வண்ணங்களுக்கு அடியில்
புதைந்து கிடக்கும்
கோட்டுச் சித்திரங்களாய்,

உனது  அர்த்தம் பொதிந்த
அதிகாலைப் பொழுதுகள்
எப்பொழுதும் – எனக்குள்
நீண்டு கிடப்பதுண்டு.

ஒரு நெடிய இரவின்
கடைசி துளிகள்
வழிந்து முடிவதற்குள்.

முள் விறகுகளை
நொடிக்குள் உடைத்து,
அடுப்பு நெருப்பினை
நிமிடங்களில் மூட்டி,
கஞ்சியோ… கூழோ…
கவனமாய் வடித்து,
பாதியை எனக்கு வைத்து
மீதியை – உன்
தூக்குக்குள் திணித்து,
என் தூக்கம் கலையாமல்
தலை கோதி…
கதிர் அருவாள் எடுத்துகொண்டு
என்னை கடந்து நீ செல்வாயே…
அதுவரை உன்னை பிடிக்கும்
அதன் பிறகே கொஞ்சம் வலிக்கும்.

எதற்கம்மா
இவ்வளவு வேகம்?

“யாரோ ஒரு தேவரின்,
யாரோ ஒரு கவுண்டரின்,
… ……………………………..”
தோட்டத்திற்கு சென்று
அவர்களின் நிலம் முழுவதிலும்
உன் வியர்வை துளிகளை
விதைத்துவிட்டு,
சக்கையாக சாயங்காலம்
வீடு திரும்புவதற்கா
இவ்வளவு வேகம்?

தொடர்ந்து…
உன் உழைப்பை உறிஞ்சும்
இந்த தோட்டங்கள் பற்றி
எப்பொழுதாவது
எண்ணியதுண்டா?

ஏக்கர் கணக்கில் நீளும்
உனது எஜமானர்களின்
காடுகளில் – உன்
கால்தடங்கள் படாத
நிலப்பரப்பும் இருந்ததுண்டா?

ஆயினும்
என்னம்மா இதுவரையில்,

ஒரு அவசரத் தேவை என்றாலும்
அவர்களின்,
கொல்லைபுரத்து கதவுகள் தாண்ட
உன் கால்களை நீள விட்டதுண்டா?

இல்லை…,
எப்பொழுதும் இல்லை.

காலங்காலமாய்
கருப்பு மனுசியாய் நீ
இருந்து கண்டதுதான் என்ன?

உழைப்புச் சுரண்டலும்,
தீண்டாமை கொடுமையும்
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்
இந்த கொடிய கொடுமையெல்லாம்
எப்பொழுதம்மா
கொளுத்தப்போகிறோம்?

உன் கால்களுக்கு கீழே
நீளும் நிலத்தையெல்லாம் – நாம்
எப்பொழுதம்மா…
பறித்து எடுக்க போகிறோம்?

இப்படியாக…
சிவப்பு சிந்தனை கலந்து
உன்னுடன் உரையாடத் துவங்கினால்,
நடுங்கப் போகின்றவர்கள்
நலமுடன் இருக்க,
நீதான் மிகவும்
நடுங்கிப் போகின்றாய்.

அஞ்சுவது மட்டும் அல்லாமல்
உன் கண்ணீர் துளிகளால்
என் கைகள் இரண்டினையும்
கட்டியும் போடுகின்றாய்.

“நீ படிச்ச படிப்புதாயா
நம் சொத்து,
கவருமெண்டு வேலைக்குப் போயி
நாலு காசு சம்பாதி,
இந்த பேச்சேல்லாம்
நம் கஷ்டம் தீர்க்குமாயா?”

சம்பாதிப்பது இருக்கட்டும்,
போனவர்கள் என்ன ஆனார்கள்?
நவீன நந்தன்மார்களாய்
சுருங்கித்தான் போனார்கள்.
அவர்கள் அரிதாரம்
அவிழ்ந்து  விடுமென்று
கருப்பு மனிதர்களை கண்டால்
மறந்தும் திரும்பி பார்ப்பதில்லை.


அடையாளம்


சந்தேகம் உனக்கிருந்தால்
அவர்களின் வீட்டு
அழைப்பு மணியை
ஒரு நாளேனும்
அழுத்திப் பாரம்மா.
நந்தன்மார் பாதை
நமக்கு வேண்டாம்.

உன் போன்ற ஊமைகள்தான்
ஆயிரம்… ஆயிரம்…
அதில் ஒருவரை மட்டுமேனும்,
ஆதிக்க சுரண்டலுக்கு எதிராய்
ஆட்காட்டி விரல் நீட்டி
உரக்க பேச வைத்தால்…
அதுதானம்மா,
என் வாழ்வின் அடையாளம்.

- முகிலன்

http://www.vinavu.com/2009/11/14/saturday-poems-12/