Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுக்குத் தெற்கேயுள்ள புறநகரான லலித்பூரின் தேவாலயத்தில் அன்று அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

 ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் வழிபாட்டுக்குத் திரண்டிருந்தனர். தலைமைப் பாதிரியார் பைபிளை மேற்கோள் காட்டிப் பிரசங்கம் செய்தபொழுது, திடீரென பேரொலியுடன் குண்டுகள் வெடித்தன.எங்கும் புகைமூட்டம்; தேவாலயத்தின் கண்ணாடி சன்னல்களும் மேசை நாற்காலிகளும் நொறுங்கிச் சிதறின; "யேசுவே! ஆண்டவரே!'' என எங்கும் மரண ஓலம். கடந்த மே 23ஆம் தேதியன்று நடந்த இக்குண்டு வெடிப்பில் தீபாபாட்ரிக், செலஸ்டி எனும் இரு இளம்பெண்கள் கொல்லப்பட்டு இரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தனர். பாதிரியார்கள் உள்ளிட்டு 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் குற்றுயிராகக் கிடத்தப்பட்டனர்.

 

தீபா பாட்ரிக்கும், செலஸ்டியும் இந்தியாவின் பாட்னாவைச் சேர்ந்த மாணவிகள். அவர்கள் நேபாளத்தின் லலித்பூரிலுள்ள தமது உறவினரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அந்தச் சிறுநகரம் அமைதியாகவும் அழகாகவும் உள்ளதென்று தீபா தனது தாயாருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இளமைக் கனவுகளோடு பறந்து வந்த தீபா இன்று உயிருடன் இல்லை.

 

லலித்பூர் தேவாலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது, சன்னலோரத்தில் ஒரு கருப்பு நிற பாலிதீன் பை கிடந்ததாகவும், அதைத் தேவாலய ஊழியர்கள் அப்புறப்படுத்த முயற்சித்தபோது குண்டுகள் வெடித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் சாட்சியமளித்துள்ளனர். நேபாளத்தில், மாவோயிஸ்டு அமைச்சரவை பதவி விலகிய பின்னர், புதிய பிரதமராக மாதவகுமார் நேபாள் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இக்கொடிய குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

 

இக்குண்டு வெடிப்புகளை நேபாள பாதுகாப்புப் படை (Nஈஅ) எனப்படும் இந்துவெறி பயங்கரவாத கும்பல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக இக்கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். "நேபாளம், இந்துக்களின் தாயகம். அதை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. கிறித்தவர்களும் முஸ்லீம்களும் சீக்கியர்களும் சமணர்களும் பவுத்தர்களும் இந்த மண்ணில் இருக்கவே கூடாது'' என்று அவர் வெளிப்படையாகவே வாக்குமூலமும் அளித்துள்ளார். ராம் பிரசாத் மைனாலி என்பவன் இப்பயங்கரவாதக் கும்பலின் தலைவன் என்றும் அவனும் இக்கும்பலும் தலைமறைவாகச் செயல்படுகின்றன என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இந்துக்கள் நிறைந்த நாடாக இருந்தபோதிலும் நேபாள வரலாற்றில் இந்துவெறியாட்டங்களோ, மதக்கலவரங்களோ நடந்ததில்லை. மன்னராட்சி காலத்தில் மதச்சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்பட்டிருந்த போதிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததுமில்லை. நேபாள பாதுகாப்புப்படை போன்ற இந்துவெறி பயங்கரவாதக் கும்பல்களும் செயல்பட்டதுமில்லை. மாவோயிஸ்டுகள் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, புதிய அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்புதிய அரசியல் நிர்ணய சபை நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்த பின்னரே இப்படியொரு இந்துவெறிகும்பல் கிளம்பி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

 

நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாகப் பிரகடனம் செய்து அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கும்பல் தலைநகர் காத்மாண்டுவில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்புகளை நடத்தியது. அதன்பிறகு, நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அலுலகத்தின் மீதும், மருந்து நிர்வாக அலுவலகத்தின் மீதும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஆண்டில், நேபாளத்தின் கிழக்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடிப்புகளை நடத்திய இக்கும்பல் இருவரைக் கொன்றொழித்தது. கடந்த ஜூலையில் சிர்சியா நகரிலுள்ள டான்போஸ்கோ பள்ளியின் தாளாளரான பாதிரியார் ஜான் பிரகாஷ் என்பவரை இக்கும்பல் கோரமாகக் கொன்றொழித்துள்ளது. குண்டு வெடிப்புகள், படுகொலைகள் நிகழ்ந்த இடங்களில் இக்கும்பலால் வீசியெறியப்பட்ட பிரசுரங்களில் "மதச்சார்பின்øமயை முறியடிப்போம்! நேபாளத்தை இந்து நாடாக்குவோம்!'' என்ற மைய முழக்கங்கள் தவறாமல் இடம்பெற்றுள்ளன.

