10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் (02)

இன்று தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாது, தாறுமாறாக தலைகீழாக நடக்கிறார்கள். பாருங்கோ, 76 ல் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' எடுத்தபோது ''சத்துருக்கள்'' என்று கூறியவர்களுடன் இன்று கூட்டும் நடந்து முடிந்துள்ளது. '' அடைந்தால் தமிழீழம்'' என்றவர்கள், நோர்வேயில் 'ஐனநாயகத் தேர்தல்' நடத்துகிறார்களாம்.! என்னமா மிளகாய் அரைக்கிறாங்கள் தலையிலை - தெரியாமல் தான் கேக்கிறன்.
 
அப்ப, நோர்வேயின் கடைசிப் பாராளுமன்றத் தேர்தல் 'ஐனநாயகமாக' நடக்கவில்லையா? ஏதோ ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தங்களுடைய பிரச்சனைக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக இவங்கள் படம் காட்ட முட்படுகிறாங்கள். இவங்களுக்குத் தெரியுமோ தெரியாது, 'இன்னுமொரு சாதி' (1985) என்ற புத்தகத்தை பெண்களுக்காக எழுதியது - நோர்வே சமூகத்துப் பெண் என்பது. யாழ்ப்பாணத்துக் கருக்குமட்டை வேலி பற்றி நோர்வே சமூகத்திடம் ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நோர்வேயில் அகதிகள் உள் நுழைவுக்கு முன் 3 மாதத்துக்கு மேல் கடலிலே, கப்பலில் ஏன் வாழவேண்டி வந்தது என்பதற்கு, இவங்களிடம் அரசியல் விளக்கம் ஏதாவது இருக்கிறதா? அரசியலா, அது என்ன மண்ணாங்கட்டி!  எங்களுக்கு கண்கட்டி அரசியல் தான் கைவந்த கலையாச்சே!! இதுதானே தழிழரின் கலாச்சாரம்!!! அதை மீறுவது தேச துரோகமல்லோ? (இதைத்தானே புலிகளும் சொல்கிறது - அதுதான் இவர்களுக்கும் வாச்சுப்போச்சு! 'வட்டுக்கோட்டை' என்ன, வேணுமெண்டால் - போகிற போக்கில் - புலிகளின்  'சுதுமலைப் பிரகடனத்தையும்' நோர்வேயில் ஏதாவது மலையின்ர பேரிலை எடுத்து விட்டாலும் ஆச்சரியப்பட ஓண்டுமேயில்லை.


இவ்வளவு ஏன்: என்ன காரணங்களுக்காக நோர்வேக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரியாமலே,.....  புத்தகப் பையை தூக்கியவர்கள் -(அகதிகளுக்கும் இவர்களுக்குமான முரண்பாடு - காரணமாக -87ல்) 'ஒஸ்லோ ரெலிபோன் பூத்தில்' அடிவாங்கிய கதையை லேசில் மறக்கடிக்கப் பார்க்கிறார்கள். பிந்திய காலத்தில் புலிகளின் பேரில் தமது சுய இலாபத்துக்காக, நேர்ர்வேயின் பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாளும் கொடுக்குக் கட்டியவர்கள், கடைசியாக எங்கே போனீர்கள்? வட்டுக்கோட்டைக்கும், நோர்வே வாழ்வுக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது! ஐயா, அதைக் குரல்காட்டிச் சொல்ல முடியாது!! நோர்வே பாராளுமன்ற தேர்தலில் நிற்கமுடியாத புலி அரசியல் வறுமையின் (மே 15க்குப் பின்) பின்புலம்..., நோர்வே அரசியல் தளத்துக்கு தமது செல்வாக்கைக் காட்ட 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' தேர்தலாக்கி, (தமிழ்) 'ஐனநாயகமாக்கி' இலங்கைபோல - நோர்வேயில் - ஆடநினைக்கிற அரசியல் 'சின்ன மேளங்களுக்கு' , நோர்வே மக்கள், 'பழமும் திண்டு கொட்டையும் போட்டவர்கள்' என்று காட்டும் காலமும் வெகு தூரத்தில் இல்லை. நேர்ர்வேயில் 80 சதவீதமானவர்களுக்கு மேல் - உலக சமகால நிகழ்வுகளுடன் தொடர்பிலுள்ள - அதிகூடிய தொடர்புலக வசதிகள் கொண்ட சமூகம் என்பது, தமிழ் 'முட்டைவாசி' களுக்குத் தெரியாதது ஆச்சரியமான விடயமாகாது. நோர்வேயில் கிராம, நகர, மாநகர, மாவட்ட, தேசிய அரசியல் மற்றும் சர்வதேசிய அரசியலைப் புரிந்து கொள்ளமுடியாத தமிழ்க் கிணத்துத் தவளைகளின்.... அரசியல் நிலைப்பாடான:

தமது வெளிநாட்டு 'அகிளான் புத்து' பணப்பைத் தேர்தல் -விருத்திகளாக - புலிகளின் பணப் பெருக்கு விடுதிகள் இருக்கிறது, பெரிய பணமூட்டையைக் கட்டக்கூடிய 'அன்னைபூபதி பள்ளிக்கூடம்' இருக்கிறது, இன்னும் 'எஸ்சற்றா - எஸ்சற்றாவென' ஊரிப்பட்ட சமாச்சாரம் இருக்கிறது. இவற்றை எல்லாம் போட்டுடைப்பதற்கு இவர்களென்ன - சாமானிய - மனிதர்களா? கிரிமினல்கள், பக்காக் கிரிமினல்கள். இது நேர்ர்வேயிய மக்களுக்குத் தெரியாதென்று - இவங்கள் ஒரு 'டோசு' விடுகிறாங்கள். பாவம், 'சிற்றி வாழ்க்கையில் சிலுப்பித் திரியும் பேர்வழிகள்'! '' எங்களை விட்டால் ஆள் இல்லை'' இவங்களிண்ட புலுடாவுக்கு, இலங்கை மட்டுமல்ல, ஐரோப்பாவும் இவங்களுக்கு மூக்குடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

 

தேர்தல் திருவிழா(க்கள்)!

