Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஆகஸ்ட் மாதம் தனித்தன்மை வாய்ந்தது என்பது உண்மைதான். கடந்த ஜூலை மட்டும் என்னவாம்? உலகிலேயே மிகமலிவான கார் நமக்கு கிடைத்தது, ஜூலை மாதத்தில்தான்.வரலாற்றிலே முன்னெப்போதும் இல்லாத விலைக்கு துவரம்பருப்பு உயர்ந்ததும் அதே ஜூலையில்தான்.

இது ஒன்றும் சொடுக்குப் போடும் கணத்தில் நடந்துவிடவில்லைதான். 2004தேர்தல் முடிந்தபோது துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 34 தான். அதுவே, 2009 தேர்தலுக்கு முன் ரூபாய் 54. தேர்தலுக்குப் பின் அது, ரூபாய் 62 ஆகி, இப்போதோ ரூபாய் 90ஐயும் தாண்டி, மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது.

 

மாண்டேக் சிங் அலுவாலியாவின் "கஷ்ட காலத்தைக்கடந்து கரையேறிவிட்டோம்'' என்ற சொல்லாடலும் ஜூலைமாதக் கூத்தில் கலந்திருந்தது (இவ்வாறு அவர் சொல்லிவைப்பது முதல்முறையல்ல; ஜூனிலும் இப்படித்தான்சொன்னார். ஏன், அதற்கு முன்பும் சொல்லியிருக்கலாம்). இதையெல்லாம் சொன்னவர், நமக்குக் கஷ்டகாலம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதை உரைத்திடாததால், கரையேறித் தப்பித்ததை அறிந்து பாராட்ட நம்மால் இயலவில்லை.

 

"உள்ளபடியே, நாம் மோசமான நிலைமையை எதிர்நோக்கி உள்ளோம்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வேளாண்துறைஅமைச்சர் சரத்பவாரும் கோடிட்டுக் காட்டுகிறார்கள். மோசமான நிலைமை என இவர்கள் குறிப்பிடுவது பன்றிக் காய்ச்சலை அல்ல. இவ்வாண்டு குறுவை சாகுபடி தேறாது என்று இருவருமே முடிவுக்கு வந்துவிட்டார்கள். எனவே, வறட்சியின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயரும்; அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகிறார்கள். வறட்சியால் 177 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று இப்போது கூறுகிறார்கள். சம்பா சாகுபடியை இன்னும் திறமையாக திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று இப்போது இவர்கள் கதறுவதன் மூலம், குறுவை சாகுபடியை சுத்தமாகக் கைகழுவி விட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில், விளைச்சல் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் உணவு தானியங்களைப் பயிரிடுவதை அதிகப்படுத்த, அரசாங்கத்துக்கு குறுவைச் சாகுபடியில் மீதமுள்ள இரண்டு மாத அவகாசம் இருந்தது. ஆனால், பருவ மழை மேலாண்மைக்கான எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை.

 

இப்போது கூட சில உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வரவிருக்கும் மோசமான நிலையை எதிர்கொள்ளலாம். ஊரக வளர்ச்சித் துறை உருப்படியானதொரு நடவடிக்கையை மேற்கொண்டது. பாசனக் குளங்கள் போன்ற சிறிய ஆனால், ஆதாரமான வளங்களை விவசாயிகளின் நிலங்களிலேயே உருவாக்குவதற்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளது. "வயலுக்கு ஒரு குட்டை'' என்பதுதான் எந்தவொரு அரசாங்கத்தினுடைய இலக்காகவும் இருக்க வேண்டும். (இது சம்பா சாகுபடிக்கு பெரியளவில் உதவிகரமாக இருக்கும். மேலும், தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மீது சில விவசாயிகளுக்கு இருக்கும் கோபத்தைத் தணிக்கவும் உதவும்). தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பரந்த அளவில் விரிவுபடுத்தினால், அது உணவுப் பொருள் விலையேற்றத்தைச்சமாளிக்க இயலாமல் தத்தளிக்கும், வேலையில்லாமல் தவிக்கும் இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவுவதாக அமையும். குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்ற கேடான உச்ச வரம்பைத் தூக்கி வீசவேண்டிய தேவையையும் இது ஏற்படுத்திவிடும். வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை"போர்க்கால அடிப்படையில்' மேற்கொள்ளச் சொல்லி பிரதமமந்திரி அறைகூவியுள்ள இக்கணம்தான், இதனைச் செயல்படுத்த சரியான தருணமாகும்.

