Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது.

கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும்  தற்கொலை  என்றுதான் கூறியது.

இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.

குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள்  அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்தன.

மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல்,  ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான்  மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - சி.பி.எம். இன் நில அபகரிப்புஇந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.

கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.

வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய  அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளது.  அனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள்  உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளது.  பால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.

இந்தப் பகுதியில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.  இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர்.  சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர்.  போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.

1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன.  இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.

சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே  அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும்  போலீசு குண்டர் படையினராலும்  மிரட்டப்பட்டனர். குனி,  ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள்  சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.

ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக்  கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்தது.  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்” என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்தது.  அதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.

அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில்  இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம்  வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.

எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர்.  மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான  ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.

சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின்  நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்று.  அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோ “விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாது” என்கிறார்.

மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  பழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.

சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக  மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும்  ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது,  உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009