ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் சொத்துக்களைத் தனது உயர்பதவியைப் பயன்படுத்தி அபகரிக்கும் நபரும் ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவராய் இருந்தால், "சமூக நீதி' பேசும் பிழைப்பு வாதிகள் யார் பக்கம் நிற்பார்கள் என்பது நீதிபதி பி.டி.தினகரன் விவகாரத்தில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி வட்டத்தைச் சேர்ந்த காவேரிராஜபுரம் என்ற ஊரிலிருக்கும் தரிசு நிலங்கள், ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம் போக்கு நிலம் என 600 ஏக்கர் வரையிலான நிலத்தை கர்நாடக நீதிமன்ற நீதிபதி தினகரன் வளைத்துப் போட்டிருக்கிறார். இப்படிப்பட்டவர், அண்மையில் உச்சநீதி மன்ற நீதிபதியாவதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்திருப்பதை விசாரிக்கக் கோரி வழக்குரைஞர்கள் குரல் எழுப்பினர். பிரபல வழக்குரைஞரான சாந்தி பூஷண் ""தினகரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அப்படிப்பட்டவரை உச்ச நீதிமன்றத்துக்கு எப்படி நீதிபதியாக நியமிக்கலாம்?'' எனக் கேட்டிருந்தார்.

 

முன்னாள் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தினகரனுடன் இணைந்து செய்திருக்கும் இந்த நில மோசடிகளை அரசு விசாரிக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கடந்த செப்டம்பர் 22 அன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றது. அதைத் தொடர்ந்து, அவ்வமைப்பின் முன்னணியாளர்கள் உள்ளிட்ட 100 பேர்களை போலீசு கைது செய்தது. ஆனால் மோசடி நீதிபதி மீது "சூத்திர' கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

""நீதிபதி, அவரின் மனைவி மற்றும் அவரின் மகள்கள் பெயரில் நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலங்களுக்குப் பாசன வசதிக்கென தனியாக 4 டிரான்ஸ் பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அப்பட்டமாக நில உச்ச வரம்பை மீறிய செயலாகும். அந்நிலங்களுக்குச் செல்லும் சாலைக்குத் தினகரன் பெயரே சூட்டப்பட்டுள்ள து'' என்று விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலப்பறிப்பில் ஏரிகளும் ஓடைகளும் பறிபோனதால் அருகிலுள்ள ஊர்க்காரர்கள் கூட பொது நீர் நிலைகளைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அந்நிலங்களில் கால்பதித்த கிராம மக்கள் மீது மாங்காய் திருடியதாகப் பொய்வழக்குளைச் சோடித்து இந்த அநீதி அரசர் அச்சுறுத்தியுள்ளார். அக்கிராமத்தின் கால்பங்குக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்நிலங்களைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகளை அகற்ற முயன்ற ஆர்.டி.ஓ., தொலைபேசியில் நீதி "அரசரால்' மிரட்டப் பட்டார்.

 

இது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தினகரனை அழைத்து விசாரித்தார். அரக்கோணத்தில் தனக்கு 48 ஏக்கர் நிலம்தான் உள்ளது என்றும், நீதிபதியானபோது அதைக் கணக்கில் காட்டவில்லையே தவிர, மற்றபடி அரக்கோணம் பகுதியில் ஏராளமான ஏக்கர் நிலத்தை வளைத்ததாக யார் சொன்னாலும் அதில் உண்மையில்லை என்றார் தினகரன்.

 

இருப்பினும் தலைமை நீதிபதி, தமிழ்நாடு அரசிடம் இதுகுறித்து அறிக்கை தருமாறு கேட்டார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்திக் கிடைத்த ஆதாரப்படி, 197 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த ஆதாரத்தை அரசு, தலைமை நீதிபதிக்கு அனுப்பிய பின்னர் தினகரனின் பதவி உயர்வு தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அநீதிபதி மோசடியாய் வளைத்துப் போட்டிருக்கும் நிலங்களைக் கைப்பற்றித் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் 94 பேர் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

 

இவ்வாறு நீதியரசர் செய்த ஊழல்கள் அப்பட்டமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கையில், தினகரனை ஆதரிக்க சாதியைக் கையில் எடுத்துக் களமிறங்கினார் திராவிடர் கழகத்தின் வீரமணி. தினகரன் மீது பொய்யான புகார்களை எழுப்பியுள்ளதாகவும், ஒரு தாழ்த்தப்பட்டவர், உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவதூறு பரப்பப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.டி.தினகரனை அமர வைக்கும் வரை இந்தப் பிரச்சினையை தி.க.உட் பட சமூகநீதி அமைப்புகள் விடப்போவதில்லை, ஓயப் போவதில்லை என்றும் வீரமணி அறிவித்தார்.

