Language Selection

பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில் அமைந்துள்ள மான்ஸா, சங்க்ருர், பதிந்தா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 35 கிராமங்களில் "நிலம் கொடு! வேலை கொடு!''என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் அடுத்தடுத்து அலைஅலையாக எழுந்து வருகின்றன.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் நடத்திவரும் இப்போராட்டங்களைக் கண்டு, சீக்கிய ஜாட் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும், அவர்களை நத்திப் பிழைக்கும் அகாலிதள், காங்கிரசு, பா.ஜ.க. ஓட்டுப் பொறுக்கிக் கும்பலும் கொஞ்சம் அரண்டுதான் போயுள்ளன.

 

பஞ்சாப் மாநில அரசும், நிலப்பிரபுக்களும் தாழ்த்தப்பட்டகூலி விவசாயிகளின் இக்கோரிக்கையை, தீவிரவாதமாகச் சித்தரிக்க முயன்று வருகின்றனர். பஞ்சாப் மாநில அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டங்களைப் புரட்டிப் பார்த்தாலே, ஆளும்கும்பலின் இக்குற்றச்சாட்டு பேடித்தனமான அவதூறு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

பஞ்சாப் கிராமங்கள் பொது நில ஒழுங்குமுறைச் சட்டம்,கிராமப்புற பஞ்சாயத்துக்களுக்குச் சொந்தமான நிலத்தில், மூன்றில் ஒரு பகுதியை விவசாயக் கூலிகளுக்கு வேளாண் நடவடிக்கைகளுக்காகக் குத்தகைக்கு விட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின் மாற்றொரு பிரிவு கிராமப்புற பஞ்சாயத்து நிலங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

 

இதுவொருபுறமிருக்க, 1997ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலசட்டசபைத் தேர்தலில் வென்ற காங்கிரசு கட்சி, தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 0.03 ஏக்கர் நிலம், கிராமப்புற பஞ்சாயத்து நிலங்களில் இருந்து ஒதுக்கிக்கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. காங்கிரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகாலிதள் பா.ஜ.க. கூட்டணியும் இந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டது; மேலும், நிலத்தின் அளவை 0.06 ஏக்கராக உயர்த்தப் போவதாக மூன்று கட்சிகளுமே அறிவித்தன.

 

1961இல் போடப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டமும், 1997முதல் ஓட்டுக்கட்சிகள் கொடுத்து வரும் வாக்குறுதிகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருந்து வருகின்றன. அதேசமயம், ஜாட் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும், பணக்கார விவசாயிகளும் கிராமப்புற பஞ்சாயத்து நிலங்களை நேரடியாகவும், பினாமிகள் மூலமாகவும் ஆக்கிரமித்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர். நிலப்பிரபுக்களின் இந்தச் சட்டவிரோதஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, பஞ்சாயத்து நிலங்களில் தங்களுக்கு உரிய சட்டபூர்வமான பங்கை வழங்கவேண்டும் எனக் கோரிதான் தாழ்த்தப்பட்ட மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர்.

 

மான்ஸா மாவட்டத்திலுள்ள தலேர் சிங்வாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில்) நிலம் கேட்டுப் போராடியதோடு, அக்கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தித் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஓடிவந்த அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல்கள் முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாகக் கூறித் தாழ்த்தப்பட்ட மக்களை ஆறுதல்படுத்தினர்.

 

சமரசப் பேச்சுவார்த்தை நடந்து ஒரு வருடம் கழிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு மெத்தனமாக இருந்து வந்ததால், கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று, மான்ஸா மாவட்டத்திலுள்ள கியாலா கிராமத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது. அப்போராட்டம் கியாலா கிராமத்தோடு மட்டும் சுருங்கிப் போய் நின்றுவிடாமல், மான்ஸா மாவட்டத்தில் 26 கிராமங்களுக்கும்; சங்க்ருர் மாவட்டத்தில் ஏழு கிராமங்களுக்கும்; பதிந்தா மாவட்டத்தில் இரண்ட ுகிராமங்களுக்கும் பரவியது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கிராமப் பஞ்சாயத்து நிலங்களைக் கையகப்படுத்தித் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதோடு, அதில் குடிசைகளையும் கட்டிக் கொண்டனர்.

 

அச்சமயம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து வந்ததால் அடக்குமுறையை ஏவிவிடாமல் நல்ல பிள்ளை போல அரசு நடந்து கொண்டது. அரசு அதிகாரிகளுக்கும், போராட்டத் தலைமைக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 0.03 ஏக்கர் நிலம் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும்; தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான அடையாள அட்டைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்; போராட்டத்தை நிறுத்திக் கொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறவேண்டும்'' என அரசு தரப்பு முன்வைத்தது. அரசின் முதலிரண்டு வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்ட போராட்டத்தலைமை, போராட்டத்தையோ, கையகப்படுத்தப்பட்ட நிலங்களையோ கைவிட முடியாது என அறிவித்தது.

 

நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே ஜாட் சாதி நிலப்பிரபுக்கள் மான்ஸா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் நடத்தியதோடு, பஞ்சாப் மாநிலத் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் காரைமறித்து "கெரோ'' செய்தனர். தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளோடு அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என அவர்கள் கோரியதோடு, "இன்று பஞ்சாயத்துநிலங்களை ஆக்கிரமிப்பவர்கள், நாளை எங்கள் நிலங்களையும் கைப்பற்றிக் கொள்வார்கள்'' எனப் பீதியூட்டினர்.

