Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜூன் 15, 2004 அன்று அதிகாலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அருகேமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் அரசு அறிவித்தது.

""அந்த நான்கு பேரும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் வந்த அவர்களை வழிமறித்தபொழுது, நெடுஞ்சாலையில் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு இம்"மோதல்' பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது.

 

இந்த "மோதல்' கொலை பற்றி அப்பொழுதே பல்வேறு சந்தேகங்களும் விமர்சனங்களும் மனித உரிமை அமைப்புகளாலும் முசுலீம் மக்களாலும் எழுப்பப்பட்டன. "மோதலில்' கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹனின் தாயாரும், ஜாவேத் ஷேக்கின் தந்தையும் இம்"மோதல்' கொலை பற்றி விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். குஜராத் அரசும் தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்ள இம்"மோதல்' கொலை பற்றி போலீசு விசாரணையும், துணை கோட்ட நடுவர் விசாரணையும் நடத்த உத்தரவிட்டது.

 

தனது அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் போலீசும், துணைக் கோட்ட நடுவரும் (Sub divisional magistrate) தனக்கு எதிராகத் தீர்ப்பெழுத மாட்டார்கள் என்ற திமிரில்தான் நரேந்திர மோடி இந்த விசாரணை நாடகத்திற்கு உத்தரவிட்டார். எனினும், குஜராத் நிர்வாகத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரியும் இந்த விசாரணையை நடத்த ஒப்புக் கொள்ளாதது, மோடிக்கு இன்னும் வசதியாகப் போனது.

 

இதனிடையே, சந்தேகத்திற்குரிய மரணங்களை இனி துணைக் கோட்ட நடுவர் விசாரிக்கக்கூடாது; குற்றவியல் நடுவர் மன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் என மைய அரசு குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் அகமதாபாத் பெருநகர நடுவர் மன்றத்தலைமை நீதிபதி இம்"மோதல்' கொலை பற்றியவிசாரணையை எஸ்.பி.தமங் என்ற அகமதாபாத் பெருநகர நீதிபதியிடம் ஆகஸ்டு 12, 2009 அன்று ஒப்படைத்தார்.

 

இம்"மோதல்' பற்றிய விசாரணையை 25 நாட்களுக்குள் நடத்தி முடித்த நீதிபதி எஸ்.பி.தமங், தனது அறிக்கையில், ""இம் மோதல் போலியானது; இப்போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹனும், ஜாவேத் ஷேக்கும் லஷ்கர் இதொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கிடையாது; இப்போலி மோதலில் சம்மந்தப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த நால்வரும் ஜூன் 15, 2004 அன்று அதிகாலை 4 மணிக்கு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த நால்வரி ன் உடல்களும் அன்று மதியம் 3.40 மணிக்குப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நால்வரின் உடல்களும் அதிக விறைப்புத் தன்மையுடன் காணப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இறந்து போன ஒருவரின் உடல் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துத்தான் விறைக்கத் தொடங்கும். இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, போலீசார் கூறுகிறபடி அவர்கள் அதிகாலை 4 மணிக்கு இறந்து போயிருந்தால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு உடல் விறைத்துப் போயிருக்காது; எனவே, அந்த நால்வரும் அதிகாலை 4 மணிக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும்.

 

அந்த நால்வரின் உடல்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் உள்ளே நுழைந்தபொழுது ஏற்படுத்திய வடுக்களின் அளவைவிட வெளியேறியபொழுது ஏற்படுத்திய வடுக்களின் அளவு பெரிதாக இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த நால்வரும் மிகவும் அருகாமையில் இருந்தே சுடப்பட்டிருக்க வேண்டும்; மேலும், அவர் கள் உட்கார்ந்த நிலையிலேயே சுடப்பட்டிருக்க வேண்டும்.

