கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

 

ஜயலத் அவர்கள் தமிழ் மக்களிடம் நல்ல அபிப்பிராயங்களை தக்கவைத்துள்ளவர். அவர் ஒரு நல்ல மனிதர் என எடுத்துக்கொள்வோம். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வந்திருந்தார். இலங்கை மக்கள் நலன் சார்பில் அல்ல என்பதாலோ என்னவோ அவரது கலந்துரையாடல் ஒரு கட்சியின் வெளிப் பரப்புக்குள் சென்று எதையும் சொல்லிவிடவில்லை. நல்ல மனிதர்கள் என்பது அரசியல் பார்வையை நல்லதாக்கிவிடுவதில்லை. காலமெலாம் தமிழ் மக்களிற்காக நியாயத்துடன் அரசியல் குரலெழுப்பிய வாசுதேவ நாணயக்கார அவர்கள் ராஜபக்ச அரசின் ஆலோசகராக மாறித்தான் போனார். போரைக் கண்டடைந்தார். நிலையான தீர்வு என்பது எப்பொழுதும் அதிகார மையத்திலிருந்து அதாவது மேலிருந்து கீழாக (மக்களுக்கு) எடுத்துச்செல்லப்படுவதில்லை. மாறாக கீழிருந்து மேலுக்கு எடுத்துச்செல்லப்படுவதாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்களிற்குள்ள பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதில் ஊடகத்துறையின் பங்குபற்றியெல்லாம் மிகச் சரியாகவே பேசிய பீரிஸ் பின்னர் சந்திரிகா அவர்களின் அரசில் அங்கம் வகித்து போர்களைக் கண்டடைந்தார்.

 

இப்போ ஜயலத் வருகிறார். ஐதேகட்சி கடந்த காலத்தில் தவறுகள் விட்டிருக்கிறதுதான் என தமிழ் மக்களிடம் வருவதற்கான கடப்பை பிரித்து தாண்டி வருகிறார்.பொத்தாம் பொதுவாக செய்யும் இந்த சுயவிமர்சனம் தேவைக்கேற்ப தேவையான கோணத்தில் விசிறிவிட ஏதுவான தந்திரத்தைக் கொண்டது. தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் ஐதேக கடந்த காலத்தில் என்ன தவறுகளை இழைத்தது, இன்று எதைத் தீர்வாக வைக்கிறது என்று சொல்லும் யோக்கியதையை அவர் பேச்சில் எங்கும் காணவில்லை. அதைப்பற்றிப் பேசுவதை "கடந்த காலத்தில் வாழப் போகிறோமா நிகழ்காலத்தில் வாழப்போகிறோமா" என்ற விதமாக அவர் பதிலளித்தது ஒரு அரசியல் பார்வையா என்ன? குறைந்த பட்சம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வார்த்தையைக்கூட அவர் பாவிக்கவில்லை.

 

திஸ்ஸவிதாரண அவர்களை தலைமையாகக் கொண்ட சர்வகட்சி மாநாட்டுக் குழுவில்கூட ஐதேக அங்கம் வகிக்க மறுத்ததை நியாயப்படுத்துகிறார். இன்று அந்த குழுவின் தீர்வுப் பொதிக்கு என்ன நடந்தது என்பதைக் காட்டி அன்ற தாம் கலந்துகொள்ளாததுக்கு நியாயம் கற்பிக்கிறார். தமது அரசியல் இலாபங்களைக் கடந்து அல்லது அரசியல் முரண்பாடுகளைக் கடந்து இலங்கை மக்களின் நலன் சார்ந்து இலங்கையை ஆட்டிப்படைக்கின்ற தேசிய இனப் பிரச்சினையில் -தாம்கொண்ட அரசியல் பரப்புக்கள் நின்றுகூட- பங்களிக்க மறுத்தது ஐதேக. தமிழ் மக்களை வானொலியினூடாக சந்திக் வந்த ஜயலத் இன்றைய சூழலில் -தமிழ் மக்களின் அரசியல் சூனிய நிலையில்- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமது கட்சி முன்வைக்கம் தீர்வு என்னவாக இருக்கும் என தெளிவாக முன்வைக்காதது ஏன்?. நான் தமிழ் மக்கள் மத்தியில் போட்டியிடவில்லை. பௌத்த சிங்கள மக்கள் மத்தியில்தான் போட்டியிடுகிறேன் என வேறொரு இடத்தில் அவர் சொன்னது இங்குதான் சரியாகப் பொருந்துகிறது. 13 வது திருத்தச் சட்டம் பற்றி சகட்டு மேனிக்கு ராஜபக்சவிலிருந்து ஐநா சபைவரை பேசப்படும் வார்த்தைகளை ஜயலத் கடந்து ஒன்றையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. அதை ஐதேகட்சிதான் கொணர்ந்தது என்று பெருமை பேசியதோடு அவரது விளக்கம் நின்றுவிட்டது.