 

இதற்காகவே காத்திருந்த அகாலிதள் பா.ஜ.க. கூட்டணிஅரசு, போராடி வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் மீது போலீசு அடக்குமுறையை ஏவிவிட்டது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 3,000க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களும், இப்போராட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்தி வந்த சி.பி.எம். (எம்எல்) லிபரேஷன் கட்சி மற்றும் அதன் முன்னணி அமைப்பான புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த செயல்வீரர்களும் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமப் பஞ்சாயத்து நிலத்தில் போட்டிருந்த குடிசைகள் போலீசாரால் பிய்த்து எறியப்பட்டன. கைது செய்யப்பட்டு 17 நாட்கள் கழிந்த பிறகுதான் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. எனினும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு சிறையிலேயே அடைத்து வைத்திருக்கிறது, பஞ்சாப் மாநில அரசு. இதன் மூலம், அப்போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்து விடவும் முயலுகிறது.

 

***

 

பசுமைப் புரட்சியால் பஞ்சாப் மாநில கிராமப்புற மக்கள் அனைவருமே செல்வந்தர்களாக ஆகிவிட்டதைப் போல அரசும், அதன் எடுபிடிகளும் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அம்மாநிலத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைøய எடுத்துப் பார்த்தால்தான், அரசின் பொய்ப் பிரச்சாரத்தையும், பசுமைப் புரட்சி மேல்சாதி நிலப்பிரபுக்கள் பணக்கார விவசாயிகளுக்கே சாதகமாக இருப்பதையும்; அம்மாநிலத்தில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுவதையும் புரிந்து கொள்ள முடியும்.

 

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாநிலம் பஞ்சாப்தான். அம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில், 23 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியினர். அதேசமயம், அம்மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பிரப்பில் வெறும் 2.34 சதவீதம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமாக உள்ளது. வளமான நிலங்கள் மேல்சாதி நிலப்பிரபுக்கள் பணக்கார விவசாயிகளிடம் குவிந்து கிடக்க, தாழ்த்தப்பட்ட மக்களோ நிலமற்ற விவசாயக் கூலிகளாக, வறுமையோடு வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

 

"முன்னேறிய'' மாநிலமாகக் கருதப்படும் பஞ்சாபின் கிராமப்புறங்களில் இன்றும் கூடத் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், ஜாட்சாதி நிலப்பிரபுக்களிடம் பண்ணையடிமைகளாக வேலைசெய்து வருவதைக் காண முடியும். குறிப்பாக, இப்போராட்டம் வெடித்த மான்ஸா மாவட்டத்தில் இப்பண்ணையடிமைத்தனம்ஆழமாக வேரூன்றியிருப்பதைப் பல சமூக ஆய்வுகள் வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

 

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் பெருமளவு இயந்திரமயமாகியிருப்பதால், தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலை கிடைப்பதே கிடையாது. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள், அதுவும் அறுவடை சமயத்தில் மட்டும்தான் வேலை கிடைக்கும்; அதற்குக் கொடுக்கப்படும் கூலியோ, மற்ற "வளர்ந்த' மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. இதனால் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு ஓடும் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

 

இந்த இடப்பெயர்வு, நகரங்களில் வேலை தேடி அலையும் மிகப் பெரும் உதிரித் தொழிலாளர் பட்டாளத்தையே உருவாக்கி வருகிறது. நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டே போவதால், நகரத்துக்கு ஓடிவரும் விவசாயக் கூலிகளுக்கு மாதம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை.

 

பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நடத்திய ஒரு ஆய்வில், கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களின் சராசரி ஒருநாள் வருமானம் ரூ.12/ தான் என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த ஏழ்மை நிலை, தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகளைக் கந்துவட்டிக் கடன் வலையில் சிக்க வைத்திருப்பதையும் அவர்களின் ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. நிலப்பிரபுக்களிடம் கடன் வாங்கும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், நிலப்பிரபுக்களின் வயல்களிலும், வீடுகளிலும் எவ்விதக் கூலியும் இன்றி, இலவசமாக உழைக்க வேண்டும் என்ற மத்தியக்கால உழைப்புச் சுரண்டலில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 

கூலி உயர்வு கேட்டாலோ, பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்தாலோ, இலவச உழைப்புச் சுரண்டலுக்கு மறுத்தாலோ,"கலகம்'' செய்யும் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களைச் சமூகப்புறக்கணிப்பு செய்து தண்டிப்பதை மேல்சாதி நிலப்பிரபுக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். "குருத்வாராக்களில் வழிபடுவதைத் தடை செய்வது; வேலை கொடுக்க மறுப்பது; பொதுஇடங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது; இவற்றைவிடக் கொடூரமாக, காலைக் கடன்களைக் கழிக்கச் செல்லும் இடங்களைக் கூடப் பயன்படுத்த முடியாமல் தடைகளை ஏற்படுத்துவது'' எனப் பல்வேறு வழிகளில் வடிவங்களில் இச்சமூகப் புறக்கணிப்பு அரசுக்குத் தெரிந்தே நடந்து வருகிறது.

 

இப்படிப்பட்ட நிலையில் "வாழும்'' சீக்கிய தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள், "நிலம் கொடு; வேலை கொடு'' என்ற போராட்டத்தை, தங்களுக்கு ஓரளவு பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் போராட்டமாகவும்; தங்களது அடிமைத்தனத்தை ஒழித்து, சமூக அந்தஸ்து வழங்கும் போராட்டமாகவும் காண்கிறார்கள். இப்போராட்டத்தின் ஊடாக அவர்கள் அரசின் வர்க்கச் சார்பை மட்டுமல்ல, சட்டபூர்வமாகவும், அமைதியாகவும் நடத்தப்படும் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்படும்பொழுது, வேறு வழியில் எப்படிப் போராடித் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பது என்பதையும்; நிலப்பிரபுக்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தையும்; சாதிக்கட்டுமானத்தையும் தகர்க்காமல் முழுமையாக விடுதலை அடைய முடியாது என்பதையும் புரிந்து கொள்வார்கள்!

 

· திப்பு