பெரியார், அம்பேத்கர் பற்றி  அதிகம் எழுதுகிற, பேசுகிற நீங்கள்,  சமூகநீதியின் பின்னணியில், பேராண்மை திரைப்படத்தில் ஆதிக்கசாதியின் சாதி திமிரை அம்பலப்படுத்தி பல இடங்களில் வசனம் இடம் பெற்றது. அந்த வசனங்களைப் பாராட்டி ஒரு வார்த்தைக்கூட நீங்கள் எழுதவில்லை. அந்த வசனங்களை நீக்கிய சென்சார் போர்டின் மோசமான நடவடிக்கைப் பற்றியும் ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை?

-ரவி

பேராண்மை’ திரைப்படத்தில் ஒரு இடத்தில் கூட ஆதிக்கஜாதியை விமர்சித்து ஒரு வரிகூட வசனம இடம் பெறவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களை இழிவாக, மிக மோசமாக பேசிய வசனங்கள்தான் இடம் பெற்றன.

 

‘ஆதிக்க ஜாதியின் மனநிலையை காட்டுவதற்காக,  எதிர்நிலையில் இருந்து  வசனம் எழுதப்பட்டிருக்கிறது.’ இது மிக தந்திரமான குறியீடு. இப்படி இருப்பதால், ஆதிக்க ஜாதிகளின் ஜாதி வெறியை கண்டித்து வசனம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. அதனால்தான், மலைவாழ் மக்களை அவ்வளவு இழிவாக ஜாதியை குறிப்பிட்டு பேசியபோதும், எந்த கதாபாத்திரமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பரம்பரை பரம்பரையா உன் ஜாதியோட புத்தியே அதுதானடா. ஆதிக்க ஜாதிவெறி நாயே’ என்று அந்த அதிகாரியை கண்டித்து வசனம் பேசவில்லை.

 

‘நடைமுறையில், ஒரு உயர்அதிகாரியை, அப்படி முகத்திற்கு நேராக எதிர்த்துப் பேசுவது எப்படி முடியும்? அதுவா யதார்த்தம்?’ என்று அறிவாளிகள் கேள்வி கேட்கலாம்.

 peranmai_wallpaper_poster_01

ஒரு உயர் அதிகாரி தன் குலதெய்வத்தை அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக, கால் ஊனமுற்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்திரம் கொண்டு உயர்அதிகாரியை அடிப்பது போல் காட்சி வைப்பது யதார்த்தமா? அப்படி ஒரு காட்சியை வைக்க முடிந்தபோது, ஆதிக்கஜாதியை எதிர்த்து ஒருவரி வசனம் கூட வைக்க முடியவில்லை என்றால், அது யதார்த்ததிற்காத்தான் தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

 

அப்படி எதிர்த்து பேசப்படுகிற வசனம் சென்சார் செய்தாலும் பரவாயில்லை. வைத்துப் பார்ப்போம் என்று  முயற்சிக்ககூட இல்லை. படத்தில்  மலைவாழ் மக்கள் அதிகாரியை பார்த்து பேசுகிற இடங்களில் சென்சாரால் நீக்கப்பட்டு,வெறும் வாயசைப்பான காட்சி ஒரு இடத்தில்கூட  இடம் பெறவில்லை. ஆதிக்க ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்முறை நிகழ்த்துகிற இடைநிலை ஜாதிகளின் தலித் விரோதத்தை, நேரடியான வார்த்தைகளால் அல்லது ஓரே வார்த்தையால் ஒப்புக்கு கண்டிப்பதைக்கூட தந்திரமாக தவிர்த்திருக்கிறது படம். (பிற்படுத்தப்பட்டவர்கள் பெருமளவில் படம் பார்க்க வேண்டாமா?)

 

அதன்பொருட்டேதான், தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக நினைக்கிற, அண்ணல் அம்பேத்கரை பற்றி அவதூறாக எழுதிய,  பார்ப்பனர்கள் உட்பட்ட ஆதிக்க ஜாதி வெறியர்களும் இப்படத்தைப் பாராட்டுகிறார்கள்.

