இரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்
முகாம் கூடாரத்து மூலையில்
யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....
உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்
நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்
இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க
இராயினாமா கடிதப்போர்
மனிதச்சங்கிலி மூன்றுமணிநேர பட்டினிப்போரெடுத்த
தமிழ்மானத்தலைவரின் வாரிசுகள்
சீனத்து ஆக்கிரமிப்பு சிறிலங்காவில் படியாது
இந்திய இறையாண்மை காக்கும் தேசபக்தர்கள்
மகிந்தவின் சங்கடத்தைப் புரிந்துகொண்ட
சாணக்கியரின் மந்திரிகள்
அமைதிப்படையிடம் அக்டோபர் 11இல்
பிள்ளைகளைப் பறிகொடுத்து
காயத்துடன் தப்பிய பேரக்குழந்தை
வளர்ந்து பெரியவனாக
புலியெனப் பிடித்து நன்நடத்தைப்பள்ளியில்....
யாரிவர்கள் இன்னமும் அதேநாளில் .........
தமிழகத்து அரசியல்வாதிகள்
பரந்துகிடக்கும் வெள்ளைக் கூடாரங்களின்
அழுகுரல்களை மாற்றுதற்கு
நடுவண் அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்போகும்
தொப்புள்கொடி உறவுகள்
தூ...
தமிழ்நாட்டுச் சனம்தான்ரா
எங்கட தொப்புள்கொடி உறவுகள்.........
அடுத்த முகாமிற்கு நகரும் அவசரத்தில்
பிரமுகர்கட்கு கேட்டதோ இல்லையோ