 

""தினகரன் பரம்பரையாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். நீதிபதி ஆனபிறகு சொத்து சேர்க்கவில்லை'' என சாட்சிக்கு வந்தார் வீரமணி. ஆனால் காவேரிராஜ புரம் மக்களோ ""18 ஆண்டுகளுக்கு முன்புதான் இக்கிராமத்தில் அவர் கால்பதித்தார்'' என்று நீதிபதியின் பரம்பரைச் சொத்தின் ரகசியத்தைப் போட்டு உடைக்கின்றனர். பரம்பரையாகவே வந்திருப்பினும், உச்சவரம்புச் சட்டத்தை மீறி 600 ஏக்கரை நீதி அரசர் ஒருவரே வைத்திருக்கலாமா என்பதை இந்த "சமூக நீதி அரசர்' விளக்கவே இல்லை.

 

***

"அப்பன் சொத்து பிள்ளைக்கு!"- பார்ப்பன இந்துத்வ பாதையில் பீடுநடைபோடும் கி.வீரமணி!

திராவிடர் கழகம் எனும் தனியார் கம்பெனியின் தலைமை நிலையச் செயலாளராக கி.வீரமணியின் மகன் அன்புராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அக்டோபர் 10 அன்று தஞ்சாவூரில் கூட்டப்பட்ட தி.க.வின் பொதுக்குழுவில் பேசிய கி.வீரமணி ""எனது உடல் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. இனிமேல் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்வதைத் தவிர்க்கப் போகிறேன். முன்பு மாதிரி என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று பேசி உட்கார்ந்தார். அவர் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த கைத்தடிகள் உடனே ""தலைவர் உடல்நிலைதான் முக்கியம். இனிமேல் கட்சிப் பொறுப்புகளை அன்புராஜ் மாதிரியான இளைஞர்களுக்கு கொடுக்கணும்'' எனக் கோரியதும், உடனே தனது மகனுக்கு மகுடம் சூட்டி விட்டார். வீரமணியின் வாரிசான அன்புராஜ் ஏற்கெனவே தொழிலதிபர். அவர் தி.க.வின்போராட்டங்களில் பங்கேற்றதில்லை; கட்சிப் பொறுப்புகளில் இருந்ததுமில்லை. கட்சித் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவருமில்லை. ஆனாலும் அவர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக்கப்பட்டுள்ளார். 1916ஆம் ஆண்டு கூட்டுப் பங்கு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ""தென்னிந்திய மக்கள் சங்கம் லிமிடெட்'' எனும் நிறுவனத்தின் அரசியல் பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட ""தென்னிந்திய நலவுரிமை சங்கம்''தான், பின்னாளில் பெரியாரால் ""திராவிடர் கழகம்'' எனும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. அது இப்போது மீண்டும், வீரமணி குடும்பத்தாருக்கு மட்டுமேயான "பிரைவேட் லிமிடெட்' கம்பெனியாக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்ந்த முதலாளி தனது நிறுவனத்தை வாரிசுகளுக்குக் கைமாற்றித் தரும் காரியத்தைத்தான் வீரமணி இப்போது செய்திருக்கிறார். மேலும், ""அப்பன் சொத்து பிள்ளைக்கு'' என்ற பார்ப்பன இந்து தர்மத்தையும் நிலைநாட்டியுள்ளார். இந்நிலையில், தன்மானமுள்ள பெரியார் தொண்டர்கள் இனியும் இந்தத் துரோகத்தையும் அவமானத்தையும் சகித்துக் கொண்டிராமல், வீரமணியின் மடத்தை விட்டு வெளியே வரவேண்டும். மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள்தான் பெரியாரின் கொள்கைகளைச் சமரசமின்றி முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதை உணர்ந்து பார்ப்பனியத்தை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும்.

****

தினகரனின் திருவிளையாடலால் நிலங்களை இழந்தவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என்பதை மறைத்து விட்டு "வசதியானவர்களின்' சமூகநீதியை மட்டும் கோருகிறார் வீரமணி. தினகரன் தாழ்த்தப்பட்டவர் என்றாலும், அவர் பறித்ததும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலங்களைத்தான் என்ற உண்மை அப்பட்டமாய்த் தெரிவதால், ஒரு சில பிழைப்புவாத பெயர்ப்பலகை அமைப்புகளைத் தவிர, அவருக்கு ஆதரவாக தலித் இயக்கங்கள்கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

 

திராவிட இயக்கங்கள் தனது சந்தர்ப்பவாதத்தை மூடி மறைத்து, நியாயப்படுத்த நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் வாதமான "பார்ப்பன சூழ்ச்சியை'த்தைத்தான் வழக்கம் போல வீரமணி, தினகரனின் நிலமோசடியிலும் எடுத்து விட்டிருக்கிறார். ஆட்சிக் கவிழ்ப்பாகட்டும், கட்சித் தாவலாகட்டும் அனைத்துக்கும் "பார்ப்பன சதியும் சூழ்ச்சியுமே' திராவிட இயக்கங்களால் காரணமாகக் கற்பிக்கப்பட்டன. இன்று, இது மிகவும் மலினப்படுத்தப்பட்டு அனைத்து சமூக அநீதிகளையும் நியாயப்படுத்தும் கவசமாக்கப்பட்டு விட்டது.

