09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நோபல் பரிசு – புனிதப்பசுக்களின் அரிதாரங்கள்

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் மாயாவதி ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்ல ஏன் அகில உலகமே பெருமைப்பட வேண்டிய விசயமாக இது கூறப்படுகிறது.

பில் கிளிண்டன் உட்பட பலர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் போது ஒபாமாவின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்த இந்த பரிசு உண்மையிலே உயர்ந்தது தான். இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்களும் பட்டயமும் கிடைக்கும். உலகம் முழுக்க இவர் தான் அதுக்கு நோபல் பரிசு வாங்கினார், இதுக்கு வாங்கினார் என்று பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடையச்சொல்கின்றன.

 

வேதியியலின் ஆராய்ச்சிக்கான விருது ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறதாம். பத்திரிக்கை, ஊடகங்கள் எல்லாம் தமிழ் நாடே  புண்ணியம் செய்ததாய் அறிவிப்பினை வெளியிட்டன. எல்லா நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் முதல் செய்தியாய் மிளிர்ந்தது. முதலில் அவர் தமிழரா? அவர் எதைக்கிழித்தார்? அதற்கு நான் ஏன் பெருமைப்படவேண்டும்? அமெரிக்காவில் குடியுரிமை வாங்கி அமெரிக்காக்காரனாகவே வாழ்ந்து வருகின்றவர் எப்படி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்று தான் புரியவில்லை. அமெரிக்காவிற்கு வேலைப்பார்க்கப்போன கல்பனா சாவ்லா, அமெரிக்க நாய்க்கு மணியாட்டப்போனவன் என யாராவது எதையாவது செய்தால் உடனே எல்லோரும் பெருமைப்பட வேண்டுமாம்.

 

எப்படி இந்தியாவினை சுரண்டுகின்ற, மக்களை ஏய்த்து பிழைக்கின்றவர்களுக்கு பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண்,பத்ம விபூஷண் விருதுகள் கொடுக்கப்படுகின்றதோ அப்படித்தான் உலக அளவில் எப்படி முதலாளித்துவத்துக்கு சேவை செய்யலாம், எப்படி மக்களை சுரண்டலாம், இற்றுப்போன முதலாளித்துவத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம்  என  ஐடியா தருபவர்களுக்கு விருதுகள் குவிகின்றன.

obama copy 

எல்லாவற்றிற்கும் ஒரு முத்தாய்ப்பாக நம்ம ஒபாமாவிற்கு கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு எதற்காக கொடுக்கப்பட்டதென்று அவருக்கும் அந்தக்கமிட்டிக்கும் தெரிகிறதா என தெரியவில்லை. ஈராக்கிலே தினமும் நடந்து வரும் குண்டு வெடிப்புக்கள், தானாய் முன்வந்து போராளியாகும் மக்கள் என எல்லாவகை காட்சியும் மாறவில்லை. ஈராக்கிலும், ஆப்கனிலும் படிபடிப்படியாக படைகளை வாபஸ் வாங்குவோம் என தேர்தலின் போது உதார் விட்ட ஒபாமா தற்போது எப்படி அமைதியை நிலை நாட்டுகிறார் என உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

 

அணுஆயுத பரவல் தடைசட்டத்துக்கு பாடுபட்டதாக விருது தரப்பட்டிருக்கிறதாம். ஆப்கனில் தினமும் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் கொத்துக்கொத்தாய் குண்டு வீசும் ஒபாமாவின் ஏகாதிபத்திய அமெரிக்க அரசு எதை தடை செய்தது? கொல்லப்படும் மக்களின் என்ணிக்கையோ பல்லாயிரக்கணக்கில் பெருகிக்கொண்டே போக  இருக்கிற எண்ணைவளத்தினையும் தின்ன முடியாது திணறுகிறார் ஒபாமா. இசுலாமிய நாடுகளுக்குப்பயணம் செய்து நல்லெண்ணத்தை பரப்புகிறாராம் இந்த நவீன மகாத்மா. தேவைப்பட்டால் மகாத்மா தனது மறு உருவத்தைக்  காட்டவும் தயாராகவே இருக்கிறார். அது நல்லெண்ணத்தை பரப்புவதல்ல, இசுலாமிய மக்களிடம் உள்ள அமெரிக்க எதிர்ப்பு உணர்வை மழுங்கடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதுதான் இசுலாமிய நாடுகளுக்கு ஒபாமாவை கட்டி இழுத்து வந்திருக்கிறது. ஜார்ஜ் புஷ்க்கும் ஒபாமாவுக்கும் என்ன வித்யாசம் ? பீஜேபிக்கும் நம்ம காங்கிரசுக்கும் உள்ள வித்யாசம் தான் அது. இவ்விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதன் பெருமை புஷ் யையே சாரும். அவர்   நேராய் போட்ட சாலையை ஒபாமா சற்று வளைந்து நெளிந்து கட்டியிருக்கிறார் அவ்வளவுதான். ஒபாமா என்பது தனி நபராக இருந்தாலும் அமெரிக்க அதிபர் என்பது தனி நபர் அல்ல. முதலாளித்துவ ஏகாதிபத்தியம் பிரச்சினைகளிலிருந்து மாறு வேசம் போட்டிருக்கிறது. வேசங்கள் மாறும் தேவைக்கேற்ப.

 

சீர்கெட்டுப்போன அமெரிக்க பொருளாதாரம் புழுத்து நாறிப்போய்விட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கத்தில் பஞ்சை பராரிகள் உலவ ஆரம்பித்து விட்டார்கள். உலகிற்கே பொருளாதாரத்தை சொல்லிக்கொடுத்த நாட்டில் ரொட்டிக்கு கியூ வரிசையின் நீளம் அதிகமாகிக்கொண்டே போகிறது.


