Language Selection

"மக்களைப் பிளக்கும் சாதியை, மாதரை வதைக்கும் தாலியை, சித்தத்தை அழிக்கும் சாத்திரத்தை, ரத்தத்தை உறிஞ்சும் சீதனத்தை மொத்தமாய் புதைப்போம்'' என்ற அறைகூவலோடு, ஓசூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக தோழர் நாராயணமூர்த்தி தீபா ஆகியோரின் புரட்சிகர திருமணம் மற்றும் தோழர் சரோஜா சின்னசாமி தம்பதியினரின் தாலியறுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் 23.08.09 அன்று நடந்து கொண்டிருந்த நேரம்.

மக்களின் கவனத்தை ஈர்த்த இப்புரட்சிகர பண்பாட்டு நிகழ்ச்சியினை, எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற வெறியோடு, விழாப்பந்தலை, நாற்காலிகளை பிடுங்கி வீசியது, இளங்கோ தலைமையிலான இந்துமதவெறிக் கும்பல்!

 

விநாயகர் சதுர்த்திக்காக மதவெறியூட்டப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, வி.எச்.பி. காலிகள் ஒன்றுசேர்ந்து, இப்பகுதி பு.ஜ.தொ.மு.வின் முன்னணியாளர் தோழர் பரசுராமனின் வீட்டைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுத்தனர், இக்கொலைவெறிக்கும்பல். கூடியிருந்த பெண் தோழர்களை நாகூசும் வார்த்தைகளால் ஏசியும், தோழர்கள் மீது கற்களையும், மரக்கட்டைகளை வீசியும் வெறியாட்டம் போட்டது.

 

இதனைக் கண்டித்த பகுதிவாழ் மக்களை ஆபாசமாக திட்டிக்கொண்டே வெறியாட்டத்தை நடத்திய இக்கும்பல், பு.ஜ.தொ.மு.வை சேர்ந்த தோழர் சின்னசாமி, வி.வி.மு.வை சேர்ந்த தோழர் முருகேசன் ஆகியோரை வெட்டரிவாள் கொண்டும் கத்தியைக் கொண்டும் தாக்கியதில், அத்தோழர்கள் படுகாயமுற்றனர்.

 

"சூத்திர' கருணாநிதியின் போலீசோ, கொலைவெறியாட்டம் போட்ட இந்துமதவெறிக் கும்பலை சுதந்திரமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள அனுமதித்துவிட்டு, திருமணத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, அவர்கள் மீது பொய்வழக்கும் போட்டுள்ளது.

 

இந்துமதவெறியர்களின் வெறியாட்டத்தையும் இக்கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொண்டு பொய்வழக்கு போட்ட போலீசின் மிரட்டலையும் துணிவுடன் எதிர்கொண்ட இவ்வமைப்பினர், திட்டமிட்டபடியே, அதேநாளில் அருகாமை பகுதியொன்றில், சாதிமறுப்பு புரட்சிகர திருமணத்தை திரளான பகுதி மக்களின் பங்கேற்புடன் நிகழ்த்திக் காட்டினர்.— பு.ஜ. செய்தியாளர்கள், ஓசூர்.