 

1987 89 ஆண்டுகளில், பஞ்சாப்ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த, நீதிபதி ராமசாமி பல்வேறு அதிகாரமுறைகேடுகள் செய்து, பல லட்சரூபாய் அரசுப்பணத்தைச் சூறையாடியது அம்பலமானது. "சூத்திர' ராமசாமி மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மென்ட்) வந்தபோது அதனை ""பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான பார்ப்பனர்களின் சதி'' என்றும், ""ராமசாமிக்காக தூக்கில் தொங்கவும் தயார்'' என்றும் அறிவித்து, இந்த ஊழல் பெருச்சாளிக்கு முட்டுக் கொடுத்தார் வீரமணி. இவ்வாறு புழுத்து நாறிய ஊழலை சமூகநீதிப் போர்வையால் மறைக்கும் தந்திரத்தை ஏற்கெனவே செய்தவர்தான் இவர்.

 

2001 தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்புமனு செய்ததால் தகுதி இழந்த ஜெயலலிதாவை அரசியல் சட்டத்துக்கு விரோதமாக முதல்வராக்கினார் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி. இதன் பின்னணியில் பல கோடிகள் கைமாற்றப்பட்டதாக அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போது ஜெயாவின் தலைமைப் பூசாரியாக இருந்த வீரமணியோ, பாத்திமா பீவியைக் காப்பாற்ற ""சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதனால் தான் ஆளுநர் மீது அபாண்டமாகப் பழி போடுகின்றனர்'' என்று அறிக்கை விட்டார்.

 

இவ்விசயத்தில் வீரமணிக்கு தமிழினவாதிகள் சற்றும் சளைத்தவர்களில்லை. அடுத்தவன் மனைவியை அபகரிப்பதற்காக கூலிப்படை வைத்துக் கொலை செய்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் கைதைக் கூட, தமிழ்ச்சான்றோர் பேரவையின் "நந்தன்வழி', பார்ப்பனச் சதி என்றது. "மூலிகை பெட்ரோல் மோசடி' செய்த ராமர்பிள்ளையின் பித்தலாட்டங்கள் பத்திரிக்கைகளிலும் ஐ.ஐ.டி.யிலும் அம்பலமானபோது, தமிழினவாதிகள் ""பார்ப்பனிய சூழ்ச்சியால் தமிழ் விஞ்ஞானியின் சாதனைகள் மறைக்கப்படுகின்றன'' என்று சமூகநீதிக் கவசம் ஏந்தினார்கள். சேத்துப்பட்டுப் பகுதியை நடுங்க வைத்துக்கொண்டிருந்த தங்கையா என்ற ரவுடியை எதிர்த்து ம.க.இ.க. களமிறங்கியபோது ""ஒரு தலித் தலைவரை ம.க.இ.க. எதிர்ப்பதன் பின்னணி என்ன?'' என்று தலித் பிழைப்புவாதிகள் எதிர்வாதம் புரிந்தனர். வி.பி.சிங்கின் அரசியல் பித்தலாட்டங்களை விமர்சித்தால், உடனே ""இது பார்ப்பனியம்'' என்று முத்திரை குத்த இன்றைய சமூகநீதிக் காவலர்கள் ஓடோடி வருகின்றனர்.

 

சுருக்கமாகச் சொன்னால், எந்த விசயமானாலும் எந்த அயோக்கியத்தனமானாலும் ""பார்ப்பனரல்லாதோர் செய்தால் அதனை ஆதரிப்போம்; இது நம்ம ஆளு என்று நியாயப்படுத்துவோம்; அந்த அயோக்கியத்தனங்களை மூடிமறைக்க "பார்ப்பனர்கள் சூழ்ச்சி' என்று முத்திரை குத்துவோம்'' என்பதுதான் இவர்களின் எளிய சித்தாந்தம். இதில் வீரமணி முதல் தமிழினவாதிகள் வரை பலதரப்பினரும் ஒன்று சேர்கிறார்கள். இவ்வாறு சமூக நீதி இவர்களால் மலினப்படுத்தப்பட்டிருப்பதால், பார்ப்பன சக்திகள் செய்யும் மிகப்பெரிய சூழ்ச்சிகள் சதிகள் ஊழல்கள் கூட மறைக்கப்பட்டுவிடுகின்றன. ·

 

செங்கதிர்