அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்.

 

இப்படி பேசுபவர்கள் எவரும் மக்கள் அரசியல் என எதையும் முன்வைப்பது கிடையாது. கடந்தகாலத்தில் புலியெதிர்ப்பு அரசியலுக்கு வெளியில், எதையும் மக்களுக்காக வைத்தது கிடையாது. இன்று மகிந்தாவின் பாசிச அரசியலை மூடிமறைத்து முன்வைக்கின்றனர்.

 

இன்று இப்படி செயல்படுவதுதான், புலியல்லாத மாற்று அரசியல் தளத்தில் செயலுக்கான ஓரே வழி என்கின்றனர். தமிழ் மக்கள் இதற்கு பின் அணி திரள்வதுதான், உடனடிக் கடமை என்கின்றனர். இதனடிப்படையில் நாட்டுக்கு நாடு பல கூட்டங்களையும், சந்திப்புகளையும் நடத்துகின்றனர். இலங்கை அரசுடன் தொடர்ச்சியான உதிரியான சந்திப்புகளை நடத்துகின்றனர். இது ஒரு புறம். மறுபக்கத்தில் இலங்கை அரசு தன் தூதரகங்கள் மூலம், புலம்பெயர் சமூகத்தை அடக்கியொடுக்க முனைவதை பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இதற்கு பெருமளவு நிதியை, வாரி இறைக்கின்றது. இதன் மூலம் தனக்கான செயல் வீரர்கள் முதல் ஆள் காட்டிகள் வரை உருவாக்கி வருகின்றது.

 

இப்படி வன்னி முகாமுக்கு உதவுவது தொடங்கி அரசின் ஒடுக்குமுறைக்கு ஏற்ப செயல்படுவது வரை, எல்லாம் ஒரே அச்சில் இன்று செயல்படத் தொடங்கியுள்ளது. இப்படி புலியல்லாத மாற்று அரசியல், மகிந்தாவின் பாசிச சிந்தனையாக இன்று வெளிவருகின்றது. இதற்கு அமையவே ஆளுக்காள் அரசியல் தத்துவ விளக்கங்கள் தருகின்றனர். இது தலித்திய வேஷம் போட்டுக் கொண்டு அரசியல் மயமாகி நிற்கின்றது. 

 

மக்களுக்கு "உதவி" என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்ட மகிந்த அரசியல், புலியல்லாத தளத்தில் தமிழ்மக்கள் தமிழ் மக்களுக்கு உதவவில்லை என்ற அரசியல் பூச்சாண்டியைக் காட்டுகின்றது. இதுதான் இதன் பின் உள்ள, மகிந்த சிந்தையின் பாசிசமயமாக்கலாகும்.

 

புலிகள் இருந்தபோது கூட, புலிகள் அல்லாத தளத்தில் சுதந்திரமாக மக்களை சென்றடைந்த உதவிகள் பற்பல. அவை பல தொடருகின்றன. புதிதாக பல இன்று உருவாகின்றது. ஆனால் அவை புலியையோ, அரசையோ சார்ந்து இயங்குவதில்லை. இவைகள் பொதுவாக சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் அந்த மக்களை சார்ந்து நேரடியாக இயங்குகின்றது. இவைக்குள் முரண்பாடுகள் இருந்த போதும், மிகச் சரியான ஒரு நடைமுறை. அரசு புலி அல்லாத தளத்தில், மக்களை நேரடியாக சார்ந்திருப்பவை. 

  

ஆனால் அரசைச் சார்ந்து இயங்கும் புலியெதிர்ப்பு பிரிவுகளின் உதவிகள் அப்படிப்பட்டவையல்ல. அவை மக்கள் விரோத அரசியல் சார்ந்தது. மக்களின் எதிரியுடன் சேர்ந்து, மக்களின் முதுகில் குத்துவது. மகிந்த சிந்தனைக்கு ஏற்ப, தம்மை ஒருங்கிணைத்தவை. அதற்கு அமைவாக இயங்குபவை. மக்களை ஓடுக்கிய இந்த அரசின் விளைவுக்கு ஏற்பவும், தொடர்ந்தும் ஒடுக்குவதற்கான தேவைகளையும் பூர்த்தி செய்யும் "உதவிகள்" இவை. இதுதான் இந்த உதவியின் அரசியல் அடிப்படை. 

