Language Selection

புதிய ஜனநாயகம் 2009

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

ஊரான் சொத்தை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்பதையொட்டி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், தம்பி அனில் அம்பானிக்கும் இடையே நடந்துவரும் இந்தச் சண்டை, பேராசை பிடித்தவர்களின் கீழ்த்தரமான கிரிமினல் குற்றமாக இந்திய மக்களின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, பாகப்பிரிவினை சட்டச் சிக்கலைப் போல இந்திய நீதிமன்றங்களால்கையாளப்படுகிறது. இந்தப் பொதுச் சொத்தைக் காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய அரசோ, இந்தச்சொத்துத் தகராறில் அண்ணன் முகேஷ் அம்பானிக்கு எந்தவிதமான பாதகமும் நேர்ந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது.

 

பிரதம மந்திரி அலுவலகம், நிதி அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், சட்ட அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் இயக்குநர் அலுவலகம் என இந்திய அரசின் பல்வேறு துறைகளும் இந்தச் சொத்துத் தகராறைத் தீர்த்து வைப்பதில் குதித்துள்ளன. அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சொத்துத் தகராறு, ஓட்டுக்கட்சிகளுக்கு இடையேயான கொள்கை பிரச்சினை போல நாடாளுமன்றத்தில் வெடிக்கிறது. மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, வறட்சி போன்ற பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்தச்சொத்து தகராறுதான் நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை என்பது போல நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.

 

தாராளமயம் தனியார்மயத்திற்கு முன், இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய மூலவளங்களைக் கண்டுபிடிப்பது, அவற்றைப் பூமிக்கடியில் இருந்து தோண்டியெடுப்பது, சுத்திகரிப்பது, விநியோகிப்பது ஆகிய அனைத்தும் அரசு வசம் மட்டுமே இருந்து வந்தன. 1990க்குப் பின் இந்தத் துறைகளிலும் இந்தியத்தரகு முதலாளிகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதிக்கும் முடிவை எடுத்த மையஅரசு, அதற்காக "என்.இ.எல்.பி.'' என்ற லைசென்சு முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன்படி ஏலம் விடப்பட்டஎண்ணெய் வயல்களில் நான்கில் ஒருபகுதியை (பிளவுபடாத) ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றிக்கொண்டது.

 

இந்த எண்ணெய் வயல்கள் அனைத்தும் அடிமாட்டுவிலைக்கு ஏலம் விடப்பட்டதாக அப்பொழுதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள 20,000 கோடி ரூபாய் பெறுமான முக்தா மற்றும் பன்னா என்ற இரு எண்ணெய் வயல்களை, ரிலையன்ஸும், அமெரிக்காவின் என்ரான் நிறுவனமும் கூட்டணி கட்டிக் கொண்டு வெறும் 12 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன. இந்த மோசடியான ஏலத்தை ரத்து செய்யக் கோரி மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணி என்ற அமைப்பால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, "ஏலத்தில் எந்தத் தீய உள்நோக்கமும் இல்லை'' எனக் கூறப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக ரிலையன்ஸுக்குக் கிடைத்த எண்ணெய் வயல்களுள் ஒன்றுதான் கிருஷ்ணா கோதாவரி படுகை வயல். 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்த வயலில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை, ஏதோ பெரிய அம்பானி தனக்கு எழுதி வைத்துவிட்டு போனது போல சொந்தம் கொண்டாடுகிறார், முகேஷ் அம்பானி.

 

அம்பானி சகோதரர்களிடையே பாகப்பிரிவினை நடந்தபிறகு, இந்த எண்ணெய் வயல் முகேஷ் அம்பானியின் கைகளுக்கு வந்தது. அதே சமயம் அந்த எண்ணெய் வயலில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எப்படி பிரித்துக் கொள்வது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன்படி, அவ்வயலில் இருந்து ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவில், 120 கோடி கனமீட்டர் எரிவாயுவை இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல் மின்கழகத்திற்குக் கொடுக்க வேண்டும். 280 கோடி கனமீட்டர் எரிவாயுவை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இயற்கை மூலவளங்கள் நிறுவனத்திற்குத் (Reliancenatural resources limited) தர வேண்டும். மீதமுள்ள இயற்கை எரிவாயுவை அண்ணனும் தம்பியும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வயலிலிருந்து அனில் அம்பானி நிறுவனத்திற்குத் தரப்படும் இயற்கை எரிவாயுவை, பத்து இலட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 2.34 அமெரிக்க டாலர் என்ற கட்டணத்தில் (இந்திய மதிப்பின்படி ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவை ரூ.120க்கு) கொடுக்க வேண்டும்.

