இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான்.

இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் புசத்தினான். அவன் ஒவ்வொரு தடவையும் காலைப்போட இவனுக்கு அரையில கிடக்கிற சாரம் கழண்டு போடுமோ என்று சீவன் போனது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுது என்றது இதைத்தானோ என்று இவன் நினைத்துக்கொண்டான். எப்பவாவது கண்ணயர்ந்து போக தீபன்ரை கால்பட்டு சாரங்கழண்டு விட்டால் உள்ளை அறைக்குள்ளை படுத்திருக்கின்ற யாழினியோ அவளின்ர அக்கா தமிழினியோ இல்லாட்டி இவோனோ ஆத்திரமவசரத்திற்கு வெளிய போகேக்கை கோலத்தைக் கண்டால் என்னாகிறது என்ற கலக்கமே நித்திரை போனாலும் பரவாயில்லை. கற்பு முக்கியம் என்று இவனை யோசிக்க வைத்தது. அதிலும் அவளவை ஒராளுக்கு வந்தாலும் துணைக்கு ஒன்பது பேரைக் கூட்டிக்கொண்டு போறவளவை. பிறகு பப்ளிக் சோ ஆகிடும். இவனுக்குச் சாரங்கட்டிப் பழக்கமில்லை. அதுக்குப் பதினெட்டு வயசாகோணும் என்ற விதியை இவனுக்கு யார் சொன்னார்களோ தெரியா. காற்சட்டைதான் போடுவான். இல்லாட்டி ரன்னிங் சோர்ட்ஸ். விதிப்படி பார்த்தால் இவன் கொடிகாமத்துக்கு ரன்னிங் சோர்ட்ஸ்ஸோடுதான் ஓடி வந்திருக்க வேணும். சுழிபுரத்திலயோ பொன்னாலையிலோ எங்கேயோ ஒரு பள்ளிக்கூடத்தில ஒன்னியமாக்ஸ் கெட் ரெடி என்பதற்குப் பதிலாக கொப்பர் கொதியில வாறார் ஓடு என்றுதான் சொல்கிறார்கள் என்று செத்துப்போன ஆனந்தன் அண்ணை இவனுக்குச் சொல்லியிருக்கிறார். அன்றைக்கும் அப்பிடித்தான் சொன்னார்கள். ஆமிக்காரன் கொதியில வாறான் ஓடு.. கந்தசஸ்டிக்கு பெரியம்மாட்டைப்போயிருந்தவன் அங்கிருந்தே ஓடத்தொடங்கினான் அந்த ஒரு காற்சட்டையோடு. அரியாலைக்குள்ளை மழையில தோய்ஞ்சு நாவற்குழி உப்புத்தண்ணியில நனைஞ்சு அதே உப்புத்தண்ணிக்குள்ளை ஆபத்துக்குப் பாவமில்லையென்று இன்னொரு உப்புத்தண்ணியிலும் நனைஞ்சு சாவகச்சேரி வெயிலில் காய்ந்தும் போயிருந்தது காற்சட்டை. அன்றிரவு ரவியண்ணை சாரம் தந்தார்.

 

000


காரைதீவிலிருந்து சனங்கள் பொன்னாலைப்பாலத்திலும் பாலத்திற்கு கீழை இறங்கித் தப்புத்தண்ணிக்குள்ளாலும் ஓடிவந்து கொண்டிருந்தபோது பத்மாக்கா சும்மா கிடந்த தன் வளவுக்குள் அவசர அவசரமாக ஆட்களைப்பிடித்து மிளகாய்த்தோட்டம் செய்து கொண்டிருந்தா.

75_npadvsinglephoto
“அம்மா இந்த மண் செடிக்குச் சரிவராது” என்று நிலம்கொத்தின ராசு சொல்லவும் “நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று பத்மாக்கா சொன்னாவாம்.


சனங்கள் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவசரத்துக்குத் தங்கினர். பூதராசி கோயில் பரிபாலன சபை ஆளொராள் “அகதி நாய்ச்சாதியள்.. இந்தப்பக்கமும் வரக்கூடாது” என்று துரத்திக்கலைத்ததாக அவர்களின் சின்னப்பெடியனொருவன் இவனுக்குச் சொன்னான். அவன் இவனிடம் விளையாட வந்தான். அவனுடைய பள்ளிக்குட நண்பர்கள் இவன் வீட்டிலிருந்தனர்.