 

இடஒதுக்கீடு, சமூகநீதி என்று  (தன்ஜாதிக்கான கோரிக்கைகளை மட்டும் உள்ளடக்கி) ஆதி்க்க ஜாதிகளுக்கு எதிரானவர்களைப்போல், காட்டிக்கொள்ளும் ‘முற்போக்கானவர்களும்’, தன் ஜாதியை சேர்ந்த ஜாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, அதை கண்டும் காணாமல், அதைக் கண்டித்து பேசுவதை தவிர்ப்பதற்காகவே ‘சுற்றுப்புற சூழல் மாசு, அந்நிய விதை, கத்திரிக்காய், வெண்டைக்காய், அப்புறம் தமிழன உணர்வு’ என்று திட்டமிட்டு திசைமாற்றி பேசுகிறவர்கள் கூட இந்தப்படத்தின் சமூகநிதி வசனங்களுக்காக சிலிர்த்துப் போகிறார்கள்.

 

‘சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தில் சிவாஜி, சவுகார்ஜானகியைப் பார்த்து, அப்பாவியாக அய்ந்து விரல்களையும் மடக்கி செய்கையால், ‘குத்திப்புடுவேன்’ என்பார். உடன் இருக்கும் புலவர்கள் அல்லது அறிவாளிகள், ”ஆஹா, என்ன அடக்கம்! என்ன அறிவு! ஐம்புலன்களும் எனக்குள் அடக்கம் என்கிறார் இந்த மகான்“ என்று அதற்கு அறிவு சார்ந்த விளக்கம் கொடுப்பார்கள். அதுபோல் நம்முடைய சமூகநீதி எழுத்தாளர்கள், மூல ஆசிரியர் நினைக்காததை உரை ஆசிரியர் சொல்வதுபோல், இயக்குநர் ஜனநாதன் நினைக்காததை எல்லாம் இவர்கள் புதிது புதிதாக யோசித்து தங்களை சிறந்த ஆய்வாளர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

 

‘இந்தப் படம், ஆதிக்கஜாதி உணர்வாளன் அப்படி ஜாதிவெறியோடுதான் தாழ்த்தப்பட்ட மக்களை பேசுவான், என்பதை பதிவு செய்கிறது’ என்று அறிவாளிகள் சொல்வது உண்மைதான். ‘அப்படி இழிவாக பேசுகிற ஒரு ஜாதிவெறினுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்து, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வார்கள்’ என்கிற மோசமான கருத்தையும் தன்னையறியாமல் பதிவு செய்கிறது, என்கிற உண்மையையும் அறிவாளிகள் ஒத்துக் கொள்ளவேண்டும்.

 

சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக படம் பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் இந்தப் படம் தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான் என்பது ஆழ்ந்து பார்த்தால் அல்ல, மேலோட்டமாக பார்த்தாலே தெரியும்.

 

என்னைப் பொறுத்தவரை இந்தப்படத்தில் சென்சார் போர்டு சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட்டு, மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசுகிற வசனங்களை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம்.

 

***

 

தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்த ரஷ்ய படத்தை, கொஞ்சமும் பொருத்தமில்லாத இந்திய சூழலுக்கு பொருத்தி எடுத்ததே இந்தப்படத்தின் அடிப்படையான, முதன்மையான தவறு.

 

‘ஆதிக்க ஜாதிக்கரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி, இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதி்க்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன  ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார்’ என்று படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொறுத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொறுத்தி படம் எடுத்ததும்.

 

அதனால்தான் ‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’என்று இந்தப் படம் பற்றிய முந்தைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

 

‘பேராண்மை’ பற்றிய விமர்சனம் எழுதுபவர்கள், A zori zdes tikhie என்கிற ரஷ்ய படத்தைப் பார்த்திருந்தால் நல்லது. அந்தப் படத்தை குறிப்பிட்டு எழுதுபவர்கள் தலைவர் ஸ்டாலினைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டு எழுதவேண்டும். அப்படி அவர் குறித்து எழுத மறுப்பவர்கள், ஸ்டாலின் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட பின்நவீனத்துவவாதிகளாகவோ, கம்யூனிச விரோதிகளாகவோத்தான் இருப்பார்கள்.

 

நாஜிகளை எதிர்த்து, தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அந்த வீரம் நிறைந்த போர் இல்லை என்றால், இன்று உலகில் ஜனநாயகமே இருந்திருக்காது. ‘A zori zdes tikhie’ என்கிற ரஷ்ய படமும் உருவாகி இருக்காது. அப்புறம் எங்கிருந்து ‘பேராண்மை’? அப்புறம் எப்படி அதுக்கு விமர்சனம்

 

http://mathimaran.wordpress.com/2009/10/29/article-248/