ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர், உலகையே வளைத்து சூறையாடி கொண்டிருந்தபோது, அவனுக்கும் அவனின் கொடூர நாஜி படைக்கும் தக்க பதிலடித் தந்து, தமிழர்கள் உட்பட்ட உலக மக்களை, பாசிச சக்தியிடம் இருந்து பாதுக்காத்தவர்கள், வீரம் மிக்க ரஷ்ய மக்களும், தந்தை பெரியாரின் பெரும் மதிப்புக்குரிய ஈடு இணையற்றத் தலைவர் ஸ்டாலினும்தான்.

 சோவியத்தில் புரட்சிக்குப் பிறகு, உழைக்கும் மக்களே அதிகாரத்திற்கு வருகிறார்கள். அதன்படியே ரஷ்ய ராணுவத்தில் மிகப் பெரும்பாலும் விவசாயிகளும், கூலித் தொழிலாளிகளும் சிப்பாய்களாகவும், அதிகாரிகளாகவும் பொறுப்பேற்கிறார்கள்.

வசீலி இவானவிச் சுய்க்கோவ் என்பவர் புரட்சிக்கு முன்பு குதிரைத் தளவாடப் பட்டறையில் வேலை செய்தவர். அக்டோபர் புரட்சியில் இவர் பங்களிப்பு மிகச் சிறப்பானது. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பனராகிறார். லெனின் தலைமையிலான அரசின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பேற்கிறார்.

அதற்கும் பின்னாட்களில் தலைவர் ஸ்டாலின் ஆட்சியின்போது 1942-ல் ஜெர்மானிய நாஜி படைகளுக்கு எதிராக இவர் ரஷ்யாவின் 62 -ஆவது படை பிரிவுக்குத் தலைமை ஏற்றார்.  நவீன ஆயுதங்களும், முறையான போர் பயிற்சியும் கொண்ட  நாஜி படைக்கு  எதிராக, சோவியத்தின் எளிய மக்களை கொண்டு, பல புதிய போர் முறைகளை கையாண்டு உலகையே வியக்க வைத்து, நாஜிகளை தும்சம் செய்த, உலகப் புகழ் பெற்ற ஸ்டாலின் கிராட் யுத்தம்இந்தக் குதிரைத் தளவாடப் பட்டறையில் வெலை செய்தவர் நடத்தியதுதான்.

http://3.bp.blogspot.com/_Yth-MzI-wxk/Soz162FB9xI/AAAAAAAATXU/1vUNVtMy2AU/s400/peranmai_.jpg

1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் A zori zdes tikhie. அதன் இயக்குநர்Stanislav Rostotsky. அதன் கதை இதுதான்,

புரட்சிக்கு முன்பு, விவசாயியாக இருந்த ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு சோவியத் ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். 1942ல் – இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்ய எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள்,  நுழைந்த ஜெர்மானியப் படைகளை எதிர்த்து, ஏறக்ககுறைய 50வயதான அவர் தலைமையில் 5 பெண்கள் 16 ஜெர்மானிய நாஜிகளை எப்படி கொல்கிறார்கள்? என்பதுதான் கதை.

http://www.ruslania.com/pictures/big/014381269925.jpgபடத்தின் துவக்கத்தில், கிராமத்தான் தொனியில் இருக்கிற அந்த தளபதியை, படித்த அந்த ஐந்து இளம் பெண்களும்,  அடிக்கடி கிண்டல் செய்வதாக இருக்கிறார்கள். ‘இளமைக்கே உரிய குறும்பு’ எனறு அமைதி காக்கிறார் அவர். பிறகு நாஜிகளுடன் சண்டை செய்யும்போது, போருக்குரிய வியூகங்களை எப்படி  வகுக்கிறார். அந்தப் பெண்களிடம் இருக்கும் வீரத்தை வெளிகொண்டு வந்து  எப்படி புத்திசாலித்தனமாக, வேகமாக இயங்குகிறார், என்பதை பார்த்து வியக்குகிறார்கள் அந்தப் பெண்கள். அவருடன் இணைந்து 16 ஜெர்மானிய நாஜிகளை கொன்று ஒழிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி இருக்கிற பேராண்மை என்கிற தமிழ் படத்தின் மூலக்கதையும் இதுவேதான். ஆனால் படத்தில், கதை S.P. ஜனநாதன் என்று டைட்டில் போடுகிறார்கள். (தெரியாம போட்டுட்டாங்களோ என்னவோ) எண்ணிக்கைகூட அதே 5 Vs 16 தான்.

