Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

 

பு.ஜ: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ்ச் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடைதாய் இருந்து வருகிறதா?

 

சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான் யாழ்ப்பாணத்து முதலாளிகளாகச் சொல்ல முடியும். உற்பத்தியிலோ, வணிகத்திலோ யாழ்ப்பாணத்து சமூகம் ஓங்கியிருக்கவில்லை. உற்பத்தியில் சிங்கள முதலாளிகளும், வணிகத்தில் முசுலீம் மக்களும் முன்னிலை வகிக்க, அதன்பின்தான் தமிழ் மக்கள் வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான முதலாளி வர்க்கம் இல்லை. ஒரு இடைநிலை முதலாளி வர்க்கம்தான் உள்ளதாகச் சொல்லலாம்.

 

இந்நிலையில் படித்தவர்கள் என்பவர்கள் ஒரு சேவை செய்யும் நிலைமையில்தான் உள்ளனர். அரசு உத்தியோகஸ்தர்கள், தனியார் நிர்வாகிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் முதலான வேலைகள்தான் யாழ்ப்பாணத்து படித்தவர்க்கம் பார்த்து வந்த வேலைகள். தரப்படுத்தலுக்குப் பிறகும், போர்க் காரணங்களினாலும் இப்படித்த வர்க்கத்தினரின் பெரும்பகுதியினர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். சிறு பகுதியினர்தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, நாட்டுப்பற்று காரணமாகவோ இங்கேயே தங்கினர். இதைத் தவிர்த்துச் சாதாரண மக்கள், ஏழை எளியோர், வெளிநாடு செல்ல முடியாத மக்களும் உள்ளனர்.

 

அடுத்து, இந்தக் கல்வியறிவே சமூக சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்ல முடியாது. சில இடதுசாரி முற்போக்கு பிரிவினரைத் தந்ததைத் தவிர, இந்தப் படித்த, வர்க்கம் சாதி ஆதிக்கம், பிற்போக்கு கண்ணோட்டத்தையே கொண்டிருந்தது. எனவே, அளவுக்கதிகமாக யாழ்ப்பாணத்துக் கல்வியறிவை மதிப்பிட முடியாது என நினைக்கிறேன்.

 

பு.ஜ: போராளிக் குழுக்களிடையே நடந்த சகோதரக் கொலைகளுக்கும், பல குழுக்கள் துரோகிகளாகச் சீரழிந்து போனதற்கும் இந்திய உளவு அமைப்பான ""ரா''வை மட்டும் குற்றஞ்சுமத்த முடியுமா?

 

சிவசேகரம்: சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே இந்த இயக்கங்களும் செயல்பட்டன. இவர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் உரிமைகளைத் தாங்கள்தான் வென்றெடுக்க முடியும், மற்றவர்களால் முடியாது என்ற கருத்தை வைத்திருந்தனர். இது ஒரு வியாபாரப் போட்டி போல நடந்தது. இதன் காரணமாக இயக்கங்களிடையேயும், இயக்கங்களுக்குள்ளேயும் மோதல்கள் நடைபெற்றன. இந்த மோதல்களுக்கான அடிப்படை என்னவென்பது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. மேலும், மக்களிடையே இது தொடர்பான ஜனநாயக விவாதங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டிக்கிறது.

 

தமிழ் காங்கிரஸ் காலத்திலிருந்தே ஜனநாயகம் என்பதே தமிழ் தேசிய இன வரலாற்றில் பலவீனமாகத்தான் இருந்து வந்துள்ளது. இடதுசாரிகளைத் தமிழ்த் தேசியத்தின் துரோகிகளாக முத்திரை குத்திய பிறகு, அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமை, பின்பு தொடர்ச்சியாக தேசியவாத முகாமுக்குள்ளாகவே மாற்று கருத்துக்களை விவாதிக்க முடியாது என்ற நிலைமையாகத் தொடர்ந்தது. இயக்கங்களுக்குள்ளாகவே கருத்து முரண்பாடுகள் வன்முறையால் தீர்க்கப்பட்டன. ஒரு இயக்கம் என்று விதிவிலக்கில்லாமல், எல்லா இயக்கங்களிலும் தலைமைப் போட்டி பல கொலைகளுக்குக் காரணமாக இருந்தது. இந்நிலைமைகளில், ஜனநாயக மரபு என்பது தமிழ் மக்களிடையே செழுமையாக வளரவில்லை என்பதையே நான் பார்க்கிறேன். சாதி, தீண்டாமைக்கெதிராக கம்யூனிஸ்டுகள் தொடங்கிய போராட்டத்தின் போது மக்களிடையே இருந்த ஜனநாயக மரபு, பின்பு தமிழ்த் தேசிய முகாமால் தடை செய்யப்பட்டது.

