Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபாட் காந்தி, அண்மையில் தலைநகர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகப் பதுங்கியிருந்த அவரை உளவுத்துறை போலீசார் 21.9.09 அன்று கைது செய்ததாகவும், மிகக்கொடிய பயங்கரவாத இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்ட அவரைக் கைது செய்துள்ளதன் மூலம், இவ்வியக்கத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.

 

ஆனால் தோழர் கோபாட் காந்தி, டெல்லியின் பிகாதிகாமா பகுதியில் மாலை 4 மணியளவில் 17.9.09 அன்றே உளவுப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளைநிற டாடாசுமோ காரில் வந்த 56 பேர் கொண்ட உளவுப் படையினர் பேருந்துக்காகக் காத்திருந்த கோபாட் காந்தியை இழுத்துச் சென்று வாகனத்தினுள் தள்ளி, கடத்திச் சென்றுள்ளனர். சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து, அவர் உண்ணாவிரதம் இருந்ததால், வேறு வழியின்றி 21.9.09 அன்று நீதிமன்றத்துக்கு அவரைக் கொண்டு வந்த உளவுப்படையினர், அன்றுதான் அவரைக் கைது செய்ததாகக் கதையளந்தனர்.

 

சிறுநீரகக் கோளாறினால் அவதிப்பட்டு வந்த கோபாட் காந்தி, டெல்லியிலுள்ள சீதாராம் பாரதிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 17.9.09 அன்று அம் மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு, பேருந்துக்காகக் காத்திருந்தபோதுதான் அவர் உளவுப்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனையில், அவருக்குச் சிறுநீரக உறுப்புப் பகுதியில் புற்றுநேய் தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, கடந்த
பத்தாண்டுகளாக அவர் இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி நோய்களினால் அவதிப்பட்டு வந்தார்.

 

கடந்த 21.9.09 அன்று, டெல்லி பெருநகர தலை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, கடுமையான நெஞ்சு வலியால் அவர் துவண்டார். இதைக் கண்ட நீதிபதி, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டதால், பாரா இந்து மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டு நெஞ்சுவலி நிவாரணியாக மாத்திரைகளும் தரப்பட்டன. பின்னர் அவர் திஹார் மத்திய சிறையில், வரம்புக்கு அதிகமான எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கொட்டடியில் தள்ளப்பட்டுள்ளார்.

 

இக்கொட்டடியில் காற்றோட்டம் இல்லாமல் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போதிலும், சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவில்லை. நெஞ்சுவலிக்கான மாத்திரையோ, ஏற்கெனவே பாவித்து வந்த இதரமருந்துமாத்திரைகளோ அவருக்குத் தரப்படவில்லை. அடிப்படை மனித உரிமைகள் அறவே புறக்கணிக்கப்பட்டு, அவர் மெல்ல மெல்ல கொல்லப்பட்டு வருகிறார்.

 

அறுபத்து மூன்று வயதாகும் தோழர் கோபாட் காந்தி, டூன் பள்ளியிலும் பின்னர் லண்டனிலும் படித்தவர். மேட்டுக்குடி
வர்க்கத்தில் பிறந்த போதிலும், அத்தகைய சுகபோக வாழ்வை உதறி எறிந்துவிட்டு, மார்க்சிய  லெனினிய சித்தாந்தத்தை ஏற்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அன்றைய அவசரநிலை பாசிசஆட்சியை எதிர்த்து, பிரபல மனித உரிமைக்கான முன்னோடிகளான அஸ்கர் அலி என்ஜினியர், செபாஸ்டின் முதலானோருடன் இணைந்து மும்பையில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு (இகஈகீ)வை நிறுவிப் போராடியவர். மார்க்சியலெனினிய அரசியல்  சித்தாந்தப் பத்திரிகைகளை நடத்தியவர்.

 

பின்னர், அவர் நாக்பூர் சென்று பழங்குடியின மக்களின் மீதான அடக்குமுறை  சுரண்டலுக்கெதிராக அமைப்புகளைக் கட்டிப் போராடினார். அதன்பிறகு, ஜார்கந்த்சட்டிஸ்கர் மாநிலங்களில் பழங்குடி மக்களை அரசியல்படுத்தி போராட்டங்களை வழிநடத்தினார். கதீப் அன்சாரி, ஆசாத், அரவிந்த், கமல் முதலான புனைபெயர்களில் அவர் அரசியல் சித்தாந்த கட்டுரைகளை எழுதிவந்தார். மாவோயிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தபோதிலும், இதுவரை இவர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. மார்க்சியலெனினியக் கொள்கை உறுதியும், புரட்சியின் மீது மாளாக் காதலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் தணியாத தாகமும் கொண்ட இவரைத்தான் மிகக்கொடிய பயங்கரவாதியாக ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் கீழ்த்தரமாகச் சித்த
ரித்து வருகின்றன. ஆனால், இன்றுவரை இவர் மீது இக்கைதுக்கான முதல் தகவல் அறிக்கையோ, வழக்கோ கூடப் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், மனிதஉரிமை  ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் சட்ட விரோதமான முறையிலும் அவர் மீது சித்திரவதைகள் ஏவப்பட்டு வருகின்றன.

 

கிரிமினல் குற்றவாளியைப் போலின்றி, அரசியல் கைதி என்ற முறையில் அவரைக் கண்ணியமாக நடத்தக் கோரியும், கொடியபல நோய்களினால் அவதிப்படும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரியும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரலெழுப்பி வருகின்றன. மெக்கார்த்தேயிச பாணியில், தோழர் கோபாட் காந்தி மீது சட்டவிரோதமாக ஏவப்பட்டு வரும் இச்சித்திரவதைக் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரண்டு போராட வேண்டிய கடமை, புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முன்னே காத்திருக்கிறது.

 

(25.9.09 அன்று டெல்லியில், பத்திரிகையாளர் சந்திப்பில் ""அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு (CRPP)'' வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து.)