போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்

தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.

ஆளும்வர்க்க வலதுசாரிய பாசிட்டுகளுக்குள்ளான முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் வெளிப்படையாகவே தாளம் போடத் தொடங்கிவிட்டது. போர்க் குற்றத்தில் ஈடுபட்ட குற்றக் கும்பல், தமக்குள் எதிரணியாக மாறி நிற்கின்றது. முரண்பட்ட எகாதிபத்திய நலன்கள், இதை தனது நலனுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

 

இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்று கூறுவதும், ஏகாதிபத்திய காய்நகர்த்தலுக்கு உட்பட்ட அரசியலாகும்.  

 

இப்படி போர்க் குற்றம் பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அக்கறை, ஏகாதிபத்திய நலன் சார்ந்த சதியாகும் இதை மூடிமறைத்து தப்பிப் பிழைக்க எடுக்கும் பேரினவாதத்தின் சூழ்ச்சி,  மக்கள் விரோதத் தன்மை கொண்டது. இதற்குள் இலங்கை அரசியலை மேலும் நுட்பமாகவே, மக்கள் விரோத அரசியல் போக்காக மாற்றி வருகின்றது.

 

இலங்கை பேரினவாத அரசின் குற்றங்களை பேரினவாதக் கண்ணோட்டத்தில் பாதுகாக்கவும், இந்தக் குற்றத்தை முன்னிறுத்தி அமெரிக்காவின் பின் செல்லும் குறுகிய தமிழ் இனவாத அரசியல் போக்கும் இன்று முன்னிலைக்கு வருகின்றது. இப்படி எதிர்ப்புரட்சிகர கூறுகளின் பிற்போக்கான அரசியல் நகர்வுகள், ஏகாதிபத்தியம் சார்ந்து வேகம்பெற்று வருகின்றது. சிங்களம், தமிழ் என்று குறுகிய இனவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இது வரலாற்றை மீண்டும் இருட்டுக்குள் தள்ளிவிட முனைகின்றது. இப்படி பிற்போக்கான மக்கள் விரோத அரசியல் போக்கு, மக்களின் சொந்த செயல்பாட்டை தடுத்த நிறுத்தும் வண்ணம் மீளவும் அரங்கேறி வருகின்றது.

 

இப்படி மனித இனத்துக்கு எதிரான போர்க் குற்றம், ஏகாதிபத்திய நலன்களுக்கு இடையிலான மோதலை அடிப்படையாகக் கொண்டு மிகப் பிற்போக்கான கண்ணோட்த்தில் கையாளப்படுகின்றது. இதன் பின்னணியில் தான் மக்கள் விரோதப் பேரங்கள் முதல் காட்டிக் கொடுப்புகள் வரை அரங்கேறுகின்றது.

 

இப்படி முரண்பட்ட ஏகாதிபத்திய தலையீடுகள், இலங்கையில் அதிகரித்து வருகின்றது. மகிந்த குடும்பம் பாசிச ஆட்சியை தக்கவைக்கும் வண்ணம், நாட்டை விலை பேசுகின்றது.

 

சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தையே படுகொலை செய்தது முதல் ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று குவித்தது வரை, பேரினவாதம் பாரிய போர்க் குற்றத்தை மனித இனத்தின் மேல் நடத்தியது. இதற்குள் தான் புலிகள் போர்க் குற்றமும் அடங்கும்.

 

இந்தப் போர்க் குற்றத்தின் மேலான விசாரணை என்பது, மனிதகுலத்தின் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும்;. இது இலங்கையில் இன ஐக்கியத்திற்கான நெம்புகோலாகும். மாறாக போர்க் குற்றத்தை பயன்படுத்தும் ஏகாதிபத்திய நலன்கள், மக்கள் விரோதத்தன்மை கொண்டது. இது முன்னிறுத்தும் போர்க் குற்றம் பற்றிய ஓப்பாரிகள் போலியானவை. மக்களைச் சார்ந்து நிற்காமல், உண்மையான போர்க் குற்றத்தை ஒருநாளும் முன்னுக்கு கொண்டுவரமுடியாது. மாறாக தங்கள் அரசியல், பொருளாதார, இராணுவ நலனுக்கு ஏற்ற வகையில், சிலரின் தலையை உருட்டும் போர்க் குற்ற விசாரணை நாடகங்கள் தான் இவை.

 

புலிகளின் ஜனநாயக விரோத பாசிசப் போக்கை காட்டித்தான், ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்தது. அதன் மூலம் புலிகளை "பயங்கரவாத" அமைப்பாக காட்டி, அதை ஒடுக்க  இலங்கை அரசுக்கு உதவியது. இது போன்றதே போர்க் குற்றம் பற்றிய ஏகாதிபத்திய அக்கறைகள். இது அவர்களின் குறுகிய நலன் சாhந்தது.
 
புலிகளிடம் ஏகாதிபத்தியம் "ஜனநாயகத்தை" கோரியது போன்று, இலங்கை அரசிடம் "போர்க்குற்றம்" பற்றிய விசாரணையை ஏகாதிபத்தியம் கோருகின்றது. இதன் பின் ஏகாதிபத்திய நலன்களே, அடிப்படையாக இருக்கின்றது.

 

மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய எந்த அக்கறையுமல்ல. இன்று போர்க் குற்றம் பற்றிய விசாரணையை கோராத அரசியலோ, மக்கள் விரோத அரசியலாகும்;. இது மக்கள் விரோத குற்றங்களுக்கு உடந்தையாகும். போர்க் குற்றத்தின் பெயரில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை எதிர்க்காத அரசியலும் கூட, மக்கள் விரோத அரசியலாகும். இது எகாதிபத்தியத்துக்கு துணை போதலாகும்.

 

போர்க் குற்றத்தை ஏகாதிபத்தியத்தின் பெயரில் மூடிப் பாதுகாப்பதும், அதன் மேலான விசாரணையின் பெயரில் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதும், மக்கள் விரோத வலது பாசிச அரசியலாகும். இது இனம் சார்ந்து, இனங்களைப் பிளந்து, மீள எழுவது என்பது மிகவும் ஆபத்தான மிகப் பிற்போக்கான அரசியல் போக்காக உருவாகி வருகின்றது.

 

பி.இரயாகரன்
04.11.2009