 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுச் சொத்தைப் பிரித்துக் கொண்ட முகேஷ் அம்பானி, ஒப்பந்த விலையில் இயற்கை எரிவாயுவை அனில் அம்பானிக்குத் தர இப்பொழுது மறுக்கிறார். இதற்கு, பத்து இலட்சம் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்விலை 4.20 அமெரிக்க டாலராக (ஒரு மெட்ரிக் டன் ஏறத்தாழ207 ரூபாய்) இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக்காரணம் கூறி வருகிறார். தனக்கு இலாபம் என்றால் அரசாங்கத்தை ஏமாற்றக்கூடத் தயங்காத முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் காட்டி அரசாங்கத்தை மோசடி செய்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) இந்தப் பிரச்சினையில் அரசின் விதியைக் காரணமாகக் கூறுவதன் உள்நோக்கத்தைப் பாமரன் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

 

பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியைப் பொருத்தவரை இந்தியா தன்னிறைவு அடைந்த நாடல்ல. எனவே, பற்றாக்குறையான இந்த மூலவளங்களைப்பகிர்ந்து கொள்வது பற்றி இந்திய அரசு கொள்கையொன்றையே வகுத்து வைத்துள்ளது. இதன்படி பார்த்தால், அம்பானிச கோதரர்களுக்கு இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம் அரசின் பகிர்வுக் கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல, முறைகேடானதும் கூட. தற்பொழுதுள்ள நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த (ஒருநாள்) நுகர்வுக்கே 720 கோடி கன மீட்டர் எரிவாயுதான் கிடைக்கிறது என்ற புள்ளிவிவரத்தை வைத்துப்பார்த்தால், அம்பானி சகோதரர்கள் மலை விழுங்கி மகாதேவன்களாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி யாராவது தனியார்மயத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தால், அவ்வழக்குகளில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி நழுவிக் கொள்வதை நீதிமன்றங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஆனால், இப்பிரச்சினையிலோ, மும்பய் உயர்நீதிமன்றம் அரசின் பெட்ரோலியப் பொருட்கள் பகிர்வுக் கொள்கைக்கு எதிரான அம்பானி சகோதரர்களின் ஒப்பந்தத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்ல, அம்பானி சகோதரர்களின் தாயார் இப்பிரச்சினையில் தலையிட்டு, சகோதரர்களுக்கு இடையேயான பிணக்கைத் தீர்த்து வைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டுமக்களின் சொத்தான இயற்கை எரிவாயுவை அம்பானியின் குடும்பச் சொத்தாக்கி விட்டது, மும்பய் உயர்நீதி மன்றம்.

 

***

 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அனில் அம்பானிக்குச் சாதகமான மும்பய் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு விடுப்பு மனுதாக்கல் செய்துள்ள இந்திய அரசு, அம்மனுவில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.

 

இந்தப் பகிர்வு ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அம்பானி சகோதரர்களிடையே கையெழுத்தாகியிருப்பது மைய அரசிற்கு நன்கு தெரியும். இத்துணை நாளாக இந்த ஒப்பந்தம் பற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, இப்பொழுது இதனை ரத்து செய்யச் சொல்லி மைய அரசு வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருப்பதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தப் பகிர்வு ஒப்பந்தம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டால், அதனால் பலனடையப் போகும் முதல் ஆசாமி முகேஷ் அம்பானிதான். ஆனால், மைய அரசோ, "தேசிய நலன்'' கருதியே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோருவதாக அடித்துச் சொல்லி வருகிறது. நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்பதை ஆன்மாவாகக் கொண்டுள்ள மன்மோகன் சிங் கும்பலிடமிருந்து இப்படிபட்ட வாதத்தைக் கேட்கும்பொழுது நாம் திடுக்கிட்டுத்தான் போகிறோம்.