 

பு.ஜ: கருணா வெளிப்படையாக வந்து பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டுகிறார்; அமைச்சராக வலம் வருகிறார். இந்தத் துரோகத்தை ஈழத்தமிழ் மக்கள் எங்கனம் பார்க்கிறார்கள், சகித்துக் கொள்கிறார்கள்?

 

சிவசேகரம்: சடலத்தை அடையாளம் காட்டியதைத் துரோகம் என்று சொல்ல முடியாது. மேலும், கருணாவை ஒரு தனி மனிதனின் துரோகமாக மட்டும் மதிப்பிடமுடியாது. அடிப்படையில் கருணாவின் செயலுக்கும் மற்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் வித்தியாசமில்லை. எல்லாருமே தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்கிறார்கள். இறுதியில், அரசாங்கத்தோடு போய்ச் சேர்ந்து கொள்கிறார்கள்.

 

மற்றவர்கள் செய்யாத ஒன்றை இங்கே கருணா செய்துவிடவில்லை. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்கள் தமது ஆயுதத்தைக் கைவிட்டுவிட்டு அரசோடு சேர்ந்தார்கள்; கருணா ஆயுதங்களை வைத்துக்கொண்டு இராணுவத்தின் உதவியோடு போராடுகிறார். கருணாவுக்கும், டக்ளஸ் தேவானந்தாவிற்கும், ஆனந்தசங்கரிக்கும் அடிப்படையில் வித்தியாசம் கிடையாது. மற்றவர்களை விட, கருணா அரசாங்கத்திற்குக் கூடுதலாகப் பயன்பட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த இறுதிப்போரில்கூட கருணாவின் பங்களிப்பு அதிகமானதுதான். ஏனென்றால், புலிகளின் போர் தந்திரம் முதலான விசயங்கள் இவருக்கும் தெரியுமென்பதால், இராணுவம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

 

கருணாவின் விசயத்தில் மட்டக்களப்பு யாழ்ப்பாணத்து முரண்பாடு, கருணாவின் கூட்டாளிகளை அரசு வென்றெடுத்தது, கிழக்கு மாகாணத்தில் கருணாவுக்கு இருந்த செல்வாக்கு எல்லாமும் இருக்கிறது. கூடுதலாக அரசின் ஆதரவும் உள்ளது. கருணாவைவிட, பிள்ளையானுக்குத் தனிப்பட்ட செல்வாக்குக் கூடுதலாக உண்டு. இருப்பினும் கருணாவோ, பிள்ளையானோ அரசு அனுமதிக்கும் அளவில்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ சில உதவிகள் செய்ய முடியும். அதைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. இது அவர்களுக்கு மட்டுமல்ல; அரசாங்கத்தோடு இணைந்து செயல்படும் தமிழ் அரசியல்வாதிகள், முசுலீம் அரசியல்வாதிகள், மலையக அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.

 

வடக்கு, கிழக்கு என்ற பிரதேசவாதத்திற்கும், சாதியவாதத்திற்கும் எதிராக அல்லது இந்தப் பிரச்சினைகளை, முரண்பாடுகளை புலிகள் சரியாகக் கையாளவில்லை. இவற்றை இடதுசாரிகள் முன்வைத்த போதெல்லாம், அவர்கள்தான் இந்தப் பிரச்சினைகளை எழுப்புகிறார்கள் என்று பதிலளிக்கப்பட்டது. ஆனால், இருக்கும் யதார்த்தமான பிரச்சினைகளைத்தான் இடதுசாரிகள் முன்வைத்தார்கள். கருணாவின் பின்னே இப்படி ஒரு உண்மையும் இருக்கிறது. டக்ளஸ், கருணா முதலானவர்கள் தமக்குக் கிடைத்திருக்கும் வரம்புக்குட்பட்ட அரசு அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு சில உதவிகளைச் செய்து ஒரு சமூக அடித்தளத்தை அது சிறுபான்மையாக இருந்தாலும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதே சமயம், பொதுவில் தமிழ்மக்கள் இவர்களுடைய அரசியலில் நம்பிக்கை கொள்ளவில்லை அல்லது ஏற்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 

இத்தகைய அரசு சார்பு குழுக்கள் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் புலிகளின் ஆதரவாளர்களைக் கொல்வதாகவும் தெரிகிறது. அந்த நோக்கத்திற்காக இவர்கள் ஆயுதம் வைத்திருப்பதை அரசு அனுமதிக்கிறது. என்றைக்கு அந்த ஆயுதங்களுக்குத் தேவையில்லை என அரசு கருதுகிறதோ, அன்று அவர்கள் ஆயுதங்களை மீள அளிக்க வேண்டும்.

