Language Selection

புதிய ஜனநாயகம் 2009

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்þ அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் ஆகிய இரண்டு சர்வதேச ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துவரும் இந்த நேரத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய ஐந்து விதமான அணுகுண்டு சோதனைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஹைட்ரஜன் குண்டு சோதனை முழுத்தோல்வியடைந்துவிட்ட ஒன்று என சங்கு ஊதியிருக்கிறார், அணுசக்தி அறிவியலாளார் கே.சந்தானம்.

ஏறத்தாழ பத்தாண்டு காலம் கழித்து வெளியில் வந்துள்ள இந்தப் "பூனைக்குட்டியை'ப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனென்றால்þ அந்த இரகசியத்தை தற்பொழுது அம்பலப்படுத்தியுள்ள கே.சந்தானம், அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட சமயத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வந்ததோடு, போக்ரான்2 அணுகுண்டு சோதனைத் திட்டத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

கே.சந்தானம் மட்டுமின்றிþ இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனைத் திட்டத்தில் பங்குகொண்ட அசோக் பார்த்தசாரதி, அணுசக்தி அறிவியலாளார் பி.கே.ஐயங்கார், முன்னாள் இந்தியக் கடற்படையின் தளபதியும்þ அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்தில் பங்கு கொண்டவருமான டாக்டர்.புத்தி கோடா சுப்பாராவ் போன்றோரும் ஹைட்ரஜன் குண்டு சோதனையின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

 

ஹைட்ரஜன் குண்டு சோதனை தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிடும் கே.சந்தானம்þ அதற்கான அறிவியல் காரணங்களை மட்டுமின்றிþ பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக சில எளிய விளக்கங்களையும் அளித்துள்ளார். மே 1998இல் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி யடைந்திருந்தால், "சோதனை நடத்தப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 70 மீட்டர் விட்டமுள்ள பள்ளம் உருவாகியிருக்க வேண்டும்; பூமிக்கடியில் அக்குண்டினைத் தாங்கி நின்ற "ஷாப்ட்' (shaft) உடைந்திருக்க வேண்டும்; குறிப்படத்தக்க அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் அவர், இந்த மூன்றும் ஏற்படாததால், அச்சோதனையில் ஈடுபட்ட அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவருக்கும் இச்சோதனை தோல்வியடைந்துவிட்டகதை உடனடியாகத் தெரிந்துவிட்டது எனக் கூறி வருகிறார், அவர்.

 

ஆனால், அச்சோதனையில் பங்கு கொண்ட முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம்þ தற்பொழுது பிரதம மந்திரியின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இருக்கும் ஆர்.சிதம்பரம், அணுசக்தி கமிசனின் தலைவராக இருக்கும் அணில் ககோத்கர் ஆகியோர் ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றியடைந்து விட்டதாகவே கூறி வருகின்றனர். மேலும்þ "கடந்த பத்தாண்டுகளாக இச்சோதனை பற்றி மாற்றுக் கருத்துக் கூறாத கே.சந்தானம், இப்பொழுது மாற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

அணுகுண்டு சோதனைகள் முடிந்தவுடனேயேþ அச்சோதனை குறித்த நில அதிர்வுப் பதிவுகளை ஆராய்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைத் துறையைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தவில்லை என அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும்þ இம்முடிவினை மும்பயில் உள்ள பாபா அணுஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இக்குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ளார், கே.சந்தானம். அப்பொழுது பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரக இருந்த பிர@ஜஷ் மிஸ்ராவின் தலைமையில் இம்முரண்பாட்டினை விவாதிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதில்அப்பொழுது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையின் இயக்குநர் ஜெனரலாக இருந்த அப்துல் கலாம் உள்ளிட்ட பல அணுசக்தி அறிவியலாளர்கள் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார், அவர். "இக்கூட்டத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையின் வெற்றி குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இப்படிப்பட்ட தருணங்களில்þ ஒரு தனிப்பட்ட சுதந்திரமான குழுவொன்றை அமைத்து இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து அதன் பின் முடிவை அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால்þ இவ்வழக்கத்திற்கு மாறாக, பிர@ஜஷ் மிஸ்ரா குரல் ஓட்டெடுப்பு போல ஒன்றை நடத்திþ பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பக்கமாகச் சாய்ந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஜெனரல் அப்துல் கலாமும் அணுசக்தி கமிசனின் தலைவர் ஆர்.சிதம்பரமும் இணைந்து ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றியடைந்துவிட்டதாகப் பத்திரிகைகள் மூலம் அறிவித்தனர்'' என நடந்த சம்பவங்களை விளக்கியிருக்கிறார்þ கே.சந்தானம்.


