கடந்த மே மாதம் 15ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலின் பின்னர் இலங்கையில் யுத்தம் ஓய்வுக்கு வந்தது. வன்னியில் இருந்த மொத்தம் 3 இலட்டசம் மக்களும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தனர். இம் மக்கள் முட்கம்பி வேலிகளால் அமைந்த இராணுவ தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் மிக மோசமான வாழ்நிலை தொடர்பாக பாட்டம் பாட்டமாகக் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூடவே இவை வாதப் - பிரதிவாதங்களாகவும் அமைந்திருந்தன. முதற் கட்டமாக - வன்னியில் இருந்து வந்த மக்கள் பட்டினி மரணங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. பெரும் தொகையான மக்கள் வெளியேறியதால் சில நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் - வெகுவிரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் எனவும் பிரதிவாதங்கள் அமைந்திருந்தன. (இவைகள் புலிகளின் தலைமை அழிவுக்கு முன்னர்)
புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின் ஒரு மவுன இடைவெளி காணப்பட்டது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டி கே.பி யின் கைதுடன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தாக மாறியது. கிட்டத்தட்ட யூலை கடைசி வாரம் வரை ஊடகங்களின் கண்கள் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாகவே இருந்தது. வெளிநாடுகளில் புலிகளின் இரு துருவப் போட்டியில் கே.பி யை துரோகியாகக் காட்டும் போக்கு வீச்சம் பெற்றது. வாதப் -பிரதிவாதங்கள் முழு மூச்சாக கே.பி யின் துரோகத்தின் அடித்தளத்தில் நின்று கருத்துக்களை வெளியிட்டன.
07.06.09 இல் பெண்களின் நிர்வாணப் படம் ஒன்று வெளியானது. 26.08.09 ஒரு வீடியோ பதிவும் வெளியானது. இதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் பொறி பறந்தன. அரச ஆதரவுத் தளங்கள் இதைப் புலிகள் தான் செய்தனர் என பிரதிவாதமிட்டனர். வாதிகள் அரசுதான் இதைச் செய்தது - அரச இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். (பரிசுகெடுத்த வேணும் என்ற அவா மட்டுமே) இப்படி பல நிகழ்வுகளோடு 5 மாதங்கள் கழிந்தோடியும் விட்டன.
இப்பொழுது அடுத்த பாட்டமாக:
இந்தியாவில் இருந்து ஒரு குழு வன்னிக்குச் சென்றும் திரும்பியுள்ளது. வன்னி மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். அந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அரசுடன் பேசியிருப்பதாகவும் - மழைவரப் போகுது! என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மறுபுறத்தே அரசின் ஊடாகவே வன்னி மக்களுக்கு உதவ முடியும் - வேறு வழி இல்லை - என்ற வாதமும் வலுத்து வருகிறது.
இப்படியாக வன்னி மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடுகளாக ஆக்கி வைத்திருக்கிறது - மகிந்தா அரசு. வன்னி மக்களை யுத்த மழையில் நனைய வைத்து அரசியல் ஆடிய மகிந்தா அரசு - பருவ மழையிலும் இவர்களை நனையவைத்து பெருந் தொகையான மனிதாபிமானிகளை தன்னுடன் அணைத்துக் கொள்ளவும் திட்டமிடுகிறது.
புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்தா அரசு இனி இலங்கையிலுள்ள மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்த மாபெரும் இராணுவமாக உலகத்தில் உயர்த்தியும் காட்டுகிறது. எஞ்சியிருக்கும் வன்னி மக்களின் பிரச்சனையை 180 நாள் - துரித அபிவிருத்தி மீள் குடியேற்றத்தின் ஊடாகவும் தீர்த்து விடுவேன் எனவும் பறைஞ்சிருக்கிறது.
உண்மையில் புலிகளை மட்டும் மகிந்தா அரசு அழித்து விடவில்லை. வல்லரசுகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் நலன்களுக்காக - இலங்கை இராணுவம் என்ற பெயரில் அப்பாவிச் சிங்கள மக்களையும் பெரும் தொகையாகப் பலியிட்டும் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்தபின் தனது மக்கள் விரோத அரசுக்கும் இலங்கை மக்களுக்குமான பிரச்சனைகளை உருத்தெரியாமல் மறைத்து விட வன்னி மக்களை மனிதாபிமான கோலத்தில் வைத்திருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவமாக - இறுமாப்பாக - இவ்வரசு சொல்லுவதன் ஊடாக தனது தரகுவேலையை மறைத்து இனப் பெருமிதத்தை ஆடைவிழுத்தியும் வைத்திருக்கிறது. வன்னி மக்களின் மீள் குடியேற்றத்துக்கு கண்ணி வெடியை நொட்டிச் சாட்டாகவும் வைத்துள்ளது.
