Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க கட்டியமைக்கப்படும் பிம்பங்கள்
பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...

 

"தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள் உள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.

 

என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.


ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.

இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம்பறிக்கும் வியாபார உத்தியோடு அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்மண்ணைப் போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.

 

மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!


இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது ஜீ.ரீ.விக்குள் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.

  

எனினும்,இத்தகைய அரசியல் காயடிப்பைச் செய்த புலிகளின் அழிவில், தமிழர்களைச் சொல்லி-வன்னிய அவலத்தைச் சொல்லியும்,கூடவே, இலங்கைப்பாசிச அரசினது நிகழ்கால இனவழிப்பு அரசியலைச் சொல்லியபடி "வன்னி மக்களுக்கு உதவி-புனரமைப்பு"எனப் பற்பல பெயரிட்டு,பணப்பறிப்பை நிறைவேற்றப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் அரசியல் அநாதைகள் முயற்சிப்பது பணத்தை-செல்வத்தைத் மிக இலகுவாகத் திரட்டிக் கொள்வதற்கான எதிர்பார்ப்பிலிருந்தே தோன்றுவதாக எண்ணிக்கொள்வதற்கான சாதகமான போக்ககள் இப்போது உருவாகிறது.இதன் அடிப்படையில் இன்னொரு நிதிதிரட்டல் மற்றும் சிந்தனை மழுங்கடித்தல் இலங்கை-இந்திய நலன்களுக்கிசைவாக நடந்தேறும் அபாயம் நம்மை நோக்கிப் படையெடுக்கிறது.இதை மீளத் தொடக்கி வைப்பது ஜீ.ரீ.வீ என்றாக இருக்கும்.இது,பழைய புலிகளது"துரோகிகளின்"-இன்றைய "நாணயப் புலிகளது" ஊடகமாக உருபெறத் துடிக்கிறது.


"எமக்கு உருப்படியாய்ப் புலராத வாழ்வு
ஓடாய் உழைத்தும் கடன்பட்ட
நெஞ்சோடு சோற்றுக் கோப்பை
விரல் நனைத்த கணமே மறு வேலை
துரத்தும் எமை...

உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்

குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத ஜீ.ரீ.வீ. ஊடகக்காரர்!..."


தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.

ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.

 

அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.

இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.

 

நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் ஜீ.ரீ.வி.

 

இந்த ஊடகமோ,மேலும் தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது.இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இறுதியில் சரணடைந்து செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.

 

மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும் அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது, பணம் பொறுக்கும் பண்புக்குட்பட்டதென்பதற்கு ஜீ.ரீ.வீக்கு காசு சேர்க்கும்-பிச்சை கேட்கும் என்.ரீ. ஜெகனது பாங்கே உறுதிப்படுத்துகிறது.

 

அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.

 

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

 

இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.

 

இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாகத் தொலைக்காட்சியில் வீராப்புப் பேசுகிறோம்!

 

இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.

 

புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்"என்று ஒப்பாரி வைத்துப் பணங்கறப்பதில் குறியாக...இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
09.11.2009