மாற்றத்திற்கான நபராக சொல்லப்பட்ட நபரான ஒபாமாவால் எதையும் செய்ய முடியவில்லை.  என்ன செய்ய முடியும் இழவு வீட்டில் குத்தாட்டம் போடுவதைத்தவிற. குத்தாட்டம் போடும் இந்த ஆடுகாலிக்குத்தான் அமைதிக்கான நோபல் என்ற அரிதாரம் பூசப்பட்டிருக்கிறது.

 

எப்படி பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதற்கும், நிலவில் சந்திராயன் அஸ்தமானதற்கும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டானோ அப்படி ஒபாமாவின் விருதுக்காக அமெரிக்கர்கள் பெருமைப்பட்டாக வேண்டும். அவர்கள் மட்டுமல்ல உலகப்போலீசின் தலைமை அதிகாரி பதக்கம் வாங்கியதற்கும் நாமும் சேர்ந்து பெருமைப்பட்டாக வேண்டும். ஏனெனில் ஒபாமா தனிப்பட்ட அமெரிக்காவுக்கானவரா என்ன? அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்க்கிறது. அடுத்த முதலாளியை எதிர் நோக்கி சுரண்டல்காரர்கள் காத்திருப்பது ஒன்றும் புதிதல்ல, ஆனால் மக்களையும் அப்படி பழக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒபாமாவை அவன் என்று சொன்னால் போதும் பலருக்கும் அப்படி ஒரு கோபம் என்னதான் இருந்தாலும் அமெரிக்க அதிபர் மரியாதையாக பேசுங்கள் என்கிறார்கள். நமது ஆயிரக்கணக்கான நெல் வகைகளை கொள்ளையடித்து விவசாயிகளை தற்கொலைக்குத்தூண்டி,  நெசவாளர்களின் கழுத்தினை நெறித்து, தொழிலாளார்களின் வாழ்வினை முடக்கிய முதலாளித்துவத்தின் தலைமை பீடத்தின் அதிபரை நான் ஏன் மரியாதையாக பேச வேண்டும்?

 

ஒபாமா பதவியேற்றவுடன் ஏன் அவர்தான் ஆட்சியை பிடிக்கப்போவதாக சொன்னவுடனே  நம்ம ஊர் பத்திரிக்கைகள் அவரின் சுய சரிதயை எழுதித்தள்ளின. அவரின் வாழ்க்கைக்குறிப்பு தேவையான ஒன்றாக மாற்றப்பட்டது. அவருக்கு மகாத்மான்னா ரொம்பபிடிக்கும், இந்தியாவ ரொம்ப லைக்பண்ணுவாரு என்று கிறுக்கித்தள்ளின. ஒரு கறுப்பினர் இப்போது தான் முதன் முறையாக ஆட்சியை பிடித்தார் என புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் எல்லாம் அவரின் பொருளாதார தகதிமியை பார்த்து வாய் மூடிக்கிடக்கின்றன. முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அமெரிக்காவின் முதலாளித்துவம் நாறிக்கிடக்கிறது. கருப்பினத்தவரின் வாழ்க்கையை சிறிதும் அனுபவிக்காத ஒபாமா கருப்பினத்தவரின் பிரதி நிதியாக முன்னிறுத்தப்படுகின்றார். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதி நிதியாக மாயாவதி முன்னிறுத்தப்படுவதைப்போல.

 

ஈராக், ஆப்கனில் நேரடியான போரினை இன்னமும் அதிதீவிரப்படுத்தியும், உலக நாடுகளை சுரண்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் நாட்டின் அதிபருக்கு தேவைதான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு. புவி வெம்புதலுக்கு (global warming)அமெரிக்கவிலிருந்து வெளியாகும் வாகனப்புகை அதிக பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சரி ,அணு ஆயுதங்களை போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து


உலகை கொள்ளையடிக்க கிளம்பியுள்ள ஏகாதிபத்திய தலைமைக்கு கொடுத்த இந்த பதக்கம் அது உலகின் எந்த ஒரு நாட்டையும் கொள்ளையடிக்க ஏக போக உரிமை அளிக்கப்பட்டதையே காட்டுகிறது.

 

தன் மக்களை  முன்பு நுகர்வியல் போதையில் ஆழ்த்தி பொருட்கள் வாங்கி குவிக்கவைக்கப்பட்டதைப் போன்று இப்போது ஏதும் செய்ய முடியவில்லை. தன்னுடைய நிலையை சீர் செய்ய ஈராக்கில் ரத்த கவுச்சியில் எண்ணை¨யில் ஒரு சொட்டினை நக்கக்கூட முடியாது விழி பிதுங்கி நிற்கும் அமெரிக்கா, தன் மக்களை ஏமாற்ற செய்யும் புது தந்திரம் தான் இந்த நோபல் பரிசு.  புஷ், ஒபாமா, இன்னும் மபாமா என யார் வந்தாலும் ஏகாதிபத்தியம் மோதி வீழ்த்தப்படாத வரை அதுதன் வேலையை காட்டிக்கொண்டுதானிருக்கும். மக்களின் எதிர்ப்பு வரும் போது புஷ் முகமுடி போய் ஒபாமா முகமுடி வரும். தன் அதிபரின் புகழைப்பாடிய படியே மக்களை இருக்கச்சொல்கிறார்கள். வயிற்றில் பசி இருக்கும் வரை எதைப்பாடுவார்கள் “முதலாளித்துவம் ஒழிக” என்பதைத்தவிர.

 

http://kalagam.wordpress.com/2009/10/19/நோபல்-பரிசு-புனிதப்பசுக/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்