இந்தியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றியடைந்து விட்டதாகக் கூறப்படுவதைக் கேள்விக்குள்ளாக்கிவரும் கே.சந்தானம்.


ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றியடைந்துவிட்டதாகக் கூறிவரும் அப்துல் கலாம், ஆர்.சிதம்பரம், அணில் ககோத்கர் ஆகியோர் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறைக்கும் பாபா அணுஆராய்ச்சி மையத்திற்கும் இடையே முரண்பாடு நிலவியதையோ, அது தொடர்பாக கூட்டம் நடந்ததையோ மறுக்காதது மட்டுமல்ல,
எதிர்பார்த்த அளவிற்கு நில அதிர்வு பதிவாகாததையும் ஏற்றுக் கொள்கிறார்கள். நில அதிர்வு பதிவாகாததற்குþ நில அதிர்வைப் பதிவு செய்வதற்கு தயாரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் சாதனங்கள் துல்லியமாக இயங்கவில்லை என மட்டையடியாகப் பதில் அளிக்கின்றனர். இது உண்மை யென்றால், பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை வெறும் கொல்லன் பட்டறை வேலையைத்தான் செய்து வருகிறதா என்ற கேள்வி நமக்குள் எழுந்து விடுகிறது.

 

பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் பதிவுகள் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இச்சோதனை குறித்துப் பதிவாகியுள்ள நில அதிர்வுகள்கூட எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இல்லை. இதற்கு வேறொரு சப்பைக்கட்டை முன்வைக்கிறதுþ இந்திய அரசு. சோதனை நடத்தப்பட்ட இடத்தின் பூகோள அமைப்பு வித்தியாசமாக இருப்பதால்தான்þ பல்வேறு நாடுகளில் நில அதிர்வுகள் எதிர்பார்த்த அளவிற்குப் பதிவாகவில்லை எனச்சமாளிக்க முயலுகிறது. இந்தக் காரணங்களை முற்றிலுமாக
நிராகரிக்கிறார்,  கே.சந்தானம்.

 

சோதனை நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்துள்ள கிராமங்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஹைட்ரஜன் குண்டின் வெடிப்புத் திறனைக் குறைத்துச் சோதனை நடத்தியதாகவும், அதனால்கூட நில அதிர்வுகள் எதிர்பார்த்த அளவிற்குப் பதிவாகியிருக்காது என்றும் காரணம் கூறப்படுகிறது. பொது மக்களின் எதிர்ப்பையெல்லாம் மீறி ஊருக்குள்ளேயே அணு மின்சார நிலையங்களைக் கட்டி, அணுக்கழிவுகளை அங்கேயே கொட்டிப் பாதுகாத்து வரும் இந்திய அரசிடமிருந்து இப்படிபட்ட காரணத்தைக் கேட்கும் பொழுதுþ நமது மேனி சிலிர்த்துதான் போகிறது.

 

நில அதிர்வு குறித்து மட்டுமின்றிþ பல்வேறு அறிவியல் காரணங்களை முன்வைத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனையின் வெற்றிதோல்வி குறித்து வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இப்பொழுதுகூட இப்பிரச்சினை குறித்து முடிவு
சொல்ல ஒரு சுதந்திரமான நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. மாறாகþ பத்திரிகைகள் மூலம் லாவணி பாடியேþ இப்பிரச்சினைக்கு மங்களம் பாடிவிடமுயலுகிறது.

 

மே 1998இல் அணுகுண்டு சோதனைகளை நடத்தி முடித்தவுடன், அமெரிக்கா இந்தியா மீது சில பொருளாதாரத் தடைகளை விதித்தது. அமெரிக்காவைத் தாஜா செய்து இப்பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு செய்யþ "இந்தியா இனி அணுகுண்டு சோதனைகளை நடத்தாது'' எனத் தன்னிச்சையாக இந்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்துதான்þ இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில்தான்þ யுரேனியம் இறக்குமதி தொடர்பாக அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் கூட்டமைப்புடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

 

இப்படிபட்ட சூழ்நிலையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிர்பார்த்த விளைவுகளைக் கொடுக்கவில்லை என ஒப்புக்கொண்டால், சீன அபாயத்தைச் சமாளிக்க இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்ற நெருக்கு தலுக்கு இந்திய அரசு மட்டுமின்றிþ காங்கிரசுþ பா.ஜ.க., போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளும் முகம் கொடுக்க நேரிடும். இந்த நெருக்குதலுக்குப் பணிந்து மீண்டும் அணுகுண்டு சோதனைகள் நடத்தினால்þ அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும்.இந்திய ஆளும் கும்பலைப் பொருத்தவரை,  தற்பொழுது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியில் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளைப் பகைத்துக் கொள்வது தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது. எனவே, உண்மை எப்படியிருந்தாலும்þ ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி எனக் கூறிக்கொள்வதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.