 

வறட்சிதான் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம் எனும் எச்சரிக்கையே மோசடியானது. வறட்சியும், விவசாயம் பொய்த்துப் போவதும் விலைவாசியை மேலும் உயர்த்தும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், விலைவாசியோ வறட்சிக்கு ரொம்ப காலத்து முன்பிருந்தே, 2004 தேர்தல்முடிந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்து வருடங்களாக சளைக்காமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஓரளவு பருவ மழை பெய்த 2004/2008க்கு இடைப்பட்ட ஆண்டுகளை எடுத்துக் கொள்வோம். இந்த காலகட்டத்தில் உணவுஉற்பத்தியில் "சாதனை படைத்ததாக''க் கூட சில ஆண்டுகளில் நாம் அறிவித்தோம். ஆனால், உணவுப் பொருட்களின் விலையைப் பொறுத்தளவில் அரிசி 46 சதவீதமும், கோதுமை62 சதவீதமும், கோதுமை மாவு 55 சதவீதமும், உப்பு 42 சதவீதமும் உயர்ந்தன. மேற்கண்ட பொருட்களின் விலை மார்ச் 2008 இல், சராசரியாக 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துஇருந்தது. பிறகு, 2009 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவை மீண்டும் உயர்ந்தன. கடந்த மூன்று மாதங்களிலோ அவற்றின் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன.

 

தானியங்களின் விலை சகட்டுமேனிக்கு உயர்வதற்கும் வறட்சிக்கும் பெரியளவில் தொடர்பு இல்லை என்பது வேளாண் அமைச்சருக்குப் புலப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. "இது போன்ற விலைவாசி உயர்வுக்கு, தேவைக்கும் வினியோகத்திற்குமான இடைவெளி மட்டுமே காரணம் என்பது ஆதாரமற்றது'' என அவர் கண்டறிகிறார். பிறகு, அவரே "கள்ளச்சந்தையும், பதுக்கலும்''தான் இதற்கு காரணம் என்பதைச் சரியாக கண்டுபிடிக்கிறார். ஆயினும்,விவசாய விளைபொருட்களின் மீதான முன்பேர வர்த்தகம் குறித்து மௌனம் சாதிக்கிறார். முன்பேர வர்த்தகத்தில் நிலவும் ஊக வணிகம் உணவுப்பொருட்களின் விலையை பாதித்ததற்கு, "எந்த ஆதாரமும் இல்லை'' என்று பல மூத்த அமைச்சர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். (2009ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மே மாதத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கோதுமையின் மீது முன்பேர வர்த்தகம் செய்வதற்கான தடையை நீக்கிவிட்டனர். மேலும், மற்ற பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் எதிர்த்து வருகின்றனர்).

 

நெருக்கடி நிலைக்கு(1975க்கு) முந்தைய காலகட்டத்தைத் தவிர்த்து விட்டு பார்த்தால், நமது நாட்டிலேயே 2004க்குப் பிறகான விலைவாசி உயர்வுதான் வேறெந்த காலத்தையும் விடஅதிகபட்சமானதாக இருக்கிறது. ஊடகங்களைப் பொறுத்தவரையோ, அம்பானி சகோதரர்கள் எரிவாயுவுக்காக அடித்துக்கொண்டதும், அது நாடாளுமன்றத்தில் கிளப்பும் அரசியல் புழுதியும்தான் ஜூலை மாதத்தின் சுவாரசியமான விசயங்களாகஇருந்தன. இந்தப் பெருந்தொழில் முதலாளித்துவக் கோமான்கள் போடுகின்ற குடுமிப்பிடி சண்டையில் அரசாங்கமே மண்ணைக் கவ்விவிடும் நிலையில் உள்ளது. மேலும், விமானக் கட்டணங்களை விடவா கோதுமை மாவின் விலை சுவாரசியமானதாக இருந்துவிடப் போகிறது? (விமானக்கட்டணங்களின் விலை கடந்த சில வருடங்களாகவே கவனத்தை ஈர்க்கும் வகையில் குறைந்து வந்தன). உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கலாம்; ஆனால் விமானக்கட்டணம் குறைந்துவிட்டதே, அதுதானே முக்கியம்?