“அகதிச் சாதியெண்டொன்று இருக்கோ” என்று அவன் கேட்டான். இவனுக்குத்தெரிய அப்படியொரு சாதி இல்லை. ஆனால் நாய்ச்சாதியெண்ட ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருக்கிறான்.

சும்மா கிடக்கிற வளவுகளில் இடம்பெயர்ந்த சனங்களை இயக்கம் இருத்துகிறதாம் என்ற கதைபரவியபோது பத்மாக்காடை புது மிளகாய்க்கண்டுகள் காய்ஞ்சு வாடிக் கருகிப்போயிருந்தன. இந்த முறை அவ வலு ட்ரிக்ஸா புது ஐடியாவொன்றைக் கண்டு பிடிச்சா. வளவு முழுதும் பனங்கிழக்குப் பாத்தியளை போட்டுவிட்டா. பிரேதங்களைப் புதைத்த மண்கும்பிகளாக பனங்கிழங்குப்பாத்திகள் வேலிக்குள்ளால் தெரிந்தன. பனங்கொட்டைகள் கிழங்குகளாக எத்தினை நாளாகும் என்று இவன் அப்பம்மாவிடம் கேட்ட அடுத்தநாள் பத்மாக்கா சன்னதம் கொண்டு ஆடினா.


“எளிய அகதி நாயள்தான் வேலியைப்பிடுங்கிக்கொண்டு போயிருக்குதுகள். கள்ளச்சாதி. அடுப்பெரிக்க என்ரை வேலிக் கருக்குமட்டைதான் கிடைச்சதோ உதுகளுக்கு.. பூதராசி அம்மாளே உந்தக் கேடுகெட்டதுகள் புழுத்துப்போகோணும்..” என்று மண்ணள்ளித்திட்டினா அவ.


“ஆரோ ஏலாக்கொடுவினையில ரண்டு கருக்குமட்டையை எடுத்துக்கொண்டு போனதுக்கு உவள் பத்மா ஆடுற ஆட்டத்தைப்பார்” என்ற இவனின் அப்பம்மா பத்மாக்காவோடு பேச்சுப் பறைச்சலை விட்டு கனநாளாகியிருந்தது. பத்மாக்கா கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணி இப்ப படலையடிக்கு வந்திருந்தா.


“இஞ்சையும் கொஞ்சக் காசைக்கண்டதுகள் தலைகால் தெரியாமல் ஆடுதுகள். இதுகள் அதுகளுக்கு அண்ட இடங்கொடுக்கிறதாலதான் அதுகள் தலைக்கு மேலை ஏறி ஆடுதுகள். இனி ஆரும் வேலியில கை வைக்கட்டும் அடிச்சு முறிப்பன்.”

 

இரவு இவனின் சித்தப்பா பத்மாக்கா வீட்டுக்குப்படலையடியில் நின்று “பத்மாக்கா வெளியில வாங்கோ கதைக்கோணும் ” என்றார். பத்மாக்கா வரவில்லை. படலையில் சடார் புடார் என்று சித்தப்பா தட்டினார். “பத்மாக்கா வெளிய வரப்போறியளோ இல்லையோ” பத்மாக்கா வரவில்லை. “பத்மா.. “என்றவரை அம்மாவும் அப்பம்மாவும் கொற கொற என்று இழுத்துக் கொண்டுவந்தார்கள்.


“இவனுக்கார் காலமைச்சண்டையைச் சொன்னது” என்று அவர்களிருவரும் புடுங்குப்பட்டார்கள். இந்தமுறையும் பத்மாக்கா சித்தப்பாட்டை முறையா வாங்கினா என்ற செய்திக்காக இவன் காத்துக்கொண்டிருந்தான். அடுத்தநாள் காலை ரண்டு இயக்கப்பெடியள் வந்து பத்மாக்காவை விசாரித்தார்களாம். “ச்சீச்சீ.. அப்பிடியொண்டுமில்லைத் தம்பியவை. நான் பொதுவாத்தான் சொன்னனான்.” என்று அவ சொன்னாவாம்.