 

இம்முறை தேர்தல் திருவிழா, உள்ளுர் மேளச்சமாவுடனும், வெளிநாட்டுப் பக்க வாத்தியங்களுடனும், விமர்சிகையாக ஆரம்பமாகியுள்ளது. உள்ளுர் சமாச்சாரத்தைப் பொறுத்த வரை.....

 

வன்னி யுத்தம் முடியும் வரை 'வாலைக் கிளப்பிய' கூட்டமைப்பு அரசியல் வாலை ஆட்டியபடி 'ஆளும் அரசியலில்' ஐக்கியமாகி இருக்கிறது. (இது இவங்களுக்கு புதுக் கலையல்ல. என்ன தேர்தலில் ரணில் வென்றால் - பாம்புபோல செட்டையைக் கழட்டிவிட்டு, யூ.என். பி. கூட்டணியில் தாங்கள் இணைவதாக அறிவிப்பதற்கு - என்ன அதிக நேரமா தேவைப்படப் போகிறது?)  இப்பேர்ப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அரசை எதிர்க்கும் எந்தத் தென்பும் புலிவால் அரசியலின் தொடர்ச்சிக்கு, உள் நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் கிடையாது. ஆக எதிர்ப்பது போல வெளிநாட்டிலும், ஆதரிப்பது போல உள்நாட்டிலும் ( 70களில் கொழும்பில் கொசுபோல கடிப்பதும், யாழில் புலி போல உறுமுவதும் இவர்களுக்கு கை வந்த கலை!) இதைத்தான் இப்போது உள்நாடு, வெளிநாடு எண்ற தோரணையில் எடுத்து விடுகிறாங்கள்.

 

இவங்களால வன்னியின் காம்புக்கே போக முடியவில்லை. அரசு போவென்று பச்சைக்கொடி காட்டினாலும் இவங்களால, அங்கை போக முடியாது என்பதுதான் யதார்த்தம்! (அங்க போனால் புலியிடம் இந்த மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ, அதை இவர்களிடமும் அவர்கள் கோரத் தயங்க மாட்டார்கள்.) புலிகளிடம் இறுதி வேளையில் ஆயுத முனையில் மல்லுக்கட்டத் தயங்காத மக்களின் வாழ்நிலை முரண்பாடு, இம்மாந்துண்டு பாராளுமன்ற அரசியல் கூட்டமைப்பை சில்லாங் கொட்டை ஆக்கிவிடும் என்பதை தமிழ் கூட்டமைப்பு தனது பழுத்த அரசியலால் பாதுகாக்கப் பாக்கிறது.

 

இவர்கள் என்னதான் கோட்டுச் சூட்டு அரசியல், மற்றும் இரண்டாம் தர இயக்கத் தலைமை கூட்டமைப்பு, அரசியலாலும் இன்று,  இந்த மக்களை எதிர்கொள்ள முடியாது! ஆளும் அரசியலில் சேருவோரை 'துரோகி' எனப் பட்டியலிடும் அரசியல் போக்கில்,  இன்று தமது 'நிழலை'க் கூட பாதுகாப்பதற்கான - அரசுசார் நிலைமை-  இவர்களின் அரசியலைச் செல்லக்காசாக்கி உள்ளது. வெளிநாட்டு புலி எதிர்நிலை அரசியலான 'வட்டுக்கோட்டை' புளுக்கொடியல் அரசியல்: உள்ளுரில் உழுத்துப்போன அரசியல் என்பதை, இவர்களின் இறுதிக்காலத்து - மூக்குப் பிடிப்பதற்கும் உதவாத வெளிநாட்டு ஐனநாயகம்- (சகிக்கவும் முடியாத, அதேவேளை தவிர்க்கவும் முடியாத இவர்களின் வர்க்க நலன்) இன்றைய அரசியலை எதிர்கொள்ள முடியாத இரண்டும் கெட்டான் நிலையிலுள்ளது.


நாடுகடந்த தமிழீழ அரசும், நாடுகடக்க முடியாத தமிழ் கூட்டமைப்பின் - அரசுடனான இணைவும்- தமிழ் அரசியலின் மக்கள் விரோத அரசியலின் அங்கவீனங்களை, துல்லியமாகக் காட்டுகிறது. ஆக மொத்த்தத்தில் உள்ளுர் புலிசார் தரகுகள், தம்மை தாம் சுதாகரிக்க நினைக்கிறார்கள். வெளிநாட்டுத் தரகுகள் தம்மை எதிர் நிலையில் எவ்வாறு வைத்திருப்பது என்று திணறுகிறார்கள்...

 

தொடரும்....

 

சுதேகு

101109

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்