 

இறந்து போன நால்வரில் ஜிஷன் ஜோஹரும், அம்ஜத்அலிரானாவும் பாகிஸ்தானியர்கள் என்றும் அதற்கு ஆதாரமாக
அவர்களது அடையாள அட்டைகளும் போலீசாரால் காட்டப்பட்டுள்ளன. அவர்கள் பாகிஸ்தானியர்களாக இருந்தால், அடையாள அட்டைகளில் காணப்படும் அவர்களது பெயர்கள் உருது மொழியில் இருந்திருக்க வேண்டும்; மாறாக, அப்
பெயர்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன. எனவே, இந்த அடையாள அட்டைகள் போலியானவை என்று ஏன்
சொல்ல முடியாது?

 

இப்படிபட்ட முரண்பாடுகளைத் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கும் நீதிபதி தமங், இந்த நால்வரின் சாவு பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் இது போலி மோதல் கொலை என்றும், அந்த நால்வரும் திட்டமிடப்பட்ட முறையில், இரத்தத்தை உறைய வைக்கும் இரக்கமில்லா வகையில், கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.


 ···

 

நரேந்திர மோடியைப் பொருத்தவரையில் இந்த விசாரணை அறிக்கை கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போலாகிவிட்டது. அதனால், ""நீதிபதி தனது வரம்புகளை மீறிச் செயல்பட்டுள்ளார்; இச்சம்பவத்தோடு தொடர்புடைய போலீசு அதிகாரிகள், தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்; நீதிபதியால் 25 நாட்களுக்குள் எப்படி விசாரணையை நடத்தி முடிக்கமுடிந்தது? அரசின் ஒப்புதல் இன்றி விசாரணை அறிக்கை எப்படி வெளியானது? நீதிபதி விசாரணை அறிக்கையைத் தட்டச்சுசெய்யாமல், கையால் எழுதியது ஏன்?'' என்பன போன்ற குதர்க்கமான கேள்விகளை எழுப்பி, இந்த விசாரணையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த முயல்வதோடு, குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூலம் இந்த அறிக்கைக்குத் தடையும் பெற்றுவிட்டார், மோடி. இஷ்ரத் ஜஹனின் தாயாரும், ஜாவேத்ஷேக்கின் தந்தையும் இத்தடையை நீக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

குஜராத் அரசு கேட்டுக்கொண்டபடி இந்த விசாரணை அறிக்கையினைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, இவ்விசாரணை தொடர்பாக நீதிபதி தமங்கின் நடத்தையையும் விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது, குஜராத் மாநில உயர்நீதிமன்றம். மோடியே மறு அவதாரம் எடுத்து நீதிபதியாக உட்கார்ந்திருப்பார் போலும்! கடந்த ஐந்தாண்டுகளாக இப்போலி மோதல் கொலை பற்றி விசாரணை நடத்தாமல் இழுத்தடிந்து வந்த மோடியின் நடத்தையைப் பற்றி சந்தேகிக்காத நீதிமன்றம், இவ்விசாரணையைத் துணிந்து நடத்திய நீதிபதி தமங்கின் நடத்தையைச் சந்தேகிப்பது வினோதமானது.

 

25 நாட்களுக்குள் எப்படி விசாரணை நடத்தி முடிக்கலாம்? என்ற கேள்வியின் பின்னுள்ள தீய நோக்கத்தை புளி போட்டு விளக்கத் தேவையில்லை.

 

எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் பத்தொன்பதே வயதான இஷ்ரத் ஜஹனையும், மற்ற மூவரையும் சுட்டுத்தள்ளிக் கொன்ற போலீசு அதிகாரிகள், தங்கள் தரப்பு நியாயங்களை நீதிபதி தமங் கேட்கவில்லை எனக் குற்றம் சுமத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல, வக்கிரமானதும்கூட!