“சரியம்மா இனிமேல் முறைப்பாடுகள் கிடைக்காத மாதிரி நடந்துகொள்ளுங்கோ” என்று வெளிக்கிட்டவர்களை “தம்பியவை பனங்கிழங்கு போட்டிருக்கிறன். கிழங்கு புடுங்கேக்கை வாங்கோ. உங்களுக்குத்தான்” என்று பத்மாக்கா சொன்னாவாம். அவ பனங்கிழங்குகளைப் பிடுங்கி கொஞ்சக்காலம் வளவு சும்மா கிடந்தது. திடீரென்று ஒருநாள் பத்மாக்கா ஆட்களை வைத்து மூன்றடிக்கு ஒன்றென வாழைக்குட்டிகளை வளவுமுழுவதும் நட்டா. மாதகலில் இருந்து சனங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.

 

0 0 0

 

ரவியண்ணை வீட்டையும் பனங்கிழங்குப் பாத்தியோ அல்லது வாழைத்தோட்டமோ இருக்கலாம் என்று இவன் அவரது கேற்றடியில் நின்று யோசித்தான். அதுக்கு முதல் இனி எங்கை போறதென்று கைதடிப்பிள்ளையார் கோயிலில் வைத்து தீபனின் அம்மா ஐயாத்துரை மாஸ்ரரைப் பார்த்தா. ஐயாத்துரை மாஸ்ரர் இவனைப்பார்த்தார். இவன் அம்மாவைப் பார்த்தான். அம்மா அப்பதான் தற்செயலா எட்வேட் அங்கிளைப்பார்த்தா. அவர் ஒரு வேதக்காரர். முப்பது நாப்பது வருசத்துக்கு முதல்லை அவையளும் சைவம்தானாம் என்று அப்பம்மா சொல்லியிருக்கிறா.
“ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். ஆட்களையாள் மாறுப்பட்டாலும் எல்லாரும் கொடிகாமம் சந்தி பஸ் ஸ்ரான்டுகளில நில்லுங்கோ.. எல்லாம் சமாளிக்கலாம்.” என்றார் எட்வேட் அங்கிள்.


“இல்லையண்ணன் எங்களோடை வேறையும் ரண்டு குடும்பமும் நிக்குது.. ” என்றா அம்மா. அவர் சொல்லப்போகிற பதிலுக்காக ஐயாத்துரை மாஸ்டர் ஏக்கத்தோடு நிற்பதாக இவனுக்குப்பட்டு அது கஸ்ரமாயிருந்தது.


“ஓம். முதல்லை இண்டைக்கிரவு எல்லாரும் காலாற வேணும். அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறன். நீ கூட்டியா எல்லாரையும். பிறகு பாப்பம்.”


சாவகச்சேரியடியில் அப்பம்மா சாந்தாக்காவைக் கண்டா. அவ பிள்ளைத்தாச்சியா இருந்தா. ஒரு கட்டட தாழ்வாரத்தில் அவ காலைநீட்டி முதுகைச்சரித்து இருந்ததைக் கண்டுட்டு துடிச்சுப்பதைச்சு அப்பம்மா அவவுக்குப்பக்கமா ஓடிப்போனா. “கடவுளே.. வயித்தைப்பாத்தா இண்டைக்கோ நாளைக்கோ எண்டமாதிரிக் கிடக்கு. ஏனடி பிள்ளை தனிய வெளிக்கிட்டனியள்?” என்று சும்மா கேட்கவேண்டிய கடமைக்காக அவ கேட்டா. ஏனென்றால் சாந்தாக்காவும் புருசனும் ஊரில் தனியத்தான் இருந்தார்கள். சொந்த இடம் தெரியா. ஆனால் மூன்றோ நாலு வருசத்துக்குமுதல் சாதி மாறி ஓடிப்போய் கல்யாணம் செய்ததால ரண்டு வீட்டுப்பகுதியும் அண்டுவதில்லையென்றும் சாந்தாக்காவின் அண்ணன் “அவளை வெட்டிப்போட்டுத்தான் தாடி எடுப்பன்” என்று தாடிவளர்த்துத் திரிகிறார் என்றும் இவன் கேள்விப்பட்டான்.


