2000-தில் எனது கல்லூரி நண்பர்கள், Y2K (2000 ஆம் ஆண்டு கணினி எண் முறை பிரச்சனை) பிரச்சனையால் அவதிப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அப்போது நண்பர்கள் தனது கம்பெனியில் வேலையில் நீடிக்கிறார அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டாரா என்பதை வேடிக்கையாக பின்வருமாறு சொல்வார்கள்.

“காலையில் கம்பெனி நுழைவாயிலில் தனது ஐடி கார்டு வேலை செய்தால் அவர் வேலையில் நீடிக்கிறார் என்று அர்த்தம், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று அர்த்தம்”.

அப்போது, நான் Y2K பிரச்சனையால் வேலை போகிறது என்று நினைத்தேன். சரி, இனிமேல் அந்த Y2K பிரச்சினை தான் வராதே என்று நினைத்து சந்தோசப்பட்டேன். அன்று, எனது நண்பர்கள் அனைவரும் திருமணம் ஆகாதவர்கள். ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை.

ஆனால் எனது சந்தோசம் அதிக நாள் நீடிக்கவில்லை. மீண்டும், 2008-ல் பொருளாதார வீழ்ச்சி வந்த போது எனது சமுதாய புரிதல் அனைத்தும் சுக்கு நூறாகி வெடித்தது. ஏனென்றால், இனிமேல் பணி நீக்கம் என்பதே வராது என்று நம்பிகொண்டிருந்த எனக்கு அடிமேல் அடி விழுந்தது. ஒன்று ஐ. டி. வேலை பணி நீக்கம், மற்றொன்று எனது நண்பர்களின் குடும்பம். 2000-தில் அவர்களுக்கு குடும்பம் இல்லை. ஆகையால், வேலை போனால் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால், இப்போது அவர்களை நம்பி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டு கடன், வண்டி/கார் கடன், போன்றவற்றால் அவர்களின் பணி நீக்கம் என்பது எவ்வளவு கொடுமை என்று உணர்ந்தேன்.

இப்போது புரிகிறது, பொருளாதார வீழ்ச்சி என்பது நிரந்தரம் என்று. அவ்வப்போது ஏதாவது காரணம் சொல்லி மறைத்து விடுகிறார்கள். ஏன் இந்த மூடு மந்திரம்?

தற்போது செய்திதாள்களில் வரும் சில செய்திகளை பார்த்தால் பொருளாதார வீழ்ச்சியின் கொடூரமுகம் தெரியும் என்பதால், கீழே சில செய்திகளின் தலைப்பை மட்டும் கொடுத்துள்ளேன்.

வேலை பறிபோகும் அபாயத்தில் ஐடி ஊழியர்கள் – மனநல மருத்துவரிடம் படையெடுப்பு (தினகரன், 28/06/2009)

பொருளாதார வீழ்ச்சியின் விளைவு – மாரடைப்பு மற்றும் தற்கொலைகள் (டைம்ஸ் ஆப் இந்தியா, 10/07/2009)

10,000 பேர் சத்தியம் கம்பெனியில் வேலை நீக்கம் – அரசு கைவிரிப்பு (டைம்ஸ் ஆப் இந்தியா)

வாடகைத் தாய் ஆகும் ஐடி பெண்கள் (ஜூனியர் விகடன்)

இது தான் பொருளாதார வீழ்ச்சியின் உண்மை முகம். இந்த பொருளாதார வீழ்ச்சி என்ற கொடும் நோயை போக்கும் மருந்து என்ன? ஏன் இந்த பொருளாதார வீழ்ச்சி வருகிறது?

உற்பத்தி என்பது இலாபத்திற்காக மட்டும் என்று இருக்கும் வரை இந்த நோயை தீர்க்க முடியாது. நிறைய குடும்பங்களும் தெருவுக்கு வருவதை தடுக்க முடியாது.

-நந்தன்

http://rsyf.wordpress.com/2009/09/23/பொருளாதார-வீழ்ச்சி-ஐ-டி-வ/