 

இலங்கை பௌத்த சிங்கள நாடு. அங்கு மற்ற சிறுபான்மையினர் வாழ்ந்துவிட்டுப் போகலாம். அநாவசியமாக உரிமைகள் கேட்டு குளப்படி செய்யவேண்டாம் என சொன்னவர் சரத் பொன்சேகா. இவரை பொது வேட்பாளராக நிறுத்த ஐதேகட்சி உட்பட எதிர்க்கட்சிகள் முயல்வதாக வந்த செய்திகள் சொல்லும் செய்தி என்ன? இவ்வாறான பேரினவாதக் காய்ச்சல் பிடித்தவர்கள்தான் இலங்கையின் அரச அதிகார மையத்தை நிரப்பக்கூடிவர் என்பதே அது. இந்தச் செய்தியைக்கூட ஐதேக சரத் பொன்சேகாவை உத்தியோகப+ர்வமாக அறிவிக்கவில்லை என்றே திரும்பத் திரும்ப பாடினார். இவ்வாறான பேரினவாதிகளோடு நாம் கூட்டுவைக்க முடியாது என அவர் சொன்னாரில்லை.

 

அதுதான் போகட்டும். சரத் பொன்சேகாவின் கூற்றுப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் தமிழ் மக்களை கேணையர்களாக்குவதாக இருந்தது. "நான் ஐதேகட்சியின் சார்பில்தான் பேச வந்திருக்கிறேன். சரத் பொன்கேவின் சார்பிலல்ல" என்பதே அது. ஐதேக சிங்கள மக்களினது கட்சி மட்டுமல்ல, அது தமிழ் முஸ்லிம் மக்களினதும்கூட என சொல்லவந்த வாயால் இந்த சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பற்றிய சரத் பொன்சேகாவின் கூற்றைப் பற்றிய விமர்சனமே எழும்ப மறுக்கிறது பாருங்கள். நாம் கடந்த காலத்தில் சில தவறுகள் இழைத்திருக்கிறோம் என்ற ஜயலத் இன் கூற்றை நீங்கள் இப்போதும் தவறிழைக்கிறீ

 

கள் என திருத்திய பதிப்பாக திருப்பிச் சொல்லும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

வவுனியா தடுப்பு முகாமில் முட்கம்பிவேலிகளுக்குப் பின்னாலுள்ள மக்களைப் பார்ப்பதற்கு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டதை ராஜபக்சவின் அரசின் மீதான மனித உரிமை மீறலாக சுட்டிக்காட்டுவதற்கு அப்பால், அந்தவொரு ஜனநாயக உரிமைக்காக இறங்கிப் போராட வக்கில்லாத ஒரு கட்சியாக ஐதேக உள்ளது என்பதே உண்மை. போரை வெற்றிகொண்ட மன்னனாக உலாவரும் ராஜபக்சவை எதிர்கொள்ள அரசியல் தலைவர்களுக்குப் பதில் இராணுவத் தலைவர்களை நாடும் நிலைக்கு இலங்கையின் ஜனநாயகத்தை எடுத்துச் செல்வது பற்றிய கவலையில்லாத அரசியல் எதிர்க்கட்சிகளது.

 

இவ்வகையான அரசியலாளர்களுடனான கலந்துரையாடல்களின் தேவை இன்று அதிகமாகியுள்ளது. அதை ரிபிசி செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நீ எதைச் சொன்னாய் என்பதைவிட எதைச் சொல்லாமல் விட்டாய் என அவதானிப்பது அவசியம் என்பார் அல்தூசர். அந்தவகையில் மக்களின் சுயசிந்தனைக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். அரசியலாளர்கள் கருத்துகளை வழங்குபவர்களாகவும் மக்கள் அதைப் பெறுபவர்களாகவும் இருக்கும் நிலை கடந்துசெல்லப்பட வேண்டியது. அதைநோக்கிய வழிமுறைகளை பொறுப்புள்ள ஊடகங்கள் செய்ய முன்வரவேண்டும்.

