06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கடவுளரின் நகரங்களில் வாழுதல்

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்

எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக் கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு

மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களைப் பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடை களைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்

அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்து போய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதறுகின்றன

கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகிறோம்
பகல்களை ஓட்டுகிறோம்

கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்

ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

-சித்தாந்தன்

http://www.vinavu.com/2009/10/31/saturday-poems-10/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்