“நீ எழும்பி வா.. எங்களுக்குக்கிடைக்கிற திண்ணையில ஒரு துண்டு உனக்குத்தந்தால் ஒண்டும் குறையமாட்டம்.” என்றா அப்பம்மா. சாந்தாக்கா அங்கையிங்கையெனக் கையூன்றி கஸ்ரப்பட்டு எழும்பி சைக்கிள் கரியரைப் பிடிச்சுக்கொண்டு நடந்தா. அவவுக்குப் பின்னாலேயே ஒரு செக்கியூரிட்டி போல அப்பம்மா நடந்தா. வாறவழியில் நாவற்குழிக்கு கிட்டவாக றோட்டிலயே யாருக்கோ குழந்தை பிறந்ததாம். அதே றோட்டிலயே யாரோ கிழவி செத்தும்போனதாம். அங்கேயே கிடங்கு கிண்டிப் புதைத்தார்களாம். கொடிகாமம் சந்திக்கு வந்தபோது எடியே மேனகா உன்ரை கொய்யாவைக் காணேல்லையடியென்று ஐயாத்துரை மாஸ்ரரின் மனிசி ,ஐயாமாமி ஒப்பாரி வைச்சுக் கத்தத்தொடங்கினா.

இருட்டிவிட்டதாலும் றோட்டுமுழுக்க சனங்களால் நிரம்பியிருந்ததாலும் “தீபன்.. தீபன்” என்றும் “ஓம் ஓம்” என்றும் “பூரணமாச்சி பூரணமாச்சி” என்றும் “ஓம் பிள்ளை ஓம் பிள்ளை” என்று வோக்கிடோக்கியில கதைக்கிற மாதிரிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் அவர்கள் லைன் கட்டிப்போனார்கள். ஒருதடவை இன்னொரு தீபனும் ரண்டு தடவை வேற பூரணமாச்சிகளும் இந்த லைனுக்கை குரொஸ் ஆகப்பார்த்தார்கள். “ஐயா மாஸ்ரர்.. ஐயா மாஸ்ரர்..” என்று இவன் கத்தினான். “இஞ்சருங்கோ.. இஞ்சருங்கோ..” ஐயாமாமி கிட்டத்தட்ட அழுகிற நிலைக்கு வந்திருந்தா. “ஐயோ.. கடவுளே நான் என்ன செய்வன்.. அந்த மனிசனிட்டைத்தானே காசு நகை பாக்கும் வீட்டுக் காணி உறுதியும் கிடக்கு. படிச்சுப்படிச்சு சொன்னனான். பின்னாலேயே வாங்கோ எண்டு. அசுமந்தம் அசுமந்தம்.” ஐயாமாமி காணி உறுதிக்கும் நகைக்குமாகக் கத்துறாவா இல்லாட்டி புருசனுக்காக கவலைப்படுறாவா என்றொரு முடிவெடுக்கிறது இவனுக்கு கஸ்ரமாக இருந்தது.

கொடிகாமம் சந்தியில இயக்கம் காணாமற்போனவர்களைப்பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருந்தது. ஓய்வுபெற்ற அதிபர் ஐயாத்துரை அவர்கள் எங்கிருந்தாலும் இன்ன இடத்திற்கு வரவும் என்று அவர்கள் இரண்டுதரம் சொன்னார்கள். பிறகு அந்த தகவலை வோக்கிடோக்கி மூலம் சாவகச்சேரிக்கு அனுப்பினார்கள். ஓய்வு பெற்ற அதிபர் ஐயாத்துரையின் குடும்பத்தினர் கொடிகாமம் சந்தியில் அவருக்காக காத்திருக்கின்றனர் என்ற அறிவிப்பு சாவகச்சேரியில் கேட்டபோது ஒரு பஸ் ஸ்ரான்டில் நகையும் காசும் உள்ளை பையைச்சுற்றி கோவணத்திற்குள்ளும் வீட்டு உறுதியை தலைமாட்டிலுமாக வைத்து ஐயாத்துரை மாஸ்ரர் க்ர்… புர்.. என்று குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.

ரவியண்ணை எல்லோரையும் வரவேற்றார். அவருடை வீடு பத்மாக்காவின் வீடு போல பெரிசில்லை. நாற்சார் வீடுமில்லை. இவன்ரை கணக்குக்கு அங்கையொரு ஐம்பது பேர் இருந்தார்கள். “முதல்லை படுங்கோ எல்லாரும். மிச்சத்தைக் காலமை கதைக்கலாம்” என்றார் ரவியண்ணை. அவர் சாந்தா அக்காவுக்கு ஸ்பெசலா ஒரு கட்டில் ஏற்பாடு செய்து கொடுத்தார். இவனுக்கும் தீபனுக்கும் சாரம் தந்தார். இருபத்தியாறு மணிநேரம் தொடர்ந்து நடந்த களைப்பில் எல்லாரும் அடித்துப்போட்டமாதிரி நித்திரை கொண்டார்கள். அன்றைக்கு நித்திரை வராமல் இருந்ததென்றால் ஐயாமாமியும் இவனும்தான். அவவுக்கு நகையைப்பற்றியோ அல்லது புருசனைப்பற்றியோ கவலை. இவனுக்கு தீபன் காலைப்போட்டுப் படுத்தின ஆக்கினை. இடுப்பில தளர்ந்து தளர்ந்து கழருகிற சாரத்தைச் செருகியும் உருட்டியுமாக இரவு நகர்ந்தது. விடியப்புறம் ரவியண்ணன்ர மனிசி எல்லாருக்கும் சுடச்சுட கோப்பி கொடுத்தா.

