08132022
Last updateபு, 02 மார் 2022 7pm

சிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம்

இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரில் ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் ராணுவக்காவலுக்குள் விடப்பட்டுத்தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் கண்ணீரை துடைத்துவரும்(!) திட்டத்துடன் அனுப்பபட்ட நாடாளுமன்ற பத்துப்பேர் குழு திரும்பிவந்திருக்கிறது.

இந்த ஐந்து நாள் பயணத்தில் ஐந்து மணிநேரம் மட்டும் தமிழர்களை பார்வையிட்டுவிட்டு மீதி நேரங்களில் ராஜபக்சேவுடனும், அரசின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பதிலுமே செலவிட்டுள்ளது. பின்னர் சென்னையில் முதல்வரை சந்தித்தனர், முதல்வரும் இன்னும் பதினைந்து நாட்களில் 58 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்தார் அத்துடன் எல்லாம் முடிந்தது. ஆனால் இவைகள் யாரை ஏமாற்ற?

முதலில் இந்தக்குழு இந்திய அரசின் சார்பில் செல்லவிருப்பதாக கூறப்பட்டது, பின்னர் கட்சியின் செலவில் செல்வதாக மாற்றப்பட்டது. அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் என்று முதலிலும், கூட்டணிக்கட்சியினர் மட்டும் என்று பின்னரும் அறிவிக்கப்பட்டது. நாடகம் நடத்துவதற்குக்கூட தாம் தயாரில்லை என மைய அரசு நிலைப்பட்டிருப்பதையே இவை காட்டுகின்றன. என்றாலும் அரசின் சார்பில் சென்றிருந்தாலும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சென்றிருந்தாலும் இந்தக்காட்சிகளில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டிருக்கப்போவதில்லை என்பது தான் நிஜம். இந்தக்குழுவில் தமிழர்கள் பிரச்சனைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படக்கூடியவர் என்று அறியப்படுபவரான திருமா “முகாம் நிலைகள் திருப்திகரமாக இருக்கிறது என எமது குழுவில் யாரும் சொல்லவில்லை. நாம் திருப்தி அடையவும் இல்லை. ஆயினும் முகாம்களில் 1500 மருத்துவப்பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்பதனையும் மறுப்பதற்கில்லை.” என்று தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை காட்சி போல கஷ்டப்படுகிறார்கள் ஆனால் கஷ்டப்படவில்லை என்று கூறுவதற்குத்தான் இவர்கள் சென்றது, இதற்குத்தான் சோனியாகாந்தி, கருணாநிதி, ராஜபக்சே, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்களுடன், “இந்திய உறவுகளே! வருக! வருக!!” என்று வரவேற்கும் சுவரொட்டிகள் யாழ்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இந்திய அரசின் திட்டத்துடன், இந்திய ராணுவ உதவியுடன், ராணுவ தளவாடங்கள் இன்னும் அனைத்துவகை உதவிகளுடன் தான் தமிழர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற உண்மையை இதுபோன்ற சோபையற்ற நாடங்களின் மூலம் மறக்கடித்துவிட முடியுமா?

58 ஆயிரம் பேர் பதினைந்து நாட்களில் திருப்பியனுப்பப்படுவர் எனும் கருணாநிதியின் அறிக்கையை, இலங்கை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா மறுத்துள்ளார். “தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர். இலங்கை அரசின் கொள்கைப்படி தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இலங்கை அரசின் கொள்கை? தமிழர்களை மொத்தமாக குடியமர்த்தி தமிழர் பகுதிகளாக மீண்டும் இருக்கவிடப்போவதில்லை சிங்களவர்களையும் சேர்த்து குடியமர்த்திவிடவேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் கன்னிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இனவழிப்பு முடிந்ததிலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றனர்.

மூன்று லட்சம் தமிழர்களை இத்தனை மாதங்களாக முட்கம்பி சிறைகளுக்குள் ஏன் அடைத்து வைத்திருக்கவேண்டும்? ஏகாதிபத்தியங்களுடனான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சிறப்பு பொருளாதார மையங்களை எங்கு எவ்வளவு அளவில் அமைப்பது எந்த்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றுவது? அவர்களின் வேலை வாய்ப்பிற்கான (அதாவது முதலாளிகளின் தேவைக்கு) கட்டுமானங்களுக்கு யார் பொறுப்பேற்பது? என்பன போன்ற பேரங்களில் இன்னும் நிறைவு எட்டப்படவில்லை. அடுத்து போர்க்குற்றங்களுக்கான தடயங்களை அழிப்பது. இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் தமிழர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். போர் நடந்து கொண்டிருந்தபோது அவர்களின் உரிமைகளைப்பற்றி பேசாமல் தமிழர்களை கொல்கிறார்கள் என்று இரக்கத்தை காட்டி உரிமைகளை மறைத்ததுபோலவே இப்போதும் சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறார்கள், குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள், மாற்றுடை இல்லாமல் அவதிப்படுகிறார்கள், பருவமழை வந்தால் தாங்கமுடியாத துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர்களின் சிரமங்களை காட்டி உண்மையை மறைக்கிறார்கள்.

இங்கிருந்து சென்ற குழு, அது அரசுக்குழுவானாலும் தனிப்பட்ட குழுவானாலும்; அனைத்துக்கட்சியானாலும் தனிக்கட்சியானாலும் தமிழர்களை இத்தனை காலமாய் அடைத்துவைத்திருக்கும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தமுடியுமா இவர்களால்? இலங்கை அரசுக்கு எப்படி அவைகளை மறைக்கும் தேவையிருக்கிறதோ அதேபோல் இந்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த தேவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமா? இதை உணராமல் இன்னும் இந்திய அரசின் தயவில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது. இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையின் முதற்படி.

http://senkodi.wordpress.com/2009/10/24/சிங்களம்-சென்றுவந்தோம்/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்