விவசாயத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில், தமிழக அரசு கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டத்தைச் சட்டசபையில் எவ்வித எதிர்ப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் வேளாண் கவுன்சில் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். இக்கவுன்சிலில், தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்த வேளாண் பட்டதாரிகள் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இக்கவுன்சிலில் பதிவு செய்து கொண்ட வேளாண் பட்டதாரிகள் மட்டும்தான், இனி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள், சேவைகளை வழங்க முடியும் எனக் குறிப்பிடுகிறது, இச்சட்டம்.
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை, சேவை என்பதில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான அனைத்தையும் அடக்கிவிடுகிறது, இச்சட்டம். வெளிமாநிலப் பல்கலைக்கழகங்களில் வேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கவுன்சிலில் உறுப்பினராக முடியாது. தமிழகத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் இக்கவுன்சிலின் வாசற்படியைக் கூடத் தொடமுடியாது.
இக்கவுன்சிலில் உறுப்பினராக இல்லாத ஒருவர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால், அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்தத் தண்டனையையும் மீறி அவர் ஆலோசனை வழங்குவதைத் தொடர்ந்தால், 10,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறுமாதச்சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தமது பக்கத்து வயல்காரனுக்கு வேளாண்மை தொடர்பாக ஆலோசனை வழங்குவதுகூட, இச்சட்டத்தின்படித் தண்டனைக்குரிய குற்றமாகி விடும்.
யாரோ ஒரு சிலர் தமிழக விவசாயிகளுக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், அவர்களைத் தடுப்பதற்காகத்தான் இச்சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறி வருகிறது, தமிழகஅரசு. அந்த ஒரு சிலர் யார்?
நமக்குத் தெரிந்த வரையில் மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான பி.டி. பருத்தி விதை அமோக விளைச்சலைக் கொடுக்கும் என விளம்பரப்படுத்தி விவசாயிகளின் தலைகளில் கட்டினார்கள். அதனை நம்பி பருத்தி போட்ட விவசாயிகள், போதிய விளைச்சல் எடுக்கமுடியாமல் போய், கடனாளியாகி, தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை நாடே கண்டது.
காட்டாமணக்கு பயிர் செய்தால் கடனையெல்லாம் அடைத்துவிடலாம் எனப் புதிதாக முளைத்த சில விவசாய கம்பெனிகள் விவசாயிகளுக்கு ஆசை காட்டின. விளைந்த காட்டாமணக்கை விற்க முடியாமல் போய், விவசாயிகள் ஏமாந்து நின்றார்கள்.
இப்படி நவீன விதை, ஏற்றுமதிப் பயிர் எனத் தமிழக விவசாயிகளைச் சீரழித்த கனவான்களை இச்சட்டம் தண்டிக்குமா என்றால், இல்லை; முடியாது என்பதுதான் தமிழக அரசின் பதில். ஏனென்றால், இவர்களெல்லாம் பன்னாட்டு விவசாய கம்பெனிகளின் விற்பனைப் பிரதிநிதிகள், வேளாண் அறிவியலைக் கரைத்துக் குடித்த மேதாவிகள், வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அரசாங்க வேளாண்துறை அதிகாரிகள். இக்கும்பலைத் தண்டிக்காத இச்சட்டம் வேறு யாரைத் தண்டிக்கப் போகிறது?
விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேளாண் அறிவியலைப் படித்து முடித்துப் பட்டம் பெற்றவர்களைத் தவிர, வேறு யாருக்கும் தகுதி இல்லை என்பதன் பொருள், விவசாயிகள் வேளாண்மை பற்றிய தங்களின் பாரம்பரிய அறிவை, பாட்டன் முப்பாட்டனிடமிருந்து செவி வழியாகக் கேட்டுப் பெற்ற அறிவைப் பயன்படுத்தக்கூடாது; அடுத்த தலைமுறைக்கோ, பக்கத்து வயல்காரனுக்கோ கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதுதவிர, வேறென்னவாக இருக்க முடியும்?
