மகிந்த கும்பல், முன்னாள் கூட்டாளியான சரத் பொன்சேகாவுக்கு செய்யாத அவமானம் கிடையாது. தொடர்ந்தும் சகல விதமான நெருக்கடிகளையும், தனிமைப்படுத்தலையும் தீவிரமாக்கியிருக்கும் மகிந்த கும்பல், ஆளை போட்டுத்தள்ளுவதன் மூலம் தான்  தன் குடும்ப சர்வாதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்ற அரசியல் நிலைக்குள் நகர்ந்து வருகின்றது. சரத் பொன்சேகாவை நாளை துரோகி என்று கூறும் வண்ணம், அண்மையில் மகிந்தாவின் உரை ஒன்று வெளிவந்துள்ளது. தன்னுடன் இல்லாத அனைவரும், துரோகிகள். இதுதான் மகிந்த சிந்தனையும், மகிந்த சித்தாந்தமுமாகும்.

   

மகிந்த கும்பலின் அரசு தன் எதிரிகளையும், தனக்கெதிரான கருத்துகளையும் அரசியல் ரீதியாக எதிர் கொள்ள முடிவதில்லை. மாறாக தனக்கு எதிரான கருத்துகளை  முன்வைப்பவர்களை போட்டுத் தள்ளுவது வரையான ஒரு அரசியல் நடைமுறைதான், இலங்கையின் இன்றைய ஜனநாயகமாகும்.

 

தன்னுடன் இல்லாதவர்கள் அனைவரையும் மிரட்டுவது, விலை பேசுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, இறுதியாக போட்டுதள்ளுவது வரையான ஒரு அரசியல் நடைமுறைதான், இன்று இலங்கையில் ஜனநாயகமாகின்றது. இதற்காக கையெடுத்து கும்பிடுவது முதல் ரவுடியாக மாறி மிரட்டுவது வரை, மகிந்த கும்பல் நடிக்காத அரசியல் காட்சிகள் கிடையாது. மகிந்த குடும்பம் தலைமைதாங்கும் பாசிசம், இப்படி பற்பல அவதாரங்களுடன் தான் இலங்கையில் சதிராட்டம் ஆடுகின்றது.

   

இந்த மகிந்த சர்வாதிகார ஆட்சி நிலவிய கடந்த மூன்று வருடத்தில், இலங்கையில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 15000 பேர். அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்றே, இந்தப் புள்ளிவிபரத்தை தெரிவிக்கின்றது. நாள் ஒன்றுக்குள் 15 பேர் இலங்கையில் காணாமல் போனார்கள். பாசிசமே ஜனநாயகமாக மாறிய ஒரு நாட்டின் வெட்டு முகம் இது. இந்த தகவல் கூட முழுமையானது அல்ல.

 

வன்னி மக்கள் மத்தியில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரத்தை, அந்த மக்கள் புகாராக செய்ய முடியாத வகையில், அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் அல்லது மீள் குடியேற்றத்தின் பெயரில் இலங்கை மக்கள் தொடர்பற்ற இராணுவ சூனிய பிரதேசத்தில் அவர்களை சிறைவைத்துள்ளனர். அதிகளவில் காணாமல் போனவர்கள், இந்த மக்கள் மத்தியில்தான். இலங்கை பாசிச அரசு தன் பேரினவாத கொலைக்கரங்கள் மூலம், அந்த மக்களில் ஒரு பகுதியை தொடர்ந்து கடத்தி வருகின்றது. இப்படி காணாமல் போனவர்களை அதிகமாக கொண்ட ஒரு பாசிச நாடாக, இலங்கை மாறிவிட்டது. 

 

இப்படி போட்டுத் தள்ளும் அரசியலே, மகிந்தவின் அரசியலாக உள்ளது. இப்படி இலங்கையில் பல ஆயிரம் மக்களை வேட்டையாடிய மகிந்த பாசிசக் கும்பலுக்குள் தான், இன்று பாரிய முரண்பாடு, இது இந்த பாசிச அரசுக்கு பின்னால் உள்ள கும்பல் ஆட்சிக்கு எதிராக, ஏற்பட்டுள்ள ஒரு அரசியல் சவாலாகும். இதுவே இன்று பிரதான அரசியல் நிகழ்வாக மாறிவருகின்றது. இதன் பின்னணியில் ஏகாதிபத்திய நலன்களும் இணைந்து வலுவாக மோதுகின்றது.

 

புலிகளுடனான யுத்தத்தின் வெற்றியின் பின்னணியில், தமிழ்மக்களை வென்று அடக்கிய பேரினவாதத்தின் வெற்றியை சார்ந்து இந்த முரண்பாடு கூர்மையாகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழன் மேலான வெற்றியை யார் அறுவடைசெய்வது என்ற அரசியல் சதுரங்க எல்லைகை;குள், பெரும்பான்மை பேரினவாத கட்சிகள் தமக்குள் கன்னை பிரித்து வருகின்றது. பெரும்பான்மை பேரினவாதத்தை நக்கித் தின்னும் சிறுபான்மை கட்சிகள், யாரை நக்கி எப்படித் தின்னலாம் எனப் பிரிகின்றது.