 

மன்னராட்சியை வீழ்த்தியுள்ள நேபாளம், மதச்சார்பற்ற இளமையான ஜனநாயகக் குடியரசாக இப்போதுதான் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. மாவோயிஸ்டுகள் தலைமையில் நடைபோடத் தொடங்கிய இந்த ஜனநாயகக் குடியரசின் முன்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு சதிகளில் இறங்கிய இந்திய மேலாதிக்கவாதிகள், இந்திய விசுவாச பொம்மையாட்சியை ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அண்மையில் நிறுவினர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு, மதச்சார்பின்மையை அழித்து நேபாளத்தில் மீண்டும் இந்துத்துவ ஆட்சியை நிறுவ, அகண்ட பாரத லட்சியத்தைக் கொண்ட இந்தியாவின் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகள், தமது நேபாள பங்காளிகளுக்கு ஆதரவும் பயிற்சியும் அளித்து, இரகசிய சதித்திட்டங்களை வகுத்துக்கொடுத்து, அடுத்தடுத்து குண்டுவெடிப்பு பயங்கரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

 

குறிப்பாக, இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ம் அதன் முன்னோடியான இந்து மகாசபையும் காலனிய ஆட்சிக் காலத்திலிருந்தே நேபாளத்தில் தமது கிளை அமைப்புகளை நிறுவிச் செயல்பட்டன. நேபாள மன்னராட்சிக்காலத்தில் இந்துவெறி சங்கப் பரிவாரங்கள் தமது வலைப்பின்னலை நோபளம் மட்டுமின்றி பிற நாடுகளிலும் விரிவுபடுத்திக் கொண்டன. சாதுக்கள், சன்னியாசிகள், சங்கராச்சாரிகள் மூலமாகவும் கலாச்சார பரிவர்த்தனை என்ற பெயரில் அரசு முறையாகவும் இந்த வலைப்பின்னல் உறுதிப்படுத்தப்பட்டது. "ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம் என்ற லட்சியத்துடன் உருவான உலகின் ஒரே இந்து அரசு, நேபாள மன்னராட்சிதான். நேபாள மன்னராட்சியை ஆதரிக்க வேண்டியது உலகெங்குமுள்ள 90 கோடி இந்துக்களின் தலையாயக் கடமையாகும். இந்து தர்மத்தைப் பாதுகாக்கவே பாரத மாதா இந்த நேபாள மன்னரைப் படைத்திருக்கிறார்'' என்று ஜனவரி 23, 2004 இல் காத்மாண்டு நகரில் நடந்த இந்துமதத் தலைவர்கள் மாநாட்டில் இந்துவெறி விசுவ இந்து பரிசத்தின் தலைவரான அசோக் சிங்கால் குறிப்பிட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜன. 23, 2004)

 

தமது நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த நேபாள மன்னராட்சியை ஆதரித்து வந்த இந்தியாவின் இந்துவெறி பாசிஸ்டுகள், மக்கள் போராட்டங்களால் நேபாள மன்னராட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், இந்திய அரசு மற்றும் அரசியல்வாதிகள் மூலம் முட்டுக் கொடுத்து வந்தனர். நேபாளமக்களின் பேரெழுச்சியில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, மாவோயிஸ்டுகள் தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயகக்குடியரசு முகிழத் தொடங்கியதும், இரட்டிப்பு வெறியோடு நேபாள ஜனநாயகக் குடியரசை வீழ்த்தும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேபாளத்தில் இந்துவெறி பயங்கரவாத நேபாள பாதுகாப்புப் படை கடந்த பிப்ரவரி 16, 2007இல் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்துவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக, இந்திய எல்லையிலுள்ள ரக்சால் என்ற ஊரிலுள்ள காளிமடத்தின் தலைமைப் பூசாரியான சன்ஜயா என்பவன், நேபாளத்தின் பிர்குன்ஜ் நகருக்கு வந்து இந்துவெறி பயங்கரவாதக்கும்பலுடன் சதியாலோசனை நடத்தியதோடு, இந்திய ஆதரவுபெற்ற மாதேசி இயக்கத்தின் மூலம் சீர்குலைவுகளைச் செய்ய உறுதியளித்தான்.

 

நாக்பூர் சித்பவன பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் கரம்பூரில், நேபாள மன்னராட்சியை மீண்டும் நிறுவத் துடிக்கும் நேபாள அரசியல் கட்சிகளின் பிரதிநிதியான உபேந்திரயாதவ் மற்றும் பிற மன்னராட்சி ஆதரவு கும்பலுடன் இரகசியக் கூட்டம் நடத்தினர். முன்னாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான மகந்த் அவைத்தியநாத் இதில் முக்கிய பங்காற்றினார்.(டெலிகிராப், ஜன.29, 2008).