இப்படியாக வன்னி மக்களின் பிரச்சனையை முற்றத்தில் வைத்துக் கொண்டு கொல்லைப் புறமாக தனது தரகு அரசியலை அந்தரங்கமாக நடத்துகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனது கை வைத்தியந்தான் சிறந்தது என்று சொல்லும் மகிந்தா அரசு - வல்லரசுகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் ஏவல் வேலையை மறைப்பதற்கு வன்னிமக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை நித்திரைக் குளிசையாக மாற்றியும் கொடுக்கிறது.
கொல்லைப் புறத்திலே - அப்படி என்ன நடக்குது?
பாருங்கோ - யுத்தம் முடிந்த கையோட 180 நாள் அபிவிருத்தி என்று (வடக்கின் வசந்தம்) மகிந்தா துள்ளிக் குதித்தார். பிறகு இந்தியாவிலை இருந்து எம்.எஸ். சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டும் வந்தார்.
விதைப்புக் காலத்துக்கு முதல் தனது கைவரிசையைத் தொடங்க வேண்டும் என்று இவர் 'அம்பியும்' சொன்னார். அப்பொழுதெல்லாம் மிதிவெடி இருக்குதெண்டு இவங்கள் கதையளக்கேலை.
பிறகு சுவாமிநாதன் சென்னைக்குத் திரும்பி இருந்தார். அங்க இவருக்கு நிலமை கொஞ்சம் கரச்சலாகிப் போச்சு. தமிழரைக் கொன்ற மகிந்தா அரசுக்கு தமிழ்நாட்டு அம்பி உதவுவதோ என்று கெடுபிடிகள் நடந்திது. இதைப் பாத்திட்டு தமிழ் நாட்டு அரசு - வேளாண்மை ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டத்தை - போட்டது. இந்தப் புதிய குழு வன்னியில் 5 இலட்சம் ஏக்கர் அபிவிருத்தி திட்டத்துக்கான முதல் வரைபை மகிந்தா அரசுக்குக் கையளித்தது. அப்பகூட இந்த நில வெடிகள் பற்றி மூச்சுக்கூட விடவில்லை மகிந்தா அரசு.
1981ம் ஆண்டின் அரசின் புள்ளி விவரப்படி வன்னிப் பிரதேசத்தில் குடிப்பரம்பலானது ஒரு சதுர கிலோமீற்றருக்கு 94 பேர் ஆகக் காணப்பட்டது. இவ்வாறு அடர்த்தி குறைந்த வன்னியின் பெரும் வெளி நிலப்பரப்பில் புலிகள் என்ன மிதிவெடியை தூவியா விதைத்தார்கள். வன்னி நிலத்திலை காலே வைக்க முடியா கணக்காக இவங்களின் பேச்சு இருக்கிறது.
தமிழ் நாட்டிலை இந்த வேளாண் சட்டம் இயற்றினாப் பிறகு மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஏழை விவசாயிகளுக்கு 120 மில்லியன் டொலரை கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவில இருக்கிற ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் மகளீர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை விவசாயப் பணியில் திருப்பி - இந்தச் சட்டத்தின் கீழ் . முழுமையான வளர்ச்சி பெற்ற - உலக உணவுத் திட்டத்துக்கான - விவசாயிகளாக மாற்றுவதற்கே இப்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் பார்த்தால்:
உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா - உலக உணவுத் திட்டத்தினர் - தலையிலே கை வைத்துப் புலம்பிக் கெர்ண்டிருக்கிறார்கள். வறுமையின் உச்சக் கட்டத்தில் உள்ள ஆபிரிக்கக் கண்டத்தில் 6 வினாடிக்கு ஒருவர் மரணமடைந்து வருவதாக இது கவலை தெரிவிக்கிறது. அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்காக பயிரிட்டுப் பயிரிட்டே ஆபிரிக்காக் கண்டம் தரிசாக்கப் பட்டு விட்டது. இது பற்றி உலக உணவுத்திட்டத்தினர் வாயே திறக்க மாட்டார்கள்.
கெனியாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால் நடைகள் மரித்துப் போய் விட்டதாக இவ் உணவுத் திட்டத்தினர் அறிக்கை இடுகின்றனர். கெனியாவில் வறட்சி இருந்தாப்போல் வருவதல்ல. கால்நடைகளின் மரணம் உற்பத்தியின் குறைபாட்டில் இருந்தே எழுகிறது. ஏகாதிபத்தியத்துக்காக பயிரிடப்பட்ட கெனியாவின் நிலங்கள் கால்நடைகளின் உணவை பூர்த்தி செய்ய முடியாத உற்பத்தி முறைகளைக் கொண்டது என்பதே உண்மை. இதை மறைப்பதற்கு பொல்லாத வறட்சியை தூக்கிப் பிடிக்கிறார்கள். இந் நாட்டில் உணவே கிடைக்காமல் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணத்துடன் போராடி வருவதை இந்த உலக உணவுத் திட்டத்தினர் வெறும் தரவுகள் மட்டத்திலேயே பார்க்கின்றனர்.