சமூகநீதி+ஏகாதிபத்திய எதிர்ப்பு = வாழ்க இந்திய தேசியம்

-இதுவே பேராண்மை சொல்லும் நீதி

முதல் பாதி சமூகநீதி வசனங்கள். இரண்டாம் பாதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனங்கள் என்று தமிழாகி இருக்கிறது பேராண்மை என்கிற பெயரில் A zori zdes tikhie.

இந்தப் படத்தை மணிரத்தினமோ, கமல்ஹாசனோ, விஜயகாந்தோ, ஆர்.கே. செல்வமணியோ எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஊடுருவல், இஸ்லாமிய தீவிரவாதி என்று முடிச்சு போட்டு இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநனர் ஜனநாதனுக்கு சமூக நீதி கருத்தும் கூடவே மார்க்சிய அறிமுகம் இருப்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற அடையாளத்திற்காக,  வெள்ளைக்காரர்கள் செய்கிற சர்வதேச சதி என்று முடிச்சு போட்டிருக்கிறார்.

மலைவாழ் மக்களிடமிருந்து, படித்து நல்ல நிலைக்கு வருகிற ஒருவரை, உயர்ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதை எல்லாம் மீறி அவர் எப்படி திறமைசாலியாக இருக்கிறார் என்பதுதான் கதாநாயகனுக்கான பின்னணி. இந்த ‘சமூகநீதி’ அரசியல் பிண்ணனி மரியாதைக்குரியதாகத்தான் இருக்கிறது. இதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை.

ஆனால், மலைவாழ் மக்களிடம் இருந்து வந்த ஒருவர், ‘இந்தியா என் நாடு. அதற்காக நான் என் உயிரைத் தருவேன்’ என்று உரக்கக் கூவுகிறார். மணிரத்தினம் பாணியிலான இந்தப் பார்ப்பன தேசப்பற்றுதான் நம்மை திகிலைடைய வைத்தது.

ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை நின்றது, இந்தியாதான்.  காஷ்மீர் மக்களின் கண்ணீருக்குக் காரணம் இந்தியாதான், மணிப்பூர் மலைவாழ் பெண்களை மானபங்கம் படுத்தி கொலை செய்தது இந்தியாதான், வீரப்பன் இருந்த காட்டில் அங்கிருந்த மலைவாழ் பெண்களிடம் பிறப்புறுப்பில் லட்டியால் குத்தி கொலை செய்ததும் இந்தியாதான் என்கிற உண்மை உரைப்பதால்,

தமிழனாக, காஷ்மீரியாக, மணிப்பூர் மண்ணனின் மைந்தனாக  அவர்களின் பிரச்சினை ஊடாக புரிந்துகொள்ளும்போது ‘இந்தியா என் தாய் நாடு. அதற்காக நான் என் உயிரை தருவேன்’ என்கிற வசனம் படத்தில் வீரமாக வரும்போதெல்லாம், நமக்கு உடம்பு, கூசி கூனி குறுகிபோகிறது.

தேசப்பற்றாளனா? இந்திய அரசின் அடியாளா?

கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையா, தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக திட்டியும், மலைவாழ் மக்கள் என்பதற்காகவே தன் உறவினர்களை  அவமானப்படுத்துகிற உயர் அதிகாரியிடம் சுயமரியாதை மறத்துபோய், அடிமையைப்போல், மவுனம் சாதிக்கிற கதாநாயகன், சர்வதேசிய அரசியல் பேசுகிறான். ஜாதிஆதிக்கத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக போராடத் துப்பில்லாத சிலர், கம்யூனிஸ்ட் என்கிற பெயரில் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக காட்டிக் கொள்வதைப்போல.

சர்வேதச சதி குறித்து மிகத் தெளிவாக பேசுகிற கதாநாயகனுக்கு, இந்திய அரசின் சதிகுறித்து தெரியாதது ஏன்? தெரிந்திருந்தால் அது குறித்து அமைதியாக இருப்பது ஏன்? குறிப்பாக தன் சமூகமான மலைவாழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசு, காவல் துறை, காட்டு இலாக, ராணுவம் செய்யும் கொடுமைகள் குறித்து பேச மறுக்க வைப்பது எது?

இந்திய அதிகாரவர்க்கதின் கீழ் இருக்கும் ஒருவன், அவன் இடஒதுக்கிட்டின் மூலம் பதவிக்குப் போனாலும் அரசின் அடியாளாகத்தான் இருக்க முடியுமே தவிர, தேசபற்றாளனாக, ஒடுக்கப்பட்ட மக்களுககு போராடுபவனாக இருக்க முடியாது. இதுதானே அதற்கு விடை. அதனால்தான் ராஜிவ்காந்தியின் காலத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவத்தில் இருந்த தமிழர்கள், இந்திய ராணுவ வீரனாக  மட்டும் இருந்து  தமிழர்களை கொன்றார்கள்.

