Language Selection

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமைதாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

 

உள்ளூர் பத்திரிகையாளர்கள் லால்கார் போராட்டம் பற்றிய செய்திகளைத் திரட்ட விரும்பினால், தனது இரகசிய இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பி போராட்டச் செய்திகளையும் நேர்காணல்களையும் அவர் அளித்து வந்தார்.

 

இந்நிலையில், மே.வங்க உளவுத்துறை போலீசார் தம்மை வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் என்றும் அவரிடம் நேர்காணல் நடத்த விரும்புவதாகவும் தகவல் அனுப்பினர். சத்ரதார் மஹடோவும் அவர்களைப் பத்திரிகையாளர்களாகக் கருதி லால்கார லுள்ள தனது இரகசிய இடத்துக்கு வருமாறு அழைத்தார். பத்திரிகையாளர்களாகக் காட்டிக் கொண்ட உளவுத்துறை போலீசார், இரகசிய இடத்தில் அவரைச் சந்தித்ததும் கைத்துப்பாக்கியை அவரது நெற்றியில் அழுத்தி அவரைக் கடத்திச் சென்று, கைது செய்துள்ளதாக அறிவித்தனர். தலைமறைவாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்த முக்கிய தீவிரவாதியைக் கைது செய்துள்ளதாக மே.வங்க அரசும் உளவுத்துறை போலீசும் தமது சாகசத்தைப் பெருமையாகக் குறிப்பிட்டன.

 

அதைத் தொடர்ந்து, லால்கார் மக்களின் போராட்டத் தலைவரான சத்ரதார் மஹடோ மிகக் கொடிய பயங்கரவாதி என்றும் அவர் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் மே.வங்கப் போலீசு அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஜூன் 13ஆம் தேதி வரை அவர் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்கு இருநாட்கள் முன்புவரை, லால்கார் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கெஞ்சி தேர்தல் கமிசன் அதிகாரிகளும் மே.வங்க அரசு அதிகாரிகளும் மஹடோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்த பிறகு, அவர் இப்போது "பயங்கரவாதி'யாகி விட்டார்.

 

""மஹடோவுக்கு ஒரிசாவிலுள்ள மயூர்பன்ச் நகரில் அடுக்கு மாடி வீடு உள்ளது; அவர் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு பாலிசி வைத்துள்ளார். லால்கார் வட்டாரத்தில் அவருக்கு 5 வீடுகள் உள்ளன. அவர் தலைமையிலான போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் பல லட்ச ரூபாய் உள்ளது; மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டிய அவர், நகர்ப்புற அறிவுத்துறையினரிடம் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்தும் லால்கார் வட்டாரத்தில் கட்டாய வரி வசூலித்தும் சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்'' - என்றெல்லாம் மே.வங்க இடதுசாரி அரசும் போலீசும் மஹடோ மீது அவதூறு சேற்றை வாரியிறைத்தன.

 

ஆனால், மஹடோவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு பாலிசி எதுவுமில்லை. ஒரிசாவிலுள்ள மயூர் பன்ச் நகரில் அவரது முன்னோர்களின் பழங்கால வீடு உள்ளது எனினும், உறவினர்கள் பங்கு போட்டுள்ளபடி அவருக்கு அதில் ஒரு சிறு அறை மட்டுமே கிடைக்கும். லால்கார் பகுதியில் உள்ள அம்லியா கிராமத்தில் உள்ள அவரது குடிசை இடிந்த நிலையில் உள்ளது. சால்மர இலைகளை விற்று அவர் தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அண்மையில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து, புதிய கண்ணாடி வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் தவித்ததால், போராட்டக் கமிட்டிதான் அவருக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துள்ளது. போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் சில ஆயிரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகள் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்øமகளை உள்ளூர் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரும், இன்னமும் இந்த அண்டப்புளுகையும் அவதூறையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது, மே.வங்க "இடதுசாரி' அரசு.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, மஹடோவைக் கைது செய்த விதமே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி (டி.கே.பாசு விசாரணை வழக்கையொட்டி), ஒருவரைக் கைது செய்யும்போது போலீசார் சீருடையும் தமது பெயர் பொறித்த அதிகாரபூர்வ வில்லையும் அணிந்திருக்க வேண்டும். எதற்காக கைது செய்கிறோம் என்ற விவர அறிக்கையையும் அளிக்க வேண்டும். இது அரசியல் சட்டத்தின் 22வது விதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இந்தியக் குற்றவியல் சட்டத் திருத்த 50ஏ விதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, பத்திரிகையாளர்கள் போல நடித்து உளவுத்துறைப் போலீசு அவரைக் கோழைத்தனமாகக் கைது செய்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தொழிலையே களங்கப்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் உண்மைச் செய்திகள் வெளிவருவதையே தடுக்க முயற்சிக்கிறது. மஹடோ மட்டுமல்ல; மாவோயிஸ்டு கட்சி முன்னணியாளர்களும் லால்கார் போராட்டத்தை ஆதரித்து வந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைமுயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது, வெடி மருந்துகள் வைத்திருந்தது, சதிகளில் ஈடுபட்டது என பயங்கரவாத ஊபா சட்டப்படி இவர்கள் மீது பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

 

இப்பயங்கரவாத அடக்குமுறையையும் சட்டவிரோத கைதுகளையும் எதிர்த்தும் போராளிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அருந்ததி ராய், நோம்சாம்ஸ்கி, பிரசாந்த் பூஷண், ஆனந்த் பட்வர்த்தன், சுமித் சர்க்கார், வந்தனா சிவா, மீரா நாயர் என பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், சமூகவியலாளர்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை இயக்கத்தினர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு மே.வங்க பாசிச அரசை எச்சரித்துள்ளனர். ·