ஒவ்வொரு நாளும்
செய்தித்தாள் வரிகளில்
இந்த இரண்டு சொற்களில்
நின்று தயங்குகின்றன
கண்கள்.

உறைந்து நிற்கும்
புகைப்படத்திலிருந்து
ஒரு மெளன ஓலம்
மெல்ல எழும்பி
காதுகளை அடைக்கின்றது.
சட்டெனக் கடந்து
தாள் திருப்புகையில்,
சடாரென அடங்குகிறது
வலி.

செய்தித்தாளை
மூடி வைக்கையில்
கண்களுக்குள் மெல்ல எழும்பும்,
ஒரு கப்பல்…

ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட
கறுப்பின அடிமைகள்,
சரக்குகளோடும், கால்நடைகளோடும்
கொத்தாக மூட்டை கட்டப்பட்டு,
அமெரிக்காவிற்கு பயணிக்கும்
ஒரு கப்பல்…

barbed wire fence

நான் வாழாத காலத்தின்
வரலாற்றுக் காட்சி விரிதலின் தொடர்ச்சியில்,
தீடீரென கண்களை உறுத்தி
பிரக்ஞையை கேள்விக்குள்ளாக்கும்,
கப்பலைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும்
முள்கம்பி வேலிகள்.

அவ்வேலிகளில் மோதும்
காலத்தின் குடுவை
நிலைகுலைந்து மிதக்கும்.

அதோ,
வருங்காலத்தில் ஒருவன்
இன்றைய செய்தியை
வரலாறாக படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனது கண்களில் அதிர்ச்சியும்,
குரலில் ஆத்திரமும் பொங்க
என்னை நோக்கி கத்துகிறான்.

“நீங்கள் எல்லோரும் அப்பொழுது
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

நிகழ்காலத்தின் மெளனம்
வருங்காலத்தின் மரணமாக மாறி நிற்கும்.
ஆனால், அவனது கேள்வி
வருங்காலம் முழுதும்
மரிக்காமல்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.

http://porattamtn.wordpress.com/