பு.ஜ. இதழின் 25ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, கடந்த கால பு.ஜ. இதழ்களில் வெளியான முக்கியமான, இன்றைய சமூக நிகழ்ச்சிப் போக்குக்கும் பொருந்தக் கூடிய சமூக அரசியல் பொருளாதார விமர்சனக் கட்டுரைகளை இவ்விதழ் தொடங்கி மீண்டும் வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறோம். இக்கட்டுரைகள், பு.ஜ.வின் புதிய மற்றும் இளம் வாசகர்களுக்குக் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் குறித்த விவரங்களைத் தருவதாகவும்;
பு.ஜ.வின் நீண்டநாள் வாசகர்களுக்கு ""மலரும் நினைவு''களாக அமைவதாகவும் இருப்பதோடு, அந்நிகழ்வுகள் குறித்த பு.ஜ.வின் முடிவுகள் கால ஓட்டத்தில் சரியென நிரூபிக்கப்பட்டிருப்பதை இரு தரப்பும் உரசிப் பார்த்துக் கொள்ள உதவும் என நம்புகிறோம். இந்த அடிப்படையில் பு.ஜ.வின் முதலாம் ஆண்டு, முதல் இதழில் வெளியான ""இது இன்னும் நீடிக்கலாமா?'' என்ற கட்டுரை இங்கு மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ""அரசுதான் மிகப் பெரிய ஆதிக்க சுரண்டல் அடக்குமுறை நிறுவனம்'' என்ற மார்க்சியலெனினிய கருத்தினை, நடைமுறை உதாரணங்களோடு எளிய முறையில் விளக்கும் இக்கட்டுரை, அன்று போலவே இன்றும் காலப் பொருத்தத்துடன் இருப்பதை, வாசகர்கள் படிக்கும்பொழுது அறிந்து கொள்வார்கள். - ஆசிரியர் குழு
இது இன்னும் நீடிக்கலாமா?
மிட்டாமிராசுகளும், முதலாளிகளும் கொள்ளையடிக்கும்போது கோபமடைகிறோம்.
வட்டிக் கடைக்காரர்களும், வியாபாரிகளும் மோசடி செய்யும்போது ஆத்திரப்படுகிறோம்.
சாதி, மத, இன வெறியர்கள் மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு மனித ரத்தம் குடிக்கும்போது உள்ளங் கொதிப்படைகிறோம்.
ஆபாச, அராஜக வன்முறை கலாச்சாரக் கேடுகளால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழியும்போது வேதனைப் படுகிறோம்.
இவையாவும் நியாயமானதே! போலி கம்யூனிஸ்டுகளும், முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும் கூட இவற்றுக்கெதிராக எப்போதாவது குரல் எழுப்புகின்றனர்.
ஆனால் சிரத்தையுடனும், ஆழமாகவும் தொகுப்பாகவும் பார்க்கத் தவறுவதால் பரந்துபட்ட மக்களில் பலரும் தம் கண்ணுக்கு முன்னமேயே நடக்கும் சில உண்மைகளை அறிவதில்லை. சிலர் தெரிந்ததும் சும்மா இருக்கின்றனர்.
முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும் போலி கம்யூனிஸ்டுகளும் வேண்டுமென்றே இந்த உண்மைகளை மூடி மறைக்கின்றனர். பிரச்சினைகளைத் திசை திருப்பி அவற்றை அறியாதவாறு செய்கின்றனர்.
இதை நீங்கள் பார்க்கவில்லையா? எந்தவொரு தனி நபர், குழு, வர்க்கத்தையும் விட மிகப்பெரிய மோசடி, கொலை, கொள்ளை, சாதிமத இனவெறி சமூகக் கலாச்சார சீரழிவு நிறுவனமே அரசுதான்.
நீதி ஒழுங்கு, அமைதி ஆகியவற்றை நிர்வகிப்பதாகக் கூறிக் கொள்ளும் அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் அடங்கிய அரசுதான் அவற்றுக்கு நேரெதிரான மிகப் பெரும் நிறுவனம்.
அரசின் அன்றாட செயல்பாடுகளைப் பாருங்கள். இந்த உண்மைகள் துலாம்பரமாக விளங்கும்.
அரசு - தனிப்பெரும் சுரண்டல் நிறுவனம் ·
அரசு, பஸ்லாரி போக்குவரத்துக் கழகங்கள் நடத்துகிறது. பல தவணைகளில் தன் விருப்பம் போல் கட்டணங்களை உயர்த்திக் கொள்கிறது. ·
அரசு, ரயில், தபால்தந்தி நிறுவனங்களை நடத்துகிறது. ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்கிறது. ·
அரசு மின் வாரியம் நடத்துகிறது. மீட்டர் வாடகை மற்றும் மின் கட்டணங்களை எதேச்சையாக ஏற்றிக் கொள்கிறது.
