பிரபாகரனின் சகாப்தத்தின் முடிவின் மேல், அரச பாசிசமும் புலியெதிர்ப்பு அரசியலும்

மண்ணில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின், அரசுக்கு எதிரான பொது அரசியல் என்பது படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றது. தனித்துவமான சுதந்திரமான அரசியல், அரச பாசிசத்தின் முன் சிதைந்து போகின்றது. இன்று இலங்கையில் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது, பயங்கரவாதமாகிவிட்டது. இந்த அரச பாசிசத்தைப் பற்றி பேசுவது, கைதுக்கும் படுகொலைக்குமுரிய ஒரு அரசியல் செயலாகிவிட்டது.

இன்று இலங்கையில் இதுதான் நிலைமை. புலத்திலும் இந்த நிலைமையை உருவாக்கவே, அரச பாசிசம் தீவிரமாக முனைகின்றது. அரச பாசிசத்துக்கு அஞ்சி வெளியேறிய சிங்கள ஊடகவியலாளர்கள் முதல் புலத்தில் இயங்கும் சொத்துப் புலிகளை கருவறுப்பதில் தீவிரமாக அரசு களமிறங்கியுள்ளது. இந்த வகையில் அரச உளவுப்பிரிவு, தீவிரமாக புலத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்காக பாரிய நிதியை ஓதுக்கியுள்ளது. எல்லாம் விலை பேசப்படுகின்றது. 

 

இதன் மூலம் தமது பாசிசத்தை நிறுவ ஆள்காட்டிகள் முதல் தமக்கு ஏற்ற ஒரு அரசியல் தளத்தையும் உருவாக்க முனைகின்றது. இப்படி புலத்தில் அரச பாசிசத்தை நிறுவ, புலியெதிர்ப்பு பேசியவர்களே தூணாக துணையாக இன்று நிற்கின்றனர். இவர்களே கடந்தகாலத்தில் புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு "ஜனநாயகம்" பேசியவர்கள். அத்துடன் தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் தொடக்கம் பின்நவீனத்துவம் வரை பேசியவர்கள்.

 

புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஏற்ப இதையே சந்திப்புகளில், கலந்துரையாடல்களில் ஓதியவர்கள். இன்று இதைப் பேசியபடியே அரச பாசிசத்தை தங்கள் தலையில் வைத்து ஆடுகின்றனர். வெறுக்கத்தக்க இவர்களின் நடவடிக்கைள் மூலம் இவர்கள், மக்களைச் சார்ந்து நிற்கும் அரசியலுக்கு எதிரானவர்கள். அதைக் கோருபவர்களை வெறுக்கும் இவர்கள், அரசுக்கு ஆள்காட்டிகளாக காட்டிக் கொடுக்கும் கும்பலாக இன்று மாறி நிற்கின்றனர். அரசுடன் சேர்ந்து நடத்தும் இந்த பாசிசமயமாக்கலை மூடிமறைக்க,

 

1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ற நாடகம்

 

2. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசுடன் பேசியே தீர்வு காணமுடியும் என்ற சூழ்ச்சி அரசியல்

 

இப்படி இந்த இரு தளத்தில் களமிறங்கி நிற்கும் இந்த அரசியல் பின்னணி என்பது, அரச பாசிசத்தை புலத்தில் உருவாக்கும் ஒரு சதி முயற்சியாகும்.

 

மக்களைச் சார்ந்து நிற்காத, புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படை மக்களுக்கு எதிரானது. அத்துடன் பாசிச அரசைச் சார்ந்து நின்று, மக்களுக்கு ஒருக்காலும் உண்மையாக சேவையாற்ற முடியாது. இங்கு உதவி மற்றும் தீர்வு பற்றிய அனைத்து கூத்தும், அரச பாசிசத்தை மூடிமறைத்து வளப்படுத்துபவன தான்;. இதன் மூலம் மக்களுக்கு உண்மையான உதவியையோ, தீர்வையோ ஒருக்காலும் வழிகாட்ட முடியாது.

 

மக்களைச் சார்ந்து நிற்காத, மக்களை செயலில் இறக்க முனையாத, சதி அரசியலையே தனிநபர்கள் முதல் சிறு குழுக்கள் வரை அரசைச் சார்ந்து தங்கள் அரசியலாக முன்தள்ளுகின்றனர். உண்மையில் அரச பாசிசத்தைப் பலப்படுத்தும் சதியின் பின்னணி;யில், பல அப்பாவிகள் பலியாகின்றனர். "ஏதாவது செய்ய வேண்டும்", "பாதிக்கப்பட்;டவர்களுக்கு உதவ வேண்டும்" என்ற ஆவலால், அவர்கள் இந்த பாசிச மயமாக்கல் அரசியலை புரிந்து கொள்ளமுடியாத ஒரு சூக்குமத்தில் பலியிடப்படுகின்றனர்.

 

இதையே முன்பு புலிகள் செய்தனர். தமது குறுந்தேசிய பாசிசத்தை தேசிய விடுதலைப்போராட்டம் என்றும், தம்மை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்றும் கூறியே, அப்பாவிகளை பலியிட்டனர். ஏன் தம் பக்கம் நிற்கவும் வைத்தனர். மக்களை சார்ந்து நிற்கும் போராட்டத்தை நிராகரித்தனர். மக்களை சார்ந்து நிற்கும் அரசியல் அடிப்படையை மறுதலித்தனர்.

 

இதைவிட்டால் வேறு வழி கிடையாது என்பதே இதை நியாயப்படுத்தும் அரசியல் அடிப்படையாக இருந்தது. புலிகள் மட்டுமல்ல, அரசுடன் சேர்ந்து நிற்கும் கும்பலும் இதையே செய்கின்றது.

 

அரசுடன் பேசுவது, உதவுவது என அனைத்தும் மக்களைச் சார்ந்து நின்று செய்யப்பட வேண்டும். இப்படிச் செய்யாத, செய்ய முனையாத அனைத்தும், திட்டவட்டமாக  மக்களுக்கு எதிரானது. இது கடந்த காலம் மட்டுமல்ல, நிகழ்கால அரசியலாகவும் உள்ளது.

 

புலிப் பாசிசத்துக்கு பதில் இன்று அரச பாசிசத்தை மண்ணில் மட்டுமல்ல புலத்திலும் நிறுவ முனையும் ஒரு எதிர்ப்புரட்சி அரசியலாக இது மாறி நிற்கின்றது. இது தலித்தியம், பெண்ணியம், ஜனநாயகம்… என்று, தனக்கு தானே வேஷம் கட்ட தயங்கவில்லை.

 

இந்த எதிர்ப்புரட்சிக் கும்பலை இனம் காணவும், அவர்களை அம்பலப்படுத்துவதும், இன்றைய உடனடி அரசியல் கடமையாக உள்ளது. புலிப் பாசிசத்துக்கு பதில் அரச பாசிசம் புதிய வடிவில், தமிழ் மக்களை அடக்கியொடுக்க நாம் துணை நிற்க முடியாது. நாம் அதை அனுமதிக்கவும் முடியாது.   

  

பி.இரயாகரன்
19.10.2009