 

பு.ஜ: ""பிரபாகரன் ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்'' என இலங்கை புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான தோழர் செந்தில்வேல் கருத்துக் கூறியிருக்கிறார். எதன் அடிப்படையில் அப்படி ஒரு ஒப்புமை செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டது என விளக்க முடியுமா?

 

சிவசேகரம்: அண்மையில் ஒரு நேர்காணலில் தோழர் செந்தில்வேல் இப்படிக் கூறியுள்ளார். இதை முன்பே கூறியிருக்கலாம் என்றாலும், இப்போதுதான் நன்கு எடுபடுகிறது. ""போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்'' என மாவோ கூறியதன் அடிப்படையில் இந்தக் கூற்றை விளங்கிக் கொள்ளலாம்.

 

அமிர்தலிங்கம், பிரபாகரன் இருவருமே தமிழ் தேசியவாதத்தை முன்னெடுத்ததில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. குறந்தேசியவாதம், ஜனநாயகமறுப்பு, தமிழ்தேசியவாதத்திற்கெதிரான எல்லா மாற்றுக் கருத்துக்களையும் நிராகரிப்பது என நிறைய சொல்லலாம். துரையப்பாவின் கொலையை அமிர்தலிங்கம் ஆதரித்தவர், அதற்குக் காரணமாக இருந்தவர் என்று சொல்லக்கூடிய அளவில் அவருடைய நிலைப்பாடு இருந்தது. அமிர்தலிங்கம் கையில் துப்பாக்கி இருக்கவில்லையே தவிர, தனது நிலைக்கு மாறான அரசியல்வாதிகளுக்கு இயற்கையான மரணம் இல்லை என்றெல்லாம் கூட அவர் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப்பார்த்தால், இந்த உவமை பொருத்தமாகத்தான் இருக்கிறது.

 

தமிழீழ நிலைப்பாட்டுக்கெதிரான கொள்கையுடைவர்களை எந்தெந்த வகையில் அழிக்க முடியுமோ, அந்தவகையில் அழிப்பதை ஆதரிப்போம் என்பதே அமிர்தலிங்கத்தின் கொள்கை. இப்படி தனிநபர்களை அழிப்பதன் மூலம் ஒரு சமூகமாற்றம் வராது என்பதும், அப்படி ஒரு தனிநபரை அழிக்க வேண்டுமென்று ஒரு கருத்து வருவதாக இருந்தால், அது மக்களிடமிருந்தே வரவேண்டும். பிரபாகரனோ, அமிர்தலிங்கமோ அவர்களே முடிவு செய்வதை நியாயப்படுத்தினார்கள். தமிழரசுக் கட்சியின் நீட்சியாகத்தான் அமிர்தலிங்கமும், பிரபாகரனும் மற்ற பல இயக்கங்களும் தோன்றினார்கள். அரசியல் என்ற அடிப்படையில் இவர்களுக்கிடையே பெரிய வித்தியாசமில்லை. தமிழரசுக் கட்சியினர் அமைதி வழியில் போராடியது தீர்வைத் தரவில்லை என்பதால், இவர்கள் ஆயுதம் எடுத்துப் போராடினாலும் கொள்கை ஒன்றுதான்.

 

பிரபாகரன், அமிர்தலிங்கம் இருவரிடமும் தமிழீழத்தைத் தவிர, ஏகாதிபத்திய எதிர்ப்போ, மக்கள்திரள் அரசியல்வழியெல்லாம் கிடையாது. அமிர்தலிங்கத்தைவிட பிரபாகரன் தீவிர கொள்கை பிடிப்புள்ளவர் என்பதை நான் ஏற்கிற அதே நேரம், அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை என்கிறேன். அமிர்தலிங்கம் பின்னாட்களில் எதிர்க்கட்சித் தலைவராக மாறி அரசுடன் சமரசம் செய்து கொண்டார். ஒருவேளை பிரபாகரன் சரணடைந்து கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவரும் இதையே செய்திருப்பார். இப்போது பிரபாகரனது வாரிசாக கருதப்படும் கே.பி கூட தமிழீழத்தைக் கைவிட்டிருக்கிறார். அவர்களால் முடிந்த போது தமிழீழமும், முடியாத போது சமரசமும்தான் அவர்களுடைய கொள்கை. அதில் பிரபாகரனுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் வேறுபாடில்லை.