·
இரும்பு, எஃகு, நிலக்கரி, இரசாயன உரம், மருந்து, மின்னணு, தொலைபேசி, தொலைக்காட்சி, புகைப்படச் சுருள், பால், ரொட்டி இப்படிப்பட்ட சகல துறைகளிலும் உற்பத்தி செய்வதோடு, ஏகபோகமாக இருந்து கொள்ளையடிக்கிறது. "பொதுத்துறை', "அரசுடைமை', "தேச உடைமை' என்று சொல்கிறது. இதனால் மக்களுக்கும் நன்மை இல்லை; இந்நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் நன்மை இல்லை. அதிகார வர்க்கம் ஊதிப் பெருக்கவே இவை உதவுகின்றன. ·
கூட்டுறவுகள் கூட்டுக் கொள்ளை நிறுவனங்களாகியுள்ளன. எந்தக் கூட்டுறவிலும் பங்குதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் லஞ்ச, ஊழல் லாவண்யங்கள் தான் நடக்கின்றன.
அரசு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நடத்துகிறது. அதிலும் கூட லாப வேட்டையாடுகிறது. மதுரை பல்கலைக்கழகத்திற்கு அஞ்சல் வழிக் கல்வியில் மட்டும் ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் நிகர லாபமாம்!
பால், மீன், முட்டை, கறி இவற்றை மலிவு விலைக்கு மக்களுக்கு வழங்குவதாக நிறுவனங்கள் தொடங்கினர். ஆரம்பத்தில் மலிவாக இவற்றைத் தந்தார்கள்; இப்பொழுதோ 50 மில்லி சூடான பால் 75 காசு; 50 மில்லி இனிப்புத் தயிர் ஒரு ரூபாய்; 100 மில்லி குளிர்ந்த பால் ரூபாய் 1.20; "டீக்கடை'க்காரனும், கசாப்புக் கடைக்காரனும்கூட இரக்கமுடையவனாக இருப்பானோ என்று சந்தேகமெழுகிறது.
இப்படி அரசு உற்பத்தித் துறையானாலும், சேவைத் துறையானாலும் கொள்ளை மோசடிதான். அதுவும் பல துறைகளில் ஏகபோக ஆதிக்கம் வகிப்பதால் அரசு சண்டப்பிரசண்டம் செய்கிறது. மக்களை ஏமாற்ற சில்லறைத்தனமான பொறுக்கித்தனமான சிலுமிச வேலையும் செய்கிறது.
தபால் கட்டணத்தை உயர்த்தி விட்டு (ஸ்டேஷனரி) தபால் செய்யும் பொருட் செலவு 5 பைசா என்று தனியே பிரித்து புதுப் பெயர் சொல்லி ஏய்கிறது.
உணவு விடுதியில், "ரொட்டி விலை', "குருமா விலை' என்று கூறி காசு பிடுங்கும் முதலாளியை விடக் கேவலமாக சில்லரைத் தட்டுப்பாடு என்று கூறி அடுத்த 50 பைசாவுக்கும், ரூபாயுக்கும் இரயில் கட்டணத்தைக் கூட்டியது; கட்டணத்தை உயர்த்த வில்லை. கூடுதல் கட்ட ணம் (சர் சார்ஜ்) என்று சொல்லி புதுப் பெயர் சூட்டி ப் பிடுங்கிக் கொள்கிறது. துரித வண்டியை வேகத்தையோ, வசதியையோ கூட்டாமல் அதிவேக துரித வண்டி என்று புதுப் பெயர் சூட்டி கூடுதல் கட்டணம் பிடுங்கி கொள்கிறது.
இரயில் நிலையத்துக்குள் வந்தாயா? அதற்கும் கட்ட ணம் என்றது. அதையும் கூட்டிக் கொடு என்கிறது. அரசு பஸ் நிலையத்திற்குப் போனால் காலியாக, பஸ்ஸில் இடமிருந்தாலும் "பதிவுச் சீட்டு' பெற வேண்டும். குறைவாக சுமை இருந்தாலும் எடை இரசீது பெறவேண்டும்; இப்படியும் இன்னும் பல வகையிலும் கொள்ளை.
