08052021வி
Last updateபு, 28 ஜூலை 2021 10am

ஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம்? - தில்லை

வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் வைக்கப்பட்ட பெண்கள் எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு, மொழி, இன ரீதியாக ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புணர்வு ஆகியனவற்றின் தூண்டுதலால் தமிழ் பெண்கள் போராளிகளாக வீட்டை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர். 

 சிங்கள பேரினவாத அரசு காலம் காலமாகத் தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கியதால் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலைப்போராட்டம் எழுச்சிபெற்றது. ஆரம்பத்தில் ஆண்களே விடுதலைப் போராட்டத்தின் ஏகபோக உரிமையாளர்களாக இருந்தனர். காலத்தின் தேவை கருதியும் ஆளணித் தேவைக்காகவும் விடுதலைப்போராட்டம் பெண்களையும் இணைத்துக் கொண்டது. ஆணாதிக்க மயப்பட்ட இந்தப் போராட்டத்திற்காக பெண்கள் ஆரம்பகாலங்களில் தமது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே போராளிகளாக இணைந்து கொண்டனர். போராட்டத்தில் மட்டுமல்லாது கடந்த காலங்களில் அரசியல் மற்றும் கலை இலக்கியங்களிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

 

 


ஆரம்பகாலங்களில் பல இயக்கங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போது அதில் கணிசமான பெண்களும் இணைந்து கொண்டனர். இடதுசாரி பின்னணியை கொண்ட இயக்கங்கள் இப்பெண்களை கணிசமான அளவு பெண்ணியம் குறித்து வழிகாட்டுவதற்கும் தவறவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு பலம்பெற்ற போது அதிலிருந்த பெண்கள் மண்மீட்பு, சுதந்திரத்தமிழீழம், தனியரசு, வீரம் என்ற வார்த்தைகளுக்கூடாகவே பெண்விடுதலை கருத்துக்களை சுருக்கிக்கொண்டனர்.

 

களத்தில் இருந்த சக போராளிகளையும் காவுகொண்ட போது அவர்கள் குறித்த இழப்பை, இந்த பெண்கள் கலை இலக்கியங்களுக்கூடாக வெளிப்படுத்தத் தொடங்கினர். இவற்றில் அதிகமானவை கடந்துபோன நினைவுகளை பதிவுசெய்வதாகவே அமைந்தன. விடுதலைப்புலிகள் கையோங்கத் தொடங்கியபின் அவர்களுக்கு வெளியில் இப்பெண்கள் குறித்த சரியான பதிவுகள் செய்யப்படவில்லை. சொற்பமான அளவே இப்பெண்கள் குறித்த பதிவுகள் வெளியாகின.


 

 


போராட்டகாலங்களிலும் சரி இன்றும் சரி இப்பெண்கள் பேசுபொருளாக இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. பிள்ளைகளை இழந்த தாயாக, கணவனை இழந்த மனைவியாக, பெற்றோரை இழந்த மகளாக, சகோதரர்களை இழந்த சகோதரியாக, அங்கவீனர்களாக, போர்க்கைதிகளாக, போரின் வடுக்களைச் சுமப்பவர்களாக இவர்களே ஆக்கப்பட்டனர். குடும்ப உறவுகளுடனும் சமூகத்துடனும் ஒட்ட முடியாதவர்களாக இவர்கள் தள்ளப்பட்டனர்.

 

இன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறும் அரச பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான போராளிகளைக் கைது செய்திருப்பதாகவும், சரணடைந்திருப்பதாகவும் அறிவித்திருந்தது. இவர்களில் ஏராளமானோர் பெண்போராளிகள் ஆவர். இவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனை பேர் சரணடைந்தார்கள்? இவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? என்ற விபரங்கள் எதுவும் அறியாதவர்களாகவே உறவினர்கள் அல்லல்படுகின்றனர்.

 

அரசு இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகவும் சீர்திருத்தம் அளிப்பதாவும் வாயளந்து கொண்டும், பரப்புரை செய்து கொண்டும் இருக்கிறது. இதுவரை மனித உரிமையாளர்களையோ அல்லது சர்வதேசக் கண்காணிப்பாளர்களையோ இப்பெண்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு அனுமதியளியாதது மேலும் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. விசேடமாக பெண்போராளிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புள்ளது? என்பதை எண்ணும் போது ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்போராளி மனம்பேரி மனக்கண்களில் நிறைகிறாள். மனித உரிமைக்குள்ள மதிப்பே தெரியாத இலங்கை அரசு எவ்வாறு இந்தப் பெண்களை பராமரிக்கும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழுகிறது.சாதாரண பெண்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகவும் போராடுவதாகவும் கூறும் உள்ளூர் மற்றும் சர்வதேச பெண்ணுரிமைவாதிகள் கூட, இவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், விடுதலை தொடர்பாகவும் அவர்களுடைய மறுவாழ்வு தொடர்பாகவும் இலங்கை அரசை நிர்பந்திக்காததும் அதிகம் வாய்திறக்காததும் வருத்தம் தருகிறது?