 

கரக்பூரின் பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்துவெறியூட்டும் பேச்சாளருமான யோகி ஆதித்யநாத், பல்ராம்பூரில் விசுவ இந்துமகா சங்கம் என்ற அமைப்பின் பெயரில் ஒரு கருத்தரங்கத்தை நடத்தினார். இவர் மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டதை எதிர்த்தும், நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை நிறுவ அனைத்துலக ஆதரவைத் தேடவும், எதிர்த் தாக்குதல் நடத்தத் திட்டமிடவும் இக்கருத்தரங்கம் கூட்டப்பட்டது. விசுவ இந்து மகாசங்கத்தின் அனைத்துலகத் தலைவரும், வீழ்த்தப்பட்ட மன்னர் ஞானேந்திராவின் தூதுவருமான பாரத்கேஷர்சிங் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்து ராஷ்டிரத்தைக் காக்க இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்; நேபாள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வீழ்த்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இவை ஒருபுறமிருக்க, மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரணை செய்து வரும் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை போலீசுப் படைக் குழு, அண்மையில் இந்து வெறியர்களின் அனைத்துலக வலைப்பின்னல் பற்றிய சில உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது. குண்டு வைப்புகளில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான தயானந்த பாண்டே மற்றும் சிறீகாந்த், புரோகித் ஆகிய இந்துவெறி பயங்கரவாதிகளின் கணினியில் உள்ள மின்னஞ்சல்களையும் பிற தகவல்களையும் இதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளது. நேபாளத்தின் இந்துவெறி பயங்கரவாதிகளுடன் இந்தியாவின் இந்துவெறி சங்கப் பரிவாரங்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவு, நேபாளத்தையும் யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலையும் தளமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் இந்து ராஷ்டிரத்தை நிறுவ தயாரிக்கப்பட்ட சதித்திட்டங்கள், நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை நிறுவ மேற்கொள்ள வேண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியன இதில் அம்பலமாகியுள்ளன. முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களும் இஸ்ரேலின் யூதர்களும் புனிதக் கூட்டு சேரவேண்டிய அவசியம் பற்றிய கட்டுரைகளும் அக்கணினியில் கிடைத்துள்ளன.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசு நான்கு யூத இனவெறி இணைய தளங்களை தீவிரவாதப் பட்டியலில் சேர்த்தது. இவற்றில் ஒரு இணைய தளம் (www.kahane.org) இந்தியாவின் இந்துவெறி பஜ்ரங்கதள், விசுவ இந்து பரிசத் ஆகியவற்றின் பிரச்சார இணையதளத்துடன் (www.hindunity.org) நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. இவ்விரு இணையதளங்களையும் ஒன்றின் ஊடாக மற்றதைத் தொடர்பு கொள்ளமுடிவதோடு, இரண்டுமே ஒரே பதிவு முகவரியைக் (IP address) கொண்டிருந்தன. (தற்போது இணையத்தில் இந்தத் தளங்கள் இயங்கவில்øல).

இவைதவிர, அமெரிக்காவில் "இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம்'' (IDRF)என்ற அறக்கட்டளை நிறுவனத்தை உருவாக்கியுள்ள இந்துவெறியர்கள், அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்துக்களிடம் கட்டாயத் தீர்வையாக நிதி வசூலித்து, அவற்றை இந்தியாவில் இந்துவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க மட்டுமின்றி, பிறமேலை நாடுகளிலும் இந்த அறக்கட்டளை மூலம் கோடிகோடியாய் இந்துவெறியர்களுக்கு நிதி அனுப்பப்படுகிறது என்றும், மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெள்ளமெனப் பாயும் இத்தகைய நிதியை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் லண்டனிலிருந்து வெளிவரும் ஃபினான்சியல் டைம்ஸ் நாளேடு செய்திக்கட்டுரை வெளியிட்டுள்ளது (பிப்.24, 2003)

 

இவையனைத்தும் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகள் அனைத்துலக வலைப்பின்னலுடன் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதை நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமான பின்னரும் "மதச்சார்பின்மை' பேசும் காங்கிரசு கூட்டணி அரசு இப்பயங்கரவாதக் கும்பல்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இந்திய மேலாதிக்க ஆட்சியாளர்களின் நோக்கமே, நேபாளத்தில் தமது விசுவாச பொம்மையாட்சியை நிறுவுவதாக உள்ள நிலையில், அதற்கு இப்பயங்கரவாதக் கும்பல் வேறொரு வழியில் சேவை செய்து வரும் நிலையில், அதன் மீது இந்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவும் அடிப்படையில்லை.

 

நேபாளத்தில் நடந்துள்ள குண்டுவெடிப்பு பயங்கரங்கள் ஏதோவொரு இந்துவெறி கும்பலின் கண்மூடித்தனமான தனிப்பட்ட நடவடிக்கையாகக் குறுக்கிச் சுருக்கிவிட முடியாது. அது, அனைத்துலக வலைப்பின்னலைக் கொண்ட இந்துவெறி பயங்கரவாதத் தாக்குதலின் ஓர் அங்கம். குஜராத் வழியில் நேபாளத்தை மாற்றுவதற்கான இந்துவெறி பாசிச பயங்கரத்தின் வெள்ளோட்டம்!

 

மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நடைபோடத் தொடங்கிய நேபாளம், இந்திய மேலாதிக்கவாதிகளின் சதிகளாலும், இந்துவெறி பயங்கரவாதிகளின் சீர்குலைவுகளாலும் இன்று முடமாகி நிற்கிறது. நேபாளத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்கள் இந்துவெறி பயங்கரவாதக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிப்பதன் மூலமே, இந்திய மேலாதிக்கத்தைத் தகர்த்து, நேபாள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மீண்டெழச்செய்ய முடியும்.

 

· குமார்