Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; இலவச ஆரம்பக் கல்வி அளிப்பது; போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முயன்றதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிரடி இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட ""அதிசயத்தை'' நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டு ராஸ் நாட்டில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அதிரடி இராணுவப் புரட்சி அப்படிபட்ட அதிசய நிகழ்வாகும்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா, ஈக்வடார், எல்சல்வடார் ஆகிய நாடுகளில் 1980களில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெ ற்று வந்தபொழுது, அத்தேசிய விடுதலைப் போராட்டங்களைச் சீர் குலைக்கவும், ஒடுக்கவும் ஹோண்டு ராஸ்தான் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டு வந்தது. குறிப்பாக, நிகரகுவாவில் அமெரிக்கா வுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வந்த சாண்டினிஸ்டா போராளிகளை ஒழிப்பதற்கான மையமாக ஹோண்டுராஸை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அதன் தளபதிகளுக்கும் அமெரிக்காதான் பயிற்சியும் நிதியுதவியும் அளித்து வருகிறது. ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அந்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இருந்து வரும் பிணைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அந் நாட்டு அரசியல் சாசனச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பட்ட பின்னணி கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த இலட்சணத்தில் செயல்பட்டிருக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

 

ஹோண்டுராஸில் 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ""லிபரல்'' கட்சி, நம் நாட்டு பா.ஜ.க.வைப் போன்று தீவிர வலதுசாரிக் கட்சிதான். அக்கட் சியின் சார்பாக அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட மானுவேல் ஜெலை யாவும் அந்நாட்டின் குறிப்பிடத்தக்க முதலாளிகளுள் ஒருவர்தான். வெனி சுலா, பொலிவியா போன்று தற்பொழுது ஹோண்டுராஸிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் உள்நாட்டு அடிவருடிகளுக்கும் எதிராக மக்கள் மத்தியில் வெறுப்பும் எதிர்ப்புணர்வும் பெருகி வருகிறது. இந்த எதிர்ப்புணர்வைப் பயன் படுத்திக் கொண்டுதான் லிபரல் கட்சியும், அதன் அதிபர் ஜெலையாவும் 2006 தேர்தலில் வெற்றியடைந்தனர்.

 

இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்ள முயன்ற ஜெலையா, அதற்காகச் சில பொருளாதார மற்றும் அரசியல் சீர் திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அவரது சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத லிபரல் கட்சியின் தீவிர வலதுசாரிப் பிரிவும், இராணுவமும், பெரு முதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு இந்த அதிரடிப் புரட்சியை நடத்தியுள்ளனர்; அதிபர் ஜெலையாவையும் சட்டவிரோதமாக நாடு கடத்திவிட்டனர்.

 

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த முயன்றதோடு மட்டுமின்றி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைபேசித் துறையைத் தனியார் மயமாக்க அதிபர் ஜெலையா மறுத்தது; வெனிசுலா மற்றும் கியூபா தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ""அமெரிக்க நாடுகளுக்கான பொலிவரியன் மாற்று'' (Bolivarian Alternaive for the Americans) என்ற அமைப்பில் ஹோண்டுராஸையும் இணைக்க அதிபர் ஜெலையா எடுத்த முடிவு; ஹோண்டுராஸில் குறைவான விலையில் மருந்துப் பொருட்களை விற்பதற்காக கியூபாவுடன் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்; அமெரிக்க ஏகாதிபத்தியம் 1982இல் திணித்த அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அதிபர் ஜெலையா செய்த முயற்சி - இவையனைத்தும் ஜெலையா அரசு இடது சாரிப் பாதையில் பயணம் செய்வதைப் போலவும், ஹோண்டுராஸ் இன்னொரு வெனிசுலா ஆகப் போவதைப் போலவும் பிற்போக்குக் கும்பலிடம் ஏற்படுத்திய பீதிதான், இந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னணியாக அமைந்தது.