பசுமைப் புரட்சி என்ற பெயரில், பாரம்பரியமான உணவுப்பயிர் ரகங்களை விவசாயிகளிடமிருந்து பறித்துக் கொண்ட கும்பல்; பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கம் என்ற பெயரில் நீர்நிலைகளின் மீது விவசாயிகளுக்கு இருந்து வந்த அற்ப உரிமைகளையும் பறித்துக் கொண்ட கும்பல், இப்பொழுது, இச்சட்டத்தின் மூலம், தமிழக விவசாயிகளின் 5,000 வருடபாரம்பரிய அறிவை, அவர்களிடமிருந்து அகற்றிவிடத் திட்டம் போடுகிறது.
ஒரு சட்டத்தின் மூலம் பாரம்பரிய அறிவை அகற்றி விடமுடியுமா என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். ஆங்கில மருத்துவத்துக்குப் பழகிய பிறகு, இன்று பாட்டி வைத்தியம் பெரும்பான்மையான மக்களின் நினைவில் இருக்கிறதா?
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு (தரகு) முதலாளித்துவ மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தமது விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் ஆங்கில மருத்துவர்களை வளைத்துப் போட்டிருப்பதைப் போல, இந்த வேளாண் பட்டதாரிகள் உரம் பூச்சிமருந்து கம்பெனிகளுக்காகத் தமிழக விவசாயிகளை வளைத்துப் போடும் ""சேவையை''த்தான் ஆற்றப் போகிறார்கள். இதுவொருபுறமிருக்க, இதுநாள் வரை தமிழக அரசு, தனது விவசாயத் துறை மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்த ""சேவையை'', இச்சட்டத்தின் மூலம் தனியார்மயப்படுத்தி விட முயலுகிறது.
இரசாயன உரம், பூச்சி மருந்துகளை இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்திய பசுமைப் புரட்சியின் காரணமாக நெல், கோதுமை, கரும்பு போன்ற உணவு மற்றும் பணப் பயிர்களின் உற்பத்தி அதிகரித்திருக்கலாம். ஆனால், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகம். பசுமை புரட்சியால் விவசாயிகளின் தற்சார்பு அழிக்கப்பட்டு, விதை, உரம், பூச்சி மருந்து என விவசாய இடுபொருட்கள் அனைத்திற்கும் வேளாண் கம்பெனிகளைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இக்கம்பெனிகள் விவசாய இடுபொருட்களின் விலையை தமது விருப்பம் போல் ஏற்றிக் கொண்டே போனதால், விவசாயத்தில் செலவுக்கும், வரவுக்கும் இடையே பெரும் பள்ளம் ஏற்பட்டு, விவசாயிகள் கடனாளியானார்கள்; உரமும், பூச்சு மருந்துகளும் மண்ணை மட்டுமல்ல, உணவுப்பொருட்களையும் விஷத் தன்மையுடையதாய் ஆக்கின. ""ஆபரேஷன் வெற்றியடைந்து விட்டது; நோயாளி இறந்து விட்டான்'' என்ற கதையாகத்தான் பசுமைப் புரட்சி முடிந்திருக்கிறது.
""நோய்க்கு அல்ல, அந்த நோயால் துயருறும் மனிதனுக்குத்தான் மருந்து'' என்பதுதான் ஹோமியோபதி மருத்துவமுறையின் தத்துவம் எனக் கூறுவார்கள். இந்திய விவசாயத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய வந்ததாகச் சொல்லப்பட்ட பசுமைப் புரட்சியோ, இந்தத் தத்துவத்தின்படி இயங்காமல், விவசாயத்தைச் சூதாட்டமாக்கி, விவசாயிகளைத் தற்கொலை பாதைக்குத் தள்ளிவிட்டுள்ளது.
***
விவசாயத்தில் நமது பாரம்பரிய மிக்க அறிவைப் பயன்படுத்தி, இயற்கை வேளாண்மை முறையில் நல்ல மகசூலைப் பெற முடியும் என வந்தனா சிவா, நம்மாழ்வார் போன்ற சமூகஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். அது மட்டுமல்ல, வேளாண்பட்டம் பெறாதவர்கள், அதேசமயம் விவசாயத்தில் நல்ல அனுபவம் பெற்றவர்கள், விவசாய வளர்ச்சிக்குப் பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருப்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழக அரசின் ஆதரவுடன் விவசாயிகளிடம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் ""செம்மை நெல் சாகுபடி'' என்ற வேளாண் தொழில்நுட்ப முறை, எந்தவொரு விவசாயப் பல்கலைக்கழகத்தாலோ, விவசாய நிறுவனங்களாலோ கண்டுபிடிக்கப்பட்டதல்ல; மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் சொந்த அனுபவ அறிவின் மூலம் கண்டுபிடித்ததாகும்.
