இந்த தோட்டம் எப்போது உருவானதென்று
இந்நாள் வரை
எவராலும் அறிய முடியவில்லை.
எத்தனை மரங்கள்
எத்தனை செடிகள்
எத்தனை வகைகள்
காலத்தின் இடையறாப் பயணத்தில்
உயிர்த்தும் உழைத்தும்
உலர்ந்தும் உருக்குலைந்தும்
தொடர்ச்சியாய்
உயிர் வாழ்க்கை தொடர்கிறது.

* * * * *

சில காலம் முன்பு
தோட்டத்தினோர் மூலையில்
ஆலமரமொன்று எழுந்து நிற்கக் கண்டேன்.
விந்தையொன்று அதனில் உண்டு.
பொதுவில் மாறுபட்டு
தகிக்கும் சிவப்பு நிறத்தில் அது நிற்கக் கண்டு
அதனை சிலாகிப்பது இயல்பாயிற்று.

அவ்வப்போது வீசும் காற்றில்
அம்மரத்தின்
இலைகளும், கிளைகளும்
தாங்கி நிற்கும் விழுதுகளும்
எழுப்பும் பேரிரைச்சலில்
காற்று பயந்தோடும்.
நிலம் மெல்ல நடுங்கத் தொடங்கும்.
மற்ற மரங்கள் செய்வதறியாது
தலைகுனியும்.
தோட்டக்காரர் சுற்றி நின்று விழிப்பார்.

ஆச்சரியம் மெல்ல வளர‌
தொலைவில் நின்றே நோக்கி வந்தவன்
அந்த ஆலமரத்தின்
அருகில் செல்லலானேன்.
இது என்ன விந்தை…..
மரம் பேசலாயிற்று.

“வேடிக்கை பார்க்க வந்தாயோ”
என்று வினவியது.
பிரமித்துப் போயிருந்த நான்
ஆமென்று தலையசைத்தேன்.
மெல்லச் செருமிய மரம்
மீண்டும் பேசியது.

“நண்பனே, நீயறியாதவொரு
விடயம் சொல்வேன் கேள்.
நன்றாக எம்மை உற்றுப் பார்.
மரத்தின் உருவில் மறைந்திருக்கும்
மனித உருவங்களைப் பார்” என்றது.

ஆர்வம் மேலிட‌
அருகில் சென்று உற்று நோக்கினேன்.
உண்மைதான்…
அந்த மரம் முழுதும்..
இலைகளும், கிளைகளும்
விழுதுகளும்.. மனிதத் தலைகளே.
இடையறாது நச்சுக்காற்றை உள்ளிழுத்து
அதன் நரம்பொடித்து
உயிர்க் காற்றை உலகுக்கு
அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
இங்கே பல மரங்கள் செய்யத் தவறியதை
பலகாலமாய் சலிப்பின்றி
செய்து கொண்டிருந்தார்கள்.

எனை கூர்ந்து நோக்கிய மரம்
“ஏன் தயங்குகிறாய்?
வா, நீயும் எங்களோடு
இணைந்து
உயர் வாழ்வுக்காய் உழைக்கத் துவங்கு” என்றது.
பரவசத்தில் பற்றிக் கொண்டு
மரத்தினுள் சென்று
மெல்ல உழைக்கத் துவங்கினேன்.

பிறகுதான் தெரிந்தது,
இடையறாது உழைப்பது
எதற்கும் சுணங்காமல் உழைப்பது
வீசும் புயல் காற்றையும்
சுற்றி வளைக்கும் சுழல் காற்றையும்
தாண்டி உழைப்பது
சிரமமாய்த் தோன்றியது.

இப்படியொரு சிந்தனையின் ஊடான‌
நாளில் தான்..
கிளையிலோர் அணுவாய்
நான் கலந்திருந்த நேரத்தில்
மரத்தின் அடியிலோர் சத்தம்…
மரம் மெல்லக் குனிந்தது.
வருத்தம் தொனிக்க விளம்பியது.

” நல்லு என்றொரு வேர்
நம்மை விட்டு பிரிந்தது” என்றது.