 

இதுவொருபுறமிருக்கþ இந்தியா தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ளும் முகமாகþ அறிவியல்தொழில்நுட்ப ஜாம்பவானாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் சுயதம்பட்டத்தில் இறங்கி வருகிறது. இந்தியாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்þ அதனின் ஆயுள் காலத்திற்கு முன்பே செயல் இழந்துவிட்டது. அதற்கான காரணங்களை மக்கள் முன்வைத்து விளக்குவதைவிடþ அத்திட்டம் 95 சதவீதம் வெற்றியடைந்துவிட்டது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்தான் இந்திய அறிவியலாளர்கள் குறியாக இருந்தார்கள்.

 

சந்திரனில் தண்ணீர் இருப்பதை இந்திய செயற்கை கோளில் பொருத்தப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான கருவிதான் கண்டுபிடித்ததாக முதல்நாள் செய்தி வெளியாகிறது.மறுநாளே, நமது விஞ்ஞானிகள் அதற்கு முன்பாகவே சந்திரனில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்து விட்டதாக இந்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டது.

 

இந்திய அரசு சமீபத்தில் அணுசக்தியில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பலொன்றைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டது. இந்தக் கப்பல் உள்நாட்டிலேயே கட்டப்பட்டதைக் காட்டி, இந்தியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைத் தனது சொந்த முயற்சியில் பெற்றுவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளப்பட்டது. ஆனால்þ அக்கப்பலுக்குள் இருக்கும் சிறிய அணு உலையை வடிவமைத்துக் கட்டுவதில் இந்தியஅறிவியலாளர்கள் திணறிப் போனதும்þ அதற்கு ரசிய நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள்தான் உதவினார்கள் என்பதும் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல, 1975இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2009இல்தான் முடிக்கப்பட்டது; 1þ000 கோடி ரூபாய் என்ற ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்þ இதுநாள்வரை 30000 கோடி ரூபாயை முழுங்கியிருக்கிறது என்பதில் இருந்து நமது நாட்டு அணுசக்தி ஆராய்ச்சியாளர்களின் திறனை மதிப்பிட்டுக் கொள்ளலாம். இந்தியாவின் அணுசக்தித் துறையும், பாதுகாப்புத் துறையும் "தேசப் பாதுகாப்பு' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டுþ அத்துறைகளில் நடக்கும் ""ஆராய்ச்சி'' குறித்த விவரங்களைக் கேட்கும் உரிமை மக்களுக்குக் கிடையாது என
மறுத்து வருகின்றனர். ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை வெற்றியா, இல்லை தோல்வியா என்பதை அறிந்து கொள்ளமட்டுமல்ல, பொதுமக்களின் வரிப்பணம் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் விரயமாக்கப்படுவதையும்þ ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகார வர்க்கம் தின்று கொழுப்பதையும் தடுப்பதற்கும்கூட, அத்துறைகள் வெளிப்படையான தன்மையுடன் இயங்க வேண்டும் எனக் கோருவது அவசியமாகிறது.

 

இதைவிட முக்கியமானது எதுவென்றால்þ ஹைட்ரஜன் குண்டு சோதனை குறித்து முட்டிக் கொள்ளும் இரு தரப்புமே இந்தியாவின் மேலாதிக்க நோக்கத்தில் இருந்துதான் இப்பிரச்சினையை அணுகி வருகின்றன. "3,000 கி.மீட்டருக்கு மேல் பறந்து சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைக் கொண்டுள்ள இந்தியாþ அதிக அழிவு ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களைப் பெற வேண்டியது அவசியம்; சீனாவின் முன் நாம் அம்மணமாக நிற்கிறோம்'' என வாதிடுகிறார், கே.சந்தானம். இவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்துள்ள தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணன்þ "தற்பொழுது இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு 50,000 முதல் 1,00,000 வரையிலான மக்களைக் கொன்றொழிக்க முடியும்'' எனப்பதிலடி கொடுக்கிறார்.(தி ஹிந்துþ 21.09.2009þ பக்.12)

 

இந்த இரண்டு தரப்பில் எத்தரப்பை நாம் ஆதரித்தாலும், அது இந்தியாசீனாபாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போட்டி தீவிரமடையத் தூபம் போடுவதாகவே அமையும். எனவே, இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களையும், அதனின் போர் வெறி மற்றும் தேசிய வெறியையும் எதிர்த்துப் போராடுவதே இந்திய உழைக்கும் மக்களின் முன்னுள்ள முதற்கடமையாகும்.

 

· குப்பன்