சுவிஸ் தலைநகரமான பேன் நாடாளுமன்றத்துக்கு முன்பாக, 24.10.2009 சுவிஸ் இளையோர் அமைப்பு நடத்திய  ”உண்மைக்காக எழுவோம்”  நிகழ்ச்சியில் புகலிடச் சிந்தனை மையம் வெளியிட்ட துண்டு பிரசுரம்.

புலம்பெயர் சூழலில் பரந்து விரிந்து கிடக்கின்ற இளமைக்குரிய வசதிகள், வாய்ப்புக்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, தாய்த்தேசத்தின் உணர்வுகளுடன் உலாவரும் இளமை உள்ளங்களே! உங்கள் உணர்வுகளுக்கு தலை சாய்க்கின்றோம். தாய்த் தேசம் சார்ந்த உங்கள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அப்பழுக்கற்றவை என்பதையும் நம்புகிறோம். உங்கள் செயற்பாடுகள் தொடர்வதை உளச்சுத்தியுடன் வரவேற்கின்றோம்.

விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, தமிழ்ச் சமூகம் முன்னெடுக்கப்போகும் அடுத்த அடி ஒவ்வொன்றும் மிக, மிகமிக நிதானமாக வைக்கப்பட வேண்டியவை என்பதை நீங்கள் அறிவீர்கள்! உணர்வீர்கள்! விடுதலைப் புலிகள் ஆயுதபலம்மிக்க சக்தியாக விளங்கியபோதும், “உலகின் பல நாடுகள் ஸ்ரீலங்கா அரசுடன் சேர்ந்திருந்தமையே“ போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கான முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகின்றது. இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் இது பக்கக் காரணிகள் பலவற்றில் ஒன்று மட்டுமே! அத்துடன் இது ஒரு புறநிலைக் காரணியும் கூட!

ஆனால் எந்தவொரு செயற்பாட்டுக்கும், அதன் வெற்றி தோல்விக்கும் அடிப்படையாக அமைவது அதன் அகநிலைக் காரணங்களே! எமது போராட்டத்தின் தோல்விக்கான முதன்மையான அகநிலைக் காரணிகள் பற்றி நோக்குவோமாயின்

1. அரசியலுக்குப் பதிலாக ஆயுதத்தை ஆணையில் வைத்தமை

2. நட்பு சக்திகள், துணைசக்திகளை இனம் கண்டுகொள்ளத் தவறியமை, எதிர்நிலைக்குத் தள்ளியமை

3. கருத்துப் பரிமாற்றத்திற்கான ஜனனாயகச் சூழலை மறுத்தமை

4. இன்றைய உலக அரசியல் முறைமையை நுண்ணியமாகக் கணிக்கத் தவறி மேற்குலக சக்திகளை நம்பியிருந்தமை

5. கெரில்லாப் போர் முறையை முற்றாகத் தவிர்த்தமை உள்ளடங்கலாகப் பலகாரணங்கள் முன் வந்து நிற்கின்றன.

ஆனால் மாதங்கள் ஐந்து ஆகியும், இவை பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருப்பதுவே தமிழ்ச் சமூகத்தின் இன்றைய பேரவலம் ஆகும்.

அத்தகைய ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில், மக்கள் மத்தியிலான பகிரங்க சுய விமர்சனத்தை முன்வைக்கவேண்டியதும் மிக அவசியமான பணி என்பதையும் உங்களைப் போன்ற வாலிப உள்ளங்கள் உணரவேண்டும். இத்தகைய அவசர அவசியமான கடமைகளைத் தவிர்த்துவிட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மீண்டும் ஒரு தோல்விக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இது எமக்கு வரலாறு தந்த பாடம்!

உணர்வுசால் இளம் உள்ளங்களே!

தொடரும் உங்கள் அபபழுக்கற்ற செயற்பாடுகள்… அண்ணை சொல்கிறார், தம்பி செய்கிறார், அயலவர் சேர்கிறார், நண்பனும் வருகிறான், தலைவர் உரைக்கிறார்… ஆகையினால் “எல்லாம் சரியாத்தான் இருக்கும்” என்ற வகையான பொதுப் புத்தியில் இல்லாமல், வாலிபத்துக்குரிய மிடுக்குடன் கூடி, பல்வித கேள்விகள், தேடல்களின் அடிப்படையிலான ஞானசெருக்குடன், நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் மிக்கதாகவே அமையவேண்டும்! அப்போதுதான் இளம்பிள்ளை வேளாண்மையின் விளைவுகள் வீட்டுக்கும் வந்துசேரும்.

இதய சுத்தியுடன்

24. 10. 2009  புகலிடச் சிந்தனை மையம், www.psminaiyan.com