 

மக்களை கொன்றும், அவர்களை சிறையில் அடைத்தும் வைத்திருக்கும் அரசின் குற்றங்களை மூடிமறைக்க, முன்தள்ளும் "மக்கள் அரசியல்". இந்த "உதவிகள்' படம் காட்டும் அளவுக்கு மிகச் சிறியது. ஆனால் அரசியல் ரீதியாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசின் பக்கம் கைக் கூலிகளாக்கும் வகையில், இது மிகப் பெரியது. அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றி, அரசின் பக்கம் நிற்குமாறு கோhர "உதவி" என்ற காட்சிகளும் நாடகங்களும் இன்று இவர்களுக்கு உதவுகின்றது. அரசுடன் நிற்கும் கூலி குழு உறுப்பினர்கள் முதல் சமூகத்தில் கல்வி பட்டங்களை கொண்டு ஏமாற்றுபவர்கள் வரை, ஓரே தடத்தை பிடித்துக் கொண்டு சமூகத்தை மகிந்த சிந்தையின் பின் இழுக்கின்றனர்.  

 

இது மக்களுக்கு நேரடியாக உதவுவதில் இருந்து வேறுபட்டது. அவையோ இந்த சமூகத்தில், இவர்களுக்கு வெளியில் செயலில் இருக்கின்றது. இவர்களைப் போல், புலி எதிர்ப்புடன் அரசு சார்புடன் தம்பட்டம் அடிப்பதில்லை.

 

இங்கு இந்த அரசியல் சூக்குமம் இது புலியெதிர்ப்புடன், அரசு சார்பாக இருப்பது தான். உதவி, அரசியல் தீர்வு பற்றிய அரசுடன் சேர்ந்து நிற்கும் இவர்கள், புலியெதிர்ப்பு அரசியலை தங்கள் அரசியல் அடிப்படையாகக் கொண்டவர்கள். தாங்கள் அரசியல் செய்வதில்லை என்பது, சாராம்சத்தில் புலியெதிர்ப்பு அரசியலையும், அரசு சார்பு அரசியலையும் செய்வதை மூடிமறைக்கும் குள்ள அரசியல் தந்திரம் தான்.

 

தமிழ்மக்களுக்கு நேரடியாக உதவுபவர்கள் பலர் இருக்க, இவர்கள் இதற்கு வெளியில் புலியெதிர்ப்புடன் அரசு சார்புடன் ஆர்ப்பாட்டமாக கூட்டங்களை சந்திப்புகளையும் தொடர்ந்து நடத்துகின்றனர். இது பேரினவாத பாசிச அரசிற்கான அரசியல் அடிப்படையை புலத்தில் உருவாக்கும், அரசியல் சூழ்ச்சிகள் தான். இதற்கமையத்தான் இலங்கை அரசும், இலங்கை தூதரகங்களும், இவர்களுடன் ஒன்றுபட்டு இன்று செயல்படுகின்றது. இதற்கு வெளியில் இலங்கை அரசு, புலம்பெயர் மக்கள் மத்தியில் தனியாக செயல்படவில்லை.

 

இன்று புலம்பெயர் சமூகம், அரசின் இந்த 'உதவி" என்ற அரசின் சூக்குமத்தையும், அதன் கபடத்தையும் புரிந்து கொள்வது அவசியமானது. தமிழ் மக்களின் குரலை புலிகளின் பாசிச அரசியல் மூலம் மண்ணில் கொன்றவர்கள், புலத்தில் அதை கழுவறுக்க பல வேஷமிட்டு களமிறங்கி வருகின்றனர். அது புலியெதிர்ப்பு அரசு சார்பாகவே இன்று புலத்தில் புழுத்து வருகின்றது. இதை இனம் கண்டு, அம்பலப்படுத்தி போராட உங்களை அழைக்கின்றோம்.

 

பி.இரயாகரன்
16.10.2009