கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் @ஜ.ஜார்ஜ், தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை' , "பேராபத்து' என்று அலறுகிறது.
தொழிலாளர்களை வன்முறையாளர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைச்சர்களோ, தொழிலாளர்களின் வன்முறைப்போக்கை நசுக்கப்போவதாக முதலாளிகளின் அடியாட்களைப் போலப் பேசுகின்றனர். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக பிரிக்கால் தொழிற்சங்க முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளனர். கோவை நகரமே கலவர பூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிரிக்கால் ஆலையைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனமாக விரிவாக்கி வளர்க்கும் நோக்கத்தோடு, அதீத உற்பத்தி இலக்கு வைத்து தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். இந்த ஆலையில் ஏற்கெனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும், அவை துரோகத்தனத்தில் இறங்கி, முதலாளி விஜய்மோகனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போயின. எனவே, கடந்த 2007ஆம் ஆண்டில் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தைத் தொடங்கினர். அன்று முதல் தொழிலாளர்கள் மீது அதிகரித்து வரும் கொடுமைகள் அடக்குமுறைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்சநஞ்சமல்ல. கொத்துக்கொத்தாக வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தொழிலாளர்களின் புதிய தொழிற்சங்கத்தை கடந்த மூன்றாண்டுகளாக அங்கீகரிக்க மறுத்ததோடு, தொழிலாளர் ஆணையர் முதல் உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் போட்ட எல்லா உத்தரவுகளையும் ஆலை நிர்வாகம் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது.
தொழிலாளர்களையும் சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது; அடியாட்களை வைத்துத் தாக்குவது; கருங்காலிகளை உருவாக்கி, தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைப்பது; வேலைநீக்கம் செய்தும் சம்பளத்தை மறுத்தும் தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பது; உற்பத்தியைப் பெருக்க பெண் தொழிலாளிகளை மிரட்டி கட்டாயமாக ஓவர்டைம் செய்ய வைப்பது; 14 ஆண்டுகளாக இந்த ஆலையில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் தினக்கூலிகளாக வைத்துச் சுரண்டுவது; தொழிலாளர் ஆணையர் உத்தரவுகளை அலட்சியப்படுத்திவிட்டு அடக்குமுறைகளைத் தொடருவது எனக் கணக்கற்ற அட்டூழியங்களைச் செய்து வந்த பிரிக்கால் நிர்வாகத்தின் கொடூரங்களைத் தாங்க முடியாமல் தொழிலாளர்கள் திருப்பித் தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாகச் செயல்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் ஜே.ஜார்ஜ் மாண்டு போயுள்ளான்.
இதற்காக வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதுமில்லை.
தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதும் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதும் பிரிக்கால் ஆலையில் மட்டும் நடக்கும் அதிசயம் அல்ல. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் கூடாது என்பதிலிருந்து, தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என்பது வரை தொழிற்சங்க உரிமைகள் அனைத்தையும் பறிக்கக் கோருகிறது உலகமயமாக்கம். இதற்கு ஏற்றாற்போல தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தொழிற்சங்கமே அமைக்க முடியாதபடி சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
உலகமயமாக்கம் என்ற பெயரில், நாட்டின் தொழிலையும் வர்த்தகத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் எல்லா ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு இத்தகைய முதலாளித்துவபயங்கரவாதம் கோரத் தாண்டவமாடுகிறது. கடந்த மாதத்தில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக இரு விமானிகளை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். அந்நிறுவனத்தின் முதலாளியான நரேஷ் கோயல், மேலும் சில ஊழியர்களை வேலைநீக்கம் செய்து எச்சரித்ததோடு, தொழிலாளர்களைப் ""பயங்கரவாதிகள்'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினான். தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 188 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்தது, ஹ_ண்டாய் நிறுவனம். சென்னை அருகே, நெல்காஸ்ட் ஆலையில் விபத்தில் மாண்டுபோன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப்பிணமாக தெருவில் வீசியெறிந்ததை எதிர்த்துப் போராடிய குற்றத்திற்காக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து மிரட்டியது ஆலை நிர்வாகம். பொன்னேரியிலுள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையில் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது, அந்த ஆலை நிர்வாகம். கோவையில் உள்ள சீறீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் ஆலையில் பீகாரைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் எவ்வித உரிமையுன்றி கொத்தடிமைகளாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கொடுமை, கடந்த செப்.28ஆம் தேதி வெளிவந்து நாடே அதிர்ச்சியடைந்தது.