 

அரசின் ஒப்பதல் இன்றி விசாரணை அறிக்கை கள்ளத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தும் மோடி அரசு, இதற்கு நீதிபதி தமங்கும் உடந்தையாக இருக்கலாம் எனச்சந்தேகிக்கிறது. தமக்கும் அறிக்கை வெளியானதற்கும் தொடர்பு கிடையாது எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார், நீதிபதி தமங். அப்படியே அவருக்கு அறிக்கை வெளியானதில் தொடர்பு இருந்தால்கூட, அதனைக் குற்றமாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால், இப்படிபட்ட அறிக்கைகளுக்கு அரசு என்ன மரியாதை தரும் என்பது இந்திய மக்களாகிய நாம் அறியாத ஒன்றல்ல!

 

குஜராத் உயர்நீதி மன்றம் இக்கொலைகள் பற்றி விசாரிக்க மூன்று போலீசு அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, அக்குழு நவம்பர் மாதத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டிருக்கும்பொழுது, நீதிபதி தமங் ஏன் வேகவேகமாக விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என்ற கேள்வியை இந்து மதவெறிக் கும்பல் எழுப்பி வருகிறது.

 

நீதிபதி தமங் இப்படுகொலைகள் பற்றிய விசாரணையை யாருக்கு தெரியாமல் இரகசியமாக நடத்தவில்லை. குஜராத் உயர்நீதி மன்றத்திற்கும் தெரிந்துதான் இவ்விசாரணையை அவர் நடத்தி வந்தார். இன்னும் சொல்லப்போனால், உயர்நீதி மன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்க என்றைக்கு உத்தரவிட்டதோ, அன்றுதான் நீதிபதி தமங் தனது விசாரணையைத் தொடங்கினார். அப்பொழுதே அவ்விசாரணையைத் தடுக்காத நீதிபதிகள், மோடிக்கு விசுவாசமான போலீசு அதிகாரிகளைக் குற்றம் சுமத்தி விசாரணை அறிக்கை வெளிவந்த பிறகு அதற்குத் தடை விதிக்கிறார்கள் என்றால், தங்களது வறட்டுக் கௌரவத்திற்காக நீதி கிடைப்பதைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்!

 

நீதிபதி தமங் மோடிக்கு எதிரானவர் என்ற சித்திரத்தை உருவாக்குவதன் மூலம், அவரது விசாரணையின் முடிவுகளைக் கட்டுக்கதை என நிரூபித்துவிட முயலுகிறது, இந்து மதவெறிக் கும்பல். நீதிபதி தமங் பற்றிய இந்து மதவெறிக் கும்பலின் அவதூறு உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்து மதவெறிக் கும்பலின் சித்தாந்தத்திற்கு அனுசரணையாக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறாரே பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், அவர் கூட இம்மோதல் கொலை பற்றிய உண்மைகளைப் புட்டு வைத்திருக்கிறார்.

 

""மோடியைக் கொல்ல சில முசுலீம் தீவிரவாதிகள் முயலுகிறார்கள் என்ற இந்த நாடகத்தையே மைய அரசின் புலனாய்வுப் பிரிவு போலீசார்தான் உருவாக்கியதாகவும்; இந்நாடகத்திற்கு லஷ்கர்இதொய்பாவிற்கு ஆதரவாக இருந்துவரும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞரைப் புலனாய்வுப் பிரிவு பயன்படுத்திக் கொண்டதாகவும், அந்த வழக்குரைஞர் மூலம்தான் புனேயைச் சேர்ந்த ஜாவேத் ஷேக்கை அகமதாபாத்திற்கு வரவழைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும்'' பிரவீண் சுவாமி 2004 ஆம் ஆண்டு ஃபிரெண்ட் லைன் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

இப்படியாக, மோடியின் போலீசு நடத்திய இந்தக் கொலையில் காங்கிரசுபங்காளியாக இருந்துள்ளது. ஆனால், தமங்கின் அறிக்கை வெளியானவுடன், தனது "மதச்சார்பின்மை' கபட வேடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தனக்கும் அப்படுகொலைகளுக்கும் சம்மந்தமில்லை என முதலைக் கண்ணீர் வடிக்கிறது, காங்கிரசு. இன்னொருபுறம், காங். கூட்டணி அரசு அந்த நால்வரையும் லஷ்கர் இதொய்பா ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சுமத்தி குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, மோடி க்கு முட்டுக் கொடுக்கிறது .