ரஷ்ய கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய நாஜிகளுக்கு எதிராக போர் புரிந்த வீரமிக்க ஒரு உண்மை சம்பவத்தை உல்டாவாக்கி, வெறும் சினிமாவிற்காக பொய்யாக இந்திய தேசப்பற்று என்கிற மயக்கப்பொடி தூவியிருப்பதால், புகழ் பெற்ற பைபிளின் இந்த வாசகமே நமக்கு நினைவுக்கு வருகிறது, முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடதீர்கள்

***

முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சேவகனாக இருக்கும் இந்திய அரசு, இந்திய மக்களின் மீது அன்பு கொண்டு அவர்களின் விவசாயத்தை முன்னேற்ற விண்வெளிக்கு ராக்கெட் விடுகிறதாம்.  அதை அன்னிய நாட்டு முதலாளிகள் சதி செய்து  அழிக்கப் பார்க்கிறார்கள். அந்தச் சதியை  மலைவாழ் இளைஞன் மூலமாக தடுத்த நிறுத்தி,  ராக்கெட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கிறது இந்தப் படம்.

படத்தின் முடிவில்,  ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுப் போவதை காட்டுகிறார்கள். அதற்கு பிறகு அதுபோய் கடலில்தான் விழுந்து இருக்கும். அதை காட்டவில்லை. அதுக்கா இவ்வளவு போராட்டம்?

ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானடா மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக, செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நன்றாக கொள்ளை அடிப்பதற்கு பயன்படுகிறது.

‘புதிய பொருளாதார கொள்கை’ என்ற பொய்யான பெயரில் அந்நிய நிறுவனங்களுக்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கிற ஆளும் வர்க்கம், சர்வதேச முதலாளிகளுக்கு எதிராக, இந்திய விவசாயிகளுக்காக அக்கறையோடு ராக்கெட் அனுப்புகிறது என்று நம்புவதுதான் சர்வதேச அரசியலை புரிந்துகொண்ட லட்சணமா?

திருடன் கையிலேயே சாவியை கொடுத்தது போல், இவ்வளவு நாள் இந்தியாவிற்கான ராக்கெட்டை தயார் பண்ணி அனுப்பிக்கிட்டு இருந்ததே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள்தான். அப்போ எங்க இருந்தது தேசப்பற்று?

http://wpcontent.answers.com/wikipedia/en/8/8e/Stanislav_Rostotsky.jpg

இயக்குநர் Stanislav Rostotsky

சுசிலா என்கிற பார்ப்பனப் பெண் அல்லது உயர்ஜாதி இந்துப் பெண் சண்டையில் கொலை செய்யப்பட்ட பிறகு, அவள் வைத்திருந்த ‘பக்தி’ டப்பாவிலிருந்து ‘காக்க, காக்க கனகவேல் காக்க’ என்கிற பாட்டு ஒலிக்கிறது. பெண் போராளிகள் கேட்டு உருகுகிறார்கள். மலைவாழ் கதாநாயகனோ உத்வேகம் பெற்று, மற்ற பெண்களைப் பார்த்து, “பயப்படாதீர்கள் இன்னும் வீரமாக போரிடுங்கள். நீங்கள்தான் துர்க்கை, சூரி, காளி” என்று ஆவேசமாக பேசுகிறான்.

உடனே அந்தப் பெண்கள், தலைமுடியைவிரித்துப்போட்டு, கண் முழுவதும் மை பூசி, தலையில் பெரிய பூ வைத்து ஆவேசமாக வெள்ளைக்காரர்களுடன் சண்டை செய்கிறார்கள். இவர்களை இந்தக் கோலத்தில் பார்த்த உடன், நவீன துப்பாக்கிகள் வைத்திருக்கிற கிறித்துவ வெள்ளைக்காரர்கள் பயந்து ஓடுகிறார்கள். இந்து தான் இந்தியா என்று கிறிததுவ வெள்ளைக்கார்களுக்கு உணர்த்துவதுபோல் இருக்கிறது இந்தக் காட்சி.

இடைவேளைக்கு முந்தியக் காட்சியில், ‘காட்டிற்குள் செல்லும்போது இப்படி தலைவிரித்துகொண்டு போகக்கூடாது’ என்று அஜிதா என்ற பெண்ணுக்கு கூந்தலை இறுக கட்டிவிடுகிற கதாநாயகன்தான், அதே காட்டிற்குள் அதுவும் உச்சகட்ட சண்டைக் காட்சியில் தலைவிரித்து போட்டுக் கொண்டு சண்டை போடச் சொல்லுகிறான்.

