Language Selection

தாராளமயம் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசனை (அமெரிக்காவை) விஞ்சிய விசுவாசியாக இருக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்திய அரசிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் (ஏசியன் Association of Southindian nations)இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிப்பிடலாம்.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை என்ற அளவில் இருந்துவந்த இந்த ஒப்பந்தம், இந்தி யாவின் 63ஆவது "சுதந்திர' தினத்திற்கு இரண்டு நாட் கள் முன்னதாக முடிவு செய்யப்பட்டு, கையெழுத்தாகி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. வழமை போலவே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான், இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள், இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, "இறையாண்மை' மிக்க இந்திய நாடாளுமன்றத்திற்கும் தெரிய வந்தது.

 

இந்தியாவிற்கும், தென்கிழக்காசிய கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் இரண்டு தரப்பிலும் எவ்விதமான சுங்க வரியோ, வேறு தடைகளோ இன்றி நடைபெறத் தொடங்க வேண்டும் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இந்த இலக்கினை அடைவதற்காக இந்த ஒப்பந்தம், இந்தியா ஏசியன் நாடுகளுக்கு இடையே ஏற்றுமதிஇறக்குமதி மூலம் வர்த்தகப் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும் பொருட்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது.

 

இந்த நான்கில் எதிர்மறைப் பட்டியல் என்ற பிரிவில் 489 உற்பத்திப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 489 பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா எவ்வித சுங்க வரிச்சலுகையும் அளிக்காது. இந்தப் பொருட்களின் இறக்குமதியின் மீது இன்று (இந்தியாவில்) எந்த அளவில் சுங்க வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவில்தான் 2019லும் சுங்க வரி விதிக்கப்படும். இந்த 489 பொருட்களில் 303 பொருட்கள் விவசாய உற்பத்திப் பொருட்கள்; 81 பொருட்கள் ஜவுளித் துறையையும், 50 பொருட்கள் தானியங்கி வாகனத் தொழிலையும், 17 பொருட்கள் இரசாயனத் தொழிலையும் சார்ந்தவை. இந்த எதிர்மறைப் பட்டியலைத் தவிர்த்து மீதமுள்ள மூன்று பட்டியல்களின் கீழ் வரும் 10,885 பொருட்களின் மீதான சுங்க வரி படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2019 இல் பூஜ்யமாக்கப்படும்; அல்லது மிகக் குறைவான அளவே வரி விதிக்கப்படும்.

 

தேயிலை, மிளகு, இரப்பர் உள்ளிட்ட பல்வேறு தோட்டப் பயிர்கள் உற்பத்தியிலும் மற்றும் ஜவுளி, தானியங்கி வாகனம், இரசாயனப் பொருட்கள் உற்பத்தியிலும் இந்தியாவைவிட ஏசியன் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் மிகுந்த திறன் கொண்டவையாக உள்ளன. அதனால்தான், இந்த ஒப்பந்தத்தில் எதிர் மறைப் பட்டியல் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்த 489 பொருட்கள் வைக்கப் பட்டு, அவற்றிற்கு வரி விலக்குப் பெற முடியாத வண்ணம் பாதுகாப்பு தரப்பட்டுள்ள து. இதன் மூலம், இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பிரிவினரை, குறிப்பாக தோட்டப் பயிர்ப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இலகு ரக தொழில்துறை பொருட்களைத் தயாரிக்கு ம் சிறு முதலாளிகள் ஆகியோரைச் சமாதானப் படுத்திவிட முயலுகிறது,காங்கிரசு கூட்டணி அரசு.

 

எதிர்மறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 489 பொருட்களுக்கு சுங்க வரிச் சலுகை அளிப்பதில்தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே தவிர, இப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என இந்திய அரசு கூற முடியாது. இந்தியா ஏசியன்இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின், அவ்வமைப்பின் பிரதிநிதியுடன் கைகுலுக்கும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. ஒவ்வொரு ஆண்டும் இப்பொருட்களைக் குறிப்பிட்ட அளவு இறக்குமதி செய்ய வேண்டும் என இவ்வொப்பந்தம் கூறுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பொருட்களின் இறக்குமதிக்கான சந்தை வாய்ப்புகள் குறித்து இந்தியாவும் ஏசியன் நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் எதிர்வரும் ஆண்டுகளில் கடுமையான போட்டி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக வர்த்தகக் கழக நிபந்தனைப்படி, ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள தாராள இறக்குமதியின் காரணமாக நசிவடைந்து வரும் விவசாயிகள், சிறு தொழில் அதிபர்கள் தலைமீது மற்றொரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மன்மோகன் சிங் என்பதுபோகப்போகத் தெரிய வரும்.