 

இஷ்ரத் ஜஹன், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட நால்வரும் மும்பய் நகரில் இருந்து குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்; இப்படுகொலையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போலீசாருக்குப் பங்குண்டு எனப் பல்வேறு அமைப்புகளும் சுட்டிக் காட்டி வருவதோடு, இதற்கு ஆதாரமாகப் பல சான்றுகளை முன்வைத்து வருகின்றனர்.

 

சோராபுதீன் என்ற முசுலீமை ஹைதராபாத் நகரில் இருந்து கடத்தி வந்து, போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, தீவிரவாதியை மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய, மோடிக்கு நெருக்கமான வன்சாரா என்ற போலீசு அதிகாரிதான் இந்தக் கொலையிலும் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். எனவே, சோராபுதீன் படுகொலையைப் போலவே இதுவும் போலி மோதல் கொலையாகத்தான் இருக்கக்கூடும் என நம்புவதற்கு இடமுண்டு.


···

 

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் குஜராத் இந்துக்களுக்கு எதிரான குற்றச்சாட்டாக ஊதிப் பெருக்கி வரும் மோடி, அந்த விஷமத்தனத்தை இந்த வழக்கிலும் கையாண்டு வருகிறார். எல்லா மாநிலங்களிலும் போலி மோதல் கொலைகள் நடந்துவரும்பொழுது, குஜராத் மட்டுமே குறி வைத்துத் தாக்கப்படுவதாக இந்தக் குள்ளநரி ஊளையிட்டு வருகிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த பலரையும் மோடியின் இந்த விஷமத்தனம் பிடித்தாட்டி வருகிறது. ஆனால், இஷ்ரத் ஜஹன் உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு கடந்த ஐந்தாண்டுகளாக விசாரணை என்ற கட்டத்தைத் தாண்டாமலேயே வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையில் இருந்தே, மோடியும் அவரது குஜராத்தும் குறிவைத்து வேட்டையாடப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தவொரு பகுதியில் மோதல் கொலை நடந்தாலும், அது பற்றி நீதிமன்றங்களோ, தேசிய மனித உரிமை கமிசனோ öராம்பவும் அலட்டிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. 1993 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை கமிசன் உருவாக்கப்பட்ட பிறகு, அக்கமிசனிடம் 1,262 போலி மோதல் கொலைகள் நடந்திருப்பதாக பொதுமக்களும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புகார் அளித்துள்ளன. போலீசு நிலையத்தில் நடக்கும் கொட்டடிக் கொலைகள் இந்தக் கணக்கில் வராது என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 1,262 புகார்களில் வெறும் 11 புகார்களைத்தான் தேசிய மனித உரிமை கமிசன் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

 


தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 70 "மோதல்' கொலைகள் நடந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 600 "மோதல்' கொலைகள் நடந்துள்ளன. ஆந்திராவில் கடந்த பத்தாண்டுகளில் 1,800 "மோதல்' கொலைகள் நடந்துள்ளன. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த இருபதாண்டுகளில் 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும், இவர்களுள் பெரும்பாலோர் "மோதல்' கொலைகளின் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்கும் மேலாக, காஷ்மீரிலும், மணிப்பூர், நாகலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும் மோதல் கொலைகளை நடத்தும் இராணுவச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

 

இராணுவத்தினரால், போலீசாரால் "மோதல்' கொலைகளின் மூலம் கொல்லப்படுபவர்கள் அனைவருமே சமூகவிரோதிகள் கிடையாது. கொல்லப்பட்டிருப்பவர்களுள் பெரும்பாலோர் நக்சல்பாரி புரட்சியாளர்கள், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பாவி முசுலீம்கள்தான்.

