அந்தப்படங்களை பார்த்தீர்களா
நீங்கள் ?
ஏதாவது தோன்றுகிறதா
உங்களுக்கு? எனக்குள்
தோன்றுமென் நினைவுகளை
புதைத்துக்கொண்டே இருக்கிறேன்……
நினைவுகளா அவற்றை
குப்பையில் போடுங்கள் – ஆம்
அவைகள் தான் ஆணையிட்டன
கிடைத்து விட்டது ஈழம்
இந்திய இறங்கி விட்டது
நார்வே கிறங்கிவிட்டது
புளங்காகிதம் அடைந்தோம்
இல்லையில்லை
அடையச்சொன்னார்கள் ……
இனிய நினைவுகளில்
மூழ்கிப்போனோம்
கொஞ்சம்
தள்ளிப்போய்விட்டது நாளை கண்டிப்பாய்
கிடைக்கும் ரெட்டை இலைக்கு
குத்துங்கள் ஈழம் மலருமென்றார்கள்
வாய் பிளந்தன கல்லறைகள்
அதன் பாதாள வாய்க்குள்
கொத்து கொத்தாய்
மக்கள் இறக்கப்பட்டார்கள்
இன்னும் மேடைகள் உறுமுகின்றன
அடுத்தகட்டம் இறுதிக்கட்டம்
வருவார் பறித்து
தருவார் ஈழம்……
நினைவுகள் மீண்டும் என்னை
எழுப்புகிறது இதோ பார்
இது சீமான்கள் பொழுதுபோக்கும்
காடுகளல்ல மக்கள் வாழும்
சுடுகாடுகள்
ஆகா எவ்வளவு அழகாயிருக்கு
சிரிக்கிறான் இந்து ராம்
மூன்று லட்சம் மனிதங்கள்
கம்பிகளுக்குள்
தினம் காக்கைகளாய்
சுடப்படும் மனிதர்கள்…..
மீண்டும் நினைவுகளை
கிளப்புகிறார்கள்
தயாராயிருக்கிறது படை
சிங்களனை உடை
பொறிபறக்கிறது வசனங்கள்
கிளிசரின் போடாத கண்ணீர்த்துளிகள்
எதுவும் எதையும் என்னுள்
மாற்றத்தை ஏற்படுத்தவில்லை
குப்பைகள் இன்னும்
என் இதயத்தில் ஒட்டியிருக்கின்றன
மாற்றத்தை நான் எனக்கல்ல
கோர நினைவுகளுக்கு இனிய
மேக்கப்போட்டு தெருவில்
திரியவிட்டவர்களுக்கு
தர நினைக்கிறேன்
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?