 

0 0 0

 

பத்மாக்காவுக்கும் சித்தப்பாக்கும் ஒரு கோப்பியால்த்தான் சண்டை மூண்டது. பத்மாக்காவின் புளியமரம் சோனாவாரி மழையொன்றிற்கும் புசல் காற்றுக்கும் பாறிண்டு கிடந்த ஒருநாள்க்காலை அவ சித்தப்பாவைக் கூப்பிட்டா. “நேசேன்.. நேசேன்.. ஒருக்கா வாறியே..? ” பத்மாக்கா ஏற்கனவே வேறு ஆட்களையும் கூப்பிட்டிருந்தா. எல்லாருமாகத்தறித்து மரங்களைத் துண்டாக்கினார்கள். ஒரு மத்தியானநேரம் எல்லோரையும் கூட்டிக்கொண்டுபோய் பத்மாக்கா கோப்பி குடுத்தாவாம் சிரட்டையில. சித்தப்பா திடும்திடும் என்று வீட்டுக்கு வந்து விட்டார். பின்னாலேயே பத்மாக்காவும் வந்தா. “எளிய வடுவா, கோப்பி குடுத்தால் அதை என்ரை மூஞ்சையில ஊத்திட்டுப் போறீரோ..? உங்களுக்கெல்லாம் எப்ப வந்த கெப்பம்..? என்ரை புரியனுக்கு முன்னால வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு நடந்ததுகள் எல்லாம் இண்டைக்குத் தலையெடுத்துத் திரியுதுகள். ஐயோ என்ரை ராசா.. நீர் போன பிறகு ஒரு நாய்ச்சாதியும் என்னை மதிக்குதில்லை.. ” அந்த இடத்தில தன்ரை புருசனுக்காக ஒப்பாரியும் வைத்தழுகிற பத்மாக்காவின் மெதேட் இவனுக்கு வித்தியாசமாய்த்தான் இருந்தது. பதிலுக்கு யாரும் கதைக்கவில்லை. கொஞ்ச நேரம் கத்திய பிறகு “பூதராசி அம்பாளே.. உதுகள் புழுத்துப்போக” என்று விட்டு பத்மாக்கா போய்விட்டா. “என்ன இருந்தாலும் பத்மா அப்பிடிச் செய்திருக்கக் கூடாது. மூக்குப்பேணியிலயெண்டாலும் குடுத்திருக்கலாம்” என்ற அப்பம்மாவை சித்தப்பா திட்டினார். “உப்பிடியே கூழைக்கும்பிடு போட்டுச் செத்துப்போங்கோ” என்றவர் பிறகு இவனுக்குச் சொன்னார். “நான் அவவின்ர முகத்தில ஊத்தேல்லை. சிரட்டையோட நிலத்தில தான் ஊத்தினனான். ஆனா இப்ப யோசிக்கிறன். சுடச்சுட முகத்தில ஊத்தியிருக்க வேணும்.” அன்றிலிருந்து பத்மாக்கா இவர்களோடு பேச்சுப் பறைச்சலை விட்டா. கண்ட இடங்களில் காறித்துப்பினா. கன வருசத்துக்குப் பிறகு சித்தப்பா இயக்கத்துக்குப் போனபிறகு அவ காறித்துப்புவதை நிப்பாட்டினா. அதுக்கும் நாலைஞ்சு வருசத்துக்குப்பிறகு சித்தப்பா பஜிரோவில் வந்தபோது பத்மாக்கா வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாவாம். “நேசன் தம்பி நீரொருக்கா வீட்டுக்குச் சாப்பிட வரவேணும்” என்றும் சொன்னாவாம்.


“போராட்டம் எல்லாத்தையும் மாத்தும்” என்றார் சித்தப்பா. ஒருவேளை அப்பிடியும் இருக்குமோ என்று இவன் யோசிக்க வெளிக்கிட்டான்.