தமிழகம் மட்டுமல்ல, நாடெங்கும் உலகெங்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம் தொழிலாளர் வர்க்கத்தை கசக்கிப் பிழிவதும், பொருளாதாரச் சரிவைக் காரணம் காட்டிப் பல்லாயிரக்கணக்கானோரை வேலைநீக்கம் செய்து பட்டினிச்சாவுக்குத் தள்ளுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. இவற்றுக்கெதிரான தொழிலாளர் போராட்டங்கள், குர்கான் வழியில் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகின்றன. பாசிச அடக்குமுறைச் சட்டங்கள் ஏவிவிடப்படுகின்றன. உலகமயமாக்கத்தின்கீழ் எங்கெல்லாம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் ஏவப்படுகின்றனவோ, அங்கெல்லாம் குமுறும் தொழிலாளர்கள், சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் தன்னெழுச்சியாக எதிர்த்தாக்குதல்களை நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று நொய்டாவிலுள்ள இத்தாலியைச் சேர்ந்த கிராசியானோ எனும் கார் உதிரிப்பாக உற்பத்திக் கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான். உலகின் மிகப் பெரிய இரும்பு எஃகு நிறுவனமான அர்சிலர் மித்தல் நிறுவனத்தின் லக்சம்பர்க் தலைமை நிர்வாக அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கடந்த மே 12ஆம் தேதியன்று அடித்து நொறுக்கி நாசப்படுத்தினர். பிரான்சு நாட்டின் டவுலோசிலுள்ள மோலெக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் அதன் தலைமை நிர்வாக இயக்குனரை நடுத்தெருவில் ஓட ஓட அடித்துத் துவைத்துள்ளனர். கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று சீனாவின் ஜிலின் நகரிலுள்ள டோங்குவா இரும்பு எஃகு ஆலையின் நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் அடித்தே கொல்லப்பட்டான். அன்றாடம் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ பயங்கரவாதம் ஏவி வரும் கொடூரங்களின் எதிர்விளைவுகள்தாம் இவை.
இந்நிலையில், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிரான பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் ஒடுக்கப்பட்டால், இனி வரும் நாட்களில் எந்தவொரு தொழிலாளர் போராட்டமும் மிருகத்தனமாக நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களின் உழைக்கும் மக்களின் உடனடிக் கடமை. ஆனால் போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்களோ, முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு பிரிக்கால் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதலை ""வன்முறை'' என்று ஊளையிடுகின்றன. தர்ணா, மறியல், மொட்டையடித்து நாமம் போட்டு ஊர்வலம் என்ற வழக்கமான தொழிற்சங்க செக்குமாட்டுப் பாதையில், "அமைதியானஜனநாயக வழியில்' போராடச் சொல்லி தொழிலாளர்களுக்கு உபதேசம் செய்கின்றன. இத்தகைய துரோகத் தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், முதலாளித்துவ பயங்கரத்தை வீழ்த்தும் ஆற்றல் பெற்ற புதிய, புரட்சிகரமான சங்கத்தைக் கட்டியமைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.
இன்றைய உலகமயமாக்க சூழலில், முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடும் சூழலில், வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராடினால் தான், இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராடினால்தான், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் தடுத்து நிறுத்த முடியும். உலகமயச் சூழலில் இத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையும், மாறிய சூழலுக்கு ஏற்ப புதிய போராட்ட முறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். குறுகிய தொழிற்சங்கவாத வட்டத்திற்குள் முடங்கி விடாமல், இத்தகைய அடக்குமுறை உரிமை பறிப்புகளுக்கு அடிப்படையாக உள்ள மறுகாலனியாக்கத்தை எதிர்த்து அரசியல் போராட்டங்களைக் கட்டியமைப்பதே, இன்று தொழிலாளர் இயக்கத்தின் முன்னுள்ள உடனடிப்பணி.