 

அனில் அம்பானி கேட்கும் விலைக்கு இயற்கை எரிவாயுவை விற்றால் பலத்த நட்டமேற்படும் என முகேஷ் அம்பானி மட்டுமல்ல, மைய அரசும் கூறி வருகிறது. இந்த வாதம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் முகேஷ் அம்பானி அமைத்துள்ள இயற்கை எரிவாயு துரப்பணவு ஆலை:ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே! மாடர்ன் பிரட், பால்கோ, சென்டார்ஐந்து நட்சத்திர விடுதி உள்ளிட்ட பலபொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குவிற்ற மைய அரசு, இந்தப் பிரச்சினையில் தலைகீழாகப் பேசுவதுதான் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையில், மன்மோகன்சிங் குறிப்பிடும் "தேசிய நலனும்' முகேஷ் அம்பானியின் நலனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான், இரு தரப்புமே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

 

முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்குக் "குறைந்த' விலையில் இயற்கை எரிவாயுவை விற்க ஒப்புக்கொண்டதை தம்பி பாசம் என்ற சென்டிமெண்டுக்குள் அடைத்துவிட முடியாது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக, மைய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல் மின் கழகம், தான் அமைத்துவரும் இரு மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கு "டெண்டர்'' விட்டது. அதில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவை 120 ரூபாய்க்குத் தருவதாக ஒப்புக்கொண்டு அந்த ஏலத்தில் வெற்றியடைந்தது. முகேஷ் அம்பானி இலாபம் இல்லாமலா இந்த விலைக்குச் சம்மதித்திருப்பார்? இதனை அடிப்படையாகக் கொண்டுதான், அனில் அம்பானி உ.பி. மாநிலத்தில் "அமைத்து வரும்' மின் நிலையத்திற்குத் தேவைப்படும் இயற்கை எரிவாயுவை (ஒரு மெட்ரிக் டன்) 120 ரூபாய்க்குத் தரும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களும் கையெழுத்தான அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட முகேஷ் அம்பானி ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவின் விலையை 4.33 அமெரிக்க டாலராக நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரினார். மைய அரசு அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவின் விலையை 4.20 அமெரிக்க டாலர் (217ரூபாய்) என நிர்ணயம் செய்தது.

 

உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை, சர்வதேச சந்தை விலைக்கு இணையாக நிர்ணயம் செய்வதன் நோக்கமே, கொள்ளை இலாபம் அடிக்க வேண்டும் என்பதுதான். எனவே, முகேஷ் அம்பானியும் அரசும் கூட்டணி கட்டிக்கொண்டு இயற்கை எரிவாயுவுக்கு நிர்ணயம் செய்துள்ள விலை, அடிப்படையிலேயே நியாயமற்றது. மேலும், ஜூலைமாத சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவின் விலை 3.30 அமெரிக்க டாலராகக் குறைந்துவிட்ட பிறகும், அரசும் முகேஷ் அம்பானியும் இயற்கை எரிவாயுவின் விலையைக் குறைக்க மறுத்து வருகிறார்கள். வியாபார நோக்கில் பார்த்தால்கூட, இது நாணயமற்றதாகும்.

 

"தேசிய நலன்'' என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு இந்த விலை உயர்வை நியாயப்படுத்தி வருகிறது, மைய அரசு. கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை விற்றுக் கிடைக்கும் வருமானத்தை முகேஷ் அம்பானி, அரசின் காலடியில் கொட்டப் போவதைப்போல ஒரு மோசடி நாடகத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது.

 

கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எடுப்பது தொடர்பாக மைய அரசிற்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் அவ்வயலில் தான் போட்டுள்ள மூலதனத்தைப்போல ஒன்றரை மடங்கு வருவாயை ஈட்டும் வரை, அவ்வயலில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் 10சதவீதத்தை மட்டும் ''ராயல்டியாக'' மைய அரசுக்குக் செலுத்தினால் போதும்; வருமானம், போட்ட மூலதனத்தைப் போல இரண்டு மடங்கை எட்டினால்தான் அரசின் பங்கு 16 சதவீதமாக அதிகரிக்கும். அரசின் பங்கு 50 சதவீதத்தைத் தொட வேண்டும் என்றால் கூட, முகேஷ் அம்பானிக்கு போட்ட மூலதனத்தைப் போல 2.5 மடங்கு வருமானம் கிடைக்க வேண்டும்.