 

0 0 0

 

ரவியண்ணை வீட்டில் மேனகா சாமத்தியப்பட்டுவிட்டாள். ஐயாத்துரை மாஸ்ரர் ஓ வென்று அழுதது இவனுக்கு விசராக்கியது. “சனியனே சனியனே உனக்கு நேரம்காலம் தெரியாதோ.. இப்ப இது தேவையோ.. ? ஐயோ நான் என்ன செய்வன்” என்று மேனகாவின் முதுகில் ரண்டடி கொடுத்தவர் தன் தலையிலும் ரண்டடி கொடுத்து பலன்ஸ் ஆக்கினார். சாந்தா அக்காக்கு சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் பொம்பிளைப்பிள்ளை பிறந்தது. ரவியண்ணை வீட்டுக் கிணத்தடிக்கு மறைப்புத் தட்டியில்லையென்று யாழினி குளிக்கமாட்டேன் என்று சொன்னாள். ரொய்லெட்டுக்கு காலை நான்கு மணிக்கே பொம்பிளையாட்கள் கியூவில் நின்றார்கள். ஆம்பிளைகள் அங்காலை பத்தைகளைத் தேடினார்கள். கடைசி ரண்டு விசயத்திற்கும் இவனுக்கும் சம்பந்தமேயிருக்கவில்லை. முகத்தை அலம்புவதோடு இவனது காலை கடனே என்று முடிவுக்கு வந்தது. சும்மா வீடு மாறினாலே வரப்பஞ்சிப்படுகிற இன்னொரு கடன் இடத்தையே மாற்றியதால் வரமாட்டன் போடா என்றது. திண்மம் திரவமாகி திரவம் வாயு ஆகுவது விஞ்ஞானம்தானென்று ஒரு இரவு இவன் யோசித்தான். ஐயா மாஸ்ரரின் க்ர் புர் குறட்டைச் சத்தத்திற்கு பதிலடியாகத் தன்னிடமும் ஒரு புர்.. புர்.. இருக்குதென்று இவன் சிரித்துக்கொண்ட விடியக்காலமை ” என்ரை ராசாவெல்லோ.. என்னாலை தாங்க முடியேல்லை. மூக்கடைக்குது.. நான் கூட்டிக்கொண்டு போறன். அங்காலை பத்தேக்கை.. ஒருத்தரும் வரமாட்டினம். வேணுமெண்டால் நான்.. ஒருத்தரையும் அண்டவிடாமல் பாத்துக் கொள்ளுறன்.” என்ற ஐயாமாஸ்ரர் மண்வெட்டியும் ஒரு வாளித்தண்ணீரும் கொண்டு முன்நடந்தார். இவன் பின்னால் போனான். இப்படியாக அந்தப் பயங்கரம் முடிவுக்கு வந்தது.

சித்தப்பா நிசான் பஜிரோவில் வந்திருந்தார். NISSAN என்றதை நேசன் என எழுத்துக்கூட்டி இவனுக்குக் காட்டிய அதே பஜிரோதான். அதிலேறி ஒருநாளைக்கு ரியூசனுக்குப் போகவேண்டும் என்ற இவனின் விருப்பத்தை அவர் ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. அவர் தலையைக்குனிந்திருந்தார். “வன்னிக்குப் போறது நல்லம்” என்றார். “சனம் தங்களைப்பேசுறது உண்மைதான்” என்றவர் நியாயமும் தானென்றார்.


“ஒரு ரண்டு நாளுக்கு முன்னாலயாவது எங்களுக்கு நீ சொல்லியிருந்தா கொஞ்சம் ஆயத்தங்களோட வந்திருப்பமெல்லே” என்ற அப்பம்மாக்கு அவர் இப்பிடிப் பதில் சொன்னார். “எனக்கும் அண்டைக்கு இரவுதான் தெரியும். வெளிக்கிடப்போறம் என்று”


சித்தப்பா போக வெளிக்கிடும்போது “ரவியண்ணை மாதிரியான ஆட்களை எங்கடை போராட்டம்தான் உருவாக்கினது. சனங்களுக்கு வீடுகள் கொடுத்து வளவுகள் கொடுத்து எந்த வேற்றுமையும் பாராமல் நாங்கள் இனமென்ற ரீதியில ஒன்றுபட இந்த போராட்டம்தான் உதவினது.” என்றார். இவனுக்கு அது உண்மையாயிருந்தது. ரவியண்ணை வீட்டில மட்டுமில்லை இவன் வேறை எங்கையும் பனம்பாத்திகளைக் காணவில்லை. கைதடி கோயில் ஐயர் யாரையும் திரத்தவில்லை. எல்லாம் சரிதான். ஆனால் “இந்த இன ஒற்றுமையை உணர்த்த எத்தனை தடவை வேண்டுமானாலும் இடம்பெயரலாம்” என்று சித்தப்பா சொன்னதுதான் சொறிக்கதை என்று இவன் நினைத்தான்.