 

பு.ஜ: விடுதலைப் புலிகளின் அரசியல் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கோ, இந்தியாவிற்கோ எதிரானதல்ல; இருப்பினும் கிழக்கு திமோர், கொசாவோ போன்று தமிழ்ஈழ விடுதலையை ஏகாதிபத்தியங்கள் ஏன் அங்கீகரிக்கவில்லை? ஏகாதிபத்தியங்களால் முன் தள்ளப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தையின் நோக்கம்தான் என்ன? அதன் தோல்விக்கு யார் காரணம்?

 

சிவசேகரம்: புலிகளைப் பொறுத்தவரை அவர்களிடம் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டமில்லை. அதன்காரணமாக ஏகாதிபத்திய, முதலாளித்துவ உற்பத்திமுறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய கண்ணோட்டமென்பது, ஆக மிஞ்சினால் ஒரு நடுத்தர வர்க்கக் கண்ணோட்டமே. உலகமயமாக்கத்தைஆதரிப்பது, ஏகாதிபத்தியங்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது என்ற வகையில்தான் அவர்கள் செயல்பட்டார்கள். இன்றுவரையிலும் புலிகள், பாலஸ்தீன மக்களுக்காகவோ, ஈராக் மக்களுக்காகவோ குரல் கொடுத்தது கிடையாது. ஏகாதிபத்தியங்களைப் பகைப்பது நல்லதல்ல என்ற கண்ணோட்டமே புலிகளிடம் நிலவியது.

 

கிழக்கு திமோர், கொசாவோவைப் பொறுத்தவரை இரண்டும் வித்தியாசமான வரலாற்றைக் கொண்டவை. கிழக்கு திமோர் சுதந்திர நாடாக இருந்து, அமெரிக்காவின் ஆசியோடு இந்தோனேஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதற்குக் காரணமான சர்வாதிகாரி வீழ்ந்ததற்குப் பிறகு, இரண்டு வருடங்களாகப் போராட்டம் நடந்து வந்தது. சுகர்த்தோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தோனேஷியாவில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்த நேரத்தில், கிழக்கு திமோரை அங்கீகரிப்பது ஏகாதிபத்தியங்களுக்குச் சாதகமாக இருந்தது. அதேநேரம் விடுதலை அடைந்த கிழக்கு திமோர் ஆஸ்திரேலியா, அமெரிக்காவால் நேரடியாக ஆதிக்கம் செய்யப்படும் நாடாகத்தான் இன்று உள்ளது.

 

கொசாவோவைப் பொறுத்தவரை, யூகோஸ்லாவியா நாடு செர்பியா, போஸ்னியா என்று பிரிக்கப்பட்ட பிறகு, செர்பியா மட்டும் ஒரு சோசலிசக் கண்ணோட்டம் கொண்ட நாடாக நீடிப்பது ஏகாதிபத்தியங்களுக்கு விருப்பமில்லை. எனவே, செர்பியாவை பலவீனப்படுத்துவதற்காக கொசாவோ விடுதலையை ஏகாதிபத்தியங்கள் அளித்தன. இன்று கொசாவோ நாடு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தளமாக அந்த பிராந்தியத்தை ஆதிக்கம் செய்வதற்கு உதவுகிறது.

 

இலங்கையைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியங்கள் முழு இலங்கையையுமே தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும்போது, தனி ஈழத்தை அவர்கள் ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை. இந்தக் கருத்தில் இந்தியாவிற்கும் உடன்பாடு இருப்பதாலும், தனி ஈழம் அவர்களால் ஆதரிக்கப்படவில்லை. எந்தக் காலத்திலும் தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியப் பிரதேசம் உள்ளதென்பதை ஏகாதிபத்தியங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை ஒரு அமெரிக்க தூதர் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இந்தப் பிண்ணனியில்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது, அமெரிக்கா எதிர்பார்க்காத திருப்பம் ஆகும். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் புலிகளை நிராயுதபாணியாக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

 

இசுரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் நோக்கமும் பி.எல்.ஓ.வை நிராயுதபாணியாக்கி, இசுரேலை பாலஸ்தீன மக்கள் அங்கீகரிக்கவேண்டுமென்பதே. இதை ஏற்றுக் கொள்ளாதவரை, விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன அமைப்புக்களை அமெரிக்கா பயங்கரவாதி என்றே சொல்லும்.