 

இந்தியாவிலும் ஏசியன் நாடுகளிலும் இயங்கி வரும் ஹுண்டாய், தேவூ நிறுவனங்கள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாதகமானது எனக் கூறப்பட்டாலும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவைவிட ஏசியன் நாடுகளுக்குத்தான் அதிக இலாபம் என்பதை இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவருமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வியாபாரத் தந்திரம் இந்த ஒப்பந்தத்தின் பின்னே உள்ளது. ஆதாயமில்லாமல் ஆற்றில் இறங்கக் கூடியவரா மன்மோகன் சிங்?

 

ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் நம்பியிருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம், குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் தேக்கமடைந்துவிட்டது. புதிய சந்தையை வளைத்துப் போடுவதன் மூலம் இந்தத் தேக்கத்தை உடைப்பது என்ற அடிப்படையில்தான், இந்தியா ஏசியன் நாடுகளோடு இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் விவசாய மற்றும் தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சேவைகளையும் மூலதனத்தையும் தடையின்றி ஏற்றுமதி இறக்குமதி செய்து கொள்ளும் மற்றொரு ஒப்பந்தம் குறித்து இந்தியாவிற்கும் ஏசியன் நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

இந்த இரண்டாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்குப் புதிய சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, இந்தியாவிற்கே அதிக சாதகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முதலாளிகளின் இலாபத்திற்காகப் தோட்டப்பயிர் விவசாயிகளின், சிறுதொழில் நிறுவனங்களின் நலன்களைப் பலி கொடுத்திருக்கிறார், மன் மோகன் சிங்.

 

இந்த ஒப்பந்தம் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, அதிலும் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. இரப்பர், தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற தோட்டப் பயிர்களை எதிர்மறைப் பட்டியலில் சேர்த்திருந்தாலும்கூட, கேரளாவில் மட்டும் இப்பணப்பயிர் விவசாயத்தை நம்பியுள்ள 10 இலட்சம் விவசாயிகள் விவசாயக் கூலிகள் இந்த ஒப்பந்தத்தால் பாதிப்படையக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தியா இலங்கையுடன் செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கேரளாவின் தென்னை விவசாயமும், தேங்காய்கொப்பரை வியாபாரமும் கடும் போட்டியையும், அதனால் ஓரளவு நசிவடைந்திருப் பதையும் கேரள விவசாயிகள் முன்னுதாரணமாகச் சுட்டிக் காட்டுகின்றனர். அதனால்தான், இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் கேரள மாநிலம் முன்னணியில் உள்ளது.

 

இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் 2004 ஆம் ஆண்டு தொடங்கியே நடந்து வந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் நடந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள், குறிப்பாக சி.பி.எம்., காங்கிரசுக்கு நெருங்கிய தோழனாக இருந்ததோடு, காங். கூட்டணி ஆட்சியும் இடது சாரிக் கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் நடந்து வந்தது. அப்பொழுதே இவ்வொப்பந்தம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுத்து நிறுத்த முயலாத சி.பி.எம்., இப்பொழுது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறது.

 

மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தம் குறித்துத் தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனக் குறைபட்டுக் கொள்கிறது, சி.பி.எம். சிங்குரிலும், நந்திகிராமத்திலும் விவசாயிகளைக் கலந்தாலோசித்துவிட்டா டாடாவோடும், இந்தோனேஷியாவின் (இந்தோனேஷியா, ஏசியன் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளில் ஒன்று) சலீம் குழு மத்தோடும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டீர்கள் என மன்மோகன் சிங் திருப்பிக் கேட்டால், சி.பி.எம். கட்சி தனது முகத்தை எங்கு வைத்துக் கொள்ளும்? சி.பி.எம்.இன் எதிர்ப்பில் தனது வாக்குவங்கியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய சுயநலன்தான் இருக்கிறதேயொழிய, வேறெந்த ""வெங்காயமும்'' கிடையாது.