நான்காம் நாளும் விடிந்தது. காலம்பிறையே பாணுக்கு கியூவில நிற்கப்போய் கிபிர் சுத்த ஓடிவந்தபிறகு இவன் போகவில்லை. ஐயாமாஸ்ரர் இந்த மூன்று நாளில தன் வாத்தியார் புத்தியைப் பயன்படுத்தி தனக்குக் கீழை ஒரு குரூப்பை செற் பண்ணியிருந்தார். “எல்லாரும் வாருங்கோ பிள்ளையள்.. விறகு பொறுக்கியருவம்.. கிளம்புங்கோடி பாணுக்குப்போவம்” என்று அவர் ஒரு கொமாண்டரைப்போல இருந்தார். எரிச்சலாயிருந்தாலும் குரூப்பில இருந்த பெட்டைகளிற்காக இவன் தன்னையும் இணைத்துக் கொண்டான். “தம்பி டோய்.. இந்தா இந்த மூண்டு பெடியளையும் கூட்டிக்கொண்டு நீ உப்பிடியே மேற்கால போய் விறகு பெறுக்கு” என்று ஒருநாள் இவனை அவர் பிரித்தனுப்பினார். “ரண்டு பெட்டையளையும் போட்டுத்தந்தா குறைஞ்சோ போயிடுவியள்” என்று மனசுக்கை கறுவிய இவன் அடுத்தநாள் காலை குரூப்பில இருந்து ரிசைன் பண்ணுவதென்று முடிவு செய்தான். சொல்லிவைத்தாற்போல கிபிர் வந்து அதைச் செய்தது. ஆனால் அந்த மேற்குப்பக்கமாக அவ்வப்போது போக வேண்டுமென்று இவன் நினைத்துக்கொண்டான். அங்குதான் பெடியளின் காம்ப் இருந்தது.

அவர்களில் பலர் ஊன்றுகோல்களுடன் திரிந்தனர். சிலர் இரண்டு கைகளையும் இழந்திருந்தனர். ஒருவருக்கு கண் இருக்க வேண்டிய இடம் வெறுமனே சிவப்புத் துண்டமாக இருந்தது. அவர் “தம்பி எந்த இடம்” என்று இவனிடம் விசாரித்தார். அவரை நிமிர்ந்து பார்ப்பது இவனுக்கு அந்தரமாயிருந்தது. கறுத்தக்கண்ணாடியொன்றை போட்ட அவர் “இப்ப சொல்லும்” என்றார். இவன் சொன்னான்.


“முன்னேறிப்பாய்ச்சல் சண்டையில அந்த இடங்களில நிண்டனான். ரீ குடிக்கிறீரோ..” இவன் ஓம் என்றுவிட்டு உள்ளே போனான். சித்தப்பா சொன்ன இனவிடுதலைக்கு மட்டுமில்லாமல் சமூக விடுதலைக்காகவும் இவை தங்கடை காலைக் கையை கண்ணைக் கொடுத்திருக்கினம் என்று இரவு முழுதும் யோசித்துக்கொண்டு கிடந்தான். இப்பிடி இடம்பெயர்ந்து அவலமா ஓடித்திரியேக்கை ஐயாமாஸ்ரர் குறட்டைவிடுறார் தீபன் காலைப்போடுறான் என்று சினக்கிறது சுயநலம் என்றெல்லாம் யோசித்தான்.

