08142022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

புலத்துப் புலிகள் போடும் "ஜனநாயகம்", மக்களை ஏமாற்றித் தின்னும் போக்கிலி அரசியலாகும்

புலம்பெயர் தமிழ் மக்கள், கடந்தகால புலிகளின் பாசிச கட்டமைப்பில் இருந்து இன்னமும் விடுபட்டுவிடவில்லை. அப்படி விடுபட முடியாத வண்ணம், புலத்து புலிகள் பற்பல வேசங்களைப் போடுகின்றனர்.

இதன் பின் இருப்பவர்களோ, கடந்தகாலத்தில் தமிழ் மக்களை மந்தைகளாக அடிமைப்படுத்தி  தின்றவர்கள். இவர்கள் யார் என்றால் புலிகளின் பின் சொத்தைக் குவித்தவர்கள், புலிகளின் சொத்தை இன்று அனுபவிப்பவர்கள், மக்கள் மேல் அதிகாரத்தைக் கையாண்டவர்கள், உழையாது போராட்டத்தின் பெயரில் தின்று திரிந்தவர்கள் தான், இன்று மீண்டும் தமிழ் மக்களின் பின் தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.

 

இதற்காக ஜனநாயக வேசம் போடுவது முதல் தமிழ் மக்களிடம் வாக்கைக் கேட்பது வரை, பற்பல நாடகங்கள். ஆனால் ஜனநாயக விரோத நடைமுறை ஊடாகவே, மீண்டும் தம்மைத் தக்கவைக்க முனைகின்றனர். பாரிஸ்சில் சுயமாக செயல்படுகின்ற பொது அமைப்புகளின் உள்ள ஒரு சில ஜனநாயக விரோதிகளைக் கொண்டு, அமைப்பின் பெயரால் புலத்து புலிப் பினாமிகள் பொது அமைப்பை உருவாக்குவது முதல் நோர்வேயில் சுயமான அமைப்பின் பெயரில் போட்டி புதிய அமைப்பை அமைத்து கைப்பற்றுவது வரை புலத்து புலிகளின் "ஜனநாயகம்" கோலோச்சுகின்றது. இப்படி ஜனநாயக விரோத புலியிசத்தைக் கொண்டு, அடவடித்தனமாகவே புலத்து புலிகள் மீண்டும் இயங்குகின்றனர்.

 

நாடு கடந்த தமிழீழக்காரர்களின் "ஜனநாயக" அரசியல் இப்படித்தான், ஜனநாயகமாகின்றது. தம்மை மறைத்துக் கொள்ள புதுப்பெயர்கள், புதுக் கோசங்கள். ஆனால் இவர்கள் மிகத் தெளிவாகவே, தம்மைச் சுற்றி நிகழ்ந்த கடந்தகால மனித விரோத அரசியல் அடிப்படைகள் எதையும் விமர்சிப்பதில்லை. இப்படி

 

1.புலிகளின் ஜனநாயக விரோத பாசிச நடத்தையை விமர்சிப்பதில்லை.

 

2.புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த எந்தக் கொடுமையையும் விமர்சனமாகவோ, சுயவிமர்சனமாகவோ முன்வைப்பதில்லை.  

      

3.சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான குறுந்தேசிய பாசிச அரசியலை விமர்சிப்பதில்லை, சுயவிமர்சனம் செய்வதில்லை.

 

4.தமிழ்மக்களை ஏமாற்றி திரட்டிய புலத்துப் புலிகளின் பினாமிச் சொத்துகளை, தமிழரின் பொது நிதியமாக மாற்ற மறுக்கின்றனர். இதை கொள்ளையடித்து சிலர் வாழ்வதை கேள்விக்கு உள்ளாக்குவதில்லை.

 

இப்படிப்பட்டவர்கள், இதில் இலாபம் அடைந்தவர்கள், இன்று இலாபம் அடைபவர்கள் தான், இவற்றைப் பற்றி கதைக்காது புது வே~ம் போட முனைகின்றனர். இவர்கள் வேறுயாருமல்ல, முன்னாள் புலிகள்தான். இன்றோ பல வே~ங்கள் போட்டு நடிக்கின்றனர்.

 

நோர்வேயில் தமிழ்மக்கள் மத்தியில் ஜனநாயக பூர்வமான தேர்தல் மூலம், தம்மைத்தாம் தெரிவு செய்வதாக காட்ட எடுக்கும் முயற்சியோ போலியானது. தமிழ்மக்கள் மத்தியில், மாற்றுக் கருத்தை எடுத்துச்செல்ல இன்றும் தடையாக இருந்தபடி, புலிகள் நடத்தும் அதே கேலிக் கூத்தான புலி அரசியல்தான். தமிழ் மக்கள் தாம் ஏன் இப்படியானோம் என்ற கேள்வி கூட கேட்க முடியாத வண்ணம் வைத்துக்கொண்டு, புலத்துப் புலிகள் நடத்தும் கேலிக் கூத்தான தேர்தல். தாங்கள் தோற்றுப்போவோம் என்றால் தேர்தல் நடத்துவார்களா!? தேர்தலில் கேட்கும் உரிமையைக் கூட மறுத்தபடிதான், புலத்துப் புலிகள் "ஜனநாயக" நாடகம் ஆடுகின்றனர்.

 

இந்த "ஜனநாயக" நாடகம் ஏன்? நோர்வே அரசு பொது நிறுவனங்களுக்கு வழங்கும் பொது நிதியத்தை அபகரித்து தின்னும் சதியை அடிப்படையாகக் கொண்டது.  

இப்படி நாட்டுக்கு நாடு புலத்து தமிழீழக்காரர்கள், தமிழ்மக்களை மீளவும் நக்கத்;தொடங்கியுள்ளனர். தங்கள் புலி முகத்தை பூனை வே~த்தில் மூடிமறைக்க முனைகின்றனர். தமிழன் அல்லாதவனை ஏமாற்ற இது உதவும் என்று நம்புகின்றனர். 


இவர்களுக்கு தமிழ்மக்கள் மேலான எந்த அக்கறையும் இருப்பதில்லை. அப்படி ஒரு நேர்மையான அக்கறை இருப்பின், என்ன செய்வார்கள்.  கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் இழைத்த கொடுமைகள்; முதல் தோல்விக்கான தங்கள் அரசியல் காரணங்களை வெளிப்படையாக விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கியே மக்களை அணுகுவர்.

 

அதைச் செய்ய முனையாத எவரும், தமிழ் மக்கள் நலனில் அக்கறை அற்றவர்கள். மொத்தத்தில் ஏமாற்றுப் பேர்வழிகள். தமிழ் மக்களின் பெயரில் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி  தின்னமுனையும், அரசியல் போக்கிரிகள். இவர்களை இனம் கண்டு கொள்ளாத வரை, (புலத்து) தமிழ்மக்கள் மீட்சி பெறமுடியாது.

 

பி.இரயாகரன்
08.11.2009

 

      


பி.இரயாகரன் - சமர்