இத்தனையும் போதாதென்று வரி போட்டு பிடுங்கிக் கொள்ளாத துறையோ, பொருளோ இல்லை. எம்.ஜி.ஆர். குலேபகாவலி சினிமாவில் பாடியது போன்று "இட்லி வரி', "சட்னி வரி', "ஆம்பிளை வரி', "பொம்பிளை வரி' போடாததுதான் பாக்கி. சிறுநீர் கழிக்கவும், சைக்கிள் நிறுத்தவும் கூட ஏலம் போட்டு பறித்துக் கொள்கிறது.
அரசுதனிப்பெரும் சமூகக் கலாச்சார கேடுடைய நிறுவனம் · அரசு, லாட்டரிக் குலுக்கல் நடத்தி நேரடிக் கொள்ளையில் ஈடுபடுவதுடன் மக்களைச் சூதாட்ட வெறியில் தள்ளுகிறது. · அரசு, வரி வந்தால் போதுமென்று ஆபாச, அராஜக வன்முறைத் திரைப்படங்களை அனுமதித்து கொள்ளையடிப்பதோடு மக்களை காமக் களிவெறியில் மூழ்கடிக்கிறது.
அரசு மஞ்சள் பத்திரிகைகளுக்கு விளம்பரம், பிற சலுகைகள் அளித்து மக்களிடையே நஞ்சை விதைக்கிறது.
அரசு, குதிரைப் பந்தயம் நடத்த அனுமதித்து வரிக் கொள்ளை அடிப்பதோடு, மக்களை சூதாட்ட வெறியில் ஆழ்த்தி வைக்கிறது.
அரசு, "கலை விழாக்கள்' என்ற பெயரில் ஆபாச நடன, சூதாட்ட விழாக்களை நடத்திக் கொள்ளையடிப்பதோடு சமூக விரோத சக்திகளை காத்து வளர்க்கிறது.
அரசு, நட்சத்திர விடுதிகள் நடத்தி சுகபோகங்களை முதலாளிகள் அனுபவிக்கவும், அதிகாரிகள் கூட்டுச் சேரவும், இதற்கு மக்களை மறைமுகமாகக் கொள்ளை அடிக்கவும் உதவுகிறது. அந்நிய ஆபாசக் கலாச்சாரத்தையும் பரப்புகிறது.
ஆக, ஆபாசம், சாராயம், லாட்டரி, சூதாட்டம் என்று மக்களும் நாடும் எக்கேடுகெட்டுச் சீரழிந்தாலும் வருமானமே ஆதாயமாகக் கொண்டு சீரழிக்கிறது. அரசு, விபச்சாரம் நடத்தவும் தயங்காது என்ற நிலைக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே நட்சத்திர விடுதிகள், அழகு நிலையங்களில் விபச்சாரமே முக்கியத் தொழில் என்றறிந்தும் உரிமம் வழங்கி ஆசீர்வதிக்கிறது.
தனிப்பெரும் சமூக கலாச்சார சீரழிவு நிறுவனமாக உள்ள இந்த அரசுதான் "சாத்தான்தான்' வேதம் ஓதுகிறது; "குடி குடியைக் கெடுக்கும்', "குடிப்பழக்கம் வீட்டைக் கெடுக்கும்', "சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு' என்று பிரச்சாரம் செய்வதை விதியாக்கியுள்ளது. இது எல்லாம் வேடம்! தெரிந்தே செய்யும் மோசடியல்லவா இது?
அரசு-தனிப்பெரும் சாதி, மத, இனவெறி நிறுவனம்
· அரசு, சாதிய முறையை ஒழிப்பதற்கு பதில், ஒவ்வொருவரும் பதிவு செய்து முத்திரை குத்தி அங்கீகரித்து ஏற்கும்படி மக்களைக் கட்டாயப்படுத்துகிறது.
அரசு, மதச் சார்பற்றதாகக் கூறிக் கொண்டாலும் மதங்களை ஆதரித்து, மத நிகழ்ச்சிகளை நடத்தி, மதச் சடங்குபூர்வமாக இயங்குகிறது. அரசு நிறுவனங்கள் ஆயுத பூசை நடத்துகின்றன. திரைப்பட விழாக்களும் பிற திறப்பு விழாக்களும், குத்து விளக்கேற்றி நடத்துகிறது. கல்லணை திறக்கவும் கலெக்டர், சாமிக்குப் பூசை போடுகிறார்.
அரசு, சிறிய தேசிய இனங்களை ஒருபுறம் ஒடுக்கியும், பெரும் தேசிய இனவெறியைத் தூண்டியும், மொழியைத் திணித்தும் இனவெறிக்குத் தூபம் போடுகிறது!