 

புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இரண்டு பேச்சுவார்த்தைகள் நடந்து மூன்றாவதில்தான் சமஷ்டி தீர்வு என்பதில் உடன்பாடு ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதை இலங்கையில் உள்ள மார்க்சியலெனினியவாதிகளும் வரவேற்றனர். ஆனால் புலிகளின் இந்த முடிவு, மேற்கு நாடுகளில் இருக்கும் அவர்களது ஆதரவாளர்களால் ஏற்கப்படவில்லை. அவர்கள், தாங்கள் பணம் கொடுப்பது தமிழ் ஈழத்திற்காகத்தான்; சமஷ்டிக்கல்ல என்பதே அவர்கள் கருத்தாக இருந்தது. புலிகள் தாங்கள் பிரிவினையைக் கோரவில்லை, சமஷ்டியைத்தான் கோருகிறோம் என்பதாகப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்றிருக்கலாம். அப்படி செய்திருந்தால், உலக நாடுகளின் ஆதரவைக்கூட ஒருவேளை பெற்றிருக்கலாம். ஆனால், புலிகள் அப்படி ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. அரசாங்கமும் சிங்கள மக்கள் மத்தியில் இந்த சமஷ்டி குறித்த முடிவைக் கொண்டு செல்லவில்லை.

 

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இருதரப்பும் இப்படி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் இருந்ததற்கு, இருதரப்பிற்குமே வேறு நோக்கங்கள் இருந்தன. யு.என்.பி. அரசுக்கு புலிகளை நிராயுதபாணியாக்கவேண்டும் எனவும், புலிகளைப் பொறுத்தவரை தங்களிடம் மட்டும் முடிந்தவரை அதிகாரங்கள் வர வேண்டுமெனவும் நோக்கங்கள் இருந்தன. அதனால்தான் சமஷ்டி குறித்த பருண்மையான ஆய்வு, கேள்விகளுக்குள் அவர்கள் செல்லவில்லை. மேலோட்டமாகவே பேசிவந்தார்கள். இதனாலேயே பேச்சுவார்த்தை தேக்கநிலையடைந்து போருக்கு இட்டுச் சென்றது.

 

பு.ஜ: தமிழீழம் பற்றி பொதுவிவாதம் நடத்தி வெல்லும் அளவிற்கு இருந்த புரட்சிகர கம்யூனிச அமைப்புகள், ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கு காரணம் என்ன?

 

சிவசேகரம்: வடக்கு, கிழக்கில் குறிப்பாக யாழ் குடா நாட்டில்தான் இடதுசாரிகள் ஓரளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்தார்கள். மற்ற இடங்களில் தொழிற்சங்கம் போன்றவை தவிர, கட்சி ரீதியான செல்வாக்கு இல்லை. யாழ் குடாநாட்டிலும் கூட 1966ஆம் ஆண்டு மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.எனவே, ஆரம்பத்திலேயே இடதுசாரிகள் ஒரு வலுவான சக்தியாக இருக்கவில்லை. மற்றது, பாராளுமன்ற இடதுசாரிகள் செய்த துரோகங்கள் மக்களிடையே செல்வாக்கை இழந்ததற்கு முக்கியமான காரணமாகும். 1963ஆம் ஆண்டு தொழிலாளி வர்க்கம் நடத்திய மிகப்பெரும் போராட்டத்தை இவர்கள் காட்டிக் கொடுத்தார்கள். இப்படி தொழிலாளி வர்க்கத்திற்கே துரோகமிழைத்த பாராளுமன்ற இடதுசாரிகள், அதன் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தார்கள் எனலாம். சந்தர்ப்பவாதிகள், ட்ராஸ்கியவாதிகள் செய்த தவறுகளெல்லாம், சரியான நிலைப்பாட்டில் இருந்த மார்க்சிய லெனினியவாதிகளையும் உள்ளிட்ட ஒட்டுமொத்த கம்யூனிச அமைப்புகளின் தவறுகளாகவே மக்களால் கருதப்பட்டன. தமிழ் தேசிய அமைப்புகளும் அப்படியே பிரச்சாரம் செய்தன.