 

வானொலி கலந்துரையாடல் நேர வரம்புக்கு உட்பட்டது. அதிலும் மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய தேவையும் இருக்கும்போது அதைப் பயன்படுத்தும் வகையிலான கேள்விகள் அதிகம் இருக்க வேண்டும். நேயர்கள் தமிழ் மக்கள். தமிழில் உரையாடுவது பொருத்தமானது. மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியமான பகுதிகளை மொழிபெயர்த்து ஜயலத் க்கு சொல்வதன் மூலம் நேரத்தை நன்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் கேள்விகேட்க வந்த நேயர்கள் தமது புலமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்தில் விளக்கவுரை நிகழ்த்துவதை நாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது. புலிகள் மாமனிதர்கள் பட்டத்தை விருப்பத்துக்குரியவர்களுக்கு கொழுவிவிட்டதைப் போல அரசியல் ஆய்வாளர்கள் என்ற பதமும் இலகுவாகிப் போய்விட்டதா என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் தத்துவார்த்த விவாதங்களை மட்டுமல்ல, சர்வதேச அரசியல் களங்களைப் பற்றிய ஆய்வுகளைக்கூட வெளிப்படுத்தாத அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சமூகத்துக்குத் தேவை எனப் படவில்லை. புலிகளின் -எதிர்ப்பு அல்லது ஆதரவு- அரசியலுக்கு அப்பால் செல்லமுடியாத ஆய்வுமுறைகள் புலிகளின் அழிவோடு காலாவதியாகிப் போய்விடுவதும் படிப்படியாக நிகழ்ந்தே தீரும்.

 

அரச பயங்கரவாதத்தின் எதிர்ப் பயங்கரவாதமாக வளர்ந்த புலிகளை அரசு அழித்ததை பயங்கரவாத அழிப்பாகவும் , அதன் நாயகனாக ராஜபக்சவை துதிபாடியும் ஒரு நேயர் வந்தார். ஜயலத் ஜயவர்த்தனாவையும் சுனந்த தேசப்பிரியவையும் ஒரே தட்டில் வைத்த அவர், புலியை விமர்சித்தவர்களெல்லாம் புலியெதிர்ப்பாளர்கள் என்பதுபோல ராஜபக்சவை விமர்சிப்பவர்கள் எல்லாம் ராஜபக்ச எதிர்ப்பாளர்களாக உருவகித்து அறம் பாடினார். அவரைப் போன்றவர்களுக்காக சுனந்த தேசப்பிரிய சூரிச் கலந்துரையாடலில் சொன்ன விடயமொன்றை இங்கு மீண்டும் தருகிறேன்.

 

"இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு உரிய நாடு. அதைக் காப்பாற்றுவதற்குத்தான் நான் போராடுகின்றேன்... இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் வாழலாம். ஆனால் அவர்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது" என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் சொல்லியிருந்தார். அரசு இந்தக் கூற்று சம்பந்தமாக அவர் தவறிழைக்கிறார் என்ற விடயத்தை சொல்லிவைக்கவில்லை. அதை அவர் வாபஸ் பெறும்படி கேட்கவுமில்லை. சில நாட்களுக்கு முன் ஐதேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார், ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் எல்லோரும் சேர்ந்து சரத் பொன்சேகாவை போட்டியிட வைக்க வேண்டும் என்றார். சரத் பொன்சேகா எதிர்க்கட்சியினர்

 

 

 

ன் பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவது பற்றி பெரியளவில் கருத்தாடல்கள் நிகழ்கின்றன. இலங்கையின் அரசியல் போக்கை இது காட்டுகிறது." இதைப் புரிந்துகொள்ளுமளவிற்கான குறைந்தபட்ச பொதுப்புத்தியாவது இருப்பவர்களால் சுனந்த தேசப்பரியவின் அரசியல் நிலைப்பாட்டை தேர்தல் அரசியலுக்குவெளியிலாவது வைத்து புரிந்துகொள்ள முடியும். -ரவி

 

http://www.psminaiyam.com/?p=221