 

முகேஷ் அம்பானி போடும் மூலதனமும் அவரது நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய ராயல்டியும் எதிர்விகிதத்தில் அமைந்துள்ள இந்த எளிய கணிதச் சூத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, முகேஷ் அம்பானி அவ்வயலில் போடும் மூலதனத்தைச் செயற்கையாக ஊதிப் பெருக்கி வருவதாக அனில் அம்பானி குற்றம் சுமத்தி வருகிறார். அத்திட்டத்தின் மூலதனம் 12,000 கோடி ரூபாயில் இருந்து திடீரென 42,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள இரகசியத்தை அனில் அம்பானி வெளிப்படையாக பத்திரிகைகள் மூலம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

 

நியாயமாகப் பார்த்தால், இக்குற்றச்சாட்டுக்கு முகேஷ் அம்பானியோ, அவரது நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளோ, தணிக்கையாளர்களோ தான் பதில் சொல்லியிருக்க வேண்டும்.ஆனால், அவர்கள் இது பற்றிக் கண்டு கொள்ளாமல் இருக்க, மைய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோ கார்பன் துறையின்த லைமை இயக்குநர் வீ.கே.சிபல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பத்திரிகை தொடர்பாளர் போலப் பதில் சொல்லியிருக்கிறார். "மைய அரசின் தலைமை தணிக்கை அதிகாரி உள்ளிட்டு மூன்றடுக்குத் தணிக்கை நடத்தப்பட்டதாகவும், அத்தணிக்கைகளில் எவ்விதமான மோசடியும் கண்டுபிடிக்கப்படவில்øல என்பதோடு, இத்திட்டத்திற்கு 42,500 கோடி ரூபாய் மூலதனம் போடப்பட்டிருப்பது அவசியமானது, நியாயமானது''எனப் பொருள்பட அவர் பத்திரிகைகளின் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

வீ.கே.சிபலின் இந்தப் பதில் வெளிவந்த அடுத்த சில நாட்களிலேயே, பொருளாதார மற்றும் சேவைத் துறை அமைச்சகங்களைத் தணிக்கை செய்யும் அலுவலகத்தைச் சேர்ந்த முதன்மை இயக்குநர் ஏ.கே.சிர்வி, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கிருஷ்ணாகோதாவரி படுகை வயலில் போட்டுள்ள மூலதனம் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி தணிக்கை செய்வதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது'' எனப் பத்திரிகைகளின் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான சண்டையில் மையஅரசு முகேஷ் அம்பானியை முட்டுக் கொடுத்து வருகிறது என்பதை இந்த மறுப்பே அம்பலப்படுத்தி விட்டது.

 

இதனால் அரசுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி எழலாம். கங்காணிகளுக்கு நிலப்பிரபுக்களால் என்ன இலாபமோ, அதேவகையில் தான் முகேஷ் அம்பானி இந்திய அரசின் உறவைப் பார்க்க முடியும். தனியார் மூலதனத்தின் நலனை, அவர்களின் இலாபத்தைப் பாதுகாக்கும் அடியாள்தான் அரசு என்பதுதான் இந்தக் கேள்விக்கான பதில். இரண்டு முதலாளிகளுக்கு இடையேயான மோதல், இந்திய 'ஜனநாயக' அரசின் வர்க்க குணாம்சத்தை அம்பலப்படுத்தியிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

 

***

 

தேசிய நலன் என்ற வகையில் பார்த்தால், இந்த ஒப்பந்தத்தை மட்டுமல்ல, முகேஷ் அம்பானி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தையே மைய அரசு ரத்து செய்யமுன் வந்திருக்க வேண்டும். ஆனால், பெட்ரோலியத் துறைஅமைச்சர் முரளி தியோரா, "தேசியமயம் என்பதெல்லாம் பழங்காலக் கதை'' என நாடாளுமன்றத்திலேயே நக்கலடித்து, முகேஷ் அம்பானிக்கு முட்டுக் கொடுத்திருக்கிறார்.

 

பாம்பும் சாகக்கூடாது தடியும் நோகக்கூடாது என்ற வகையில் சி.பி.எம்.முன்வைத்த, "எரிவாயுவை எடுக்கும் குத்தகை உரிமை முகேஷ் அம்பானியிடமே இருக்கட்டும்; அதனை விநியோகிக்கும் உரிமையை அரசு எடுத்துக் கொள்ளட்டும்'' என்ற ஆலோசனையையும் மைய அரசு ஒதுக்கித் தள்ளிவிட்டது.

 

இதுமட்டுமா, முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஏலத்தில் ஒப்புக் கொண்டபடி, தேசிய அனல்மின் கழகத்திற்கு ஒரு மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவை ரூ. 120/க்கு வழங்காமல், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறது. இதனால், அம் மின்கழகம் கட்டி முடித்துள்ள இரண்டு மின்நிலையங்களும் இயங்க முடியாமல் முடங்கிப் போயுள்ளன.