 

அடுத்த பிரச்சினை, சாதியம் தொடர்பானது. தமிழ்மக்கள் மத்தியில் சாதியத்திற்கு எதிராக இடதுசாரிகள் முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராகவே, தேசியவாதத்தை முன்னெடுத்த உயர்சாதிவர்க்கங்கள் இருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் தேசியவாதம் வேரூன்றிய பிறகு, அதை மீறுவது என்பது இடதுசாரிகளுக்குக் கடினமான விடயமாக இருந்து வந்தது. 1970இல் நடந்த பிரச்சினையை வைத்து, 71ஆம் ஆண்டு தரப்படுத்துதல், 72ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு, 74ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம், அதன் பிறகு அரசும், இராணுவமும், போலீசும் தமிழ் மக்களுடன் மோதல்... இப்படிப்பட்ட சூழ்நிலையில் உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய அரசியல் பெறும் வெற்றியை, ஒரு நிதானமான அரசியலை முன்வைக்கும் கருத்து வெற்றி பெற முடியாது என்பதே யதார்த்தம். இதனால் 1970 வரைக்கும் வளர்ச்சியில் இருந்த கம்யூனிச அமைப்புகள், அதன் பிறகு வளர முடியவில்லை. தமிழீழம் தேவையா என்ற விவாதத்தை இடதுசாரிகள் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதை, தமிழரசுக்கட்சி தடை செய்வதற்கு முயன்றது. அவர்களது ஆதரவாளர்கள் யாரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இப்படி இடதுசாரிகளுக்கான ஜனநாயகவெளி தேசியவாதிகளால் தடை செய்யப்பட்டது.

 

மேலும் 1972 மற்றும் 78ஆம் ஆண்டுகளில் கம்யூனிச கட்சிக்குள் நடந்த பிளவுகள் மக்களிடையே நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்தன. இப்படி தமிழ்தேசிய உணர்ச்சி அலை ஓங்கிய புறக்காரணம், சந்தர்ப்பவாதிகளின் தவறுகள் மற்றும் பிளவுகள் போன்ற அகக்காரணங்களால், இடதுசாரிகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.

 

பு.ஜ: விடுதலைப் புலிகள் தலைமையில் ஒருவேளை தமிழீழம் அமைந்திருக்குமானால், அவர்கள் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்திருப்பார்களா? கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் இணையான ஆட்சி நடத்தி வந்தபோது, எந்த வகையான பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தார்கள்?

 

சிவசேகரம்: புலிகள் என்றில்லை; ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய அரசியலே எந்த வர்க்கங்களின் கண்ணோட்டத்தைப் பிரதிபலித்தது என்பதைப் புரிந்து கொண்டால், இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ளலாம். புலிப் போராளிகளில் பெரும்பான்மையினர் தலித் மற்றும் ஏழை மக்களாக இருந்த காலத்தில் கூட, புலிகளால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணியால் எடுக்கப்பட்ட போராட்டத்தின் வீச்சால், தனிப்பட்ட முறையில் கூடச் சாதியைத் தெரிந்து கொள்வது தவறு என்ற அளவில் இருந்தது. உயர்சாதி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தோர் தமது பிள்ளைகளைப் போராளிகளாக அனுப்பவில்லை. தலித் மற்றும் ஏழைகளின் குடும்பங்களிலிருந்தே போராளிகள் புலிப்படையில் சேர்ந்தார்கள். பெண்கள் கூட புலிப்படையில் சேர்ந்ததற்கு சமத்து
வம் காரணமல்ல, துவக்கு தூக்க ஆளில்லை என்பதே பிரச்சினை.

 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்திய இராணுவம் வந்து சென்ற காலத்திற்குப் பிறகு, அவர்கள் ஆதிக்கம் செய்த பகுதிகளில் ஒரு வகையான சுயாதினமான பொருளாதாரத்தை புலிகள் வளர்க்க முயன்றார்கள். 2002 அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதை கைவிட்டுவிட்டு நுகர்வு பொருளாதாரத்திற்கு மாறிக் கொள்கிறார்கள். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மஹாராஜா மற்றும் கொக்கோ கோலா நிறுவனங்கள் செயல்படுவதற்குப் புலிகள் அனுமதி கொடுக்கிறார்கள். இவை இரண்டினாலும் மக்களுக்கு என்ன பயன்? கொக்கோ கோலாவினால் தண்ணீர் பற்றாக்குறை வரும். மஹாராஜா நிறுவனம் நடத்திவரும் சக்தி தொலைக்காட்சியினால் சீரழிவு பண்பாடு பரப்பப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட பணக்காரர்கள் இயங்குவதற்குப் புலிகள் அனுமதி தந்தார்கள்.

பு.ஜ: நன்றி. (முற்றும்)