இன்று விவசாயிகளால் இரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ""பஞ்ச கவ்யா'' எனப்படும் இயற்கையான, உயிரி பூச்சிக் கொல்லி மருந்தைக் கண்டுபிடித்தவர், க.நடராசன் என்ற அலோபதி (ஆங்கில) மருத்துவர். இந்த இயற்கையான பூச்சிக் கொல்லியைத் தமிழகவேளாண் பல்கலைக்கழகமும் அங்கீகரித்திருப்பதோடு, அக்கரைசலைத் தயாரிப்பது குறித்த செயல்விளக்க வகுப்புகளை விவசாயிகளுக்கு நடத்தி வருகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களைக் கரம்பாகப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என வேளாண் அதிகாரிகள் கைவிட்டுவிட்ட நிலையில், அந்த நிலங்களில் சனப்புப்பயிரைத் தொடர்ச்சியாகப் பயிர் செய்து, அந்நிலங்களின் உப்புத் தன்மையைக் குறைக்கலாம் என்ற ஆக்கப்பூர்வமான மாற்று வழியை இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் விவசாயிகள்தான் முன் வைத்துள்ளனர்.
இப்படி இயற்கை வேளாண்மையைப் பின்பற்றும் விவசாயிகளோ, சமூக ஆர்வலர்களோ, இயற்கை வேளாண்மை குறித்த நுட்பங்களைத் தமிழக விவசாயிகளுக்கு ஆலோசனைகளாக வழங்குவதற்கு இச்சட்டம் தடை போடுகிறது; மீறினால்,ஜெயில் களியைத் தின்ன வேண்டியிருக்கும் என மிரட்டுகிறது,
இவர்களுக்கு பதிலாக, இந்த இயற்கை வேளாண்மை குறித்த நுட்பங்களை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களோ, வேளாண் துறையைச் சேர்ந்த விரிவாக்க அதிகாரிகளோ கற்றுக் கொடுப்பார்களா என்றால்,அந்நிறுவனங்கள் இரண்டும் இயற்கை வேளாண்மையை மாற்றந்தாய் மனப்பான்மை கண்ணோட்டத்துடன் தான் அணுகுகின்றன. குறிப்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தேசங்கடந்த வேளாண் நிறுவனமான மான்சாண்டோ மற்றும் ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு, அவற்றின் கிளை போலச் செயல்படுவதாகக் குற்றஞ் சுமத்தப்படுகிறது.
தமிழக மண்ணின் மருத்துவமான சித்த மருத்துவம் கூட, தனி மருத்துவ அறிவியலாக அங்கீகரிக்கப்பட்டு, அதில் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள கல்லூரிகளும், ஆராய்ச்சி நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், பாரம்பரிய இயற்கை வேளாண்மை நுட்பங்கள் ஒரு பாடப்பிரிவாகக்கூட வேளாண் பல்கலைக்கழகங்களால் அங்கீரிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து முடித்து வெளிவரும் வேளாண் பட்டதாரிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்த புரிதலோ, ஆழமான அறிவோ இருக்கும் என எதிர்பார்க்க முடியுமா? விவசாயிகளுக்கு இவர்கள் வழங்கப் போகும் ஆலோசனையும், சேவையும், உரம்பூச்சி மருந்து விற்கும் ஏஜெண்டுகள் விவசாயிகளுக்கு வழங்கிவரும் ஆலோசனைகளைவிட மேம்பட்டதாக இருந்துவிட முடியாது.
****
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் விவசாய உற்பத்தித் தேங்கிப் போய்க் கிடப்பதற்கு விவசாயத்தில் நிலவும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகளும், அதில் திணிக்கப்பட்டு வரும் தனியார்மயம் தாராளமயமும் தான் காரணம்.விவசாயத்தை விட்டு வெளியேறி, நகரத்தில் உதிரித் தொழிலாளர்களாக வாழ்க்கையை ஓட்டும் விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. விவசாயத்தில் இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சியைத் திணிப்பதன் மூலம் இந்தத் தேக்க நிலையை உடைத்து விடலாம் என மன்மோகன் சிங் கும்பல் திட்டம் போட்டு வருகிறது.
