Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் புதிய தலைவராகவும், தேசங்கடந்த ஈழத்தை நிறுவியுள்ளதாகவும் அறிவித்துக்கொண்ட "கே.பி.'' என்று அறியப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் இலங்கை சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் உளவுப் படையினரால் தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டு,கொழும்பு வதை முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு, மிகத் தேர்ச்சி பெற்ற இராணுவப் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கே.பி. எங்கு, எப்போது, எவ்வாறு கைது செய்யப்பட்டார், விசாரணையின் போது அவர் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு என்னென்ன தகவல்களைத் தெரியப்படுத்தியுள்ளார் ஆகியவை பற்றி பல்வேறு செய்திகள் பரவியுள்ளன. தற்போது பிளவுபட்டுள்ள புலிகளின் வெவ்வேறு குழுக்கள் முரண்பாடான பல செய்திகளைத் தமது வானொலி மற்றும் இணையத்தளங்கள் மூலம் அறியத் தருகின்றன.

 

புலிகளின் தலைமை முற்றாக ஒழிக்கப்பட்ட பிறகும், இலங்கை அரசினால் பலமுறை சரணடையும்படி எச்சரிக்கப்பட்டும் தொடர்ந்து ஈழத்தின் காடுகளில் வாழ்ந்து வரும் ராம் என்பவர் தலைமையிலான கிழக்கு மாகாணப் புலிகளே கே.பி.யைக் காட்டிக் கொடுத்தனர் என்றவாறு கே.பி.யின் விசுவாசிகள் நடத்தும் இணையத்தளம் கூறுகிறது.

 

ஆனால், கிழக்கு மாகாணப் புலிகளின் விசுவாசிகளோ, வேறு இரு பிரிவினர் மீது குற்றஞ் சுமத்துகின்றனர். புலிகளின் ஒட்டுமொத்த அழிவிற்கும் கே.பி.யே காரணமென்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது, சமீபத்தில் நார்வே நாட்டு போலீசால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ள நெடியவன் என்ற பெரியநாயகன் சிவப்பரன் தலைமையிலான புலம் பெயர் புலிகள் தரப்பு. கே.பி. கைதுடன், தமது கை ஓங்கி உள்ளதாகவும் தாமே எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஏகத் தலைமை என இத்தரப்பு தெரிவித்து வருகிறது.புலிகளின் தலைமையைக் காட்டிக்கொடுத்ததற்காக நெடியவன் தரப்பினராலோ அல்லது இன்னமும் இலங்கை இராணுவத்தின் கைதியாக இருப்பதாக நம்பப்படும் புலிகளின் உளவுத்துறைத்தலைவர் பொட்டு அம்மன் சதியினாலோ "கே.பி.'' கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கிழக்கு மாகாணப் புலிகளின் விசுவாசிகள் கூறுகின்றனர்.

 

கே.பி. அளித்த வாக்குறுதியின் பேரில் சரணடையச் சென்று, இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் மகனும் சகோதரரும் மலேசியாவிலுள்ள "டியூன் விடுதி'' அறையில் கே.பி.யுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அழைப்பு வந்து கே.பி. வெளியே சென்றபோது கைது செய்யப்பட்டதாக அவ்விருவரும் கூறியுள்ளனர். இச்செய்தி புலிகளின் வானொலியிலும் ஒலிபரப்பாகி, பின்னர் மறைத்துக் கொள்ளப்பட்டது. நடேசனின் மகனும் சகோதரரும் கே.பி.யுடன் சேர்த்து கைது செய்யப்படாதது, பொட்டு அம்மன் இன்னமும் இலங்கை இராணுவக் கைதியாக இருப்பதாகக் கூறப்படுவது ஆகியவற்றை முடிச்சுப் போட்டு இலங்கை அரசு பொட்டு அம்மன் நடேசன் உறவினர் சதியும் கே.பி.யின் கைதிற்குக் காரணமாக இருக்கலாம் என்று கிழக்கு மாகாணப் புலிகளின் விசுவாசிகள் கூறுகின்றனர்.