நல்ல வேராய்த்தான் இருந்திருக்க வேண்டும்.
மரத்தின் மவுனம்
அத்துணை கனமாயிருந்தது.
நான் அந்த வேரை
இதுவரை பார்த்ததில்லை
அதன் குரலை கேட்டதில்லை.
அதனோடு பேசியதில்லை.
ஆனால்…
ஆனால்…

அதனை பார்த்திருக்கிறேனென்றுதான்
சொல்ல வேண்டும்.
குரலை கேட்டிருக்கிறேனென்றுதான்
சொல்ல வேண்டும்.
பார்வையில் படாமல்
மண்ணில் மறைந்திருந்தாலும்
அமைதியாய் இத்தனை காலம்
அந்த நல்ல வேரும் உழைத்ததால்தானே மரத்தின்
ஒட்டுமொத்தமாய் ஒலிக்கும் குரல்
ஒருங்கிணைந்ததாய் தெரியும் உருவம்
உருவானது.

எனவே அறியவில்லை என்று
சொல்வது மேம்போக்கானது.
அறிவேன் என்று சொல்வதே
அர்த்தமுடையது.

மரம் என்னிடம் மெல்லக் கேட்டது.

” நண்பனே,
மின்னும் இலைகளாய்
விரியும் கிளைகளாய்
தாங்கும் விழுதுகளாய்
இருக்க எவர்தான் விரும்ப மாட்டார்…
ஆனால்,
மண்ணிற்குள் மறைந்து
இத்தனைக் காலம்
அத்துணை இறுக்கத்தில்
இடையறாதுழைத்த‌
அவ்வேரின் உறுதியை
மாண்பை நான் எங்ஙனம்
விளக்கிச் சொல்வேன்?

நினைத்துப் பார்க்கிறாயா
ஒவ்வொரு நொடியும்
இயங்கும் காற்றைப் போல்
அமைதியாக
முகவரிக்கான எத்தனிப்பின்றி
இயங்குகிறார்களே..
அதை
எங்கனம்
எடுத்தியம்புவேன்?

இவ்வேளையில்
வேறு சில விடயங்கள்
சொல்வேன் கேள்!

என்னிடம் ஒட்டிக்கொண்டிருப்பதால்
மட்டும் பயனில்லை.
அதனையே ஒரு சாதனையாக
எண்ணி மகிழ்கிறாய்.
பசையைக் க‌ண்டால்
பதறிப் போகிறாய்.
சுவரொட்டி என்றாலே
சுணக்கம் வருகிறது.
சுவரெழுத்து என்றால்
தலை கிறுகிறுக்கிறது.
அவசர வேலை
திடீரென முளைக்கிறது.

பிரிந்த வேரின்
பின்னணியில் ஒரு கேள்வி உண்டு.
வெறுமனே புகழ்வதால்
புகழ்ந்துவிட்டு கலைவதால்
என்ன பயன்?
நீ என்று வேராகப் போகிறாய்?
என்று உன்
சஞ்சலங்களை சாம்பலாக்கப் போகிறாய்?
என்று உன்
தயக்கங்களை தூக்கியெறியப்போகிறாய்?
என்று உழைக்கச்
சுணங்குவதில் வெட்கமுறப் போகிறாய்?
என்றுதான் உழைப்பதில்
இடையறாது உழைப்பதில்
உள்ளம் மகிழப் போகிறாய்?
முடிவாய்,

என்று நீ நல்லுவாகப் போகிறாய்?”

கேள்விகள் எதிரொலித்தபடி இருந்தன.
அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது.
இந்தக் கேள்விகள்
எனக்கு மட்டும்தானா?
அப்படியானால்….

நாம் என்று பதில் சொல்லப்போகிறோம்?

______________________________

ஆகஸ்டு 15, 2000 அன்று தோழர் ந‌ல்லு ஒரு சாலை விபத்தில் பலியானார்.
உசிலை வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியில் அதன் ஆரம்ப காலம் முதல் முன்னணியாக‌ செயல்பட்டு வந்தவர் அவர். தோழரின் மறைவை அடுத்து மதுரையில் நடந்த‌ அஞ்சலி கூட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர் ஒருவர் வாசித்த கவிதை இது.