 

மொத்தத்தில், விமான எரிபொருள்விலையை முறைப்படுத்தப் பொறுப்பேற்றுக்கொள்வதுதான் முதன்மையானதாகிவிட்டது.பொதுமக்களின் பணத்திலிருந்து தம்மைமீட்டுத்தரக் கோரி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் விமான முதலாளிகள் மிரட்டும் பொழுது, ஐயோ பாவம், அரசாங்கம் என்ன செய்யும்? இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் தொழில்செய்வதற்கான செலவீனங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்யும் என்று தெரிகிறது. இந்த தனியார் விமான முதலாளிகளில் சிலர், கடந்த வருடம் கோடிக்கணக்கான ரூபாயை வரிவிலக்காகப் பெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட்டு கேளிக்கையுடன் தொடர்புடையவர்கள். மகாராஷ்டிரா அரசு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மீது கேளிக்கை வரியை ரத்துசெய்த நிலையில், மும்பையில் எக்கச்சக்கமான போட்டிகளை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களின் பணத்தை வரிச்சலுகையாக இந்தப் பெருமுதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொண்டனர்.

 

பெரும் புள்ளிகளுக்குப் பணத்துக்கு என்றைக்கும் பஞ்சம் வந்ததில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்கு பட்ஜெட்டையும், "மையவரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பையும்''ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெருந்தொழில் முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் 2008/09இல் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ரூபாய் 68,914 கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. (டttணீ://டிணஞீடிச்ஞதஞீஞ்ஞுt.ணடிஞி.டிண/தஞ200910/ண்tச்tணூஞுதிஞூணிணூ/ச்ணணஞுது12.ணீஞீஞூ). இந்த வருவாய் இழப்புடன் ஒப்பிடும்போது கோடிக்கணக்கில் ஏழ்மையில் வாடும் மனிதர்களுக்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, 2009/10ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையோ வெறும் ரூபாய் 39 ஆயிரம் கோடிகள்தான்.

 

2008ஆம் ஆண்டு விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் தள்ளுபடி நினைவில் உள்ளதா?அப்போது அதனை "முன்யோசனையற்ற நிதி மேலாண்மை''என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதிக் கதறியதெல்லாம் நினைவில் உள்ளதா? பல இலட்சம் விவசாயிகளுக்கு, வாராதுவந்த மாமணியான அந்தக் கடன் தள்ளுபடி அதிகபட்சம் ரூபாய் 70,000 கோடியை தொடும் என்றுசொல்லப்பட்டது. ஆனால், இதே நேரத்தில் கடந்த இரு நிதிநிலை அறிக்கைகளில் மட்டும் ரூபாய் 1,30,000 கோடி, நேரடி வரிச்சலுகைகளாக பொதுப்பணத்தைச் சூறையாடும் ஒரு சிறு கும்பலாக உள்ள பெருந்தொழில்முதலாளிகளின் மந்தைக்கு வழங்கப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் மூச்சுக்கூட விடவில்லை. இதுவே இப்படியென்றால்,பெருந்தொழில் பூதாகர நிறுவனங்களுக்கு 1991லிருந்து மொத்தமாக எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தால், அது பல டிரில்லியன்கள் வரும் (ஒரு டிரில்லியன் = ஒரு இலட்சம் கோடிகள்).

 

இதுதவிர, மறைமுக வரிச் சலுகைகளின் மூலம் இந்தப் பெருந்தொழில்முதலாளித்துவக் கும்பல் ஏற்படுத்தியிருக்கும் வருவாய் இழப்பைக் கணக்கிடுவதாகக் கற்பனை செய்து பார்த்தால், அதன் அளவு மிக மிக அதிகமானதாகவும், இப்பெருந்தொழில் நிறுவனங்களின் கல்லாப்பெட்டியை வீங்கிப் பெருக்க வைப்பதாகவும் இருப்பது தெரியவரும். ஏனெனில்,இது போன்ற வரிச் சலுகைகளின் பலன் நுகர்வோருக்கு செல்வதை மிக அரிதாகவே உற்பத்தியாளர்கள் அனுமதிக்கிறார்கள். அது ஒருபுறமிருக்கட்டும். நிதிநிலைஅறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதை மட்டுமே எடுத்துக் கொண்டு பார்ப்போம்(பட்ஜெட் இணைப்பு 12, பட்டியல் 12,பக்கம் 58). நேரடி வரிகளின் மீதான சலுகைகள் மூலம் 2007/08இல் ஏற்பட்டவருவாய் இழப்பு ரூபாய் 62, 199 கோடி... தீர்வை வரிச் சலுகையின் மூலம் இழப்பு ரூபாய் 87,468 கோடி.. சுங்க வரியின் மூலம் ரூபாய் 1,53,593 கோடி.. ஆக மொத்தம், ரூபாய்3,03,260 கோடி ரூபாய் வருவாய் இழப்பு. ஏற்றுமதி வரவை இதிலிருந்து கழித்து விட்டால் கூட, இது ரூபாய் 2 லட்சம் கோடிக்கு மேல் போகிறது. இதுவே 2008/09 இல் ரூபாய் 3லட்சம் கோடியைத் தாண்டுகிறது. இதுகூட குறைத்துக் காட்டப்பட்ட உத்தேச மதிப்பீடுதான். பெருந்தொழில் முதலாளித்துவக் கும்பலுக்குக் கொடுக்கப்படும் பிற எல்லாவகையான மானியங்கள், விலை குறைப்புக்கள், இதர இலவசங்கள் போன்றவையெல்லாம் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.எனினும், இந்தத் தொகை மிக அதிகமே.