 

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழரைப் படுகொலை செய்ததினூடாகப் புலித் தலைமையை முற்றாக அழித்த இன அழிப்புப் போரின் அடுத்த கட்டமாக, இலங்கை சிங்கள பாசிச பயங்கரவாத அரசு தனது தாக்குதல் வேட்டையை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஈழத் தமிழரிடையே குறிப்பாக, ஈழத்தில் எஞ்சியுள்ள மற்றும் புலம் பெயர்ந்த புலிகள் மத்தியிலே நிலவும் பிளவு இத்தாக்குதலுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

 

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்'' என்ற பெயரில் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான உலகப்பிற்போக்கு பாசிச பயங்கரவாத அரசுகளின் அணியில் இலங்கை ஆளும் ராஜபக்சே கும்பல் தன்னை இணைத்துகொண்டது இன்னொரு வசதியாகிப் போயுள்ளது. புலித் தலைமையைப் பூண்டோடு ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதாக கூறியபோதும் புலிகள் அமைப்பு மீதான தடையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீக்கிவிடவில்லை; நீட்டிக்கவே செய்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு உலகின் பல நாடுகளிலும் "புலிவேட்டை'யை சிங்கள பாசிச பயங்கரவாத அரசு நடத்துகிறது.

 

கே.பி.யைத் தொடர்ந்து, மேலும் பல புலி அமைப்பாளர்கள் மற்றும் புலி ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களைக் கைது செய்து நாடுகடத்தும்படி இலங்கை அரசு பிற நாடுகளிடம் கேட்டுள்ளது. அவர்களுள் முக்கியமானவர்கள், கே.பி.யால் அறிவிக்கப்பட்ட தேசங்கடந்த தமிழ் ஈழஅரசாங்கத்தின் அமைப்புத் திட்டத்தை வரைவதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் உருத்திர குமாரன். இவர் அமெரிக்காவில் வாழும் புலி ஆதரவு வழக்கறிஞர். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்கள் கூட இலங்கை அரசால் வேட்டையாடப்படும் புலி ஆதரவாளர்கள் பட்டியலில் உள்ளனர். முக்கியமாக ஜயந்தா ஞானகோனே, சார்லஸ் ஞானகோனே ஆகிய சகோதரர்கள். இவர்கள் முன்பு இலங்கை அரசுக்கும் புலி அமைப்புக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையில் உதவினார்கள் என்பதற்காகவே, புலிகளுக்காகப் பணம், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக இச்சகோதரர்கள் மீது முத்திரை குத்தி, நாடு கடத்தி ஒடுக்குவதற்கு இலங்கை அரசு எத்தணிக்கிறது.

 

"புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை; உயிருடன் இருக்கிறார்'' என்று அறிவித்த வரை கே.பி.யை நம்பத்தகுந்தவர் என்று கூறிவந்த தமிழ்நாட்டுத் தமிழினவாதிகள், பிரபாகரனின் சாவை உறுதி செய்து, அமைதி வழியில் தேசங்கடந்த தமிழீழத்தை அமைப்பதாகவும், தன்னையே இனிப் புலிகளின் தலைவரென்று அறிவித்தவுடன் "இவர் பன்னாட்டு போலீசால் தேடப்படும் கிரிமினல்'' என்று கூறி நிராகரித்திருக்கிறார்கள். "புலித் தலைவர் பிரபாகரன் உயிருடனே இருக்கிறார், ஒருநாள் திடீரென்று வருவார்'' என்று இன்னமும் சாதித்து வரும் இந்தத் தமிழினவாதிகள், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற அடிப்படையில் செயல்பட முயலும் புலிகள் / புலி ஆதரவாளர்கள் அனைவரையும் நிராகரிக்கிறார்கள். எனவேதான், அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு எடுக்கும் பாசிச பயங்கரவாத வேட்டையைக் கூட கண்டுகொள்ளாது வாய்மூடிக் கிடக்கிறார்கள்.

 

ஆனால், கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி புலிகளின் அரசியல், நடைமுறைகளோடு உடன்படாதபோதும்,"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்ற பெயரில் அமெரிக்கா, இசுரேல் போன்ற வக்கிரமாக மனித உரிமைகளை மீறும் இலங்கை சிங்கள பாசிச பயங்கரவாத அரசு மேற்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான "புலி வேட்டை''யை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. உண்மையில், இலங்கை சிங்கள பௌத்த இனமதவெறி பாசிசபயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது புலிகளின் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஈழத் தமிழின அழிப்புப்போர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

· ஆர்.கே.