இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்; இஸ்லாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் எனும் கூற்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாது இஸ்லாமை சாராத பிற மதங்களை சார்ந்தவர்களிடமும் குறிப்பிட்ட சிறுஅளவு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம், ஒன்று மதக்கோட்பாடுகளில் நம்பிக்கைக்கைகளில் பிடிப்புற்று நடந்துகொள்ளும் அல்லது பிடிப்புற்று நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் முஸ்லீம்களின் இயல்பு. இரண்டு மதக்கோட்பாடுகளுக்கு, வேத வசனங்களுக்கு ஏற்ப வளைக்கப்படும் அறிவியல். எல்லா மதங்களுமே இயல்பில் அறிவியலை மறுத்தாலும் நடைமுறையில் அறிவியலுக்கு தாம் எதிரியல்ல என காட்டிக்கொள்ள முயல்கின்றன. இந்த நடைமுறை தற்கால இஸ்லாமிய மதவாதிகளால், மதப்பரப்புரையாளர்களால் வெகுவாகவும், தொடற்சியாகவும் எடுத்துக்காட்டப்பட்டு; அதையே, ஏனைய மதங்களைப்போல் அறிவியலை அனுசரித்துச்செல்வதில்லை அறிவியலை தன்னுள்ளே அடக்கிக்கொண்டது தான் இஸ்லாம் என்பதற்கான ஆதாரமாகவும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாம் என்பது மெய்யான ஒன்றாகவும் அதன் கோட்பாடுகளும், இறையியலும் மட்டும்தான் உலகில் ஈடேற்றம் பெறுவதற்கான ஒரே வழியாகவும் முன்வைக்கின்றனர். அவ்வாறன்றி, இஸ்லாமும் ஏனைய மதங்களைப்போலவே பிற்போக்குத்தனங்களையும், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளையும், முரட்டுத்தனமான கருத்துமுதல் வாதத்தையுமே தன்னுள் கொண்டுள்ளது.
இஸ்லாம் மதமல்ல மார்க்கம் அதாவது வாழ்க்கைக்கான வழிகாட்டி எனவே அதை மதம் என்று கூறுவது தவறு என்பவர்கள், ‘இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அது ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் அனைத்து கணங்களுக்கும் தேவையான குறிப்புகளை வழங்கி அவனை வழி நடத்துகிறது என்றும் இதில் கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் ஏனைய மதங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் தவறான பாதையை உணர்த்தி அவர்களை அழைக்கவும் செய்வதால் இது மதமல்ல மார்க்கம் என்கிறார்கள். சரியோ தவறோ தனக்கென ஒரு வாழ்முறையை அல்லது வாழ்க்கைக்கான வழிமுறையை சொல்லாத மதம் எது? பார்ப்பனீய இந்து மதத்தில் சாதிய்ய படிமுறைகள் வாழ்முறையாக இருக்கிறது. பௌத்தத்தில் ஆசையை துறப்பது வழிமுறையாக இருக்கிறது. கன்பூசியத்தில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது வாழ்முறையாக இருக்கிறது. கிருத்தவத்தில் சகித்துக்கொள்வது வாழ்முறையாகவும், இஸ்லாத்தில் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொள்வது வாழ்முறையாகவும் இருக்கிறது. இவைகளை அடிப்படையாகக்கொண்ட சட்டங்களின் வாயிலாக தம்மை பின்பற்றுபவர்களின் வாழ்வில் தமக்கிசைந்த கட்டுக்கோப்பை கொண்டுவரவே எல்லா மதங்களும் விரும்புகின்றன. இதில் இஸ்லாத்திற்கு என்ன தனிச்சிறப்பு? எல்லா மதங்களும் தமக்குள் செய்தே ஆக வேண்டுமென்று சிலவற்றையும் சில விதிவிலக்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாமதங்களும் விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன இதில் இஸ்லாத்தில் மட்டும் விலக்கிருக்கிறதா என்ன? உலகில் பார்ப்பனீய இந்து மதத்தை தவிர ஏனைய மதங்கள் தங்களின் மதத்திற்கு வருவோரை மகிழ்வுடன் வரவேற்கவே செய்கின்றன. இதில் இஸ்லாமை மட்டும் மார்க்கம் என விளிக்கவேண்டிய தேவை என்ன? மார்க்கம் என்றால் வழி என்று பொருள், வழி என்றானால் அதில் பயணிக்கும் மக்களுக்கு தம் வழியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும். எல்லா மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன. அவர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இதில் எங்கே சுதந்திரம் வருகிறது? மதம் என்பதன் பொருள் என்ன? பரிசீலனைக்கு இடமின்றி ஒரே விதமான சிந்தனையினூடான வெறி என்பது தான். இந்த இலக்கணத்தினின்று இஸ்லாம் மாறுபடுகிறதா என்ன? பின் எப்படி அதை மதம் எனவழைக்காமல் மார்க்கம் என்றழைப்பது?
பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பற்றி பேசும்போது ஒரு கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு அதன்படி பேசுவார்கள். கிமு கிபி என்பது போல் காலத்தை இஸ்லாத்திற்கு முன் இஸ்லாத்திற்கு பின் என்று பிரித்துக்கொண்டு முகம்மதுக்கு முன்னுள்ள காலம் அறியாமைக்காலம் என்ற தொனியிலிருந்துதான் பேசுவார்கள். இந்த அடிப்படையில் இருந்துதான் குரானின் வசனங்கள் அறிவியலை (அதாவது அந்த நேரத்தில் கண்டறியாததாக கருதப்படும் அறிவியலை) மெய்ப்பிப்பதால் இது முகம்மதின் வாக்காக இருக்கமுடியாது. கடவுள் என்ற ஒரு சக்தி இருந்து, அது எல்லாவற்றையும் அறிந்திருந்து கூறியதால் தான் இப்படி சாத்தியமாயிற்று என்ற திசையில் பேசுவார்கள். ஆனால் மெய்யாக இவர்கள் குறிப்பிடுவதுபோல் குறிப்பிட்ட வசனம் அறிவியல் கூறுகளை விளக்குமா? என்றால் இருக்காது சாதாரணமாக அந்த வசனம் வெளிப்பட்ட சூழல் குறித்த, தேவை குறித்த விளக்கமாக இருக்கும், ஆனால் அதை பிரித்து, நுணுகி, யூகம் செய்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலோடு ஏதாவது விதத்தில் ஒத்துப்போவது போல் பொருள் கொண்டு, ஆஹா குரான் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என விதந்து போற்றுவார்கள். இவைகளையும் மீறி குரானின் வசனங்களை அறிவியல் நேரடியாக மறுக்கும் வேளைகளில் அது யூகத்தின் அடிப்படையிலான கோட்ப்பாடுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலல்ல என திருப்பிப்போடுவார்கள்.
குரானில் மட்டுமல்லாது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் பலவற்றில் அறிவியலின் கூறுகள் மறைபொருளாக தலைகாட்டி இருக்கின்றன. “மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை” இது கம்பராமாயணத்தில் வருவது. இதனைக்கொண்டு கம்பனுக்கு விமானம் பற்றிய அறிவு இருந்தது என்று கொள்ள முடியுமா? “அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது அது அருகேயும் உள்ளது, அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது” ஈசோ உபனிசத்தில் இருக்கும் இதை க்வாண்டம் மெக்கானிசம் பற்றியது என்று எடுத்துக்கொள்ள முடியுமா? “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்” என எழுதிய ஔவையாருக்கு அடர்த்தி பற்றிய கோட்பாடுகள் ஆர்கிமிடீஸுக்கு முன்பே தெரியும் என்று முடிவுக்கு வரலாமா? “சாணிலும் உளன் அனுவை சதகூறிட்ட கோணிலும் உளன்” என்பதில் அணுப்பிளவு பற்றி வருகிறது, திருக்குறளில் நிர்வாகவியல், குறுந்தொகையில் உளவியல், பட்டினப்பாலையில் நகர் நிர்மாணம், சீவக சிந்தாமணியில் தொலைக்காட்சி, திருப்பாவையில் வானியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் மட்டுமல்ல உலகிலுள்ள பல மொழிகளின் பண்டை இலக்கியங்களில் இதுபோல் பற்பல அறிவியல் கூறுகளை கூறலாம். லூயி கார்ல், ஐன்ஸ்டீனுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை தன்னுடைய கதைகளில் விளக்கியதாக கூறுகிறார்கள். பாராசூட், கருவியல் உட்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே படமாக வரைந்து வைத்தவர் லியானர்டோ டாவின்சி. அறிவியல் தெளிவு ஏற்படுவதற்கு முன்பே எப்படி இவைகளை அவர்களால் கூற முடிந்தது? முகம்மதுவுக்கு அல்லா போல வேறு ஏதோ ஒரு கடவுள் அவர்களுக்கு கூறிச்சென்றனரா? இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது.
இஸ்லாமியர்களின் அறிவியல் தாகம் எப்படிப்பட்டது? வேத வசனங்களை அறிவியல் வயப்பட்டு பொருள் விளக்குபவர்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லா வசனங்களையும் அணுகுவார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது எனும் பார்வை அவர்களுக்கு தோன்றியிருக்கும். ஆனால் ஜின்களின் இருப்பை பொருத்தவரை எந்த ஆதாரமோ, அறிவியல் விளக்கங்களோ அவர்களுக்கு தேவையில்லை. அல்லா குரானில் கூறியிருப்பது மட்டுமே போதுமானது, ஜின்கள் எனும் உயிரினங்கள் உலகில் இருக்கின்றன, அதை யாரும் மெய்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. இதே போல் ஏனைய வசனங்களையும் எடுத்துக்கொள்ளலாமே, குரான் இன்றைய அறிவியலை மெய்ப்பிப்பதாக நிரூபித்தாக வேண்டிய அவசியமென்ன? பார்ப்பனீய இந்து மதத்தை பொருத்தவரை அது அறிவியலுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். கிருத்தவமோ கலிலியோ, புருணோ என்று வரலாறுகளை வைத்திருக்கிறது. ஆகவே இஸ்லாம் மட்டுமே இதுபோன்ற மதங்களிலிருந்து வேறுபட்டு அறிவியலை அரவணைத்துச்செல்கிறது எனும் தோற்றத்தை உண்டாக்குவதன் மூலம் எங்கள் மதமே உயர்ந்தது எனவே அதில் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்று ஆள் பிடிக்கும் வேலைதானே தவிர வேறொன்றும் இல்லை. எனவே மதவாதிகளின் கைகளில் அறிவியல் வஞ்சகமாக பயன்படுவதற்கு எதிராக இனி குரானின் வசனங்களை அலசுவோம்.