உள்நாட்டுப் பசியைப் போக்காத இந்த உலக உணவுத்திட்டத்தின் உற்பத்தி முறையை அனைத்து உலக விவசாயிகளும் நிராகரிக்க வேண்டும். விவசாயமே செய்யாத அமெரிக்காவில் - கொழுப்புப் பிரச்சனையால் மக்கள் திண்டாடுகின்றனர். ஆனால் கெனியா மக்கள் 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டினியுடன் போராடி வருகின்றனர். இது எப்படி சாத்தியம். உழுபவனுக்குப் பட்டினிப் பிரச்சனை. உழாதவனுக்கு கொழுப்புப் பிரச்சனை. சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தின் நடப்புக்களை.
1980ம் ஆண்டுக்குப் பின்னர் விவசாயத்தை உலக நாடுகள் புறக்கணித்து விட்டதாக உலக உணவுத்திட்டத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 17 வீதமாக இருந்த உற்பத்தி நிதி 3.8 ஆக மாறியதாக இது குற்றஞ் சாட்டுகிறது. இலங்கையில் குறிப்பாக (வட - கிழக்கில்-) உற்பத்தி வீச்சத்தால் ஏற்பட்ட கொழும்பு சந்தைப் பிரச்சனை தரகு முதலாளிகளால் - இனக்கலவரமாக - தீர்க்கப்பட்டதை உலக உணவுத்திட்டத்தினர் பேச மாட்டார்கள்.
உலகிலேயே அதிக பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா - மற்றும் பசுபிக் பகுதிகளில் - வாழும் மக்களாகக் கண்டறிந்துள்ளனர் உலக உணவுத் திட்டத்தினர். 2015 க்குள் பட்டினிச் சாவை சரி பாதியாகக் குறைப்பதாக சபதமேற்ற உலகத் தலைவர்கள் தற்போது பட்டினிச் சாவைச் சந்தித்திருக்கும் 30 நாடுகளையும் காப்பாற்றும் பொறுப்பை வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் தலைகளில் சுமத்தியும் விட்டன.
இந்தப் பின்னணியில் தான் இலங்கையின் இறுதி யுத்தமும் நடந்தேறியது. ஆம்- இலங்கையின் யதார்த்த நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது. இலங்கையில் சிங்கள மக்களுக்கான நிலப் பிரச்சனை மிகப் பெரிய பாரதூரமான பிரச்சனையாக வளர்ந்திருந்தது. இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் நிலத்தின் மீது கொண்டிருந்த முன்னுரிமை மிகவும் தெளிவற்ற நிலையிலேயே காணப்பட்டது. காட்டு நிலங்கள் மற்றும் கழிவு நிலங்கள் மற்றும் பயிரிடப்படாத நிலங்கள் அனைத்தும் பிரிட்டிசாரால் முடிக்குரியதாக ஆக்கப்பட்டது. இவர்களின் பெருந்தோட்டங்களுக்காக பல சிங்கள மக்களது விவசாய பயிரிடும் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன. இதன் எதிரொலி இலங்கையின் அபிவிருத்தியான மகாவலி அபிவிருத்தியில் இவை அப்பட்டமாகவே பிரதிபலித்தன.
மறுபுறத்தே உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்ட்டபோதும் - மிக நுண்ணியமான சட்டவரையறைகளைக் கொண்டு யாழ் தமிழ் சமூகம் தமது சொத்துக்களைப் பாதுகாத்தது.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நிலங்களிலேயே இயங்கங்கள் தமது வேலைகளை மேற்கொண்டன. இவ்வாறு நிலப் பிரபுத்துவத்துக்கு தலைமை தாங்கிய தரகு முதலாளித்துவம் நிலத்தைப் பறிக்கவும் - நிலத்தைக் காக்கவும் சண்டையிட்டன. பவுத்த நாடு என்று அது பறிக்கவும் - இது தமிழீழம் என காக்கவும் சண்டை பிடித்தது.
இப்போ நிலைமை மாறிவிட்டது. உலகத்துக்கு பசி என்றால் என்ன என்பது இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. நகரங்களாகவே மாறி வரும் மேற்குலகம் விவசாய நிலங்களை இழந்து விட்டது. குத்தொன நிறுவிய செங்குத்துத் தோட்டமும் அதற்குப் போதுவதாக இல்லை. எஞ்சியிருக்கும் கொஞ்ச நிலத்தில் மிதம் மிஞ்சிய விளைச்சலை அது கோருகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ள சுவாமிநாதன் வெளிக்கிட்டு இருக்கிறார்.