 

0 0 0

 

தீபன்தான் அந்தக்கிணற்றை அடையாளம் காட்டினான். காம்பையும் தாண்டி கொஞ்சம் போனால் ஒரு சின்னக்கோயிலை அண்டிக் கிடந்தது அது. கப்பி வாளியெல்லாம் போட்டு தண்ணியும் தெளிவாக இருந்தது. ரவியண்ணை வீட்டுத்தண்ணி எப்பவும் தரைதட்டிக்கொண்டே இருந்தது. தண்ணிக்கு மணம் நிறம் சுவை குணம் எல்லாம் இருக்கு என்று நிரூபித்துக்கொண்டிருந்தது அது. தன் உடம்பில ஒரு புதுமாதிரியான நாற்றம் கிளம்புவதாக இவனுக்கும் தோன்றியது. வியர்வையும் புழுதியும் சமவிகிதத்தில கலந்து அந்த வாசம் இருந்தது. “பின்னேரம் குளிப்பம்” என்றான் தீபன். பின்னேரம் அங்கை இவங்களுக்கு முதல் குளித்துக்கொண்டிருந்தவரை இவன் எங்கோ கண்டிருப்பதாய் யோசித்தான். நேற்றுக்காலமை பாணுக்கு நின்ற கியூவில இவனுக்கு முன்னால் நின்றிருந்தார் அவர். கிபிர் சுத்தத்தொடங்கி சனங்கள் விழுந்தடித்து ஓடத்தொடங்கியபோது ஒரு பெரிய கல்லொன்றை எடுத்து தான் நின்ற இடத்தில் வைத்துவிட்டு “தம்பி.. பாரும். இது என்ரை இடம்..ஆ.. உமக்கு முன்னாலை” என்றுவிட்டு ஓடியிருந்தார் அவர்.

அவர் சோப்புப்போடத் தொடங்கிய, இவன் முதல் வாளித்தண்ணீரை எடுத்து கைகளில் ஏந்திய, தீபன் தள்ளிப்போய் ஒண்டுக்கிருந்த நேரம் அவரும் அந்தக்குரலும் திடுப்பென வந்தன.


“ஆரைக்கேட்டுக் குளிக்கிறியள் இங்கை..ஆ.. ” தீபன் ஒண்டுக்கிருந்ததைப்பாதியில் நிறுத்துவிட்டு ஓடிவந்தான். சோப்புப் போட்டவர் முகத்துச் சோப்புநுரையை வழித்துப்பார்த்தார். இவன் தண்ணியைத் தலையில் ஊற்றவா விடுவதா என்னுமாப்போல ஒரு போஸில் நின்றான்.


“இடம்பெயர்ந்து வந்திருக்கிறம். குளிச்சு நாலைஞ்சு நாளாகுது. அதுதான்.. ஏனய்யா ஏதும் பிரச்சனையோ.. ” என்று இழுத்தார் சோப்பிட்டிருந்தவர்.


“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கையென்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியால கழட்டின நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது. சோப்புப் போட்டவரைப்பார்த்து “வாங்கோண்ணை. எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார். தீபன் “அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்றபோது அவர் கழற்றிய கயிறையும் கீழே வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று கொண்டே கோயிற்காரர் பின்வாங்கினார். அவர் போகும் மட்டும் ஏதோ புசத்திக்கொண்டே போனார். இவன் கயிற்றைக் கப்பியில் கொழுவினான். சோப்புப்போட்டவர் காய்ந்து போயிருந்தார்.


“என்னண்ணை.. நாங்கள் சின்னப்பெடியள்.. துணிஞ்சு கதைக்கிறம். நீங்களும் சேர்ந்து ஒரு வெருட்டு வெருட்டியிருக்கலாமெல்லே.. பாத்துக்கொண்டு நிக்கிறியள்” என்றான் இவன். இயக்கத்திட்டைப் போய்ச் சொல்லியிருக்க வேணுமென்றான் தீபன். அவர் காய்ஞ்ச சோப்பை தண்ணியால் கழுவிக்கொண்டே சொன்னார்.

“விடுங்கோடா விடுங்கோடா.. அவருக்கு நானொரு வெள்ளாளன் என்று தெரியாது போலயிருக்கு.”

குளித்துமுடித்து வரும்போது இவன் அந்தக்காம்பில் பெடியங்களைக் கண்டான். கைகள் அற்று.. கால்கள் அற்று.. கண்கள் அற்று…


“எங்கடை போராட்டம் இனவிடுதலையோடை சமூக விடுதலைக்கான கருத்தையும் எல்லாற்றை மனங்களிலும் ஊட்டியிருக்கிறது” என்று அடுத்தமுறை சித்தப்பா சொல்லட்டும்.


“புடுங்கியிருக்கிறது” என்று பதிலுக்கு சொல்லவேண்டும்.

http://sajeek.com/archives/481