 

சுருக்கமாகச் சொன்னால், "முன்யோசனையற்ற நிதிமேலாண்மை'' என்று விமர்சிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடிக்குக் கொடுக்கப்பட்டதைவிட 7 மடங்குக்கும் அதிகமாக, இரண்டே வருடங்களில் சலுகைகள் என்ற பெயரில் இம்முதலாளித்துவக் கும்பல் விழுங்கியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 700 கோடி வீதம் அந்த இரண்டு வருடங்களில் இம்முதலாளித்துவக் கும்பலுக்கு தீனி போட்டுள்ளோம் என்பதுதான் உண்மை. இப்படி 1991லிருந்து இதுவரை எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் (அந்தோ! அதனைக் கணக்கிட பூஜ்ஜியங்கள் போதாதே!). ஆனால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை விரிவாக்கவோ, அனைவருக்கும் உணவுப்பொருட்களுக்கான பொது விநியோகத்தை நீட்டிக்கவோ, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிகமாக செலவிடவோ கேட்டால், பணம் இல்லையாம். ஆனால், பெருந்தொழில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஒருமணி நேரத்துக்கு ஏறத்தாழ 30 கோடி ரூபாய் வீதம் சலுகையாக அள்ளித் தருவதற்கு மட்டும் போதுமான பணம் இருக்கிறதாம்.

 

உலக முதலாளித்துவம், பொருளாதார மந்தத்தையும் வரப்போகும் அழிவையும் கண்டு விழிபிங்கும் போது, இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியப் பெருமுதலாளித்துவக்கும்பல் மட்டும் தமது நிகர லாபத்தை அதிகப்படுத்த முடிந்துள்ளது என்றால், அதற்கு காரணம் உள்ளது. பொதுமக்களின் பணத்தை வெறியோடு தின்று கொழுத்ததன் விளைவுதான் அது. இதே காலாண்டில்,தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள மேலோட்டமானதொரு மதிப்பீட்டின் படியே, அமைப்பு சார்ந்த தொழிற்துறையில் 1.7 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை ஏற்றுமதித் துறையில் மட்டும் 15 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் வறட்சி வந்துள்ளது. இதுவரை இவர்கள் உருவாக்கி வந்துள்ள எல்லா பேரழிவுகளுக்கும் இதுதான் காரணமெனப் பழிபோட வறட்சி பொருத்தமான சாக்காகக் கிடைத்திருக்கிறது.வறட்சியைக் காரணம் காட்டியே இன்னும் விரிவாக இந்த நாசகர அழிவுவேலைகளைச் செய்வார்கள். வேளாண்வருவாய்க்கு மிகப் பெரிய சரிவு காத்திருக்கிறது. அரசாங்கம் போர்க் கால அடிப்படையில் செயல்பட விரும்பினால், அது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மிகத் தீவிரமாக விரிவுபடுத்துவதைச் செய்ய வேண்டும் (இன்றைய நிலையில், இதுதான் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்கள் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வறுமையில் தவிக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே போக்கிடம்).

"வயலுக்கு ஒரு குட்டை'', என்பது போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். விவசாயக் கடனைத் திருப்பிக்கொடுக்கும் தவணைக் கால அளவை மாற்றிச் சீரமைக்கலாம். பருவ மழை மேலாண்மை குறித்த சிந்தனைகளைக் கருத்தில் கொள்ளலாம். வறட்சி தலைகாட்டுவதற்கு முன்னரே, வரலாறு காணாத மோசமான விலை உயர்வை உருவாக்கிய முன்பேரவர்த்தகம் தொடர்புடைய ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தலாம்.பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக அறிவிக்கலாம். இதற்கெல்லாம் ஆகும் செலவை ஈடுகட்ட, பெருந்தொழில் முதலாளித்துவக் கும்பல்கள் நமது நாட்டில் வரைமுறையின்றி இலவசமாகத் தின்று கொழுப்பதிலிருந்து ஒரு சிறுஅளவைக் குறைத்தாலே போதும்.

 

பி. சாய்நாத்(நன்றி: தி இந்து, ஆகஸ்ட் 15, 2009).