எதற்கு இப்படி ஒரு அபத்தமான காட்சி? இது இயக்குநரின் பார்வையா? இல்லை படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அய்யருக்காக வைத்த காட்சியா?

பின்பகுதியில் இப்படி ஒரு காட்சி வைப்பதற்காகத்தான், முன்பகுதியில் புதைக்குழிக்குள் சிக்கி சாவதுபோன்ற காட்சியில் அய்ந்து பேரில் ஒருவரான அஜிதா என்கிற இஸ்லாமிய பெண்ணை பலியாக்கினார்களோ?

“காளி, துர்கை இவைகள் எல்லாம் மலைவாழ் மக்கள் வழிபடும் தெய்வங்கள் அதனால்தான் அதை வைத்தேன்” என்று இயக்குனர் விளக்கலாம்.

ஒரு செய்தியை இயக்குநருக்கு சொல்லவிரும்புகிறோம். இந்தியாவில் இருக்கிற மலைவாழ் மக்களில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் கிறித்துவர்கள்தான். மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில்100 சதவீதம் கிறித்துவர்களால் நிரம்பி மாநிலங்கள்.

***

படத்தில் இயக்குநர் என்ன செய்தியோடு முடித்திருக்கிறாரோ அதே செய்தியை அவருக்கும் நாம் சொல்லி முடிப்போம்.

இயக்குநர் ஜனநாதன் வசனகர்த்தாவாக, உழைப்பு சுரண்டல் குறித்து அதிகம் பேசுகிறார். படத்தின் இறுதி காட்சிகூட கதாநாயகன் செய்த செயல்களை எல்லாம், வேறு ஒரு அதிகாரி தான் செய்ததாக சொல்லி பரிசும் பாராட்டும் பெற்றுக் கொள்கிறார். இந்தப் படத்துக்கும் கூட ஏதாவது தேசிய விருது கிடைக்கலாம். அப்படி கிடைத்தால்,  அது அந்த அதிகாரிக்கு கிடைத்தது போன்ற விருதுதான்.

அடுத்தவர் சிந்தனை, அடுத்தவர் கற்பனையை தன்னுடையதாக சொல்லிக் கொள்வதுகூட சுரண்டல்தான். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிற சமூக நீதி பிரச்சினையின் அடிப்படையே, இதுதான்.

குறி்ப்பு:

‘முற்போக்காளனாக சமூக அக்கறையுடன் படம் எடுக்குறேன்’ என்று இப்படி குழப்புவதை விட, ‘தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன்’ போன்று யாரையும் மட்டம் தட்டாமல், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் படம் எடுததுவிட்டுபோவதுதான், இன்றை தமி்ழ் சினிமாவில் மிகவும் முற்போக்கானது. இப்படி ஒரு எண்ணத்தை எனக்கு தோற்றுவித்ததே, கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்கிற சமூக விரோத படத்தை பார்த்தபோதுதான்.

உண்மையில் தமிழ் சினிமாவில் மகிச் சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தில்லானா மோகனாம்பாளும்’ அதையே உல்டா செய்து, அதைவிட எளிய மக்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்த ‘கரகாட்டக்காரனும்’தான்.

இன்னொரு குறிப்பு:

ராக்கெட், நவீன ரக ஆயுதங்கள், கம்பியூட்டர் மூலமாக இயக்குவது என்று அறிவியலின நவீன கண்டுபிடிப்பு குறித்து படத்தில் நிறைய வருகிறது. இப்படி வந்தால் அதுபற்றி எல்லாம் தெரிந்த ஒரே அறிவாளி சுஜாதாதான். அவருதான்  இதை எல்லாம் சரியா செய்வாரு என்று ஒரு பொய் தமிழ் அறிவாளிகள் மற்றும் சினிமா உலகில் பரப்பப்பட்டிருக்கிறது. அது பொய்தான் என்பதை இந்தப் படத்தில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய சுஜாதா பங்களிப்போடு கமல் நடித்து வந்த ‘விக்ரம்’ போன்ற கோமாளித்தனமான படங்களோடு ஒப்பி்ட்டால், இந்தப் படத்தில் அந்தச் செய்தி அதைவிட சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா போன பிறகு அவர் வேலையை செய்கிற, (அதாங்க அடுத்தவங்க ஆங்கிலத்தில் எழுதியதை மொழிபெயர்த்து தன் பெயரில் போட்டுக் கொள்கிற வேலை.) மதன் போன்றவர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தாமைக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறோம்.

http://mathimaran.wordpress.com/2009/10/22/article-246/