Language Selection

புதிய ஜனநாயகம் 2009

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

""நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் () என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்'' என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

 

கடந்த ஆகஸ்ட் 17ஆம் நாளன்று நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ""நாட்டின் 180 மாவட்டங்களில் நக்சல்பாரிகள் ஊடுருவி விட்டார்கள். நாட்டின் 40 சதவீதப் பகுதியில் அவர்கள் இணையான அரசு நடத்துகிறார்கள்'' என்று அப்போதே பீதியூட்டினார். நக்சல்பாரிகளால்தான் நாட்டுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதைப் போல காட்டுவதற்காகவும், இந்த உள்நாட்டுப் போருக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும், ""நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றியடைந்து விடவில்லை. தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நக்சல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்'' என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ""நக்சல் வன்முறையை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். ஆனால், இப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இனியும் தாமதிப்பதற்கில்லை. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் '' என்று கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ""மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் வரை, அவர்களுக்கெதிராக துணை இராணுவப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை; அவர்களோடு எந்தவித பேச்சுவார்த்தையுமில்லை'' என்று அவர் சீறுகிறார். நேற்றுவரை இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டுவந்த ஆட்சியாளர்கள், இப்போது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால்தான் நாட்டுக்குப் பேராபத்து என்று அலறுகிறார்கள்.

 

""நாடெங்கும் ஆளெடுப்பு நடத்தப்பட்டு 1,50,000 போலீசார் புதிதாகச் சேர்க்கப்படுவார்கள். இதேபோல, துணை இராணுவப் படைகளுக்கு 26,000 பேர் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் வட்டார அளவில் உளவுத்துறை மையங்கள் நிறுவப்படும். முதற்கட்டமாக மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஜார்கந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு கோப்ரா படையின் தலைமையகங்கள் நிறுவப்படும். அதன் தொடர்ச்சியாக உ.பி., ஒரிசா மாநிலங்களிலும், பின்னர் இதர மாநிலங்களிலும் நிறுவப்படும். இந்த கோப்ரா படை என்பது கைத்துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், எரிகணைகள், வீடுகள் கட்டிடங்களைத் தகர்க்கும் ஆற்றல் மிக்க துப்பாக்கிகள், கவச உடைகள் கொண்ட அதி நவீன அதிரடிப்படையாகக் கட்டியமைக்கப்படும்'' என்று அரசு அறிவித்துள்ளது.

 

மே.வங்கத்தில் ஏற்கெனவே மாநில போலீசுப் படைகளும் மைய அரசின் துணை இராணுவப் படைகளும் நக்சல்பாரிகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டையையும் தாக்குதலையும் தொடங்கிவிட்டன. 17 கம்பெனி படை கள் (ஒரு கம்பெனி என்பது ஏறத்தாழ 1,700 பேர்) அதாவது ஏறத்தாழ 28,000 பேர் கொண்ட படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

 

மகாராஷ்டிர மாநில அரசு, நாட்டிலேயே முதன் முறையாக அமையும் ஃபோர்ஸ்1 என்ற இஸ்ரேலிய பாணியிலான பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படையைக் கட்டியமைத்து, முதலில் மும்பையிலும் அதன் பிறகு புனே மற்றும் நாக்பூரிலும் நிறுவத் தீர்மானித்துள்ளது. நக்சல் வன்முறையால் போர்க்காலச் சூழல் ஏற்பட்டுள்ளதென்றும், நக்சல் வன்முறையை முறியடிக்க ரூ.100 கோடி செலவில் மாநிலப் போலீசுப் படை வலுப்படுத்தப்படும் என்றும், நக்சல் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் ரோந்துப் படைகளும் ஆயுதமேந்தியப் புறக்காவல் நிலையங்களும் நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் நக்சல்பாரிகளை நரவேட்டையாட தனிச்சிறப்பாக போலீசு வேட்டைநாய்கள் படை (ஞ்ணூஞுதூடணிதணஞீண்) உருவாக்கப் பட்டுள்ளதைப் போலவே, சட்டிஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கந்து ஆகிய மாநிலங்களில் இத்தகைய சிறப்புப் போலீசுப் படைகள் உருவாக்கப்படும் என்று மைய அரசு அறிவித்துள்ளது. இது தவிர கோப்ரா படைகளும் அதிரடிப் படைகளும் மூன்றாண்டுகளுக்கு இம்மாநிலங்களில் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யு.பி.ஜி.எல். எனப்படும் எறிகுண்டு தாக்குதல் பீரங்கியை இனி மாநில அளவிலான தீவிரவாத எதிர்ப்புப் படைகளும் பயன்படுத்த மைய அரசு அனுமதித்துள்ளது. உ.பி.யின் மாயாவதி அரசு, சட்டிஸ்கரில் அரசே கட்டியமைத்துள்ள சல்வாஜூடும் குண்டர் படையைப் போல, 35,000 பேர் கொண்ட குண்டர் படையைக் கட்டியமைக்கத் தீர்மானித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவிலும் கத்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியினரைக் கொண்ட குண்டர்படை கட்டியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.