அரசு, சாதிமத, இனவெறிப் படுகொலைக் குற்றவாளிகளை எந்த வழக்கிலும் தண்டிக்காது மன்னித்து அடைக்கலமளிக்கிறது.
அரசு, கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளைகளையும், சாதி, மத, இன ரீதியில் நடத்துவதற்கு அனுமதியளிக்கிறது. அவற்றுக்கு விசேச உரிமைகளும், சலுகைகளும் கூட அளிக்கிறது.
அரசு, சாதி, மத இனத் தலைவர்களுக்குச் சிலை எடுக்கிறது. விழா நடத்துகிறது. போக்குவரத்துக் கழகங்கள், சாலைகள், மாவட்டங்கள் போன்றவற்றுக்கு அவர்களது பெயர் சூட்டுகிறது.
அரசின் முக்கிய அங்கமான இராணுவமே சாதி, மத, இன ரீதியாகப் பிரிக்கப்பட்டு இயங்குகிறது. · அரசு அதிகாரிகள், வாரியத் தலைவர்கள், அமைச்சர் கூட சாதி மத, இன ரீதியில் நியமிக்கப்படுகின்றனர். அரசுதனிப்பெரும் ஒடுக்குமுறை நிறுவனம் · மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் எந்த பகுதியையும் கலவரப் பகுதியாக அறிவித்து, கண்டதும் சுடுகிறது அரசு.
·சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முகாமிடும் இடங்களில் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெறியாட்டமாடுகின்றன, அரசின் பிரதான அங்கமான இராணுவமும், துணை இராணுவமும். · சிறை, காவல்நிலையக் கற்பழிப்புகள், கொலைகள் பெருகி வருவதோடு "காவல்' துறையினரே கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அரசே கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடத்திவிட்டு அவற்றை மறைக்க சட்ட மீறல்கள் செய்வதாக பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டன. · அடக்குமுறை ஆயுதங்களை வைத்துக் கொள்ளும் ஏகபோக உரிமை பெற்றது அரசு. · அரசினால் தவறாகத் தண்டிக்கப்பட்டவர்கள், பாதிப்புக்குள்ளானவர்கள் நட்ட ஈடு பெற முடிவதில்லை. எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கம் வைக்கும் உரிமை இன்னும் பிற அடிப்படை உரிமைகள் ஏட்டளவில் இருப்பதையும் பிடுங்கிக் கொள்கிறது, அரசு. யாரையும் விசாரணை இன்றிச் சிறைப்படுத்துகிறது; எந்த இயக்கத்தையும் தடை செய்கிறது. எந்த இடத்தையும் உடமையையும் பறித்துக் கொள்கிறது.
·எந்த வழக்கிலும் மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை.
முதலாளிகள், மிட்டாமிராசுகளுக்கே ஆதரவாக நிற்கிறது அரசு.
அரசு நிறுவனத்தினரிடம் சாதாரண மக்கள் பதில் பேசத் துவங்கினாலே ""எங்கிட்டேயே சட்டம் பேசுகிறாயா?'' ""என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?'' என்று கேட்டுத் தாக்குகிறது.
அரசு நிறுவன ஊழியர்களுக்கே ஜனநாயக, குடியுரிமை மற்றும் பிற உரிமைகளை மறுக்கிறது. பல ஆண்டுகளாகியும், 6 லட் சம் தபால்தந்தி ஊழியர்கள் இன்னும் பிற அரசு அலுவலக, ஆலை ஊழியர்கள் நிரந்தரமின்றியும், சட்ட விரோதமாகவும், சங்கம் வைக்க உரிமை இன்றியும் நசுக்கப்படுகின்றனர். இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும் மிகப் பெரும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, தேச விரோத நிறுவனம்தான் அரசு.
""அதிகார வர்க்கம்'' - நாட்டின் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள மேதைகள். ""போலீசு'' நாட்டின் - சட்ட ஒழுங்கு அமைதியின் காவலன்.
""இராணுவம்'' - தேசத்தின் எல்லைகளைக் காக்கும் புனிதம்.
""நீதிமன்றம்'' - அக்கிரமங்களை வீழ்த்தும் நீதியின் நிலைக்களன்.
""சிறைச்சாலை'' - குற்றவாளிகளைத் திருத்தி நல்ல குடிமகனாக்கும் பட்டறை.
இப்படி நம்ப வைக்க எத்தனையோ முயற்சிகள் நடக்கின்றன. இந்த அரசு விசுவாசமே, அரும்பியதிலிருந்து அந்திமக் காலம் வரை இந்தியக் குடிமகனின் மண்டையில் ஏற்றப்படுகிறது.