 

ஹோண்டுராஸ் நாட்டின் தொலைபேசித் துறையான ""ஹோண்டுடெல்'' நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பதற்கு அதிபர் ஜெலையா மறுத்தவுடனேயே, அவரது அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. தொலைபேசித் துறையில் அதிக முதலீடுகளைச் செய்துள்ள ஓட்டோ ரெய்ச் என்ற முதலாளிதான் இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்டுள்ளார். ஓட்டோ ரெய்ச், கியூபா வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் என்பதோடு, கியூப எதிர்ப்பிலும் முன்னணியாகச் செயல்படும் முதலாளி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

ஜெலையா அரசில் சபாநாயகராக இருந்த ராபர்டோ மிக்கலெட்டிதான், ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் அதிபராக இராணுவத்தால் முடிசூட்டப்பட்டுள்ளார். இவர், 1990களில் ஹோண்டு டெல் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணிபுரிந்தவர் என்பதோடு, தீவிரமான அமெரிக்க விசுவாசி என்பதாலேயே அதிபர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் பதவியேற்றுள்ள மிக்கலெட்டி அரசில் என்ரிக் ஓர்டெஸ் என்பவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். என்ரிக் ஓர்டெஸ், அமெரிக்க நாடுகளுக்கான பொலிவரியன் மாற்று அமைப்பில் சேருவதென ஜெலையா எடுத்த முடிவைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது மட்டுமின்றி, அவரது பின்னணி அதனைவிடவும் சுவாரசியமானது. 1980களில், நிகரகுவாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வந்த சாண்டி னிஸ்டா போராளிகளுக்கு எதிராக ""காண்ட்ராஸ்'' என்ற எதிர்ப்புரட்சிக் கும்பலை அமெரிக்கா வளர்த்துவிட் டது. இந்த எதிர்ப்புரட்சிக் கும்பல் சாண்டினிஸ்டா போராளிகளைத் தாக்குவதற்கான தளமாக ஹோண்டு ராஸைப் பயன்படுத்தி வந்தது. இந்த எதிர்ப்புரட்சிக் கும்பலுக்குத் தேவையான ஆயுதங்களைக் கடத்தி வந்த கும்பலில் முக்கியமானவர் என்ரிக் ஓர்டெஸ்.

 

அதிபர் ஜெலையாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ஹோண்டுராஸைச் சேர்ந்த ரஃபேல் நோடார்ஸே என்ற பத்திரிகை அதிபருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இவரது வியாபார வெற்றியின் இரகசியத்தைத் தோண்டினால், அதில் ஹோண்டுராஸ் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் காண முடியும். இது மட்டுமின்றி, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. 1960களில் கியூபாவின் காஸ்ட்ரோ அரசைத் தூக்கியெறிவதற்காக இரகசியமாக நிறுவிய ""ஸ்வான்'' வானொலி நிலையத்தோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர் ரஃபேல் நோடார்ஸே; கியூபா அரசால் பயங்கரவாதியெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள லூயில் போஸாடாவிற்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்ததிலும் ரஃபேல் நோடார்ஸேக்குப் பங்குண்டு.

 

ஹோண்டுராஸ் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களால்தான் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதிபர் ஜெலையா அமெரிக்க நாடுகளுக்கான பொலிவரியன் மாற்று அமைப்பில் இணைந்தவுடன் கியூபாவில் இருந்து மருந்துப் பொருட்களைக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை உருவாக்கினார். இந்த ஒப்பந்தத்தால் பாதிப்படையக்கூடிய கிளாஸ்ஸோ, ஸ்மித்கிளைன், ஸநோ ஃபி, ஃபைஸர், நோவார்டிஸ், அவெந் திஸ் உள்ளிட்ட சில ஏகபோக மருந்து நிறுவனங்கள் இந்த இராணுவப் புரட்சியை ஆதரித்திருப்பதாக மத்திய அமெரிக்க சமூகக் கூர்நோக்கு மையம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

 

