“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார்,
அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,
“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.
“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.
தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.
“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51
ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?
சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”
இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”
அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.
குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”
இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,
“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”
முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?
முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.
நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?
கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?
http://senkodi.wordpress.com/2009/10/07/குரானின்-சவாலுக்கு-பதில்/