""இரண்டு தனிநபர்களுக்கிடையில், இரண்டு பிரிவுக் கூட்டத்திற்கிடையில், இரண்டு வர்க்கத்திற்கிடையில் தனிநபர் ரீதியிலோ, சாதி,மத இன ரீதியிலோ, வர்க்க ரீதியிலோ ஏற்படும் எல்லாத் தகராறுகளையும் தீர்த்து வைப்பதற்கானதுதான் அரசு; அல்லது சமரசப்படுத்துவதற்கானது அரசு. குடி தண்ணீர், சுகாதாரம், பாதை, கல்வி இன்னும் பிற பொதுக் காரியங்களை அனைத்து மக்களின் நலன் கருதி ஆற்றுவதுதான் அரசு.
'' ""உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நாட்டில் அமைதி நிலவச் செய்வதும் அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிராக, தேசத்தைக் காப்பதும் அரசு. ஆகவே, வரி போடுவதிலிருந்து, தனக்குக் கட்டுப்படாத எந்த ஒரு நபரையும் சுட்டுக் கொல்வது வரை சகல அதிகாரமும் அதற்கு இருப்பது எந்த வகையிலும் நியாயமானதே. இவை அதற்குள்ள புனிதமான உரிமைகள். அரசாங்க நிர்வாகத்திலுள்ள எம்.ஜி.ஆரோ, இந்திராவோ தவறு செய்யலாம்; அவர்களைக் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால் அரசை எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ அனுமதிக்க முடியாது. அது தேசத் துரோகம்; சட்ட விரோதம்.''
·இவைகள் கல்வி நிறுவனங்களில் நாளும் கற்றுத் தரும் பாடங்கள். · இவைதான் ஆளும் வர்க்க பிரச்சார பீரங்கிகள் முழங்கும் கோசங்கள்.
·இவைதான் தேர்தல் அரசியல் கட்சிகளின் மேடைப் பிரசங்கங்கள்.
இல்லை; அரசு ஓர் அதிகாரத் திமிர் பிடித்த கொலைகொள்ளைக் கூட்ட ம் என்றே மக்களின் அன்றாட அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய அரசில் அங்கேயோ, இங்கேயோ சில தவறுகள் நடக்கலாம். அதைச் சரி செய்து விடலாம் என்று முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயலுகின்றனர்.
போலி கம்யூனிஸ்டுகளோ, தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாகி அரசாங்கம் அமைத்தால் போதும்; அரசு நல்ல பிள்ளையாகி விடும்; ஒழுக்கசீலனாகி உத்தம புத்திரனாகி விடும்; முதலாளிக்கும் தொழிலாளிக்கும், நிலப்பிரபுவுக்கும் விவசாயிக்கும் ஏற்படும் தகராறுகளில்கூட போலீசும் கோர்ட்டும் நடு நிலை வகிக்கிறது; முதலாளித்துவக் கட்சிகள் ஆட்சி நடத்துவதானால் தான் அது தவறு செய்கிறது என்று அந்த அரசாகிய வேசிக்கு முக்காடு போட்டு பத்தினியாகப் படம் பிடிக்கின்றனர்.
இவ்வளவு கடைகோடித்தனமாக கேடுகெட்ட அரசை நியாயப்படுத்தி, அது நீடிப்பதை இவர்கள் ஆதரிப்பது ஏன்? இவர்கள் மறைமுகமாக தொண்டூழியஞ் செய்யும் ஆளும் வர்க்கங்களாகிய நிலப்பிரபுக்களின், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் நலன்களைக் காக்கும் பெரும் பணியாற்றுகிறது அரசு. அதன் வீழ்ச்சி ஆளும் வர்க்கங்களோடு அதன் அடிவருடிகளுக்கும் மரண அடி கொடுக்கும்.
எனவேதான், நமது நாட்டின் மிகப் பெரும் சுரண்டல் ஒடுக்குமுறை சாதி, மத, இனவெறி மற்றும் சமூக கலாச்சார சீரழிவு நிறுவனமான அரசை அதன் பிரதான அங்கமாகிய அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றம், சிறைச்சாலை அடங்கிய அரசு அமைப்பைத் தூக்கியெறிவது ஒன்றுதான் உண்மையில் புரட்சியாகும் என்று கம்யூனிசப் புரட்சியாளர்கள் பிரகடனப்படுத்துகின்றனர்.
· ஆர்.கே.