ஹோண்டுராஸ் அரசியல் சாசனச் சட்டப்படி, அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்பவர் இரண்டாம் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடவோ அதிபராகவோ முடியாது. ஜெலையா, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இதனை மாற்ற முயன்றதோடு, அத்திருத்தத்தை அங்கீகரிக்கக் கோரி, பொதுஜன வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிட்டார். ஜெலையாவின் இந்த முயற்சியை அந்நாட்டு இராணுவம், தனக்கு விடப்பட்ட நேரடியான சவாலாகவே கருதி, அத்திருத்தத்தையும் பொதுஜன வாக்கெடுப்பையும் எதிர்த்தது. இராணுவத்தைப் போலவே அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் இத்திருத்தத்தை எதிர்த்ததோடு, பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தடையும் விதித்தது. இராணுவத்துக்கும் உச்சநீதி மன்றத்துக்கும் பணிந்து போகாத ஜெலையா, அரசினைக் கட்டுப்படுத்தாத பொதுஜன வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டிருந்த ஜூன் 28 அன்றுதான், அவரது அரசு இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டதோடு, அவரும் சட்டவிரோதமான முறையில் நாடு கடத்தப்பட்டார்.

 

தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் அனைத்தும் இந்த இராணுவப் புரட்சியைக் கண்டித்திருப்பதோடு, ஜெலையாவைத்தான் ஹோண்டுராஸ் அதிபராக அங்கீகரித்து வருகின்றன. ஆனால், ஹோண்டுராஸ் இராணுவமோ ஜெலையா கடந்த ஜூலை 5 அன்று நாடு திரும்ப மேற்கொண்ட முயற்சியைத் தடுத்துவிட்டதோடு, அவருக்கு ஆதரவாக உள்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது. இதனையும் மீறி, கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஹோண்டுராஸுக்குள் நுழைந்துவிட்ட ஜெலையா, அந்நாட்டிலுள்ள பிரேசில் தூதரகத்தில் தற்பொழுது தஞ்சமடைந்துள்ளார்.

 

அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்த இராணுவப் புரட்சியைக் கண்டிப்பதாகக் கூறினாலும், அமெரிக்க அரசிற்கோ இராணுவத்திற்கோ தெரியாமல் இந்த புரட்சியே நடந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. அதிபர் ஜெலையா அமெரிக்க நாடுகளுக்கான பொலிவரியன் மாற்று அமைப்பில் ஹோண்டுராஸை இணைப்பதென முடிவை எடுத்தவுடனேயே, அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் ஏற்படத் தொடங்கிவிட்டது. ஹோண்டு ராஸ் இராணுவ அதிகாரிகள் பொதுஜன வாக்கெடுப்புக்கு எதிராக நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் ஹோண்டுராஸுக்கான அமெரிக்கத் தூதர் ஹுகோ லொரென்ஸும் பங்கு கொண்டதாகவும், அவர் சட்டபூர்வமான வழிகளில் அதிபர் ஜெலையாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவதற்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும் தற்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளன.

 

ஹோண்டுராஸ் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க அரசு அளிக்கும் நிதியுதவிகளைத்தான் பெருமளவு சார்ந்துள்ளது. அந்நாட்டில் நடந்துள்ள இராணுவப் புரட்சியை ஏற்க மறுப்பதாகக் கூறும் அமெரிக்கா, இந்த நிதியுதவிகளை நிறுத்தி இராணுவத்திற்கு நெருக்கடி கொடுக்க மறுத்து வருகிறது. மேலும், அமெரிக்க அடிவருடியும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் தற்போதைய கோஸ்டா ரிகா நாட்டின் அதிபருமான ஆஸ்கர் ஏரியாஸிட ம், ஹோண்டுராஸில் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த சமாதானத்தின் நோக்கம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஜெலையாவிடம் ஒப்படைப்பதல்ல எனச் சூசகமாகக் கூறியுள்ளார், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன். ஹோண்டுராஸ் இராணுவம் நிறுவியுள்ள பொம்மையாட்சியைச் சட்டபூர்வமாக்கிவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் உள்ளார்ந்த நோக்கம். இதன் மூலம், தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில், தனது ஆதிக்கத்திற்கு எதிராக விடப்படும் சவால்களைத் தடுத்துவிடவும் திட்டம் போடுகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

· குப்பன்