 

முகேஷ் அம்பானியின் இந்த அடாவடித்தனத்தைத் தெரிந்திருந்தும்கூட, மைய அரசு கடந்த நான்காண்டுகளாக இப்பிரச்சினையைக் கண்டும் காணாமல் நடந்து கொண்டு, கூடுதல்விலை கொடுத்தே எரிவாயுவை வாங்கும்படி அம்மின்கழகத்திற்கு மறைமுகமாக நிர்பந்தம் கொடுத்து வந்தது. கூடுதல்விலை கொடுத்து, அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு முகேஷ் அம்பானியிடமிருந்து எரிவாயுவை வாங்கினால், அம்மின்கழகத்திற்கு 30,000 கோடி ரூபாய் வரை நட்டமேற்படும் என்பதும் மைய அரசுக்குத் தெரியாத இரகசியமல்ல. மன்மோகன் சிங் அரசின் முகேஷ் அம்பானி பாசம் அம்மணமாக வெளியே தெரிந்த பிறகுதான், தனது "தேசிய நலனை'க் காட்டிக்கொள்ள, இப்பிரச்சினையில் தேசிய அனல் மின் கழகத்தை ஆதரிக்கப் போவதாக மைய அரசு சவடால் அடித்து வருகிறது.

 

அனில் அம்பானி, முகேஷ் அம்பானிக்கு எதிராகத் தொடுத்த வழக்கைச் சூட்டோடு சூடாக விசாரித்துத் தீர்ப்பளித்த மும்பய் உயர்நீதி மன்றம், தேசிய அனல்மின் கழகம் முகேஷ் அம்பானி நிறுவனத்திற்கு எதிராக 2005ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை விசாரணை என்ற பெயரில் நான்காண்டுகளாக இழுத்தடித்து வருகிறது. இதனைத் தனக்கும், முகேஷ் அம்பானிக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு, இவ்வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பைப் பொறுத்துதான் தேசிய அனல்மின் கழகம் அடுத்த நடவடிக்கைக்குச் செல்லும் என அறிவித்து, இப்பிரச்சினையை முடிந்த மட்டும் தள்ளிப் போடும் சதிராட்டத்திலும் இறங்கியிருக்கிறது, மைய அரசு. மேலும், தேசிய அனல்மின் கழகம் இப்பிரச்சினையை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதையும் கைகழுவியதன் மூலம், முகேஷ் அம்பானியை முடிந்த மட்டும் காப்பாற்ற முயன்று வருகிறது, மன்மோகன் சிங் கும்பல்.

 

அம்பானி குடும்பம் உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒன்றாக வளர்ந்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அதில் காங்கிரசு கட்சியின் பங்கு கணிசமாக இருப்பதைத் தெளிவாகக் காண முடியும். விமல் ஜவுளி ஆலையை நடத்திவந்த திருபாய் அம்பானிக்கும் பாம்பே டையிங் முதலாளி நுஸ்லி வாடியாவுக்கும் வியாபார மோதல் வந்தபொழுது, அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திருபாய் அம்பானியை ஆதரித்து நின்றார். அம்பானி சகோதரர்கள் ஒன்றாக இருந்து நடத்திய ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான தொலைபேசிக்கட்டண மோசடியில் எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பித்துக்கொண்டனர்.

 

முகேஷ் அம்பானி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடத்திவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீது எவ்வித ஏற்றுமதி வரியும் விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவையைப் புறக்கணித்துவிட்டு அவ்வாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்கக்கூட மன்மோகன் சிங் மறுத்து வருகிறார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், எரிவாயுவைப் பிற இடங்களுக்குக் கொண்டு செல்லும் குழாய்களைப் பதிக்கும் தொழிலில் போடப்படும் மூலதனத்திற்குப் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது, முகேஷ் அம்பானிக்காகவே கொண்டு வரப்பட்ட வரிச் சலுகை எனக் கூறப்படுகிறது. இப்படி இந்திய அரசையும், ஓட்டுக் கட்சிகளையும் ஆட்டிப் படைத்து, அம்பானி குடும்பம் அனுபவித்து வரும் சலுகைகளைப் பட்டியல் போட்டால், அதற்கு இந்த இதழே போதாது.

 

சுருக்கமாகச் சொன்னால், காங்கிரசு கூட்டணி அரசைப் பொதுமக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்த "மக்கள்' அரசை முகேஷ் அம்பானி குத்தகைக்கு எடுத்திருக்கிறார் என்பதே உண்மை.

 

· ரஹீம்