பெண்ணின் பெரும்பேற்றில் பிறந்த உலகே
கண்முன்னே
கருவைத் தாங்கும் தாயை
தெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்.......
தன்மண்ணில் தவளவிடும் கனவுடன்
கருவறையின் உதைப்பில்
பொறு மகவே என்கிறது தாய்மை
பிரசவ வலியல்ல
பிள்ளையின் நாளைய வாழ்வே
பெருவலியாய் துடிக்கிறது..........
கருவின் நாளொரு வளர்ச்சி
தாயின் இடப்பெயர்வில் கடந்து போனது
கோரப்படைகள் குண்டெறிந்து நகர நகர
ஓடியோடியே நந்திக்கடல்வரை
உயிரைக்காத்த தாய்மை
செல் பிளந்தெறிந்த உறவுகள் தவிப்பில்
அழுதழுதே நாட்கள் நகர்ந்தது
மனிதமிலா ஈனக்கொடுமுலகே
வான்பிளந்து கொட்டிய குண்டெல்லாம்
அள்ளிக்கொடுத்து
அருகிருந்து வழிநடாத்தி என்ன கண்டீர்
தாய்மையின் தவிப்பெலாம்
தன்வீட்டு முற்றத்து மண்ணில்
கால்நீட்டியிருந்து சுற்றம் உறவென
சொல்லி வாழ்வதற்காய்.....
குண்டு துளைத்த தாயின் குருதியில்
பேதலித்துப்போன பிள்ளை பேத்தியின் மடியில்
தள்ளாடும் வயதிலும் தாய்மையது....
உள்ளக்கொதிப்பெல்லாம் தொப்புள்கொடியோடி
தாயின் பெருவலியை
நாளை தகர்கும் சக்தியுடன் பிரசவிக்கும்.