 

இந்த பின்னணியில் இரண்டு பிரதான எதிர் அரசியல் போக்குகள், அரசியல் நிகழ்வாகி வருகின்றது. இங்கு புலிகளையும், தமிழ்மக்களையும் அடக்கி வென்றது இராணுவமா அல்லது கோத்தபாயவின் கீழ் இயங்கும் இரகசிய கொலைக் குழுவா என்ற விவகாரம் முன்னிலைக்கு வரவுள்ளது.

 

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமை தாங்கிய இராணுவமும், மகிந்த குடும்பம் தலைமை தாங்கிய இரகசிய கொலைக் கும்பலும் மோதுகின்றது. இந்த இன அழிப்பு யுத்தத்தில் தாங்கள் ஆற்றிய பங்குபற்றி, சிங்கள மக்கள் மத்தியில் தங்களை கதாநாயகராக இப்படி முன்னிறுத்துகின்றனர். சிங்கள மக்கள் எப்படி பிரிந்து கிடக்கின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாகும் முரண்பாடு, தவிர்க்க முடியாமல் பேரினவாதமாகவே மேலெழுந்து வருகின்றது. இது மறுபுறத்தில் யுத்தக் குற்றத்தின் முழு வடிவத்தையும், எதிர் தரப்பின் மேலான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வெளிவரும் என்பது தவிர்க்க முடியாது.

 

இந்த பின்னணியில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய முரண்பாடுகளும், இன்று தீவிரமாக  இயங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தன் எதிரிகளை போட்டுத்தள்ளிய மகிந்த சிந்தனை, யுத்த குற்றத்தினை பாரியளவில் நடத்தும் இரகசிய குழுவைக் கொண்டுள்ளது. இது தன்னை பாதுகாக்க எல்லாவிதமான ஜனநாயக விரோதத்தையும் தொடர்ந்து செய்வதைத் தவிர, அதனிடம் மாற்று அரசியல் எதுவும் கிடையாது. 

 

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புலியையும், தமிழ் மக்களையும் அடக்கிவென்ற இராணுவத் தளபதி என்ற பேரினவாத தகுதி, சிங்கள வாக்காளரை தன்வசப்படுத்தும் பேரினவாத ஆற்றல் கொண்டது. அவர் வாய் திறக்கும் வரைதான், மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சி அதிகாரத்தை, தனது பாசிச கட்மைப்புக்கு ஏற்ப தக்கவைக்கும் என்ற அகநிலை எதார்த்த அரசியல் நிலவுகின்றது.

 

இதில் இருந்து தப்ப இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இல்லாது ஒழிப்பது தான், மகிந்த குடும்பத்தின் ஒரே அரசியல் தெரிவாக இருக்கும். இந்த அரசியல் எல்லையில் தான் மகிந்த சிந்தனை உள்ளது. இதற்காக கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் ஆயிரக்கணக்கில் கொலை செய்த இரகசிய கொலைகாரக் கும்பலை, மகிந்த கும்பல் கொண்டுள்ளது. இதைப் புலிகளின் பெயரில் செய்ய, புலிகள் இன்று இல்லை.

 

தங்கள் பாசிச கொலைகார மகிந்த சிந்தனை அரசியலை செய்ய, புலிகளை உயிர்ப்பித்து காட்டுவது அரசுக்கு இன்றைய அரசியல் தேவையாக உள்ளது. மகிந்த சிந்தனையிலான குடும்ப சர்வாதிகார பாசிசம் ஏவும் கொலைகார அரசியலில் இருந்து, முன்னாள் இராணுவத்  தளபதி உயிருடன் தப்பிப் பிழைப்பாரா என்பது இன்று எதார்த்தமான கேள்வியாகியுள்ளது. இதில் தப்பி ஒரு எதிர் கட்சி வேட்பாளராக மாறுவது, அதில் நீடிப்பது, அதிகாரத்துக்காக போட்டியிடுவது என்று பல படிகளை தாண்டி அவர் செல்லவேண்டியுள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றினால், சரத் பொன்சேகாவோ மகிந்த குடும்பத்தின் நிலையை அடைவார் என்பது இதன் மறுபக்க உண்மையாயினும், இலங்கை மக்களின் இரண்டு பிரதான மக்கள் விரோதிகள் மோதிக் கொள்கின்றனர்.

 

இதற்கு வெளியில் இதற்கு எதிராக போராடுவதன் மூலம்தான், உண்மையில் மக்களுடன் மக்களுக்காக நிற்கமுடியும். இதைத் தவிர வேறு அரசியல் தெரிவு மக்களுக்காக கிடையாது.   

 

பி.இரயாகரன்
17.11.2009