின்றது. சரணடைந்தவர்களைக் கொன்றது போர்க் குற்றம் என்பதால், பிரபாகரன் உள்ளிட்டவர்கள் எப்படியோ இறந்ததாக மட்டும் காட்டியது. தான் சரணடைந்தவர்களை கொன்றதாக அது காட்டவில்லை. ஆனால் அவர்கள் உடலை கொலைகார பேரினவாதம் காட்ட வேண்டியிருந்தது, தங்கள் சொந்த பேரினவாத அரசியலுக்காக உடல் காட்ட வேண்டி ஏற்பட்டது.

 

ஆனால் பொட்டரைக் காட்டவில்லை. மாறாக பொட்டரை உயிருடன் வைத்து சித்திரவதை செய்ததன் மூலம் புலி மூலத்தையே கறந்தனர். இதன் மூலம் அனைத்தையும், இனம் கண்டு வருகின்றனர். சின்னச்சின்ன நடவடிக்கைகள் உள்ளடங்கலாக. மறுபக்கத்தில் இனி அவரை உயிருடன் முன்னிறுத்துவதோ, உடலைக் காட்டுவதோ போர்க் குற்றத்தை நிறுவப் போதுமான மற்றொரு சாட்சியமாகிவிடும்.

 

இப்படி வதைக்கப்படும் தங்கள் கொலைகாரத் தலைவரின் பெயரால், எல்லாவற்றையும் காட்டிக் கொடுக்கும் தலைவரின் பெயரால், புலத்து புலிகள் தமிழ் மக்களுக்கு காதுக்கு மீண்டும் பூ வைக்க நினைக்கின்றனர். இது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம் என்பது, சொல்லாமல் விளங்கும்.

 

தாம் போற்றுவதாக காட்டும் தலைவரோ பேரினவாத வதைமுகாமில். தாங்கள் வழி காட்ட, சரணடைந்தவர்கள். அவர்களின் மரணத்தையும், அவர்கள் மேலான சித்திரவதைகளையும் மூடிமறைத்து, புலத்து புலிகள் நடத்தும் பொறுக்கித்தனமான அரசியல் பிழைப்பு, தமிழ் மக்கள் சார்ந்தல்ல.

 

சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, தங்கள் தலைவர்களை சரணடைய வைத்து காட்டிக்கொடுத்த கும்பல் தான் புலத்துப் புலித்தலைமை. சரணடைந்த தலைவரை கொன்ற பேரினவாதத்தின் இழி செயலை கூட்டாக மறைத்து பொறுக்கித் தின்னும் பொறுக்கிகள் இவர்கள். தங்கள் இழிவான அரசியல் பிழைப்புக்கு ஏற்ப காட்டிக் கொடுத்ததால், கொடுஞ் சித்திரவதையை சந்திக்கும் பொட்டரின் பெயரில், தமிழ்மக்களை ஏமாற்றி தின்ன மீண்டும் முனைகின்றனர்.

 

கடந்தகாலம் முழுவதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் போட்ட பாசிச ஆட்டத்தையிட்டு இந்த புலத்து புலிக் கும்பல் இன்று வரை வருந்தவில்லை. அதை மறந்து விடும்படியும், தங்களுக்கு தொடர்ந்தும் பணத்தை வாரி வழங்கும்படியும் கோரி, ஆயிரம் குறுக்கு வழிகளில் தமிழ் மக்களை மீள மீள ஏமாற்றவே முனைகின்றனர்.

 

இந்த புலத்துப் புலிகளின் மோசடிகளை இனம் கண்டு கொள்ளாத வரை, மக்களுக்கான உண்மையான குரல்கள் எழுவது என்பது, தொடர்ந்து பல தடைகள் கொண்டதாகவே நீடிக்கும்.

 

பி.இரயாகரன்
18.11.2009
  
             


பி.இரயாகரன் - சமர்