மேற்குலக நாடுகள் எதிர் நேர்க்கி வரும் இயற்கைத் தாக்கங்களை முறியடித்து வளரக் கூடிய விதைகளையும் உலகப் பசியைப் போக்கக் கூடிய உற்பத்திக்கான பெரும் நிலங்களையும் தரகுகள் மூலம் இந்த உலகு கேர்ருகிறது. இந்தக் கோரிக்கையின் முடிவுதான் வன்னிப் பெரும் நிலப்பரப்பைப் பறித்தெடுத்ததாகும். இலங்கையில் பெரும் நிலப்பறிப்பையும் தமிழ்நாட்டில் சொந்த மண்ணிலேயே பயிரிடும் உரிமையையும் ஏக காலத்திலேயே இவர்கள் பறித்துள்ளனர்.
இப்போ இந்த நிலத்தில் பிசகுகள் இல்லாமல் எவ்வாறு பயிரிடுவது என்ற முடிவுக்கு தரகுகள் வரும் வரை வன்னி மக்களை மீளக் குடியமர்த்துவதும் நடக்காது. மேற்குலக நாடுகளுக்கான விதை - உலகத்துக்கான விளைச்சல் போன்ற கொல்லைப் புறத்துச் சமாச்சாரங்களுக்குப் பிறகுதான் வன்னி மக்களின் மூத்திரப் பிரச்சனையும் தீர்க்கப்படும்.
இவர்களின் கொல்லைப் புறத்துச் சூதாட்டத்துக்காக வன்னி மக்கள் தமது இயற்கை உபாதைகளை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். வன்னி மக்களின் மனிதாபிமான பிரச்சனையை - யோக்கராக - வைத்துக் கொண்டு புதிய சீட்டாட்டத்தைத் தொடங்குகிறது மகிந்தா அரசு.
ஆபிரிக்கக் கண்டத்தை தமது வகிறு வளர்ப்புக்காக மட்டுமே கொள்ளையடித்த மேற்குலக ஏகாதிபத்தியம்: அந்த மண்ணை தரிசுக்காடாக்கி அந்தக் கண்டத்தில் பட்டினி மரணத்தை மட்டுமே மிச்சமாக்கியுள்ளது. இன்று தமது எதிர்கால வயிற்றுக் கடிக்காக தமது தரகுகளின் ஊடாக எமது மண்ணில் கழுத்தறுப்பைச் செய்திருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்களின் - கையேந்தி பவானில் - திண்டு திண்டே தொந்தியை வளர்த்துக் கொண்ட தரகுக் குண்டர்கள் குண்டாந்தடியில் மக்களின் அதிகாரத்தை அடக்கி விட நினைக்கிறார்கள். இதற்காக இனவாத நறுமணத்தை பீச்சுகின்றனர். இதை சுகந்த வாசமாகக் காட்டி மக்களின் தலைகளிலேயே ஏறியிருக்க கங்கணம் கட்டுகிறார்கள்.
நாடுகடந்த தமிழீழமும் - பயங்கரவாதம் அழிந்த இலங்கை எனவும் இவர்கள் பூச்சாண்டி காட்டி வருகின்றனர். இலங்கையில் இனவாதத்துக்கு வெளியே மனிதாபிமானம் தலை செழிக்க வாழ்ந்தது. கிழக்கிலே யுத்தத்தின் போது 3 மைல்களுக்கு அப்பால் இருந்து சிங்கள மக்கள் தம் தலைகளிலேயே உணவுப் பெர்திகளைச் சுமந்து வந்து கொடுத்தார்கள். வன்னி யுத்தத்தின் போது சுழற்சி முறையில் முஸ்லீம் சகோதரர்கள் உணவைச் சமைத்தும் கெர்டுத்தார்கள். இவை வெறும் உணவுகள் மட்டுமல்ல உணர்வுகளும் கலந்த அமிர்தம். இதற்கு உரிமை கொண்டாட தரகு முதலாளித்துவம் துடிக்கிறது.
பசியின் கொடுமையையும் யுத்தத்தின் அவலத்தையும் முழு இலங்கை மக்களும் அனுபவித்திருக்கிறார்கள். இதற்கு இன மத வேறுபாடு கிடையாது. வர்க்கப் பாகுபாட்டின் தலைவிதி இது. இதைப் புரிந்து கொள்ளும் வர்க்க சக்திகள் இலங்கைக்கான புரட்சியைத் திட்டமிடுவார்களா? அல்லது மகிந்தாவின் தூக்கமாத்திரைகளை விழுங்கி விட்டு கனவுகளை மட்டும் பினாத்தப் போகிறார்களா?
சுதேகு
181009