  

கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடிய பெண்களின் ஆளணி எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு இருந்தது. பெண்சிறுமிகள் பலர் வலுக்கட்டாயமாக போருக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர்களின் பெற்றோர்கள் அறியாதவாறு வைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறே போர் முடிந்த பின்பும் பேரினவாத அரசும், அதன் இராணுவங்களால் நிருவகிக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. 

 

விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியதிலிருந்து சொல்லொண்ணா துயரங்களைச் சுமந்தவர்கள் பெண்கள். கைது செய்தல், ஆட்கடத்தல், பலாத்காரம், காணாமற்போதல், பாலியல் வன்முறை, கொலைசெய்தல், சித்திரவதை, என மாறி மாறி அரசினாலும், அரசுடன் சேர்ந்தியங்கியவர்களாலும் காலம் காலமாகச் சந்தித்தவர்கள். இவ்வாறான கொடுமைகளுக்கு சொந்த அரசியல் தலைமைகள் துணையாக இருப்பதும் அவர்களின் துணையோடே இவற்றைத் தொடர்வதும் தான் வேதனையான விடயம்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பினரதும் கொடுமைகளை அனுபவிப்பவர்களாகவே தமிழ்ப்பெண்கள் வாழ்ந்தனர். காலாகாலமாக சமூக, கலாசார, மத, அடையாளங்களால் ஒடுக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் அரசியல், தேசியம் ஆயுதப்போராட்டம் என ஆணாதிக்கம் ஊடுருவிய அனைத்து வடிவங்களாலும் பலி கொள்ளப்பட்டனர். .

 


 

 


களப்போராளிகளாக இருந்த பெண்கள் அனேகர் இனவிடுதலை பெறுவதற்கூடாகவே பெண்களுக்கான விடுதலையும் சாத்தியமானதென்றே நம்பவைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறே அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. ஆதிக்க அரசினால் தமிழ் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளும் ஒடுக்குமுறைகளும் போராட்டத்திற்கு இன்னும் இன்னும் வலுச்சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசு அதற்கான பெறுபேறை அனுபவித்தது.


உலகில் நிகழ்ந்த பெரும்பாலான போராட்டங்களில் ஆளனித் தேவைக்காகவே அதிகமாக பெண்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் போராளிகள் எதிரியோடு மட்டுமல்ல தமது சொந்த இயக்கங்களினாலும் பாரபட்சத்துக்கும், ஆணாதிக்க அடக்குமுறையின் வெவ்வேறு வடிவங்களாலும் பாதிக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஏனைய உலக நாடுகளில் தேசிய விடுதலை இராணுவத்தில் அங்கம் வகித்த பெண்கள் போரின் பின்னர் சதாரண வாழ்க்கைக்கு திரும்புவதில் எதிர்கொண்ட பிரச்சினைகள் உலக வரலாறு அறிந்தது. இப்பெண்களின் எதிர்காலம் குறித்த பிரேத்தியேக கவனம் செலுத்துவது அவசியம்.

 


 

 


இராணுவத்தாக்குதல்கள், வெற்றிகள் என போராட்டம் நடக்கும் வரையுமே பெண்கள் பெருமைப்படுத்தப்படுவர். அதன் பின்னர் அவர்கள் வாழ்வும், வளங்களும், உறவுகளும் அழிந்தொழிந்த வெளிகளில் வழமையான குடும்பம் என்ற மரபுவழி வாழ்தலை ஏற்கவேண்டியவர்களாக நிர்பந்திக்கப்படுவர். இதுவே உலக வரலாறாக இருந்து வந்துள்ளது.

 
பெண்போராளிகள் இப்போருக்கு வலிந்து இழுக்கப்பட்டவர்கள். போராட்டத்தில் அவர்கள் எதிரியை எதிர்க்கும் போராளியாகவும், சொந்த இயக்கத்திலோ தாம் எதிர்கொண்ட வலிகளை எதிர்கொள்ள கூட பலமில்லாதவர்களாகவே ஆக்கப்பட்டிருந்தனர். இன்று போர் முடிந்த நிலையில் அவர்கள் எதிலிருந்தும் விடுதலையடையவில்லை. மாறாக இன்னொரு மோசமான அடக்குமுறைக்குள் தொடரச்செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பாரபட்சமின்றி இந்த அப்பாவிப் பெண்களின் நலன்கள் குறித்து அனைவரும் குரல் கொடுப்பது அவசியம

http://www.penniyam.com/2009/11/blog-post_14.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்