Language Selection

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

 

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

 

இந்நிலையில், இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இதில் தலையிட்டு, இத்தனியார் கல்விக்கொள்ளைக் கும்பலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களோடு, இப்பகுதியெங்கும் தெருமுனைப்பிரச்சார இயக்கங்களை நடத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அணிதிரட்டினர்.

 

கடந்த 17.08.09 அன்று இவ்வமைப்பினரின் தலைமையில் திரண்டு, தனியார் கல்விகொள்ளைக் கும்பலுக்கு எதிராக விண்ணதிர முழங்கியபடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றது, அரைக்கால் சட்டை போட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கூட்டம்.

 

ஆயிரம்பேர் வந்தாலும் அதிலிருந்து ஐந்து பேரை மட்டும்அழைத்து சமரசம் பேசும் ஆட்சியரின் நைச்சியம் பலிக்கவில்லை இம்மாணவர்களிடம். இவர்கள் எழுப்பிய கண்டன முழக்கமும் கம்பீரமாய் தூக்கிப்பிடித்திருந்த செங்கொடியும்ஆட்சியரையே வெளியே இழுத்து வந்தது. கேள்விமேல் கேள்வி கேட்டு ஆட்சியரையே திணறடித்தனர், இவ்விளம் மாணவர்கள்.

 

இதனை தொடர்ந்து, ஸ்டெல்லா மேரி தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இப்போராட்டத்தில் கிடைத்த முதற்கட்ட வெற்றி, இப்பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாழ் மக்களிடம் பு.மா.இ.மு.வின் மீது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.— தகவல்:பு.மா.இ.மு., திருச்சி