உண்ணாவிரத மேடையோரம்
அமைக்கப் பட்டிருந்தது
ஓட்டுச் சாவடி
பசித்திருந்த மனிதர்களின்
அணைப்பிலிருந்தன
செத்துப் போன குழந்தைகள்.
பந்தல் அலங்காரச் சேலைகளில்
தெறித்திருந்தன
ரத்தங்களும் தசைகளும்..
நிவாரண நிதியில்
வாங்கிக் குவிக்கப்பட்ட
சவப் பெட்டிகளுக்கு
போதாதிருந்தன
பிணங்கள்.
ரத்தம் சொட்டும்
உடைந்த கையொன்றை
முடிவிடத்தில்
பற்றியிருந்தது மனிதச் சங்கிலி
புள்ளடியினிடத்தில்
இரு எலும்புகளைக் கண்டதாய்
மிரண்டவரின்
ஆட்காட்டி விரலில் தெளிக்கப்பட்டது
ரத்தம்.
முப்பத்தாறு மைல்களுக்கப்பால்
மூளை சிதிறித் தனித்திருந்த
தலையொன்றின்
கடைவாயில் வழிந்து கொண்டிருந்தது
ஒரு புன்னகை
March-11-2009