 

போலி மோதல் கொலைகளைத் தடுப்பதற்காக ஆயிரத்தெட்டு அறிவுரைகளை மாநில அரசுகளுக்கு அவ்வப்போது வழங்கி வரும் தேசிய மனித உரிமை கமிசன், அந்த அறிவுரைகளைத் தானே கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பட்லா ஹவுஸ் என்ற இடத்தில் நடந்த போலி மோதல் கொலை விசாரணையில் போலீசாருக்குச் சாதகமாகவே தீர்ப்புச் சொன்னது, தேசிய மனிதஉரிமை கமிசன். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசின் ஆதரவு பெற்றசல்வா ஜூடும் என்ற கூலிப்படை நடத்திய படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் விசாரிக்கும் பொறுப்பை போலீசாரிடமே ஒப்படைத்து, மனித உரிமை என்பதனையே கேலிக்கூத்தாக்கியது.

 

தேசிய மனித உரிமை கமிசனைப் பொருத்தவரை சட்டப்படி நடக்கும் மோதல்கள் அனைத்தும் நியாயமானதுதான். ஆனால், மனித உரிமைகளுக்காகப் போராடி அமைப்புகளோ, போலி மோதல் கொலையைக்கூட போலீசார் சட்டப்படி நடந்த மோதலாகக் காட்டித் தப்பித்துக் கொள்ளும் அபாயத்தைச் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

 

"மோதல்' கொலைகள் நடக்கும்பொழுது, போலீசாரைத் தாக்க வந்ததாகக் கொல்லப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு
செய்து அப்பிரச்சினைக்கு மங்களம் பாடிவிடுகிறது, அரசு. இதற்குப் பதிலாக, "மோதல்' கொலைகளை நடத்திய போலீ
சார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

 

ஆந்திராவில் மனித உரிமை அமைப்புகள் பல ஆண்டு களாக நடத்தி வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஆந்திர
மாநில உயர்நீதி மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில் மனித உரிமை அமைப்புகளின் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. ஆனால், ஆந்திர மாநில போலீசார் சங்கம், இத்தீர்ப்பினால் போலீசாரின் மனவுறுதி குறைந்துவிடும் எனக் கூறி உச்சநீதி மன்றத்தில் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ததையடுத்து, இத்தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துவிட்டது.

 

போலீசாரின் சட்ட விரோதமான அத்துமீறல்களை எதிர்க்கும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் "மோதல்' கொலைகளைத் தனிப்பட்ட போலீசு அதிகாரிகளின் தவறாகவும், ஆளும் ஓட்டுக்கட்சிகளைத் திருப்தி செய்வதற்காக சில தனிப்பட்ட போலீசார் ஈடுபடும் அவசரக்குடுக்கைத்தனமாகவும் சித்தரிக்கின்றனர். நீதிபதி தமங்கூட, தனது விசாரணை அறிக்கையில் அகமதாபாத் மோதல் கொலைகளைப் பதவி உயர்வுக்காகவும், குஜராத்தை ஆளுபவர்களைத் திருப்தி செய்வதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் சித்தரிக்கிறார். இது முழு உண்மை கிடையாது.

 

மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகவும், இந்து மதவெறி பாசிசத்திற்கு எதிராகவும் நாடெங்கிலும் போராட்டங்கள் வீறுகொண்டு எழத் தொடங்கியுள்ளன. அப்போராட்டங்களை, மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில், ஜனநாயக வழிகளில் தீர்க்க விரும்பாத அரசு, அப்பிரச்சினைகளைத் துப்பாக்கி முனையில்தான் சந்திக்கிறது. மக்களைப் பயமுறுத்தி, அவர்கள் போராடுவதைத் தடுப்பது என்ற வகையில்தான் போலி மோதல் கொலைகள் ஆளும் கும்பலின் ஆசிர்வாதத்தோடு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசு பாசிசமயமாகிவருவதன், போலீசு ராஜ்ஜியமாகி வருவதன் அறிகுறி தான் "மோதல்' படுகொலைகள்.


· செல்வம்