இதற்கு ஏற்றாற்போல, பன்னாட்டு வேளாண் கழகங்கள் உருவாக்கி வரும் மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உயிரி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பயிர்கள் போன்றவற்றைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலையாக இந்திய விவசாயம் மாற்றியமைக்கப்படுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் கழகங்களின் தொழில்நுட்பங்களை அப்படியே இந்திய விவசாயத்தின் மீது திணிப்பதற்கு ஏற்றவாறு, இந்தியஅமெரிக்க வேளாண்மை அறிவு முன்முயற்சி என்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளின் விவசாயம், அது சார்ந்த தொழில்கள் அனைத்தையும் உலக வர்த்தகக் கழகத்தின் கீழ்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இன்னொருபுறமோ, ஒப்பந்த விவசாயம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டங்களின் அடிப்படையில், சிதறிக்கிடக்கும் இந்திய விவசாயத்தை, அமெரிக்க பாணி முதலாளித்துவப் பண்ணைகளாக மாற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்றாற்போல, நில உச்சவரம்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருமாறு தரகு முதலாளிகள் கோரி வருகின்றனர். விவசாயிகளுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவது, அவர்களின் உற்பத்திப்பொருட்களை நல்ல விலையில் விற்றுக் கொடுப்பது என்ற பெயரில், ஐ.டி.சி. போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன் போன்ற அரசுசாரா நிறுவனங்களும் சிறு நடுத்தர விவசாயிகளைத் தங்களின் பிடிக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.
தமிழகம் உள்ளிட்டு இந்தியாவெங்கும் விவசாயத் துறையில் அறிமுகப்படுத்தப்படும் இச் சீர்திருத்தங்கள் அனைத்தும் அடிப்படையிலேயே சிறு நடுத்தர விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை. இப்புதிய அபாயத்தை நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமல்ல, வந்தனா சிவா, நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் எதிர்த்து வருகின்றனர். பன்னாட்டு வேளாண் கழகங்கள் திணிக்க முயலும் இரண்டாம் கட்ட பசுமைப் புரட்சிக்கு எதிராகப் பேசிவரும் இவர்களின் வாய்க்குப் பூட்டுப் போடும் நோக்கத்தில் தான் தமிழகஅரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
விதை கம்பெனிகளின் கல்லா பெட்டியை நிரப்புவதற்காகவே, விவசாயிகள் விதைகளை அடுத்த போகத்திற்குச் சேமித்து வைக்கக் கூடாது; இத்தடையை மீறி விதைகளைச் சேமித்து வைக்கும் விவசாயிகளின் வீட்டினுள் புகுந்து சோதனை நடத்தி, அவர்களைக் கைது செய்யலாம் என்றொரு கருப்புச் சட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மாநில அரசு நிறைவேற்றியது. தற்பொழுது தமிழக அரசுகொண்டு வந்துள்ள வேளாண்மைத் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம், அக் கருப்புச் சட்டத்திற்கு எள்ளளவும் குறைந்தது அல்ல.
இந்த வேளாண்மைத் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம், தமிழகச் சட்டசபையில் எவ்வித விவாதமும் இன்றி, அறிமுகப்படுத்தப்பட்ட மறுநிமிடமே ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவும்; நதிகளை மணல் வியாபாரமாகவும்; கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டிய புறம்போக்காகவும் பார்த்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், இச்சட்டத்தை எதிர்த்துப் பேசியிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட நேர்ந்திருக்கும்.
எந்த முறையில் விவசாயம் செய்வது? எனத் தீர்மானிக்கும் உரிமையை விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கும் இச்சட்டத்திற்கு எதிராக இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள்,""கருப்புச் சட்ட எதிர்ப்புக் குழு'' என்ற அமைப்பைக் கட்டி, விவசாயிகளைத் திரட்டிப் போராடப் போவதாக அறிவித்துள்ளார். இப்போராட்டங்களுக்கு ஆதரவாகத் திரள வேண்டியது தமிழக மக்களின் கடமையும் கூட!·
குப்பன்